திருமுறைகள் தொடரட்டும்..

திருமுறைகள் தொடரட்டும்..
 



லகம் உதித்த நாள் தொடங்கி,
முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாய்,
பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப் பெற்றியதாய்,
என்றும் நின்று நிலைப்பது நம் சைவசமயம்.
சிவனைப் போலவே நம் சைவமும்,
முதலும், முடிவும் இல்லாததாம்.
எழுதாமறை எனப்படும் வேதத்தைச் செய்தவன்,
இறைவனே என்பது சைவர்கள் முடிவு.
வேதத்தின் தொடக்கம் யாரும் அறியாதது.
இறை வாக்கியமான வேதத்தை,
முடிந்த முடிவென்று ஒத்துக் கொண்டாலும்,
அதன் பின்னும் வேறு நூல்கள் பிறத்தலை,
தவறென்று சைவர்கள் கருதவில்லை.
இதனால்,
வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனவும்,
தோத்திரங்கள், சாத்திரங்கள் எனவும்,
சைவநூல் வரிசை முடிவின்றி நீண்டது.
 

➤➤➤

‘இறைவாக்கான வேதத்தின் பின்,
மனித வாக்குகளாய்ப் பிறந்த நூல்களை,
ஏற்றுக்கொள்ளலாமா?’என்ற கேள்விக்கு,
தெளிவான விளக்கத்தோடு,
‘ஆம்’ எனப் பதிலிறுத்து நின்றது நம் சைவம்.
மனிதர்களாகத் தோன்றியோர் இயற்றிய நூல்களுட் சிலவும்,
இறைவாக்காய் வெளிப்பட்டவையே என்பது,
சைவச் சான்றோர்தம் முடிந்த கருத்தாம்.
இக்கருத்தை ஏற்றுக் கொண்டதால்,
நம் சைவ நூல்வரிசை பல்கிப் பெருகிற்று.
➤➤➤

இறைவாக்கு நூல்களை அறிதல் எங்ஙனம்?
சைவசித்தாந்தம் விளக்கம் உரைக்கிறது.
தத்துவங்கள் முப்பத்தாறு.
இம் முப்பத்தாறு தத்துவங்களும்,
மாயையுடன் தொடர்புபட்டவை.
தத்துவங்கள் முப்பத்தாறுள்,
முதல் ஐந்தும் சிவ தத்துவங்கள்
அடுத்த ஏழும் வித்யா தத்துவங்கள்.
மற்றைய இருபத்துநான்கும் ஆன்ம தத்துவங்கள்.
சிவ தத்துவங்கள் சுத்தமாயையினின்றும்,
மற்றைய தத்துவங்கள் அசுத்தமாயையினின்றும் தோன்றுவன.
ஆன்ம அனுபவம் தரும் தனு, கரண, புவன, போகங்கள்
அசுத்தமாயா  காரியங்களாம்.
நாம் பெற்ற உடலுள்,
சுத்தமாயா காரியமாய் அமைந்தது,
‘வாக்கு’ மட்டுமே.
➤➤➤

சடமாகிய உடலில் ஏற்படும் அனுபவங்களை,
உயிர் தன் அனுபவமாய்ப் பெற,
இவ்வாக்கே காரணமாம்.
உடலையும் உயிரையும் தொடர்புபடுத்தும் இவ்வாக்கானது,
மூலாதாரத்தில் ‘சூக்குமை’ வாக்காய் அமைந்து,
பின் விருத்தியாகி,
‘பைசந்தி’,
‘மத்திமை’,
‘சூக்கும வைகரி’,
‘தூல வைகரி’ என விரிவடைகிறது.
பிறவிகளால் அனுபவப்பட்ட ஆன்மா,
ஆணவ வலி நீங்கப் பெற,
விருத்தியான இவ்வாக்குகள் மீண்டும் ஒடுங்கத் தொடங்கும்.
அங்ஙனம் ஒடுங்கும் வாக்கு,
மீண்டும் மூலாதாரத்தை அடைந்து சிவத்தைச் சாரும்.
சார்ந்ததன் வண்ணமாகும் அதன் இயல்பால்,
அதுவரை பசு வாக்காய் இருந்தது,
பின் பதி வாக்காய் மிளிரும்.
➤➤➤

‘முத்தநிலையில்’,
இவ்வாக்கு சிவத்தில் ஒடுங்குதல் அறிந்தே,
ஞானியர்க்கு மோனம் வரம்பாய் உரைக்கப்பட்டது.
இவ்வுலகை உய்விக்கும் இறையின் கருணையினால்,
இப் பதி வாக்கு வாய்க்கப் பெற்ற ஞானியர் சிலர்,
சீவன்முத்தநிலை எய்திய பின்பும்,
மோனம் கலைத்தனர்.
அத்தகையோரிடமிருந்து பிறந்தவையே,
அநுபூதி நூல்களாம்.
வெளிப்பட பசுவாக்காய்த் தோன்றிடினும்,
சிவ வாக்காய் அமைந்ததாலேதான்,
அந்த அநுபூதி நூல்கள் காலம் கடந்து நிலைத்தன.
ஓதுவார்க்கு அருளும் அற்புதமும் நல்கின.
இவையே அநுபூதி நூல்களின் அடையாளங்களாம்.
➤➤➤

மேல் உண்மை அறிந்ததால்,
பின்வந்த அநுபூதி நூல்களும்,
முதல் நூலாகிய வேதத்திற்கு ஒப்ப,
சைவத்தில் மதிக்கப்பட்டன.
முன் வந்தவை, பின் வந்தவை எனும் பேதமின்றி,
கால அளவையை நிராகரித்து,
ஞான அளவை கொண்டே நூல்கள் மதிப்பிடப்பட்டன.
தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா பின்பு
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா எனும்,
சந்தானகுரவர் உமாபதி சிவாசாரியாரின் கூற்று,
மேற்சொன்ன சைவச் சிந்தனைத் தெளிவிற்கோர் சான்றாம்.
வேத முடிவுகளுக்கு ஒப்ப,
அவற்றை விரித்துச் சொல்லும் அனுபூதி நூல்களும்,
சைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பூஜிக்கப்பட்டன.
➤➤➤

இச்சிந்தனை நம் தமிழ்மொழிக்கும் உரியதாம்.
நூல்களை முதல், வழி, சார்பென மூவகையாய்ப் பிரித்து,
வரைவு செய்தது நம் தமிழ் இலக்கணம்.
முதநூற் கருத்தை விரித்துரைத்தல் கொண்டே,
வழி, சார்பெனும் நூற்பிரிவுகள் உண்டாயின.
தமிழிலக்கணமும்,
முதனூல் செய்தவன் இறைவனே என்று வலியுறுத்துகிறது.
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்பது,
தொல்காப்பியம்.
மேல் வரைவிலக்கணம்,
இறை இலக்கணமாய்த் தோன்றுதல் கவனிக்கத்தக்கது.
சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்பதற்கு,
அவற்றுக்கிடையிலான இக்கருத்தொற்றுமையும்
ஒரு தக்கசான்று.
➤➤➤

இவ்வாறு,
பின்வந்த ஞானியரையும் அவர்தம் வாக்குகளையும்,
தகுதி கண்டு ஏற்றுக் கொள்ளும்,
விரிந்த மனப்பான்மை பெற்றதாலேயே,
நம் சைவம் உறைந்து விடாமல்,
காலவோட்டத்திற்கேற்பக் கருத்தீந்து,
நின்று நிலைக்கிறது.
➤➤➤

இவ்வாறு தெளிவுடன் தொடர்ந்த நம் சைவச்சிந்தனை மரபு,
நிர்வாக மயப்படுத்தப்பட்ட பிற சமயங்களின் வருகையாலும்,
அவற்றின் திட்டமிட்ட உலகியல் வளர்ச்சியினாலும்,
பாதிப்புற்றது.
எல்லையற்ற, விரிந்த சுதந்திர இயல்புடைய,
நம் சைவத்தின் பாரம்பரியச் சிந்தனைக்கு முரணாக,
‘எல்லைப்படுத்தல்’ எனும் தீமை தரும் புதிய சிந்தனை,
சில சைவர்களிடம் உதித்தது.
சைவத்தின்மேற் கொண்ட அதீத அக்கறையும்,
சைவத்தின் ஆழச்சிந்தனை பற்றிய தெளிவின்மையும்
காரணமாக,
தாமே சைவத்தைக் காவல் செய்வதாகக் கருதி,
இக்குறித்த குழுவினர் செய்த தீமை பலவாம்.
குறித்த நாளில் ஆலய வழிபாடு,
வரையறுக்கப்பட்ட வழிபாட்டுக்கான உடை,
சமயத் தலைமைப் பீடம்,
பயிற்றுவிக்கப்பட்ட, அகத்தொடர்பில்லாத,
செயற்கை அருள் வெளிப்பாட்டுத் தன்மை  என,
ஆன்ம ஈடேற்றத்திற்குப் பொருந்தாப் பல போலிப்பண்புகளும்,
இவர்களால் மற்றைச் சமயத்தாரிடமிருந்து கொள்ளப்பட்டன.
இவ் அநியாய வெளிப்பாட்டின் ஒன்றாக உருவானதே,
சமய நூல்களை எல்லைப்படுத்தும் இவர்தம் சிந்தனையுமாம்.
இப்புதிய சிந்தனையானது,
நம் சமயப் பாதையில் ஏற்படுத்தியிருக்கும்,
தேக்க நிலையைச் சுட்டிக் காட்டுவதே,
இக் கட்டுரையின் நோக்கம்.
➤➤➤

நம் சைவ நூல் வரிசையில்,
தோத்திரங்களாய் அமைந்த சைவத் திருமுறைகள்,
‘தமிழ் வேதங்கள்’ என்று போற்றப்படுபவை.
இவை அநுபூதிமான்களால் ஆக்கப்பட்டவை.
வேதத்தின் உட்பொருளைத் தெளிவிப்பவை.
வழிபடுவோர்க்கு அருளையும் அற்புதங்களையும் விளைவித்து,
தம் அருட்தன்மையை நிரூபித்தவை.
இத்தகைய பெறற்கரிய பல தோத்திர நூல்கள்,
நம் சைவ உலகில் தோன்றிச் சிதறிக் கிடந்தன.
தனித்துச் சிதறிக் கிடக்கின்,
அவை அழிந்தொழியும் ஆபத்துணர்ந்து,
இவற்றைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டிய தேவையை,
மன்னன் இராஜராஜசோழன் உணர்ந்தான்.
➤➤➤

சிதறிக் கிடந்த தோத்திர நூல்களை,
திருமுறைகளாகத் தொகுப்பிக்க வேண்டும் என,
எண்ணிய அவன்,
அநுபூதி நூல்களைத் தேர்ந்து தொகுப்பிப்பதில் உள்ள
சிரமத்தையும் அறிந்திருந்தான்.
அரியதான அச் சிவகாரியத்தை,
வெறும் நூலறிவுடைய அறிஞராலன்றி,
வாலறிவுடைய அநுபூதிமான்களாலேயே இயற்றுதல் கூடும் என,
முடிவு செய்த அவன்,
பொல்லாப்பிள்ளையாரிடம் பாடம் கேட்ட,
நம்பியாண்டார் நம்பி எனும்,
அநுபூதிமானிடம் அக்காரியத்தை ஒப்படைத்தான்.
இராஜராஜசோழனின் வேண்டுகோளை,
சிவ கட்டளையாய் ஏற்று,
திருமுறைகளைத் தொகுக்கும் பணியைச் செய்து முடித்தார்,
நம்பியாண்டார் நம்பி.
➤➤➤

நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டவை,
ஏழு திருமுறைகளே என்றும்,
அவையே ‘அடங்கன்முறை’ என அழைக்கப்பட்டதென்றும்,
ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர்.
தேவாரங்கள் தவிர்ந்த மற்றைய தோத்திர நூல்களும்,
தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு,
எட்டாம், ஒன்பதாம், பத்தாம், பதினொராம் திருமுறைகள்,
காலப் போக்கில் தொகுக்கப்பட்டதென்பது,
அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்து.
திருமுறை கண்ட புராணத்தின்படி,
நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவை,
பதினொரு திருமுறைகள் மட்டுமேயாம்.
எது எப்படியோ,
இன்று நம் சொத்தாயுள்ள பன்னிரண்டு திருமுறைகளும்,
ஒரே நேரத்தில் தொகுக்கப்படவில்லை என்பது தெளிவு.
➤➤➤

பின்னாளிலேதான்,
சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பெற்ற பெரிய புராணம்,
சைவ உலகால் அங்கீகரிக்கப்பட்டு,
பன்னிரண்டாவது திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கருத்தில் எவரும் முரண்படார்.
இச்சேர்ப்பு,  எல்லைப்படுத்தப்படாத சைவச்சிந்தனைக்கு
ஒப்பவே நடந்ததென்பது கவனிக்கத்தக்கது.
➤➤➤

திருமுறைகளைத் தொகுத்த பணி,
ஆரம்பத்தில் அரச பணியாகவே நடந்துள்ளமை,
கவனத்திற்குரியது.
தக்க தனியொரு அநுபூதி அறிஞனை நியமித்து,
இத் திருமுறைத் தொகுப்புப் பணியினை,
ஓர் அரச பணியாகவே இராஜராஜசோழன் செய்வித்தான்.
அத் தொகுப்பினைச் செய்ய,
தேவையான நிதியுதவி முதலியவற்றை வழங்கியதும்,
பல்வேறிடங்களிலும் சிதறிக்கிடந்த சுவடிகளை ஒன்றுபடுத்தி,
ஓரிடத்திற் சேர்ப்பதற்கு,
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியதுமே,
அவன் செய்த காரியமாம்.
➤➤➤

தேவாரம் பாடிய மூவர் முதலிகளும் நேரில் வந்தாலன்றி,
தேவாரச் சுவடிகளைத் தரமாட்டோம் என மறுத்து நின்ற,
தில்லைவாழ் அந்தணரிடம்,
மூவர் விக்கிரக உருவங்களைக் கொண்டுசென்று காட்டி,
அம் மூவரும் ஒருமித்து வந்ததாய் நிறுவி,
அவை சிலைகளெனின்,
தில்லைச் சிவனும் சிலையே எனத் தர்க்கித்து,
கதவு திறப்பித்து,
தேவாரச் சுவடிகளை அவன் வாங்கிக் கொடுத்ததாக,
பின்னாளில் கதைகள் விரிந்தன.
மொத்தத்தில் அரச பணியாகவே,
இத் திருமுறைத் தொகுப்பு நிகழ்ந்ததென்பது உறுதியாம்.
➤➤➤

ஒன்பதாம் நூற்றாண்டளவில் இராஜராஜசோழனால்,
ஏழாகத் தொகுப்பிக்கப்பட்ட திருமுறைகள்,
பதின்மூன்றாம் நூற்றாண்டளவில்,
மேலும் பல நூல்களைச் சேர்த்து,
பன்னிரண்டு திருமுறைகளாக வளர்ச்சியுற்றன.
ஆனால் அவ்வளர்ச்சி தொடராமல்,
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம்வரை,
உறைந்துபோய் நின்றதேன்?
சிந்தித்தல் அவசியமாகிறது!
➤➤➤

பின்வந்த தொலைநோக்கற்ற,
குறுகிய சிந்தனையாளர்கள்,
இப்பணி முடிவுற்றதாக எல்லைப்படுத்தி,
நம் சைவத்தின் பரந்த சிந்தனைக்கு மாசேற்படுத்தினர்.
பன்னிரு திருமுறைகளோடு,
திருமுறைத் தொகுப்பு முடிவுற்றதாய்க் கருதிய இவர்கள்,
புதிதாய்த் திருமுறைகள் தொகுக்கப்படுவதை,
அங்கீகரிக்க மறுத்து நின்றனர்.
கற்றோரான இவர்தம் கருத்துக்கு உடன்பட்டு,
சைவ உலகு தன் விரிவு சுருங்கி இழிந்தது.
பன்னிரு திருமுறைகள் வரிசையில்,
வேறு நூல்களைச் சேர்க்கக்கூடாது எனும்,
இவர்தம் கருத்தை,
ஆராய்ந்தறிதல் தக்கார்தம் கடமையாம்.
➤➤➤

திருமுறைகளைப் புதிதாய்த் தொகுக்கக் கூடாது என்பார்,
சைவ மரபறிந்து தம் கருத்தை நியாயப்படுத்தல் வேண்டும்.
அங்ஙனமாய் அவர்தம் கருத்தை நியாயப்படுத்த,
மூன்று காரணங்களைக் காட்டினால் மட்டுமே,
சைவ உலகு அதை அங்கீகரிக்க முடியும்.
அம்மூன்று காரணங்களும் பின்வருமாறு:

   1. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் அநுபூதிமான்கள்
சைவ உலகில் தோன்றவில்லை என்பது.

  2. அங்ஙனம் சிலர் தோன்றியிருப்பினும் அவர்கள்
அநுபூதி நூல்களைச் செய்யவில்லை என்பது.

  3. காலாகாலமாகத் தொடரும் நம் சமய அறிவு,
வளரும் தேவையின்றி, முற்றுப் பெற்றுவிட்டது என்பது.

இம்மூன்று காரணங்களுமன்றி,
புதிய திருமுறைகள் தொகுக்கப்படக் கூடாமைக்கு,
தக்க வேறு காரணங்களைக் காட்டுதல் இயலாதாம்.
மேற்கூறிய காரணங்களை ஏற்றல் பொருத்தமா?
ஆராய்வாம்.
➤➤➤

பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்,
அநுபூதிமான்கள் தோன்றவில்லை என்பது,
நகைப்புக்குரிய விடயம்.
பிறவிகளில் அழுந்தி,
மலங்களின் பிடியினின்றும் விடுபட்ட ஆன்மாக்கள் இல்லாத
ஒரு காலமும் உண்டா?
உண்டெனின், அது நம் சிவனுக்கு இழுக்காம்.
மலங்களின் பிடியினின்றும் ஆன்மாக்களை விடுவிக்கவே,
இறைவன் ஐந்தொழில் நடனம் புரிகின்றான்.
குறித்த கால எல்லையில்,
முத்தர்கள் தோன்றவில்லையெனின்,
அது இறைவனின் ஐந்தொழில் குறைபாட்டையே உணர்த்தும்.
அன்றேல், இறைவன்தன் நடனம் நின்றதாய் முடியும்.
அங்ஙனம் அவனின் ஐந்தொழில் நடனம் நிற்கின்,
பிரபஞ்சம் அழிந்தொழிதல் திண்ணம்.
அதனையே ‘பேர் ஊழிக்காலம்’ என நம் சைவம் உரைக்கும்.
ஆதலால் குறித்த காலப்பகுதியில்,
அநுபூதிமான்கள் தோன்றவில்லை என்று உரைப்பது,
இறைவன்தன் ஐந்தொழில்களை மாசுறுத்தும் கருத்தாம்.
அக் கருத்தைச் சைவ உலகு அங்கீகரிக்க முடியாது.
எனவே, மேற்சொன்ன முதற்காரணம்,
அனுமானப் பிரமாணத்தால் நிராகரிக்கப்படுகிறது.
➤➤➤

அங்ஙனம் சிலர் தோன்றியிருப்பினும்,
அவர்கள் அநுபூதி நூல்களைச் செய்யவில்லை எனும்,
இரண்டாம் கருத்தின் சாத்தியப்பாட்டை இனி ஆராய்வாம்.
இக்கருத்தையும் ஏற்றல் முடியாது.
காரணம்,
அண்மைக் காலத்தில் அநுபூதி நிலையுற்று வாழ்ந்த,
பல அநுபூதிமான்களை,
சைவ உலகம் தெளிவுற அறிந்திருக்கிறது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் தோன்றிய,
அவ் அநுபூதிமான்களால் அருளப்பட்ட பல தோத்திர நூல்கள்,
திருமுறைகளில் தொகுக்கப்படாது உள்ளன.
அந்நூல்கள்,
இன்று சைவர்களால் உச்சிமேல் வைத்துப் போற்றப்படுதல்
வெளிப்படை.
அவை திருமுறைகளைப் போலவே,
பக்தியோடு ஓதுவார்க்கு அருளையும் அற்புதங்களையும்,
விளைவித்து,
காலம் கடந்து நிற்பதும் கண்கூடு.
எனவே மேற்சொன்ன இரண்டாவது காரணமும்,
பிரத்தியட்சப் பிரமாணத்தால் நிராகரிக்கப்படுகிறது.
➤➤➤

இனி,
காலாகாலமாகத் தொடரும் நம் சமய அறிவு,
வளரும் தேவையின்றி முற்றுப் பெற்றுவிட்டது எனும்,
கருத்தை ஆராயப் புகுகிறோம்.
என்றும் அந்நிலை கைகூடாதாம்.
நம் ஆன்றோர்கள்,
இறைவனையே அறிவின் முடிவாய்க் கருதினர்,
அங்ஙனமிருக்க,
நம் சிற்றறிவு முற்றுப்பெற்றதெனக் கூறுதல் அறியாமையன்றோ!
அதுவுமன்றி எவ்வறிவும் முற்றுப்பெறாது எனும் கருத்தினை,
அறிதொறும் அறியாமை கண்டற்றால் என,
வள்ளுவக் கடவுளாரும் வழிமொழிதல் காண்கிறோம்.
ஆதலால் இம்மூன்றாம் காரணமும்,
ஆகமப் பிரமாணத்தால் நிராகரிக்கப்படுகிறது.
➤➤➤

இம்மூன்று காரணங்களும் தவறென்றாக,
‘திருமுறைத்  தொகுப்பைத் தொடரக்கூடாது’ என்பார்தம்
கருத்தின் பொய்மை புலனாகிறது.
நம் சமயத்தின் அடிப்படைச் சிந்தனைகளை விளங்காது,
பிற மதச் சிந்தனைகளை உள்வாங்கிய,
நம் சைவ மரபை அறியாத ஒருசில சமயவாதிகளின்,
எல்லைப்படுத்தும் சிந்தனையே,
திருமுறைத் தொகுப்பின் வழியடைத்துக் கிடப்பதாய்த்
தெரிகிறது.
பிறர் பாதிப்பால்,
புதியன ஏற்கும் மரபும்,
பழையன நீக்கும் மரபும் நீங்க,
திருமுறைகள் பன்னிரண்டுதான் எனவும்,
அத்தோடு அவை முடிந்து போயிற்று எனவும்,
மேலும் திருமுறைகள் தொகுக்கப்பட வேண்டும் எனும்
சிந்தனையை,
சிவநிந்தனையாகக் கருதவேண்டும் எனவும்,
கருத்துகள் உருவாக்கப்பட்டுப் பரவ விடப்பட்டதால்,
திருமுறைத் தொகுப்பு,
பன்னிரண்டுடன் தடைப்பட்டுத் தேங்கிக் கிடக்கிறது.
➤➤➤

ஒரு சில சமய அறிஞர்கள்,
சிவஞான போதச் சூத்திரங்கள் பன்னிரண்டுக்கும் அமையவே,
திருமுறைகள் பன்னிரண்டும் தொகுக்கப்பட்டதாக,
எடுத்துக் காட்ட முயல்கின்றனர்.
காலத்தால் பிந்திய சிவஞானபோதச் சூத்திரங்கள்,
காலத்தால் முந்திய திருமுறைகளின் தொகுப்புக்கு,
அடிப்படையெனும் கூற்று நகைப்புக்குரியதாம்.
➤➤➤

மேற்கூறிய காரணங்களால்,
உண்மைநிலை உணர்ந்து,
திருமுறைத் தொகுப்பில் ஏற்பட்டிருக்கும்,
தேக்க நிலையைத் தகர்க்க,
சைவ உலகம் முன்வரவேண்டும்.
காலங்கடந்தும் நம் சைவம் வீறுநடை போடும் என்பதை,
வெளிப்படுத்தும் வகையில்,
பதின்மூன்றாம், பதினான்காம் திருமுறைகளை,
தொகுப்பிக்கும் கைங்கரியத்தை,
இந் நூற்றாண்டிலேனும் செய்தல் வேண்டும்.
➤➤➤

‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்றாற் போன்று,
‘இக்காரியத்தைச் செய்வது யார்?’ என்ற கேள்வி,
உடன் பிறக்கும்.
பலரின் கண்டனங்களுக்குள்ளாகப் போகும்,
இச் சிவப்பணியை,
இந்நூற்றாண்டில் செய்து முடிக்கப் போகிறவர் யார்?
காலாகாலமாக நம் சமயத்தில் புரட்சியாளர் பலர் தோன்றி,
தேக்க நிலையைத் தகர்த்து,
நம் சைவத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
அத்தகைய ஒருவரால்,
இப்பணியும் செய்து முடிக்கப்படும் என்பது திண்ணம்.
தமிழகத்தில்,
நம் சைவமரபில் தோன்றிய ஆதீனங்கள் பல உள்ளன.
தக்கோர் பலர் அவ் ஆதீனகர்த்தர்களாகப் பொறுப்பேற்று,
சிவப்பணியாற்றி வருகின்றனர்.
அத்தகைய ஆதீனகர்த்தர்கள் பழமையைப் போற்றுதலோடு,
தம் கடமை முடிந்ததெனக் கருதாது,
இப்புதிய தொகுப்புப் பணியை,
நடைமுறைப்படுத்த முன்வருதல் வேண்டும்.
மூடச் சம்பிரதாயங்களை உடைத்து,
நம் சைவத்தை மறுமலர்ச்சி செய்தல் அவர் கடனாம்.
➤➤➤

தமிழகத்தார்தான் இக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்ற
கட்டாயமுமில்லை.
காலாகாலமாக இலங்கையும் சைவநெறியை,
கட்டிக்காத்து ஒழுகி வருவது வெளிப்படை.
இலங்கைக்கு விஜயம் செய்யும் தமிழக அறிஞர்கள்,
தமிழகத்தை விட இலங்கையிலேயே,
குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே,
சைவமும் தமிழும் ஓங்கி வளர்வதாய்,
புகழ்ந்துரைத்து வருகின்றனர்.
இத் திருமுறைத் தொகுப்புப் பணியைச் செய்வதன் மூலம்,
அப் புகழுரையை நாம் நிஜப்படுத்தலாம்.
இலங்கையில் இருக்கும் இந்து அமைப்புகள்,
இப்பணியைக் கையேற்றுப் புகழ் கொள்ளலாம்.
இங்கு ஒரு காலத்தில் இந்துகலாசார அமைச்சு இருந்தது.
பின் அதுவே மாற்றமடைந்து,
இந்துகலாசாரத் திணைக்களமாக இயங்கி வருகிறது.
அத்திணைக்களம் கூட,
இத்தகைய புரட்சிகரமான காரியத்தைச் செய்து,
புகழீட்டலாம்.
➤➤➤

பதின்மூன்றாம், பதினான்காம் திருமுறைகளை,
தொகுப்பதென முடிவானால்,
அக்காரியத்தை,
மிகுந்த சிரத்தையுடன் செய்யவேண்டும்.
இதுவரை,
பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டவை,
அநுபூதிமான்களால் பாடப்பட்ட அருள் நூல்கள்.
வெறுங் கல்வியாளர்களால் பாடப்பெற்ற அறிவு நூல்களை,
செல்வாக்குக் கருதித் திருமுறைகளிற் சேர்க்கத் தலைப்படின்,
அதனால் முன்னைய திருமுறைகளும் மாசுறும்.
எனவே மிகுந்த கவனத்துடன் அறிவு நூல்களைத் தவிர்த்து,
அநுபூதி நூல்களைத் தொகுத்தல் அவசியம்.
இன்று ஓர் அநுபூதிமானைத் தேடிக் கண்டுபிடித்து,
இப்பணியைச் செய்விப்பதும் இயலாத காரியமே.
ஆதலால் புதிய திருமுறைகளுக்கான நூற்தேர்வில்,
மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியது கட்டாயமாம்.
➤➤➤

அநுபூதி நூல்களையும்,
அறிவு நூல்களையும் பிரித்தறிதல் எங்ஙனம்?
கேள்வி பிறக்கும்.
அநுபூதி நூல்களைக் கணிப்பதற்கு,
காலத்தைத் தக்கதோர் அளவுகோலாய்க் கொள்ளலாம்.
சிறந்த அருள் நூல்கள்,
தம் இறைத் தன்மையால்,
காலம் கடந்து நிலைத்து,
மக்கள் மனதில் பதிந்து, அவர்களால் ஓதப்பட்டு,
அருளும் அற்புதமும் விளைத்து,
தம் தெய்வத் தன்மையைக் காட்டி நிற்கும் என,
முன்னர் கண்டோம்.
எனவே திருமுறைகளைத் தொகுக்கத் தலைப்படுவோர்,
சமகால நூல்களை விடுத்து,
காலம் கடந்து நிலைக்கும்,
மேற்கூறிய இயல்புகளை உடைய,
அருள் நூல்களைத் தொகுக்கலாம்.
➤➤➤

இவ்வாறு தொகுக்கப்படக்கூடிய நூல் வரிசையொன்றை,
மேலோட்டமாக உதாரணத்திற்குத் தருகிறேன்.
பஞ்சபுராணத்தோடு இன்று இயல்பாய்க் கலந்து,
மக்களால் ஓதப்படும் திருப்புகழ் போன்ற பல நூல்கள் உள.
அத்தகைய நூல்களின் வரிசையொன்றை,
புதிய திருமுறைத் தொகுப்பிற்காய் வகைப்படுத்த முடியும்.
இவை நிச்சயிக்கப்பட்டவையல்ல.
சிந்திக்கத் தகுந்தவை.
சைவ அறிஞர் உலகு ஆராய்ந்து மேலும்  தெளியலாம்.
அருணகிரிநாதர் அருளிய,
திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம்,
அபிராமிப்பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி,
ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்,
தாயுமான சுவாமிகள் பாடல்,
குமரகுருபர சுவாமிகள் பாடல்கள்,
வள்ளலாரின் அருட்பாக்கள் முதலியன,
மேற்கூறிய இலட்சணங்களோடு,
இன்று நின்று நிலைக்கும் அருள் நூல்களாம்.
இந்நூல்கள் அருள் நூல்கள் அல்ல என மறுக்க,
எவரும் முன்வரார் என்பது திண்ணம்.
➤➤➤

இத்திருப்பணியைப் பற்றற்று நின்று செய்யின்,
மாற்றார் கருத்துப் பற்றி அக்கறைப்படத் தேவையில்லை.
பன்னிரு திருமுறைகளைத் தொகுத்த,
அருளாளர் நம்பியாண்டார் நம்பி அவர்கள்,
தம்நூலையும் திருமுறைகளிற் சேர்த்துள்ளமை
அவதானிக்கத்தக்கது.
அஃதொன்றே,
மாற்றார் கருத்துப் பற்றிய அவர்தம் அக்கறையின்மையையும்,
தன் நடுவுநிலை பற்றிய அவர்தம் தெளிவையும்,
உணர்த்துகின்றது.
➤➤➤

எதிர்ப்பாளர்கள்,
திருமுறைத் தொகுப்பில்,
சிவனைப் பாடிய நூல்களையே சேர்க்க வேண்டுமென,
மற்றும் ஓர் எதிர்ப்பினைக் கிளப்பலாம்.
அவர் தமக்கு மறுப்பாய்,
முருகனைத் தலைவனாய்க் கொண்ட,
திருமுருகாற்றுப்படையை,
பதினோராம் திருமுறை உள்வாங்கியிருப்பதை
எடுத்துக்காட்ட முடியும்.
முருகனும் சிவனும் ஒன்றேயென,
அவர்கள் தர்க்கம் செய்யத் தலைப்படின்,
அத்திருமுருகாற்றுப்படையில் மற்றைத் தேவரொடு சிவனாரும்,
பிரமனின் சாபநீக்கத்திற்காய்,
முருகனை வழிபட முந்துவதாய் வரும் வரிகளை,
எடுத்துக்காட்டி அவர்தம் வாதத்தினை அடக்கலாம்.

கடுவோடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று,
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடும்திறல்.
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள் அணி நீள்கொடிச் செல்வனும்.

வெள் ஏறு,
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்,
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்,
மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து, நூறுபல்
வேள்வி முற்றிய வென்(று)அடு கொற்றத்து,
ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடைத்,
தாழ்பெரும் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,

நால்பெரும் தெய்வத்து நல்நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக,
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாஇல் ஊழி
நான்முக ஒருவன் சுட்டிக் காண்வரப்,
பகலில் தோன்றும் இகலிற் காட்சி.
(திருமுருகாற்றுப்படை)
➤➤➤

வேறு ஒருசிலர்,
இருக்கும் திருமுறைகளையே படிப்பாரைக் காணோம்.
இந்நிலையிற் புதிய திருமுறைகள் எதற்கு? என வாதிடுவர்.
அவர்தம் கருத்து உண்மையாயின்,
ஏழாம் திருமுறையின் பின்னரும்,
பதினோராம் திருமுறையின் பின்னரும் கூட,
திருமுறைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை.
அக்காலத்திலும் இந்நிலை இருந்திருத்தல் நிச்சயமாம்.
முட்டுக்கட்டையிட முனையும்,
திட்டமிட்ட இத் தெளிவில்லாக் கருத்துகளை,
நிட்டூரமாய் நிராகரிக்கலாம்.
➤➤➤

இத் திருமுறைத் தொகுப்புப் பணி,
ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்களைத் தேடித் தரலாம்.
அவ் எதிர்ப்புகளை நிராகரித்து,
சிவன் கருணை வேண்டி,
தக்க விளக்கத்தோடு,
நடுநிலை நின்று,
வலிமையாக இப்பணி நிறைவேற்றப்படுமாயின்,
சைவ உலகம் இதைக் கைகூப்பி உச்சிமேல் ஏற்கும்.
காலப்போக்கில்,
திருமுறைகள் பதினைந்து, பதினாறு என விரிந்து,
இறைவனைப்போல் முடிவின்றி நீண்டு,
நின்று நிலைக்கும்.
திருமுறைகள் தொகுக்கப்பட்டு,
கிட்டத்தட்ட ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,
இறையருளாற் தோன்றிய பல அநுபூதி நூல்கள்,
முன்பு போலவே விரவிச் சிதறிக் கிடக்கின்றன.
திருமுறைகளாய்த் தொகுக்கப்பட்டால்,
அவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பது திண்ணம்.
இந்த நற்பணியைத் தொடங்கப் போகும்,
இராஜராஜசோழனையும்,
நம்பியாண்டார் நம்பியையும் கண்டு களிக்க,
உண்மைச் சைவ உலகம் விழைந்து நிற்கிறது.
◄►◄►◄►◄►◄
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.