"இராமன் அவதார புருஷனாகில் காவியச்சுவை குன்றாதா?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன்,
காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என,
சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது.
அங்ஙனமாயின்,
காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும்,
இராமன் தனது தெய்வசக்தியைப் பயன்படுத்தாமல்,
மானிடனாய்க் கிடந்து உழல்வது ஏன்?
கேள்வி பிறக்கும்.
✠✠✠✠✠✠
இராமனை அவதாரமாய்க் கொள்ளின்,
கதையோட்டத்தில்,
சீதையைப் பிரிந்து இராமன் துயருறுவதும்,
அணைகட்டி கடல் கடந்ததுவும்,
மறைந்து நின்று வாலியைக் கொன்றதுவும்,
நாகாஸ்திரப்படலத்தில்,
இலக்குவனுக்காய் அழுது நின்றதுமான காட்சிகள்,
நகைப்புக்கிடக்கமான காட்சிகள் ஆகாவா?
இராமன் அவதார புருஷனாகில்,
இக்காட்சிகளில் அவன் மானிடனாய் நின்று இயங்குவதேன்? என,
வாசகர் மனதில் குழப்பம் ஏற்படும்.
✠✠✠✠✠✠
அதுமட்டுமன்றி,
கிஷ்கிந்தா காண்டத்தில்,
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் மற்றிவர்கள் ஆதி
வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா! என,
இராமனை மானிடனாய்,
சுக்கிரீவன் வாய் மொழியாய்,
கம்பனே உரைப்பது எங்ஙனம்?
வினாக்கள் அடுத்தடுத்துப் பிறக்கும்.
✠✠✠✠✠✠
இவ்விடத்தில்த்தான் கம்பனின் மதி நுட்பத்தை,
நாம் மனம் பதித்துக் கொள்ளவேண்டும்.
புவிக்கு வந்த இராமன் திருமாலின் அவதாரமே!
இஃது கம்பன் சொல்லும் முதல் செய்தி.
மானிட வடிவங்கொண்டு கருவாய்ப்பட்டு,
பூமியில் அவதரித்த பின்பு,
இராமன் முழுக்க முழுக்க,
மானிடத் தன்மைபெற்றவனாகவே இயங்குகிறான்.
இஃது கம்பன் சொல்லும் இரண்டாவது செய்தி.
இவ் அடிப்படையிலேயே,
கம்பன் தனது இராமனை,
தெய்வீகம், மானிடம் எனும் இரு தடங்களில்,
ஒன்றுக்கொன்று முரண்படாமல் நடத்திச் செல்கிறான் என,
சென்ற கட்டுரையில் உரைத்தேன்.
✠✠✠✠✠✠
வருணதேவனை வழிவேண்டுதல்,
இந்திரன் இராமனை வந்து தரிசித்தல் போன்ற காட்சிகளும்,
சிவன், பிரம்மன் ஆகியோர் சீதை தீக்குளிப்பின்போது வருகை தருவதுவும்,
மானிடத்தைத் தாண்டி இராமனின் தெய்வத்தன்மையை,
நிலைநிறுத்தும் காட்சிகள் இல்லையா?
மீண்டும் கேள்விகள் பிறக்கின்றன.
இல்லை என்பதே பதிலாம்!
✠✠✠✠✠✠
எங்ஙனமோ எனின்,
இராமாயணக் காலத்தில்,
இந்திராதிதேவர்கள், மும்மூர்த்திகள் போன்றோர்,
புவியில் வாழ்ந்தாரோடு தொடர்பு வைத்திருந்தமையை,
காவியத்தின் பல இடங்களில் கம்பர் பதிவு செய்கிறார்.
கம்பர் மட்டுமன்றி,
வேறு பல தமிழ்க்காவியங்களும் அச்செய்தியை உறுதி செய்கின்றன.
✠✠✠✠✠✠
சம்பரன் யுத்தத்தில்,
தசரதன் இந்திரனுக்குத் துணை செய்ய தேவலோகம் சென்றதுவும்,
இராவணன் கயிலாயமலையைத் தூக்கி சிவனை நிந்தித்து பின் வரம் பெற்றதுவும்,
தேவர்கள் இராவணனுக்குப் பணி செய்ததுவும்,
முன் சொன்னாற்போன சீதையின் தீக்குளிப்பின் போது,
சிவன், பிரமன் முதலியோர் வருகை தந்துவும் போன்றதான,
பல காட்சிகளில் இராமாயணப் பாத்திரங்கள் அனைத்தும்,
அக்காலத்தில்,
தேவுக்களோடும் தெய்வங்களாடும் தொடர்பு வைத்திருந்தமையை உறுதி செய்கின்றன.
எனவே முன் சொன்னகாட்சிகளை வைத்து,
அவதாரத்தின் பின்பும், கம்பன், இராமனை தெய்வமாகவே உலவவிட்டான் என்னும் செய்தி ஏற்கத்தக்கதன்றாம்.
மேற் செய்திகள், அக்கால அமைப்பிற்கேற்ப பதிவு செய்யப்பட்டதேயன்றி,
இராமனை தெய்வமாய்க்காட்ட பதிவு செய்யப்பட்டவை அல்ல என்பதை,
நாம் விளங்குதல் அவசியம்.
✠✠✠✠✠✠
அக்காலத்தில் புவியில் வாழ்ந்த மானிடரோடு,
தொடர்புபட்டு இயங்கிய தேவுக்களும் தெய்வங்களும்,
இன்று அங்ஙனம் இயங்காததன் காரணம் என்ன?
மீண்டும் கேள்வி பிறக்கும்.
விடை இலகுவானதாம்.
இராமாயணம் நிகழ்ந்த யுகம் திரேதாயுகம்,
அந்த யுகத்தில் தர்மம் நிறைந்து நிலைநின்றதாய்ச் சொல்லப்படுகிறது.
அதனால்த்தான் அக்காலத்தில் தெய்வ தரிசனங்கள்,
பூமியிலும் நிகழ்ந்ததாய்க் கொள்ளல் வேண்டும்.
கலியுகம், தர்மம் நலிவடைந்து வீழ்ச்சியுறும் யுகம்.
அதனால்த்தான் இக்காலத்தில்,
தெய்வதரிசனங்களை நாம் காணமுடிவதில்லை என்பதுவே,
மேற்கேள்விக்காம் பதிலாம்.
✠✠✠✠✠✠
அக்காலத்திலும் அதர்ம காரியங்கள் நடந்ததுவே என,
இராமாயணத்தையே சான்றுகாட்டி,
வேறுசிலர் கேள்வி எழுப்புவர்.
அவர்க்கும் பதில் உரைத்தல் கூடுமாம்.
அக்காலத்தில் தர்மம் விதியாகவும்,
அதர்மம் விதிவிலக்காகவும் நின்றன.
இன்றோ, அதர்மம் விதியாகவும்,
தர்மம் விதிவிலக்காகவும் நிற்கின்றன.
இதுவே திரேதாயுகத்திற்கும், கலியுகத்திற்குமான வேறுபாடாம்.
✠✠✠✠✠✠
இனி, மீண்டும் ஆராய எடுத்துக் கொண்ட விடயத்திற்குள் நுழைவோம்.
கம்பகாவியத்தில் வரும் நுண்ணறிவுமிக்க பாத்திரங்கள் பல,
இராமனை அவதாரபுருஷனாய் இனங்கண்டு மகிழ்ந்தனவேயன்றி,
இராமன் எவ்விடத்திலும் தன்னை அவதாரபுருஷனாய் உணர்ந்து இயங்கியதாய்,
கம்பர் பதிவு செய்யவில்லை.
மேற் செய்திக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் இடையூறு நிகழ்கிறது.
இராவணனால் தன்மேல் விடப்பட்ட சூலத்தை,
தனது ஹூங்காரத்தால் இராமன் அழிப்பதுவாய்,
ஓர் காட்சி யுத்தகாண்டத்தில் வருகிறது.
இக்காட்சி இராமனின் தெய்வத்தன்மையை உரைக்கும் காட்சியாகாதா?
ஐயம் தோன்றும்.
இங்கும் விடைகாண வழி இருக்கிறது.
✠✠✠✠✠✠
இராமன், தன்னை நோக்கி வந்த சூலத்தைக் கண்டு,
இயல்பாய் ஹூங்காரம் செய்கிறான்.
இராமனின் ஹூங்காரத்தில் பொதிந்திருந்த தெய்வத் தன்மையால்,
அவ் அஸ்திரம் செயலற்றுப் போகிறது.
இங்கும் கம்பன் இராமனின் தெய்வத்தன்மையை,
கற்போர் உணரும்படிச் செய்கிறானேயன்றி,
இராமன் தன் தெய்வத்தன்மையை உணர்ந்து இயங்கியதாய்,
பதிவு செய்யவில்லை என்பது உறுதி.
✠✠✠✠✠✠
இன்றைய கம்பமேடைகளில் பல பேச்சாளர்கள்,
இராமன் அவதாரனல்லன் மானிடனே! என்றும்,
இராமன் மானிடன் அல்லன் அவதாரமே! என்றும்,
தத்தம் விருப்பிற்கேற்பவும் தேவைக்கேற்பவும் உரைத்து வருகின்றனர்.
அஃது முறையன்றாம்.
இராமனைக் காவிய நாயகனாய் வைத்துப் பேசும்போது,
தன் தெய்வீகத்தை உணராத மானிடனாகவே,
அவனை நாம் கருதல் வேண்டும்.
அதுவே கம்பசித்தாந்தமாம்.
✠✠✠✠✠✠
அதே நேரத்தில் இராமனில் அவதாரத் தன்மையே இல்லை என்பதும் தவறாம்.
மானிடனாய்த் தோன்றிய பின்பு,
இராமன் தன்னை இறைத்தன்மை உள்ளவனாய் உணராமல் நின்றானே அன்றி,
மற்றைப் பாத்திரங்களால் அவன் தெய்வமாய் உணரப்பட்டான் என்பது நிஜமாம்.
அதற்கு ஏதேனும் சான்றுகள் உண்டோ? எனின்,
உண்டு என்பதே பதிலாம்.
அச்சான்றுகளில் ஒன்றினைக் காண்போம்.
✠✠✠✠✠✠
நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் இலக்குவன்,
மாண்டுவிட்டான் எனக் கருதி இராமன் கதறுகையில்,
அந்த நாகாஸ்திரக் கட்டை நீக்க வருகைதரும் கருடாழ்வார்,
இராமனின் இம்மானிட நிலையைக் கண்டு வியந்து துதிக்கிறார்.
'வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும், மலர்மேல் அயந்தன் முதலோர்
தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தா குலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?
என் தாய் வருந்தல் உடையாய்! வருந்தல்' என, இன்ன பன்னி மொழிவான்:
'தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீட காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்! -ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
✠✠✠✠✠✠
இராமனைத் திருமாலாய் உணர்ந்திருந்த கருடாழ்வார்,
தெய்வங்கள் அவன் பிரிவால் வாடுவதைக் கூறியும்,
உலகத் துன்பங்களைக் களையக்கூடிய அவன்,
துன்பமுற்று நிற்பதைக் கண்டு வியந்தும்,
இன்பத்தின் எல்லையாகிய வீட்டின்பத்தைத் தரக்கூடிய அவன்,
துன்பத்தால் வருந்தி அழுவதைக்கண்டு மயங்கியும்,
இம்மாயையை எவர் அறிவார்? என்று உரைத்து நிற்கிறான்.
இக்காட்சியே கதைப்போக்கில்,
இராமன் தனது தெய்வத்தன்மையை உணராமல் நின்றதற்கும்,
அதே நேரத்தில் அவன் தெய்வத்தன்மை உடையவன் என்பதற்கும்,
சாட்சியாய் அமைந்து போகிறது.
காவியத்தில் இத்தகு காட்சிகள் பல உண்டாம்.
✠✠✠✠✠✠
முடிவாக,
கம்பன் தான் படைத்த இராமனை,
அவதாரபுருஷனாகத் தெளிவுற அறிவிக்கிறான்.
அதே நேரத்தில் அவதாரம் செய்த பின்பு,
இராமன் தன்னுடைய தெய்வீகத்தை உணராதவனாகவே,
கம்பனால் இயங்க வைக்கப்படுகிறான்.
கம்பன் செய்யும் இவ் உத்தியால்,
இறைபக்தர்கள் இராமனை தெய்வ அவதாரமாய் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில்,
இலக்கியச் சுவையாளரால் இராமனை மானிடனாகவும் ரசிக்கமுடிகிறது.
இவ்வித்தை புரிய, கம்பனை அன்றி வேறெவரால் ஆகும்?
✠✠✠✠✠✠