அதிர்வுகள் 29 | “ஜாதிகள் இருக்குதடி பாப்பா”
அதிர்வுகள் 30 May 2016
உ
உலக சகோதரத்துவம் பற்றிய இஸ்லாமியர்களின் கொள்கையில்,
எனக்குப் பெரிய மதிப்புண்டு.
எந்த மதக்கொள்கையாய் இருந்தாலென்ன?
உயர்ந்த கொள்கைகள் உயர்ந்த கொள்கைகள்தான்!
உலகைப் படைத்தவன் ஒருவன்தான் என்பது உண்மையானால்,
உலகில் வாழும் அனைவரும்,
ஒருவருக்கொருவர் சகோதரர்தான் என்பதில்,
மறுகருத்திற்கு இடமேது?
இறைவன் ஒருவனே என்று ஒத்துக்கொள்கின்ற,
சமயங்களைச் சார்ந்தவர்கள்,
அவன் கீழ், நான் மேல் என உயர்வு, தாழ்வு பேசுகையில்,
என் மனம் எல்லையற்ற வெறுப்படையும்.
அங்ஙனம் உயர்வு, தாழ்வு பேசுகிறவன்,
நிச்சயம் இறைவனால் நேசிக்கப்படுகிற,
ஒரு சமயியாக இருக்கமாட்டான் என்பது,
எனது உறுதியான எண்ணம்.
∎∎∎
அப்படியென்றால்,
மனிதர்களுக்குள் உயர்வு, தாழ்வு என்ற பிரிவே இல்லையா?
நீங்கள் கேட்பீர்கள்.
இருக்கிறது என்பதே எனது பதில்.
இதென்ன முரண்பாடான பேச்சு!
எல்லோரும் சகோதரர் என்று முன்னர் சொல்லிவிட்டு,
பின் எல்லோரும் சமனில்லை என்கிறீர்களே?
இது நியாயமா?
உங்கள் கேள்வி சரியானதுதான்.
நான் சொல்லும் உயர்வு, தாழ்வு பிறப்பால் வருவதல்ல.
பண்பால் வருவது.
இந்த வேற்றுமையை, உயர்ந்தவர்கள் எல்லோரும் அங்கீகரித்திருக்கின்றனர்.
∎∎∎
திருவள்ளுவர் உயர்குடி, தாழ்குடி என,
இருவகைக்குடிகள் உள்ளன எனச் சொல்லிவிட்டு,
அதை எப்படிப் பிரிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.
ஒழுக்கமுள்ளவன், உயர்குடியைச் சேர்ந்தவன்.
ஒழுக்கமற்றவன் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவன் என்பதே,
அவர் சொல்லும் வரையறை.
‘ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம் இழிபிறப்பாகிவிடும்’ என்பது,
அவரது குறள்.
∎∎∎
பின் வந்த எங்களது பாரதியும்,
மேலோர், கீழோர் என்ற பிரிவினையை அங்கீகரிக்கிறான்.
‘நீதி உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’ என்பது,
மேலோர்க்கான அவனது வரையறை.
பாரதியின் இவ் வரையறை கொண்டு,
இவை அற்றவர்கள் கீழோர் என நாம் உய்த்துணர முடிகிறது.
மனிதரை மேலோர், கீழோர் எனப் பிரிக்கும் இத்தகைய பிரிவோடு,
நான் நூறு வீதம் உடன்படுகிறேன்.
இத்தகைய பிரிவினை சமூகம் அங்கீகரித்தால்,
நிச்சயம் அச்சமூகம் உயர்வடையும்.
மேற்படி, ஜாதிப்பிரிவுகள் பற்றி,
இவ்வார அதிர்வில் சிந்தித்தால் என்ன என்று தோன்றுகிறது.
∎∎∎
நல்ல காலமாக என்னுடைய பாலப்பருவம் முழுவதும்,
யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே கழிந்தது.
அதனால் தானோ என்னவோ,
மனிதருள் வேற்றுமை காணும் பழக்கத்திலிருந்து,
எப்படியோ நான் தப்பிக் கொண்டேன்.
எனது பெற்றோரும் இந்த தீய கருத்தை,
எங்கள் மனதில் ஒருநாளும் விதைக்கவில்லை.
∎∎∎
ஆனால், எட்டாம் வகுப்பில் யாழ்ப்பாணத்திற்கு படிக்கவென வந்தபிறகு,
அங்கு விஷக்கொடியாய்ப் பரவியிருந்த ஜாதீயக்கருத்து,
என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வெள்ளாளன், கோவியன், கரையான், நளவன், பள்ளன், பறையன் என்ற,
பெயர்களை எல்லாம் நான் யாழ்ப்பாணத்திற்கு வந்தபிறகுதான் கேள்விப்பட்டேன்.
சிலரை வேண்டுமென்றே ஒதுக்கி வைப்பதும்,
பொது இடங்களில் அவர்களை இழிவு செய்வதும்,
வெறும் பிறப்பு நோக்கி குறிப்பிட்ட சிலரைத் தாழ்ந்தோர் என முடிவு செய்வதுமான,
விசித்திரமான விடயங்களை,
நான் யாழ்ப்பாணத்திற்கு வந்த பிறகு தான் கண்டு கொண்டேன்.
∎∎∎
ஜாதிக்கொடுமை எங்கள் இளமைக் காலத்தில் மோசமாய் இருந்தது.
அதற்கு முன்பு அதைவிட மோசமாய் இருந்ததாம்.
மேல் ஜாதிக்காரர் என்று தம்மைச் சொல்லிக்கொண்டவர்கள்,
கீழ் ஜாதிக்காரர் என்று தாம் ஒதுக்கி வைத்தவர்களை,
வெளிப்படையாய் மட்டுமன்றி மனோரீதியாகவும், பாதிப்புறச் செய்தார்கள்.
வெள்ளாளன், பிராமணன் என்ற பெயர்களை,
பொது இடங்களில் சத்தமாய்ச் சொல்பவர்கள்,
மற்றஜாதிப் பெயர்களை வேண்டுமென்று ரகசியக் குரல் எடுத்துச் சொல்வார்கள்.
அது மட்டுமன்றி கள்ளன், பொய்யன் என்கின்ற திட்டும் சொற்களில்.
இச்சாதிப்பெயர்களையும் சேர்த்து வைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் அங்ஙனம் சொல்லச் சொல்ல,
அதனால் பாதிப்புற்ற மற்றை ஜாதியினர்.
தம் ஜாதிப் பெயரை வெளிப்படையாயச் சொல்லவே தயங்கினார்கள்.
தமிழ்நாட்டில் இந்த இயல்பு இல்லை.
எந்த ஜாதிக்காரனும் தனது ஜாதிப்பெயரை.
மரியாதைக்குரியதாய்க் கருதி தனது பெயரோடு இணைத்துச் சொல்லுவான்.
இழிவில் நம் ஊருக்கான ‘ஸ்பெஷல்’ பண்பு எரிச்சல் தருகின்றது.
∎∎∎
யாழ்ப்பாணத்தின் உயர்ஜாதிக்காரரின் வக்கிர புத்தியை,
அவர்களின் ஒருசெயல் கொண்டு அனுமானித்திருக்கிறேன்.
ஊரில் திரியும் சாதாரண நாய்களுக்கு,
அவர்கள் வைத்திருக்கும் பெயர் பறைநாய் என்பதாகும்.
நாயில் எங்கே ஜாதி வந்தது?
இது பற்றி ஆழ்ந்து சிந்திதத்தில் ஒரு உண்மை தெரிந்தது.
பறைநாய் எனும் பெயர் நாயைத் தாழ்த்துவதற்காக வைக்கப்பட்டதல்ல.
மனிதரைத் தாழ்த்துவதற்காக வைக்கப்பட்டது.
நாயைப் பறைநாய் என்று அழைப்பதன் மூலம்,
நீங்களும் இந்த நாய்க்குச் சமமானவர்கள் தான் என,
தாழ்ந்த ஜாதிக்காரருக்கு உணர்த்துவதற்காகவே,
உயர்ந்த ஜாதிக் ‘கீழோர்’,
தம் நீதியில்லா தாழ் மதியால்,
மேற்படி கீழ்மைச் சூழ்ச்சியைச் செய்திருக்கின்றனர்.
∎∎∎
புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தீவுகளில் அதுவும் ஒன்று.
அவ்வூரின் பிரபலமான குடும்பத்ததைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர்,
தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிப் பெருமைப்படுவார்.
அவர்களுக்கு உரித்தாக இருந்த கோயிலுக்குள்,
தாழ்ந்த ஜாதியினரை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
அது மற்றவர்களைத் தாழ்த்தி, தம்மை உயர்த்தும் கீழ்மைப்புத்தி.
ஒருமுறை அவர்களது கோயில் தேர்த்திருவிழாவின் போது,
மற்றை ஜாதியினர் வடம் பிடித்து இழுத்துவிட்டார்கள்.
அதனால் ஊரில் பெரிய குழப்பம்.
அன்றிரவே நான் சொன்ன குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படித்த மனிதர்.
தங்களது கோயில் தேரை நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்.
கொளுத்தியது மட்டுமல்ல,
பின்னர் அவ் இழிசெயலை சொல்லிச் சொல்லிப் பெருமைப்படவும் செய்தார்.
இவர்கள் தான் உயர் ஜாதியினராம்!
∎∎∎
வடமராட்சிப்பக்கம் ஒரு கோயிலுக்கு என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.
ஊர்ப்பெயரை சொல்லவிரும்பவில்லை.
படித்த மனிதர்கள் நிறைந்த ஊர் அது.
பிரசங்கத்திற்குப் போன என்னை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
கோயிலின் வெளிவீதியில், மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.
கோயிலுக்குள்ளே ஆள் நடமாட்டமே இல்லை.
நிர்வாக சபையைச் சேர்ந்த ஓரிருவர்,
கோயில் ஐயர், நான் இவ்வளவு பேரும்தான் கோயிலுக்குள்ளே இருந்தோம்.
அவ்வளவு பெரிய கோயிலுக்குள் தனியே நிற்க பயமாகக் கூட இருந்தது.
ஏன் வெளியே நிற்போர் உள்ளே வரவில்லை என விசாரித்தேன்.
அது ஒரு காலத்தில் உயர்ஜாதிக்காரர் மட்டும் உள்ளே சென்று வந்த கோயிலாம்.
மற்றஜாதியினர் தாமும் உள்ளே செல்வோம் எனப் புரட்சி கிளப்ப,
உயர்ஜாதியினர் ஓர் முடிவுக்கு வந்தனராம்.
இனி, கோயிலுக்குள் ஒருவரும் போவதில்லை என்பதுதான் அந்த ‘அறிவார்த்தமான’ முடிவு.
தாழ்ந்த ஜாதிக்காரன் உள்ளே வரக்கூடாது என்பதற்காக,
தாமும் இனி வெளியே நிற்பதென முடிவு செய்த,
அந்த மனிதர்களைப் பார்த்து பரிதாபப்பட்டேன்.
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.
எதிரிக்கு இரண்டு கண்ணும் போகட்டும் என்ற,
கீழ்மைப்புத்தியை வைத்துக்கொண்டு,
தம்மை உயர்ஜாதிக்காரர் என்று சொல்லிக்கொண்ட,
அவர்களைக் காண அருவருப்பாயிருந்தது.
∎∎∎
மல்லிகை ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள்,
ஒருநாள் என்னோடு பேசிக் கொண்டிருக்கையில்,
மனதைப் பிழியும் செய்தி ஒன்றைச் சொன்னார்.
தங்கள் ஊரில் தாழ்ந்த ஜாதிக்காரப் பெண்ணொருத்தி,
முதல் முதலில் ரவிக்கை போட்டாளாம்.
அதைக்கண்டு ஆத்திரப்பட்ட மேல்ஜாதிக்கார இளைஞன் ஒருவன்.
ஊர் நடுவே வைத்து, கையிலிருந்த கொக்கச்சத்தகத்தை,
அவளது ரவிக்கையின் முதுகுப்பகுதியின் உள்விட்டு,
பலரும் பார்க்க கிழித்தெறிந்தானாம்.
கேட்க எனக்கே இரத்தம் கொதித்தது.
அவர்கள் எவ்வளவு வருந்தியிருப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இவ்வளவு குண்டுகளும் சும்மா விழவில்லை.
∎∎∎
எங்கள் கழகத்தைச் சார்ந்த ஒரு குடும்பம்.
நல்ல மனிதர்கள் ஆனால், ஜாதிப் பைத்தியம் பிடித்தவர்கள்.
தங்கள் வீட்டுக் கல்யாணங்களில் மயிர் இழையில் ஜாதி பார்ப்பார்கள்.
என்ன ஊர், என்ன வீதி, என்ன ஒழுங்கை என்பதையெல்லாம் வைத்து,
இனம் பிரித்து அவர்கள் படும்பாடு, விசித்திரமானது.
எங்கள் அப்பா இன்னார், தாத்தா இன்னார் என்று,
உயர்ஜாதி பெருமை பேசுவதில், சமத்தர்கள் அவர்கள்.
உறவினர்களுள் எவராவது ஒருவர்,
தம் ஜாதியிலிருந்து ஒரு மாத்திரை குறைந்து கல்யாணம் செய்துவிட்டாலும்,
அவர்கள் உறவை முறித்துக் கொள்வார்கள்.
வேடிக்கை என்னவென்றால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,
வெளிநாடு சென்று ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார்.
ஆரம்பத்தில் சற்று முரண்பட்டார்கள்.
பின்னர் அந்த வெள்ளைக்காரப் பெண்ணோடு தம்பியார் ஊருக்கு வந்தபோது,
மிகப்பெருமையாக அந்த வெள்ளைக்கார மருமகளை,
ஊரெல்லாம் அழைத்துச் சென்று காட்டிப் பெருமைப்பட்டார்கள்.
‘வேடிக்கை மனிதர்கள்!’
∎∎∎
ஒருநாள் எங்கள் ஊர்க்கோயிலின் உள்ளே,
ஒரு தாழ்ந்தஜாதிக்காரன் குடித்துவிட்டு வந்துவிட்டான்.
உடனே மேல்ஜாதிக்காரர்கள் கொதித்தெழுந்தார்கள்.
“உதுதான் இவன்கள கோயிலுக்குள்ள விடக்கூடாதென்கிறது.
என்னத்தை செய்தாலும் அவங்கள் அவங்கள்தான்.
குளிக்காமல் வர்றதும், குடிச்சுப்போட்டு வர்றதும் அதுகளிண்ட சாதிப்பழக்கம்
இந்தச் சனியன்கள் கோயிலுக்குள்ள வந்தால்,
கோயிலும் நாசமாப்போயிடும்.”
இப்படியாய் அந்த ஒரு தனிமனிதனின் பலயீனம்,
ஒரு ஜாதியின் பலயீனமாய்க் கடுமையாய் விமர்சிக்கப்பட்டது.
அடுத்த வாரமே எங்கள் உறவினருள் ஒருவர்,
அதே போல் குடித்துவிட்டுக் கோயிலுக்குள் வந்து வாந்தியே எடுத்துவிட்டார்.
ஆனால், அவரைப்பற்றியோ அந்த சம்பவத்தைப் பற்றியோ எவரும் பேசவில்லை.
மேலோர்க்கான நீதி உயர்ந்த மதி இது தானோ?
பாரதி சிரித்திருப்பான்.
∎∎∎
கடுமையாய் ஜாதி பார்க்கும் எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்,
மரமேறிக் கள்ளு இறக்க வந்த இளைஞன் ஒருவன்,
தற்செயலாய் நுழைந்துவிட்டான்.
வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்.
எப்படி வீட்டிற்குள் நுழையலாம் என்று அவனை அடித்தே விட்டார்.
அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி அனுப்பிய பிறகு,
மனைவியைக் கூப்பிட்டு வீடு முழுவதையும் கழுவச் சொன்னார்.
மனைவி வீட்டைக் கழுவத்தொடங்க,
தான் வளர்த்த ‘பொறின்’ நாய் நனையப் போகிறது என்று சொல்லி,
அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவரை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.
அடுத்த நாளே அதே கள் இறக்கிற இளைஞனின் வீட்டுக்கொட்டிலினுள்.
பனங்குற்றியில் உட்கார்ந்து கொண்டு,
அவன் கள்ளை ஊற்ற ஊற்ற,
அதை வாங்கி உறிஞ்சி உறிஞ்சி அவர் குடித்த அழகை,
கண்டு அதிசயித்தேன்.
‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’
∎∎∎
என்னவோ போங்கள்!
எங்கள் இனத்தின் கீழ்மைகளில்,
ஜாதிக் கொள்கையும் ஒன்றென்றே தோன்றுகிறது.
கொள்கை என்ன கொள்கை?
கொடுமை என்பதுதான் சரி.
உயர் பண்புகள் ஒன்றுமின்றி,
தம்மை உயர்ஜாதிக்காரராய்ச் சொல்பவரைக் காண,
பாரதி சொன்னது போல்,
மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் தான் தோன்றுகிறது.
∎∎∎∎∎∎∎∎∎∎∎