உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 03 | கூட்டணியின் கோரிக்கையை மறுத்தேன்

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 03 | கூட்டணியின் கோரிக்கையை மறுத்தேன்
நூல்கள் 01 Jun 2016
 
 


 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

யாழ். இந்துவில்  எனது முதல் பேச்சு

இக் காலத்தில் இந்துக் கல்லூரி
‘ஏ.எல். யூனியனில்’ நடந்த ஒரு வழக்காடு மன்றத்தில்,
நானாகக் கேட்டுப் பேசப்போய்,
முதல் நிகழ்ச்சியிலேயே அங்கு பெரும் பேச்சாளனாய்ப் பதிவானேன்.
அதனால், மற்றைய வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த,
திருநந்தகுமார், வைகுந்தவாசன், மகாராஜா,
இரத்தினகுமார், ஸ்கந்தமூர்த்தி போன்ற பலரும் என்னோடு நட்புப் பூண்டனர்.



யாழ். இந்துவில் எனது முதல் இலக்கிய முயற்சி
 

அப்போது எங்கள் உயர்தர மாணவர் ஒன்றியம்,
ஆண்டுவிழா ஒன்றினை எடுக்க முனைந்தது.
அதன் தலைவனான வைகுந்தவாசன் என் நண்பன்.
ஊழல் செய்து விழா நடத்த முனைந்த சக மாணவனைக் கண்டித்து,
விழா நடத்தும் பொறுப்பை அவன் என்னிடம் தந்தான்.
கலைவிழா என்ற பெயரில்,
யாழ். இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நடந்த அந்த விழா,
எனக்குப் பெரும்புகழ் சேர்த்ததோடு,
எனக்குள் கிடந்த நிர்வாக ஆளுமையையும் இனங்காட்டிற்று.
புதுமையாய், பனையோலையில் விழா அழைப்பிதழ் அடிப்பித்தேன்.
அந்த விழாவில் கவியரங்கு, கருத்தரங்கு, வழக்காடு மன்றம்,
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தங்கம்மா அப்பாக்குட்டி, பேராசிரியர் சண்முகதாஸ்,
புஸ்பா செல்வநாயகம் போன்றோர்,
அவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நானும், நண்பன் ஸ்கந்தமூர்த்தியும்,
பேரறிஞர்களான,
வித்துவான் ஆறுமுகம், யாழ். தேவன் ஆகியோரோடு,
வழக்காடு மன்றத்தில் மோதினோம்.
பெரியவர்களான ஆசிரியர்களை மடக்கி
நான் செய்த வாதம் ஒவ்வொன்றிற்கும்,
யாழ். இந்து சமுதாயம் முழுவதும்
எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்தது.
வித்துவான் வேலன் நடுவராய் இருந்து நாங்கள் வென்றதாய், தீர்ப்பளித்தார்.
இந்துக்கல்லூரி வட்டாரத்தில் இவ்விழா என்னை அடையாளப்படுத்தியது.



கூட்டணியின் கோரிக்கையை மறுத்தேன்

70 களில் நான் இந்துக்கல்லூரியில்
உயர்தர வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம்,
கல்லூரியில் அப்பொழுதே ஒரு பேச்சாளனாய் அங்கீகரிக்கப்பட்டிருந்தேன்.
அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகி
எழுச்சி பெற்றிருந்த காலம்.
தமிழ் அரசு, தமிழ்க் காங்கிரஸ் என
பிரிவுபட்டிருந்த அரசியல் அமைப்புகள்,
தமிழர் உரிமைக்காய் தமிழர் விடுதலைக்கூட்டணி எனும் பெயரில்
ஒன்று பட்டிருந்தன.
உரிமை, ஒற்றுமை என்ற இரண்டு சொற்கள்,
ஒட்டுமொத்தத் தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன.
கூட்டணியினர் அப்பொழுது பெற்றிருந்த ஆதரவை
நினைத்தும் பார்க்கமுடியாது.
எங்கு போனாலும் கூட்டம், எங்கு போனாலும் ஆதரவு என்ற நிலை.
தமிழ் மக்கள் தந்த அந்த ஒட்டுமொத்த ஆதரவு,
தமிழர் கூட்டணியினரை ஓரளவு தருக்கேற்றியிருந்தது.
தனித் தமிழீழக் கொள்கையை அவர்கள் முன் வைத்திருந்த காலம் அது.
அகிம்சையை தங்கள் வழியாய் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் வந்தது.
பெரும் பரபரப்பு.
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த வெ. யோகேஸ்வரன்,
யாழ்ப்பாணத் தொகுதிக்கு வேட்பாளராய் நிறுத்தப்பட்டார்.
அவரை ஆதரிப்பதற்கென முற்றவெளியில்
ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
பெரிய கல்லூரிகள் ஒவ்வொன்றிலிருந்தும்
இரண்டு மாணவர்களைப் பேச அழைத்திருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு,
பேசவேண்டிய விடயம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக,
கூட்டணி அலுவலகத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்திருந்தனர்.
எங்கள் கல்லூரிப் பிரதிநிதியாய் நானும் சென்றிருந்தேன்.
அக்கூட்டத்தில் அகிம்சையைத் தங்கள் வழியாய்
அறிவித்திருந்த அவர்கள்,
ஆயுதப் போராட்டத்திற்கான ஆயத்தம் பற்றி எடுத்துரைத்தனர்.
அக்கருத்தை எமது பேச்சில் வெளிப்படுத்தும்படி
எங்களை கேட்டுக்கொண்டனர்.
உள்  ஒன்றும் வெளி ஒன்றுமாக வைத்துப்பேசும்
அவர்கள் கருத்துநிலையில், உடன்பாடு ஏற்படாததால்
அக்கூட்டத்தை நிராகரித்தேன்.
அந்நிராகரிப்பு தற்போது உங்களுக்குச் சாதாரணமாய்ப் படலாம்.
அப்போது கூட்டணிக்கு இருந்த அங்கீகாரத்தின் உச்சநிலையில்,
அவர்கள் கூட்டத்தில் பேசுவதும் அதற்காய்த் தேர்ந்தெடுக்கப்படுவதும்,
ஒரு வரமாய்க் கருதப்பட்டது.
பல மாணவர்கள் அத்தகுதிக்காய்த் தவங்கிடந்தனர்.
அந்நிலையிற்தான் என் சுயத்தால் அத்தகுதியை நிராகரித்தேன்.
அது இளமை தந்த துணிவு.
முதுமை வட்டத்துள் கால்வைக்கும் இன்றைய நிலையில்,
அத்துணிவை மீள நினைக்க எனக்கே சற்றுப் பெருமையாய் இருக்கிறது.



மெல்ல மெல்லப் பிரபல்யம் வந்தது

இக்காலகட்டத்தில்,
என் பேச்சுத்திறமை ஓரளவு பிரபல்யமாக,
பல ஊர்களுக்கும் சென்று பிரசங்கங்களும்,
பட்டிமண்டபங்களும் நடாத்தத்தொடங்கினேன்.
என் நிகழ்ச்சிகளுக்கு, என்னோடு என் நட்பு வட்டாரம் முழுவதும் வரும்.
யாழின் பல ஊர்களில் மட்டுமன்றி,
துணுக்காய், திருகோணமலை, கிண்;ணியா போன்ற,
பல வெளியூர்களுக்கும் சென்று பட்டிமண்டபங்கள் நடாத்தினோம்.
இங்ஙனமாய்ச் சென்று நடாத்திய நிகழ்ச்சிகளில்,
இரண்டு நிகழ்ச்சிகள் மறக்கமுடியாதவை.



துணுக்காயில் பட்ட துன்பம்

அப்போது பிரபலமாய் இருந்த, நாதஸ்வர வித்துவான்
இணுவில் கோவிந்தசாமி அவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க,
ஒரு முறை துணுக்காய் கோயில் ஒன்றுக்குப் பேசச் சென்றேன்.
குமாரதாசன் எனக்குத் துணையாக வந்தார்.
இரவு பத்துமணிக்கு மேலேதான் பேச்சு.
‘ரக்ரர்’ பெட்டிதான் மேடை.
சாப்பிட்டு விட்டு ஒன்பதரைக்குப் பின்,
பாய், தலையணையுடன் வந்து படுத்திருந்து கேட்கும் சபை.
நான் மேடைக்குப் போகும் முன் ஒருவர் வந்து,
கையில் இரண்டு பழைய துணித்துண்டுகளைக் கொடுத்து,
காதுகளை அடைத்துக் கொண்டு பேசுங்கோ’ என்றார்.
நான் ஒன்றும் புரியாமல் ஏனென்று கேட்க,
‘லைற்’றுக்குச் சக்கரப்பாண்டிப் பூச்சிகள் வந்து காதுக்குள் புகுந்து,
செவிப்பறையை ஓட்டையாக்கி விடும்” என்றார்.
நடுங்கியபடி நடுச்சாமத்தில் ஒருவாறு பேசி முடித்தேன்.
இறங்கி வந்தால் எங்களைப் பேச அழைத்த உபயகாரரைக் காணவில்லை.
யாழ் திரும்பி வர, கையில் காசும் இல்லை.
கோவிந்தசாமியும் கச்சேரி முடித்துப் போய்விட்டார்.
திகைத்து நின்ற எங்களில் இரக்கப்பட்டு,
கோயிலுக்கு வந்த இரண்டு பேர்,
‘ரிக்கற்’ எடுத்துத்தந்து அனுப்பி வைத்தனர்.



தூண்களுக்குப் பேசினேன்

அதுபோல, ஒருமுறை இணுவில் கந்தசாமி கோயிலில்,
அருணகிரிநாதர் விழா என்று எனது ஆசிரியர் சண்முகலிங்கம் அழைக்க,
ஆர்வமாய்ப் போனால்,
மண்டபத்தில் அவர் மட்டும் இருந்து எனது பேச்சைக்கேட்டார்.
ஊரில் ஒரு கல்யாணம் அதனால்தான் ஒருவரும் வரவில்லை” என்று,
சமாதானம் கூறினார்.
மண்டபத் தூண்களை மனிதர்களாய் நினைத்துப் பேசிவிட்டு வந்தேன்.
இப்படி எத்தனையோ சுவாரஸ்யமான அனுபவங்கள்.
விரிவஞ்சி அவற்றை விடுகிறேன்.



புகழ் தேடித்தந்த சேக்கிழார் விழாப் பட்டிமண்டபம்

அப்போது யாழ்ப்பாணத்தில்
சேக்கிழார் மன்றம் சிறப்பாக இயங்கி வந்தது.
வக்கீல் சோமசுந்தரம் அதன் தலைவராகவும்,
எனது ஆசிரியர் செட்டியார் சோமசுந்தரம்
அதன் செயலாளராயும் இருந்தனர்.
அம்மன்றத்தின் சார்பில் ஆண்டுக்கொரு விழா எடுப்பார்கள்.
வேறு வேறு கல்லூரிகளில் அவ்விழாக்கள் நடைபெறும்.
அந்த ஆண்டு யாழ். இந்துக்கல்லூரியில் அவ்விழா நடைபெற்றது.
ஒரு மாலை நிகழ்ச்சியாக பட்டிமண்டபம் அமைத்திருந்தார்கள்.
பட்டிமண்டபத்தின் ஓர் அணிக்கு,
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படித்த,
ஞானதேசிகன் என்ற மாணவன் தலைமை தாங்க,
நான் இரண்டாவது பேச்சாளராகப் பேசுவதாய் இருந்தது.
ஆனால் முன்பொருமுறை ஒரு பேச்சுப்போட்டியில்
என்னைச் சந்தித்திருந்த,
ஞானதேசிகன் என்னைக் கண்டதும்,
என்னையே அவ் அணிக்குத் தலைமை தாங்கச் சொன்னான்.
நான் தலைமை தாங்கினேன்.



மைத்துனனுடன் மோதினேன்

மற்றோர் அணிக்கு யாழ் மத்திய கல்லூரி சார்பில்,
என் மைத்துனன் உருத்திரகுமார் தலைமை தாங்கினான்.
எங்கள் கல்லூரிக்கும் அவர்கள் கல்லூரிக்கும் எப்போதும் போட்டி நடக்கும்.
பேச்சுத்துறையில் நாமிருவரும்
கல்லூரிகள் சார்பாய் முதன்முதலாய் மோதினோம்.
அவன் என் தந்தையின் தங்கையின் மகன்.
அக்காலத்தில் யாழ். மேயராயிருந்த விஸ்வநாதனின் புதல்வன்.
இந்நாளில் இவன்தான்
நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமராய்ப் பதவி வகிக்கிறான்.
அவன் இயல்பான கெட்டிக்காரன்.
எங்கள் குடும்பத்திலேயே நான்தான் மக்கென்று பெயர் வாங்கியிருந்தேன்.
இயல்பாய் எனக்கிருந்த இலக்கியப் பயிற்சியால்,
அன்றைய வாதத்தில் அவர்களை உருட்டியெடுத்தேன்.
அன்றைய நிகழ்ச்சிக்கு,
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் வந்திருந்தார்.
எதிரணியினரை மடக்கியும் நக்கலடித்தும் பேசிய எனது பேச்சைக் கேட்டு,
உட்கார முடியாமல் இருக்கையில் இருந்தபடி
சுழன்று சுழன்று அவர் சிரித்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் என்னைக் கூப்பிட்டுத் தலை தடவிப் பாராட்டினார்.
அன்றைய மன்றத்திற்கு நடுவராயிருந்த,
யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை, எங்கள் அணிக்குத் தீர்ப்புத்தர,
உருத்திரனை இவன் வெல்வதா?” என உறவு கொந்தளித்தது.
அதே கல்லூரியில் ஆசிரியராயிருந்த உருத்திரனின் தாயாரும்,
வேறுசிலரும் தீர்ப்புத் தவறென்று,
தீர்ப்புச் சொன்ன அவ் ஆசிரியையோடு சண்டை போட்டனர்.
ஏதோ ஒரு துறையில் இவர்களோடு
என்னாலும் நின்றுபிடிக்க முடிகிறதே என,
நினைந்து நிமிர்ந்தேன்.
உறவினர் மத்தியில் என்னை உயர்த்திய நிகழ்ச்சி இது.



திருக்கேதீஸ்வரத் திருவிழாவில்..

புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரத் திருவிழாவின் ஒவ்வொரு நாளையும்
ஒவ்வொரு கல்லூரிகள் பொறுப்பேற்று நடாத்துவது வழக்கம்.
இந்துக் கல்லூரிக்கும் ஒரு திருவிழா இருந்தது.
அந்த ஆண்டுத் திருவிழாவுக்குச் செல்லும் ஆயத்தம் நடந்தது.
திருவிழாவன்று இரவில் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சிகள் நடாத்துவர்.
அந்த ஆண்டு என்ன நிகழ்ச்சி நடாத்துவதென்று,
எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளையின் அறையில்
ஆலோசனை நடந்துகொண்டிருந்தது.
தற்செயலாய் நான் அங்கு செல்ல,
இம்முறை இவனே பேசட்டும்!” என்றார் சிவராமலிங்கம் மாஸ்டர்.
உயர்தர ஒன்றிய வழக்காடு மன்றத் தோல்வியால்,
என்மேல் சற்றுக்கோபங்கொண்டிருந்த வித்துவான் ஆறுமுகம்,
இவனுக்கு சமயம் பேசத் தெரியுமா?
ஸ்கந்தாவில என்ர மாணவனொருவன் இருக்கிறான்.
அவன் சமயம் பேசினால் சனம் அழும்” என்று,
என்னைத் தாழ்த்திப் பேசினார்.




பாட்டும், பேச்சும்

சிவராமலிங்கம் மாஸ்டர் விடவில்லை.
இந்தமுறை இவனை விட்டுப் பார்ப்போம்” என்று முடிவாய்ச்சொல்ல,
வித்துவான் வேண்டாவெறுப்பாய் ஒத்துக்கொண்டார்.
போகும் வழியெல்லாம் என்னைக் கிண்டல் செய்துகொண்டே வந்தார்.
நான் பேச, சங்கீத மாணவர் சிலர் இடையிடையே பாடுவதாய்,
நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.
இரவு நிகழ்ச்சி தொடங்கியது.
நான் நடுவில் இருக்க,
எனது ஒரு பக்கத்தில் வித்துவான் ஆறுமுகம்.
மறுபக்கத்தில் எங்கள் கல்லூரி சங்கீத ஆசிரியர் மாணிக்கவாசகர்.
நான் பேசத்தொடங்கினேன்.
இறையருளால் அன்று பேச்சு நன்றாக அமைந்துபோயிற்று.
பாடவந்த மாணவர்களின் சுருதி பொருந்தவில்லையென,
அவர்கள் பாடுவதை நிறுத்திவிட்டு,
ஆசிரியர்கள் இருவரும்,
என் பேச்சுக்குப் பொருத்தமாய் இணைந்து பாடத் தொடங்கினர்.



பகைத்தவர் நெகிழ்ந்தார்

வித்துவான் ஆறுமுகம் ஒரு தமிழ்ப்பித்தர்.
என்னில் பகையோடு வந்த அவர்,
அன்றைய என் பேச்சுக்கேட்டு என் காதலர் ஆனார்.
அருகிருந்து என்னைப் “பேசு, பேசு” என ஊக்குவித்தார்.
ஆஹா! ஓகோ!’ என ஆரவாரித்து இரசித்தார்.
நான் பேசப்பேச அவர் கண்களிலும்,
ஆசிரியர் சிவராமலிங்கம் கண்களிலும்,
ஆனந்தக் கண்ணீர் வெள்ளமாய் ஓடியது கண்டு சிலிர்த்துப் போனேன்.
அன்று இரண்டு மணி நேரம் வரை பேசினேன்.
வித்துவானுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
நான் பேசி முடிந்ததும் ‘மைக்’கைப் பறித்து
அவர் பேசத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் அண்ணாவின் பேச்சைக் கேட்டு,
அறிஞரென அவருக்குப் பட்டம் கொடுத்தார்கள்.
இன்று இவனது பேச்சைக் கேட்டு,
இவனுக்கு நான் அறிஞன் எனப் பட்டம் கொடுக்கிறேன்” என,
அழுதழுது சொன்னார்.
நான் தற்பெருமையாய்
இந்நிகழ்வை உரைப்பதாய் சிலர் நினைக்கலாம்.
இச்சம்பவத்தை என் புகழுக்காய் உரைக்கவில்லை.
வித்துவானின் அன்புள்ளத்தை அடையாளப்படுத்தவே உரைக்கிறேன்.
அந்த அன்புள்ளம் பின்னர் இறக்கும்வரை என்னைக் காத்திருந்தது.



ஊரில் எனது இலக்கிய முயற்சிகள்

இலக்கிய ஆர்வத்தால்
என் தாயாரின் ஊரான சண்டிலிப்பாயில்,
முதன்முதலாக ஓர் இலக்கியவிழாவினை நடாத்தினேன்.
அதுதான் ஊரில் எனது முதல் இலக்கிய முயற்சி.
எங்கள் ஐயனார் கோயில் வீதியில் அவ்விழா நடந்தது.
பின்தங்கிய கிராமம் அது.
எங்கள் ஊர்க்காரர்கள் அதிக இலக்கியப் பயிற்சி இல்லாதவர்கள்.
ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட என,
உறவு சூழ்ந்த கிராமம் அது.
அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அயல் இளைஞர்கள் என,
இலக்கியத்தோடு,
எந்தச் சம்பந்தமும் இல்லாதவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி,
அந்த விழாவை நடாத்தினேன்.
அந்த விழாவிலும் பட்டிமண்டபம், கருத்தரங்கம், கவியரங்கம்,
ஆகிய நிகழ்ச்சிகளே நடந்தன.
அப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாய் இருந்த,
பேராசிரியர் சண்முகதாஸ்,
ஞானா குலேந்திரன் போன்றோரும்,
மனோன்மணி சண்முகதாஸ்,
மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம் ஆகியோரும்,
எங்கள் ஆசிரியர்களான சிவராமலிங்கம்,
தேவன், வித்துவான் வேலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



ஊரில் பகை

அங்கும் பட்டிமண்டபத்தில் எனக்கெதிராக என்னுடைய மச்சான்,
உருத்திரகுமார் ஓர் அணியில் பேசினான்.
ஓரளவு அந்நிகழ்ச்சி வெற்றியாய் அமைந்தது.
அவ்வெற்றி தந்த உற்சாகத்தில் அடுத்த ஆண்டும் விழா எடுத்தோம்.
அவ்விழாவிற்கு நிதிசேகரிக்க, சங்கானைத் தியேட்டரில்,
மதுரை வீரன்” படம் ஓட்டினோம்.
ஊரெல்லாம் திட்டு வாங்கி,
இரண்டு ரூபா ‘ரிக்கற்’ விற்று எழுநூற்றி ஐம்பது ரூபாய் பணம் சேர்த்தோம்.
இவ்விழாவின் போது குமாரதாசன் எனக்கு முழு ஆதரவையும் வழங்கினான்.
விழாவில் கலந்த அறிஞர்கள் என்னைப் பாராட்ட,
உறவுக்குள் பொறாமைத் தீ மெல்ல எழும்பத்தொடங்கியது.
அத் தீ பகையாய் வெடிக்க,
அத்தோடு ஊரில் தொடங்கிய என் இலக்கிய முயற்சிகள் நின்றுபோயின.
தொடரும்...
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
 
பாகம் 004ல்...
 
· கழகம் பிறந்த கதை 
· அகில இலங்கைக் கம்பன் கழகம்
· எங்கள் கழக நிர்வாகம்
· குமாரதாசன்
· திருநந்தகுமார்
· மாணிக்கவாசகர்
· சிவலோகராஜா
· காவல் செய்த ஆசிரியத் தெய்வங்கள்
· கழகம் நடாத்திய இராமாயண வகுப்பு
· ஆசிரியர்களுக்குப் பாதபூசை
· கழகத்தின் முதல் ‘கலெக்ஷன்’
· முதல் நிதி தந்த கைராசிக்காரர்
· நான் சந்தித்த முதல் வன்முறை
· நல்லை ஆதீனக் குருமுதல்வர்
· ஆதீன முரண்பாடும் - ஆதரவும்
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.