ஆறுமுகம் ஆன பொருள்-பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

ஆறுமுகம் ஆன பொருள்-பகுதி 4: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
அம்மையார் பற்றி என் குருநாதர் இராதாகிருஷ்ணனின் பேச்சுத் தொடங்கியது.  பத்து நிமிடத்துக்குள் சபை தன்னை மறந்தது. பேச்சு முடிந்ததும். கற்றோர் பலர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனுக்குக் கைகொடுக்கப் போயினர். அப்போது கூட்டத்தை விலக்கி விம்மியபடி உள்நுழைந்தார் எங்கள் வித்துவான். ம(க)ப்ளரை எடுத்து இடுப்பிற் கட்டினார். கண்ணீர் சோர நெடுமரமாய் எனது குருநாதர்; காலில் விழுந்தார். கூடியிருந்த கற்றோர் திகைத்துப்போயினர்.  என் குருநாதர் பதறினார். அழுதுமுடிந்து வெளியே வந்த வித்துவானை, சில 'பட்ட' மரங்கள் பரிகசித்தன. அவ் 'வற்றல் மரங்களின்' வம்பு கேட்டு, துளியும் ஆணவப்படாமல், 'காரைக்காலம்மாவை என்ர கண்ணில காட்டிப்போட்டாரடா. கும்பிடாம எப்படி இருக்கிறது?' என்றபடி, மீண்டும் அழத்தொடங்கினார். அன்பால் அறிவைக் கடந்த, அவ் அற்புதர்.



லகம் விசித்திரமானது. உலகோரும் தான்.
எங்கள் மரபுலகில் பல புலவர்களைப் பார்த்திருக்கிறேன்.
தமிழே தங்கள் உயிர் என்பது போல் அவர்கள் உருகுவர்.
வள்ளுவரை  வள்ளுவன் என்று யாரும் சொன்னாலே, அவர்களுக்குத் தாங்காது.
முக்கிய கவிதைகளைச் சொல்லும்போது, ஒரு எழுத்துத் தவறினாலும்,
இடியோசை கேட்ட 'அசுணம்'  போல் அதிர்ந்து காட்டுவர்.
அப்படி நடித்த பலபேர்கள் பின்னாளில்,
நம் மண்ணில் மரபுக்கெதிரான போராட்டங்கள் தொடங்கியபோது,
எதிராளிகள் கையோங்க, வென்ற புதியவர்களுக்கு,
எப்படியெல்லாம் தமிழ்ப்புலவர்களை இழிவு செய்யலாமென,
ஏடெடுத்துக் கொடுத்து எட்டப்ப வேலை செய்து இழிவியற்றினார்கள்.

 


புலவர்களை அவர்கள் போற்றியது வெறும் வாய்ச்சொல்.
வித்துவான் அவர்களுள் விதிவிலக்கானவர்.
தமிழ்ப்புலவர்தமை தன் குருமாராய் நினைந்தவர்.
அதிலும் பாரதி என்றால் அவருக்கு ஒரு தனிப்பைத்தியம்.
இசையிலும் வல்ல எங்கள் வித்துவான்,
'குஷி' வந்து விட்டால்,
அபிநயத்தோடு பாரதி பாடல்களைப் பாடத்தொடங்கிவிடுவார்.
பாரதியும், வித்துவானுக்குக் கண்ணீர் வருவிப்போர் 'லிஸ்டில்' இடம்பெற்றவன்.
அவன் தமிழால் விளைந்த உருக்கத்தால் மட்டுமல்ல,
வறுமையோடு இளமையில் இறந்துபோன அவன் இழப்பு நினைந்தும் அழுவார்.
அவர் பாரதிமேற்கொண்ட பற்றுக்கண்டு, நான் திகைத்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்.



நாளடைவில் தமிழ் தந்த நெருக்கத்தால், கழகம் ஒரு குடும்பம் போல் ஆகிவிட்டது.
வித்துவான் முதலியோர், நாங்கள், எம்மைவிட இளையார் என,
மூன்று தலைமுறையினர் கழகத்தில் ஒன்றாயிருந்தோம்.
ஒரே காலத்தில் இந்தியாவில் படித்தவர்கள் என்பதால்,
சிவராமலிங்கம் மாஸ்டர், வித்துவான் வேலன், வித்துவான் ஆறுமுகம் ஆகியோர்,
ஏற்கனவே உறவாய் நெருங்கியிருந்தார்கள்.
வித்துவான் அவர்களுள் மூத்தவர்.
வேலனுக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகம்.
அவர் 'அண்ணை' என்பார், இவர் 'தம்பீ' என்பார்.
வித்துவான் வேலன், சமரசம் செய்யத்தெரியாத தன் தனிப்போக்கால்,
உலகத்தோடு முரண்பட்டு நின்றவர்.
அவரை அணுக தமிழ் படித்தவர்களே பயப்படுவார்கள்.
வித்துவான் மட்டும்தான் அவரோடு நெருக்கமாய் இருந்தார்.



வித்துவான் வேலன் அவர்களுடைய ஒரு பிறந்ததினத்தன்று,
நாங்கள் எல்லோரும், பருத்தித்துறையில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம்.
அவர் வீடு எங்கள் தாய்வீடு போல, சாப்பாடு, சிரிப்பு, பேச்சு என,
நாங்கள் போனால் வீடு இரண்டுபடும்.
வித்துவானும் எங்களோடு வந்திருந்தார்.
வேலன் சேரின் விருப்ப மாணாக்கன் அருமைநாயகமும்,
திடீரென அங்கு வந்துசேர, கலகலப்பு அதிகரித்தது.
அருமைநாயகம் ஒரு நாடகப் பைத்தியம்.
அவரைப்பற்றியும் முன்னர் எழுதியிருக்கிறேன்.
நாடக நினைப்பிலேயே வாழ்ந்து நாடக நினைப்பிலேயே செத்தவர் அவர்.
மாலை தேநீர் விருந்தின் பின்பு கூடத்தில் கூடினோம்.
பொழுதுபோவதற்காய், ஒருவர் பாட, ஒருவர் ஆட,
அருமைநாயகத்தின் 'டேர்ன்' வந்தது.



'எனக்கு நடிக்கத்தான் தெரியும்,
ஆனால் சேர்ந்து நடிக்க ஒருவருமில்ல என்னசெய்யிறது.' என்றார்.
அதைக்கேட்ட வேலன் சேர்,
'என்ன நடிக்கப்போற' சேர்ந்து நடிக்கிறவர் என்ன செய்யவேணும்,
சொல்லு. இவையள் ஆரும் செய்வினம்.' என்று ஊக்கப்படுத்தினார்.
'கப்பலோட்டிய தமிழன் படத்தில,
சிவாஜி நடித்த ஒரு பகுதியை நடிக்கப்போறன்.
பெரிசா ஒன்றுமில்லை. கப்பலோட்டிய தமிழன் வீட்டில் இருக்கிறார்.
அப்ப அவருக்கு ஒரு தந்தி வருகுது.
அந்த இடத்தில, ஆராவது ஒருவர் 'போஸ்ட்மென்னாக' வந்து,
நான் நடிச்சுக்கொண்டு கண்காட்டேக்க,'சார்! தந்தி' என்று சொல்லி,
ஒரு 'பேப்பரை' என்னட்டைத் தரவேணும்.
மிச்சம் நான் நடிப்பன். அவ்வளவுந்தான்.
ஆர் 'போஸ்ட்மென்னாய்' நடிக்கப்போறியள்.'
அருமைநாயகம் எங்களைப்பார்க்க, நாங்கள் சமாளித்து நழுவினோம்.



வித்துவான் ஆறுமுகனாருக்கு அன்று 'குஷி மூட்'.
'தம்பீ நான் நடிக்கிறனடா' என்று எழும்பி வந்தார்.
நாங்கள் கொண்டாட்டமானோம்.
அருமைநாயகம் நிலத்தில் சப்பாணி கட்டி உட்கார்ந்து,
ஒரு 'பேப்பரை' விரித்துக்கொண்டார்.
அவருக்கருகில் இருந்த கதிரையில் வித்துவான் வந்து உட்கார்ந்தார்.
அருமைநாயகம் 'சேர்! நான் முதல் தனிய நடிப்பன்,
இடையில கையைக்காட்டேக்க, நீங்கள் நான் சொன்னமாதிரி,
தந்தியைக் கொண்டு வந்து தரவேணும் விளங்குதே' என்றார்.
'அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீர் பயப்படாமல் நடியும்' என்ற வித்துவான்,
அருமைநாயகத்தின் முகம் பார்த்து உட்கார்ந்து கொண்டார்.
நடிப்புத் தொடங்கியது.



சிறையிலிருந்து வெளிவந்த கப்பலோட்டிய தமிழன்,
பத்திரிகைச் செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்த்து,
தன் அபிப்பிராயங்களை வெளியிடுவதாய், அருமைநாயகம் நடிக்கத்தொடங்கினார்.
நாங்களெல்லாம் ஆர்வமாய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
குறித்த நேரம் வந்தது. வித்துவான் தன்னை மறந்து,
அருமைநாயகத்தின் நடிப்பைப் பார்த்துக்கொண்டிருக்க,
அருமைநாயகத்திற்கு எரிச்சல்.
'சேர்! தந்தியக் கொண்டுவாங்கோ?'
மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்ந்தார் அவர்.
வித்துவான் உடனே உஷாரானார்.
கதிரையில் இருந்து எழும்பினார்.
நாலடி தள்ளிப்போய் நின்றுகொண்டு,
நிமிர்ந்து சால்வையை இழுத்துவிட்டுக்கொண்டார்.
வித்துவான் நடிக்கப்போகிறார் என்றதும், எங்களுக்கு பெரிய குதூகலம்.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,
எல்லோரும் அவரையும், அருமைநாயகத்தையும் வைத்தகண் வாங்காமற் பார்த்தோம்.



தூரச்சென்ற வித்துவான் அணிவகுப்பு நடையில் அருமைநாயகத்திற்கு அருகில் வந்தார்.
தொண்டையைச் செருமினார். எங்கள் எல்லாரையும் ஒருதரம் பார்த்தார்.
வெடிக்கத் தயாராகியிருந்த சிரிப்பை சிரமப்பட்டு எல்லோரும் அடக்கிக்கொண்டோம்.
கப்பலோட்டிய தமிழனாய் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த,
அருமைநாயகத்திற்கு அருகில் வந்த வித்துவான்,
'சார்! தந்தி' என்று உரத்துச்சொல்லி,
கையிலுள்ள பழம்பேப்பரை அருமைநாயகத்திடம் கொடுத்தார்.
அவர் கொடுத்த பழம்பேப்பரை,
தந்தியாய் வாங்கிய அருமைநாயகம், அதைப் பிரித்தார்.
ஒரு நிமிடம். அவர் முகத்தில் பல உணர்ச்சிகள்.
முகம் சுருங்கக் கண்களில் சோகம்.
பின்னர் மெல்லிய விம்மல்,
'பாரதீ! நீயும் என்னைத் தனியனாய் விட்டுவிட்டுச் சென்று விட்டாயா?'
என்று சொல்லி மெல்லக் குலுங்கத் தொடங்க,
'என்னது, பாரதி செத்திட்டானா? ஐயோ!' என்று ஒரு குரல்.
குரல் வந்தது அருமைநாயகத்திடம் இருந்து அல்ல, வித்துவானிடமிருந்து.



'பாரதி நீ போய்விட்டாயா?' என்று,
அருமைநாயகம் கப்பலோட்டிய தமிழனாய்ச் சொல்ல,
அடுத்த நிமிடம் அந்தக்காலத்திற்கே வித்துவான் போய்விட்டார்.
பாரதி இறந்த செய்தியை அவரால் தாங்கமுடியவில்லை.
கதறி அழத்தொடங்கிவிட்டார்.
சிரிக்கத் தயாராகியிருந்த நாங்கள் எல்லோரும்,
பாரதிக்காய் அழும் வித்துவானைப் பார்த்து விக்கித்துப் போனோம்.
அன்று அவர் அழுத அழுகை நிற்க இரவாகிவிட்டது.



சான்றோரிடம், பகையற்ற கோபம் என்ற ஒன்று இருக்கிறது.
அதை விளங்குவது மிகக்கடினம்.
முதல்நாள் போர் முடிந்து தோற்றுவந்த இராவணன்,
இராமன் வந்தபோது,
கூனிமேற் மண்உண்டை அடித்த குழந்தைஇராமனின் முகமே,
போர்க்களத்தில் தனக்குத் தெரிந்தது என்கிறான்.
போருக்கு நின்றிடும்போதும், மனம் பொங்கலில்லாத, அமைதி மெய்ஞ்ஞானம் என்று,
பாரதி பேசுவதும் இதைத்தான்.
பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே! என்ற பாரதியின் கூற்று,
மேலே சொன்ன மெய்ஞ்ஞானம் பெற்றார்க்கே கைவரும்.
அந்த மெய்ஞ்ஞானத்தை வித்துவானிடம் கண்டு சிலிர்த்திருக்கிறேன்.
தமிழும் ஒரு உறவு தான் என்பார்கள்,
அவ்வுண்மையை நான் விளங்கிச் சிலிர்த்த சம்பவம் அது.
அச் சம்பவம் பற்றி அடுத்தவாரம் சொல்கிறேன்.



                                                                                                  (அடுத்தவாரமும் வித்துவான் வருவார்)
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.