'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' : பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' : பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

(சென்றவாரம்)
சுந்தரரின் திருத்தொண்டர் தொகையும், சேக்கிழாரின் பெரியபுராணமும், கண்ணப்பர் வரலாறு உரைக்கையில்,
காட்டும் நுட்பங்கள் களிப்புத் தருபவை. அவை கண்டு உணர்ந்து மகிழ்தல், கற்றார் தம் கடனாம். அடுத்தவாரத்தில் அவை காண்பாம்.

⧫ ⧫

லகம் போற்றும் ஆலாலசுந்தரர்,
அடியாரைப் போற்றி தான் பாடிய திருத்தொண்டர் தொகையில்,
கண்ணப்பரைப் பற்றி உரைக்கையில்,
'கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கடியேன்' என்கிறார்.
நம்பி என்ற சொல்லுக்கு ஆடவருள் சிறந்தவன் என்பது பொருள்.
கலை எனும் சொல் கல்வியைக் குறிக்கும்.
மலிந்த எனும் சொல்லுக்கு நிறைந்த என்று அர்த்தம்.
மேற்பாடல் வரியின் மூலம்,
'கல்வி நிறைந்த,
ஆடவருள் சிறந்தவரான,
கண்ணப்பர்க்கு அடியேன்' என்கிறார் சுந்தரர்.

⧫ ⧫

யதார்த்த நிலையில் சுந்தரர் கூறும் மேற் பாராட்டுக்கள் அனைத்தும்,
கண்ணப்பர்க்குப் பொருந்துவன அல்லவாம்.
அதிலும் கலைமலிந்த எனும் தொடர் நகைப்புத் தருவது.
கல்வியறிவே இல்லாத கண்ணப்பரை,
கல்வியில் சிறந்த கண்ணப்பர் என்கிறார் சுந்தரர்.
தம்பிரான் தோழரின் தெய்வ வார்த்தையில் பிழை வருமா?
சுந்தரர் கூற்றின் உண்மை அறிந்து உவத்தல் நம் கடமையாம்.

⧫ ⧫

கண்ணப்பர் கற்றவரா?
இல்லை என்பது புராணப்படி அறியப்படுகிறது.
சுந்தரரோ, கண்ணப்பரை கல்வி நிறைந்தவர் என்கிறார்.
காரணமின்றி சுந்தரர் அங்ஙனம் உரைத்திரார்.
திருமுறைகளை ஆகமப் பிரமாணமாய்க் கொள்ளும் எமக்கு,
சுந்தரர் வார்த்தைகளில் ஐயம் வர நியாயமில்லை.
அங்ஙனமேல் கண்ணப்பரை கல்வி நிறைந்தவராய்,
சுந்தரர் உரைத்த மர்மத்தினை ஆழச் சென்று அறிதல் நம் கடனாம்.

⧫ ⧫

எந்த ஒன்றினையும் பயன் நோக்கிச் செய்வது இவ்வுலகின் இயல்பு.
பயன் நோக்கிச் செயற்படும் உலகியலில்,
கல்வியின் பயன் யாது? எனும் இடத்திலிருந்து,
வினாக்கள் தொடர்கின்றன.
கல்வியின் பயன்?........ அறிவு!
அறிவின் பயன்?...... ஒழுக்கம்!
ஒழுக்கத்தின் பயன்?...... அன்பு!
அன்பின் பயன்?....... அருள்!
அருளின் பயன்?........ துறவு!
துறவின் பயன்?........ வீடு!
வீடென்பது இறையடியைச் சார்தலாம்.
ஒன்றுக்கொன்று தொடர்பாகி,
கல்வியின் முடிவுப்பயன் கடவுளை அடைதலே எனும் உண்மையை,
மேல் வினா விடைகளால் தெளிவுற அறிகிறோம்.
அதனால் தான் கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாள் தொழல் என்று,
தெய்வப்புலவர் திருவள்ளுவனாரும் உரைத்தனர்.

⧫ ⧫

கல்வி, அறிவு, ஒழுக்கம், அன்பு, அருள், துறவு, வீடு எனும் இவ்வரிசை,
ஒரே பிறவியில் நிகழ்வதன்றாம்.
மேற்கூறிய ஏதோ ஒன்றின் நிறைவில் ஒரு பிறவி முடியுமாயின்,
அடுத்த பிறவியில் முதற்பிறவியில் முடித்த இடத்திலிருந்து,
மேற் தொடர்பு நீளும் என்பது தத்துவவாதிகள் கருத்து.
ஒருவன் ஒரு பிறவியில், நிறைந்த அன்புற்றவனாய் இருப்பின்,
முற்பிறவியில் அவன்,
கல்வி, அறிவு, ஒழுக்கம் என்பவற்றில் நிறைந்தவனாய் இருந்திருப்பான்.
இஃது அனுமானப் பிரமாணம்.

⧫ ⧫

இவ் அடிப்படை கொண்டு நோக்குகிறார் சுந்தரர்.
தொடர்புடையாரிடத்துச் செய்யப்படுவது அன்பு,
தொடர்பிலாரிடத்தும் செய்யப்படுவது அருள்,
தொடர்பிலாரிடத்து செய்யப்பட்ட கண்;ணப்பரின் அன்பு அருளேயாம்!
உணர்வுப் பிரதிபலிப்பில்லாத கல்லின் மேல் அன்பு கொண்டார் கண்ணப்பர்.
அதுவும் எங்ஙனம்?
தனது இரண்டு கண்களையும் கொடுக்கும் அளவிற்காம்.
அந்தளவிற்குக் கண்ணப்பரிடம் அருள் நிறைந்திருந்தது.
இப்பிறப்பில் இத்தனை அருள் இருந்ததால்,
முன்னைப்பிறப்பில் இவரிடம் எத்துணை அன்பிருந்திருக்கும்?
அதன் முன்; இவரிடம் எத்துணை சிறந்த ஒழுக்கம் இருந்திருக்கும்?
அதனினும் முன் இவரிடம் எத்துணை அறிவு இருந்திருக்கும்?
எல்லாவற்றினும் முன் இவரிடம் எத்துணை சிறந்த கல்வி இருந்திருக்கும்?
எண்ணிப் பார்க்கிறார் சுந்தரர்.
கல்லில் அன்பு செய்யும் கண்ணப்பரின் அருளினைக் கண்டு,
ஒன்றுக்கொன்று தொடர்பாய் அவரிடம் முற்பிறவிகளில் இருந்திருக்கக் கூடிய,
கல்வி நிறைவை அனுமானத்தால் கண்டு கொண்டே,
கலை மலிந்த சீர்நம்பி என கண்ணப்பரை பாராட்டினார் சுந்தரர்.
உடலோடு உயிர் சேர்ந்ததன் நோக்கம் அன்பு செய்தலே என்கிறார் வள்ளுவர்.
இவ் உயரிய அன்பினைச் செய்த கண்ணப்பரை விட,
அருள் நிறை ஆடவரும் இவ்வுலகில் இருப்பரோ?
அதனால் தான் ஆடவருள் சிறந்தவர் எனும் கருத்திலான,
நம்பி! எனும் சொல்லையும் இட்டு கண்ணப்பரை கௌரவம் செய்கிறார் சுந்தரர் என்க.

⧫ ⧫

இக்காதையில் மற்றொரு கேள்வியும் உதிக்கிறது.
கண்ணப்பரைச் சோதிக்க நினைந்த இறைவன்,
தன் கண்களில் ஒன்றிலிருந்து இரத்தத்தை வழியச்செய்கிறான்.
சிவனாரின் கண்ணின் வடிந்த இரத்தம் கண்டு,
தனது கண்ணை இடந்து அப்புகிறார் கண்ணப்பர்.
அந்தளவிலேயே கண்ணப்பரின் அன்பு நம்மால் தெளிவுற உணரப்படுகிறது.
அங்ஙனமிருக்க, மறுகண்ணிலிருந்தும் இரத்தத்தை இறைவன் வரச்செய்தது எதற்கு?
முதல் கண் தந்த கண்ணப்பர் மறு கண் தாராரா?
இக் காரியத்தை இறைவன் ஐயுற்று செய்தனனா?
வினாவுக்காம் விடையினை எனது குருநாதர்,
அமரர். பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் நயம் பட உரைத்தனர்.
அவர் கூறும் அரிய விளக்கம் இதுவேயாம்!

⧫ ⧫

முதலில் இறைவனின் வலக்கண்ணில் உதிரம் வழிந்த போது,
தன் கண் இடந்து அப்புகிறார் கண்ணப்பர்.
அப்போது இறைவன் ஏதும் செய்தான் அல்லன்.
பின் இறைவனின் இடக்கண்ணில் உதிரம் வழிகிறது.
இப்போதும் கண்ணப்பர் கண்ணிடந்து அப்ப முயல்கிறார்.
இப்போது 'கண்ணப்ப நிற்க!' என மும்முறை முயன்று தடுக்கிறான் இறைவன்.
முன்னர் தடுக்காத இறைவன் பின்னர் தடுத்ததேன்?
இதுவே மற்றைய கேள்வியாம்.

⧫ ⧫

பேராசிரியர் நயமுற இங்ஙனம் விடை சொல்கிறார்.
இறைவனின் வலக்கண்ணுக்காய் கண்ணப்பர் கண்ணிடந்து அப்பும்போது,
அக் காட்சியைக்; கண்டது இறைவனது இடக்கண்;.
பின்னர் இடக்கண்ணிலும் உதிரம் வழிய,
தன் மற்றைக் கண்ணையும் கண்ணப்பர் பிடுங்க முயல்கிறார்.
இப்போது அக்காட்சியைக் கண்டது,
இறைவன் முன்னர் பெற்றுக் கொண்ட கண்ணப்பரின் கண்ணாம்.
கண்ணப்பரின் கண்ணை வாங்கிக் கண்ட பின்பே,
அவர் தம் உண்மை அன்பை இறைவனாலும் அறிய முடிந்தது.
அது மட்டுமன்றி, முன்னைக் காட்சி கண்டவை,
இடப்பக்கம் அமைந்த அன்னையின் கண்கள்.
பின்னர் காட்சி கண்டவை கண்ணப்பர் கண்கள்.
தாய்க்கண்களில் ஏற்படாத இரக்கம்,
கண்ணப்பரின் கண்களில் ஏற்பட்டதாய் உரைத்து,
தாயினும் மேலான அன்பதனை கண்ணப்பன் கொண்டிருந்தான் என்பதையும்,
நமக்கு மறைமுகமாய் உணர்த்துகிறார் தெய்வச்சேக்கிழார்.

⧫ ⧫

கண்ணப்பர் புராணத்தில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் ஒன்றினை,
தெய்வச்சேக்கிழார் மறைமுகமாய்ப் பதிவு செய்கிறார்.
இக்காதையில், கண்ணப்பரின் அளவற்ற அன்பினையும்,
அவர் அன்புக்கு ஆளாகும் இறைவனது கருணையையும்,
பதிவு செய்வதுதான் சேக்கிழார் தம் நோக்கம்.
நினைத்திருந்தால்,
சிவகோசரியார் எனும் அந்தணரை விடுத்தும்,
இவ்விரு கருத்துக்களையும் இக்காதையில் சேக்கிழார் பதிவு செய்திருத்தல் கூடும்.
கண்ணப்பர் அன்பு செய்தமையையும்,
இறைவன் அவரைச் சோதித்தமையையும்,
கண்ணிடந்து கண்ணப்பர் சாதித்தமையையும்,
பதிவு செய்திருந்தால் கூட,
கண்ணப்பர் புராணத்தின் பொருளுக்கோ? சுவைக்கோ? எவ்வித ஊறும் ஏற்பட்டிரா!
அங்ஙனமிருக்க,
சைவத்தின் பிரமாண நூல்களாகிய வேதாகமங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
உயர் வர்ணத்தவரான அந்தணர் சிவகோசரியாரையும்,
முறைப்படியான அவர் தம் சிவபூசையையும்,
தாழ் வர்ணத்தவரான கண்ணப்பருடனும்,
அவன் தன் விதிவிலக்கான சைவப்பண்பாட்டிற்கு மாறான பூசையுடனும்,
தெய்வச் சேக்கிழார் ஒப்பிட்டு உரைக்கத் தலைப்பட்டது ஏன்?

⧫ ⧫

ஆகம முறைப்படியான சிவபூசையை சித்தாந்த தத்துவம் கூறும் கிரியை வழிபாட்டை.
தெய்வச் சேக்கிழார் ஏற்கவில்லையா?
கேள்வி பிறக்கத் திகைக்கிறோம் நாம்.

⧫ ⧫

கண்ணப்பன் பூசை கண்டு சிவகோசரியார் முறையிட்டதும்,
இறையனார் கண்ணப்பர் கனவில் சென்று,
'நீ இயற்றும் பூசை தவறானது,
நாளை மறைந்திருந்து அந்தணரின் பூசை கண்டு அது போலச் செய்வாயாக!'
என்று உரைத்திருப்பாரேயானால் ஐயன்பால் அன்பு கொண்டிருந்த கண்ணப்பன்,
நிச்சயம் அதைப் பின்பற்றியிருப்பானன்றோ?
ஆகமப் பூசையை உயர்வாய் இறைவன் கருதியிருப்பின்,
அங்ஙனமன்றோ இறைவன் செய்திருத்தல் வேண்டும்.
உயர்ந்தவரைக் காட்டி சிறியவரை நெறிப்படுத்தலன்றோ முறைமை,
சிறியவரைக் காட்டி உயர்ந்தவரை நெறிப்படுத்தல் பொருந்துமோ?
பின் இறைவனின் இத் திருவிளையாடல் எதற்காய் நடந்தது?
வேதாகமங்களைத் தானே உரைத்து,
சிவபூசையை நிர்ணயம் செய்த இறைவரே,
அதனை நிராகரித்தல் முறைமையோ?
அன்றேல் எம் ஈசன் பித்தன் தானோ?
வினாக்கள் எழ விதிர் விதிர்க்கிறோம் நாம்.

⧫ ⧫

ஆழ்ந்து சிந்திக்க உண்மை தெரிகிறது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும்,
சைவநாற்பாதங்கள் என்றுரைக்கப்பட்ட வழிபாட்டு முறைகள்,
ஆழ்ந்த அர்த்தம் உடையவை.
புறவழிபாடு, அகப்புறவழிபாடு, அகவழிபாடு, வழிபாட்டுப்பயன் எய்தல்.
என்பவையே மேற்கூறிய நாற்பாதங்களாம்.
இவை அனைத்தும் இறைவனை அடைதற்காம் வழியின் படிகளேயன்றி,
தனித்தனி வழிகள் அன்றாம்.

⧫ ⧫

சரியை -புறத்தே அன்பு செய்வது.
கிரியை -புறத்தும், அகத்தும் அன்பு செய்வது.
யோகம் -அகத்துள் நின்றே அன்பு செய்வது.
ஞானம் -அவ் அன்பின் வடிவாவது.

⧫ ⧫

கண்ணப்பர் செய்த வழிபாடு ஞான வழிபாடு.
சிவகோசரியார் செய்த வழிபாடு கிரியை வழிபாடு.
கண்ணப்பர் அன்பு செய்தலில் சிவகோசரியாரைக் கடந்து நிற்கிறார்.
கிரியை நிலை உற்றார்க்கு செயற் தூய்மையே மனத் தூய்மையாம்.
ஞான நிலையுற்றார் தூய்மையின் வடிவமுற்றார்.
எனவே, அவர் செயல் எலாம் தூய்மையேயாம்!
அன்பே வடிவான கண்ணப்பரின் செயல்கள் அனைத்தும் அன்பேயாம்!
அவ் அன்பு நிலையுற்றார்க்கு செயல் தூய்மை அவசியமற்றதாகிறது.
செயல் தூய்மையே மனத் தூய்மை என எண்ணியிருந்த,
கிரியை நிலையுற்ற சிவகோசரியாருக்கு,
செயல்கள் கடந்த அன்பைத் தரிசனம் செய்து வைக்கவே,
மறைந்திருந்து கண்ணப்பரைக் காணச் செய்கிறார் ஐயன்.

⧫ ⧫

இவ் அடிப்படை கொண்டு நோக்க,
கண்ணப்பர் உயர் நிலையில் நிற்பதும்,
சிவகோசரியார் ஒப்பீட்டில் தாழ்வுற்று நிற்பதும் தெளிவாகிறது.
அதனால் தான் சிவகோசரியாருக்கு,
உயர் நிலையுற்ற கண்ணப்பரை உதாரணப்படுத்துகிறார் சிவனார்.
புறத்திலே நிற்பவருக்குத்தான் பூசை.
இறைவனோடு அகத்தில் கலந்தவருக்கு பூசை எதற்கு?
அதனால்த்தான் கிரியை நிலையைக் கடந்து ஞான நிலையுற்ற கண்ணப்பருக்கு,
வேதாகமங்களில் தான் விதித்த நிலையிலிருந்து,
விதிவிலக்களிக்கிறார் இறைவன்.
இவ் உண்மைகள் வெளிப்பட நம் உளம் மகிழ்கிறது.
உயர் அன்பான ஞான வழிபாடு அனைத்திலும் உயர்ந்தது.
என்பதை நமக்கு உணர்த்தவே,
சிவகோசரியாரை கதையினுள் நுழைத்து,
புதுமை செய்தனர் தெய்வச்சேக்கிழார்.
அவரன்றி மெய்யடியாரை அளக்கவல்லார் யார்?

⧫ ⧫

(முற்றும்)
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.