'ஈந்தனன் அன்றே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
இலக்கியக் களம் 24 Aug 2019
உலகம் வியக்க உயர்ந்தவன் கம்பன்!
தான் படைத்த இராமகாவியத்தால்,
இவ் உலகில் வேத உண்மைகளை விதைத்து,
மண்ணுலகை விண்ணுலகாக்க,
தமிழால் தவமியற்றியவன் அவன்!
ஒப்பற்ற கம்பகாவியம் ஓர் கற்பனைக் கருவூலம்.
வான்மீகியிடம் வாங்கிய காதையை,
கம்பன் தன் கற்பனைத்திறத்தால்,
விண்ணளவாய் விரிய வைத்தான்.
மண் முழுதும் தெரிய வைத்தான்.
எல்லையின்றி விரிந்த பெரும் சமுத்திரத்துள்,
கடல்படு திரவியங்கள் வரையின்றிக் கொட்டிக்கிடப்பது போல்,
கம்பகாவியத்துள் விரவிக் கிடக்கும் பொக்கிஷங்கள் பலப் பலவாம்!
கம்பக்கடலுள் மூழ்க மூழ்க,
அறிதொறும் அறியாமை காணும் அனுபவமே அறிஞர்க்குக் கிட்டும்.
அவ் அரிய அமிழ்தக் கடலுள் அழுந்தி அழுந்தி,
ஆனந்தமுற்ற அறிஞரோ பற்பலர்.
அவர் தந்த கம்ப அமுதச் சுவையை உண்ட களிப்பால் மதிமயங்கி,
தேன் உண்ண மலர் சுற்றும் வண்டாய்,
மனம் கம்பனையே சுற்றி வருகிறது!
அங்ஙனம் கம்பமலருள் கால் வைத்த களிவண்டாய் மூழ்கையில்,
எனக்குக் கிடைத்த ஓர் தேன் துளியை,
இக் கட்டுரையாய்ப் படைக்கிறேன்.
❖ ❖ ❖ ❖
வசிட்டமாமுனிவரது ஆலோசனைப்படி,
குழந்தைப்பேற்றுக்காய் யாகம் இயற்றுகிறான் தசரதன்.
யாகத்தீயினின்றும் எழுந்த பூதம் வழங்கிய பிண்டத்தை,
மனைவியர் மூவர்க்கும் தசரதன் பகிர்ந்தளிக்க,
முத்தேவியரும் கருவுறுகின்றனர்.
கர்ப்ப காலம் நிறைவுற,
கோசலையும், கைகேயியும் ஒவ்வொரு மகவையும்,
சுமித்திரை இரு மகவுகளையும் பெற்றெடுக்கின்றனர்.
❖ ❖ ❖ ❖
புதல்வர்கள் பிறந்த செய்தி கேட்டு,
எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறான் தசரதன்.
நாட்டு மக்களுக்கு நற்கொடைகள் பல செய்து,
குல குருவாம் வசிட்டனோடு,
குழந்தைகளைக் காண வருகிறான் அவன்.
தாயர்க்கு அருகே கிடந்த அத்தளிர்களுக்கு,
நாமம் தரும்படி வசிட்டரிடம் தயரதன் வேண்ட,
பெயர் வைப்பதற்காய், பிள்ளைகளின் அருகில் செல்கிறான் வசிட்டன்.
❖ ❖ ❖ ❖
கோசலையின் அருகில் கிடந்த தொட்டிலினுள்,
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியாய்,
திறங்கொள் கோசலை திரு உறப் பயந்த,
அஞ்சன நிறத்துக் கரிய செம்மல் களித்துக் கிடக்கிறான்.
தொட்டிலினுள் எட்டிப்பார்த்த வசிட்டன்.
பாற்கடலுள் பள்ளிகொள்ளும் அப்பரந்தாமனே,
பாலனாய்ப் படுத்துக்கிடப்பதை உணர்ந்து பரவசம் கொள்கிறான்.
பரமனின் திருவிளையாடல் கூறும்,
பழைய காதை ஒன்று அவன் நினைவில் படர்கிறது.
❖ ❖ ❖ ❖
பரந்தாமனுக்குத் தினமும் பங்கஜம் பறித்துத் தரும் யானை ஒன்று,
வழமை போல் தன் வழிபாடியற்ற,
மலர்ந்த தாமரைகள் பறிக்க விரைந்து செல்கிறது.
அது குளத்துள் கால் வைக்க,
அங்கிருந்த மூர்க்க முதலை ஒன்று,
அக்கரியின் கால்களைப் பற்களால் பற்றிப் பிடிக்க,
இடருற்ற அந்த யானை,
'பாம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பரந்தாமா!' என அலறிற்றாம்.
குஞ்சரத்தின் கூக்குரல் கேட்டு,
கருட வாகனத்தில் கடிதில் வந்த திருமால்,
தனது சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று,
அந்த யானையைக் காத்தருளினன்.
இவ்வரலாறை நினைந்து,
தொட்டிலில் கிடக்கும் பிள்ளையைப் பார்த்த வசிட்டர்.
அக் குழந்தைக்கு இராமன் எனப் பெயர் சூட்டுகிறார்.
கரா மலையத் தளர் கைக்கரி எய்த்தே
'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்
விராவி அழித்தருள் மெய்ப்பொருளுக்கே
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே! (கம்ப. பால: 296)
❖ ❖ ❖ ❖
வசிட்டர் மனதில் இவ் வரலாறு வரக்காரணம் என்ன?
தன்னை வழிபட்டுக் கிடக்கும் தேவ யானைகளை,
இராவண முதலை இம்சை செய்ய,
வருந்திய அவ்வானவர் வைகுண்டம் சென்று,
திருமால் திருவடியைச் சரணடைகின்றனர்.
கருடன் மேல் அமர்ந்து அக் கார்வண்ணன்,
அமரர்தம் ஓலம் கேட்டு ஓடி வருகிறான்.
இருபது கரம் தலை ஈரைந்து என்னும் அத்;
திரு இலி வலிக்கு ஒரு செயலின்று எங்களால்
கருமுகில் என வளர் கருணையங்கடல்
பொருதிடர் தணிக்கின் உண்டெனும் புணர்ப்பினால் (கம்ப. பால: 189)
கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின் மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்.
என்றனர் இடர் உழந்து இரைஞ்சி ஏத்தலும்
மன்றல் அம் துளவி னான் 'வருந்தல் வஞ்சகர்
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு
ஒன்று நீர் கேண்ம்' என உரைத்தல் மேயினான் (கம்ப. பால.: 198)
இஃது தசரதன் பிள்ளை வரம் வேண்ட,
தனது தவ வலிமையால் ஞான திருஷ்டியில் வசிட்டன் கண்ட காட்சி.
யானை போலவே ஓலமிடும் தேவர்கள்,
முதலை போல அவர்களை வருத்தும் இராவணன்,
கருடன் மேல் வரும் பரந்தாமன்.
இவ் ஒற்றுமைகள் வசிட்டன் மனதில்,
அக்காதையை வருவித்தன போலும்.
❖ ❖ ❖ ❖
இனி, வசிட்டன் இராமனுக்குப் பெயர் சூட்டிய பாடலை,
மீண்டும் காண விழைகிறோம்.
தமிழ் மொழியின் நுண்மை தெரிந்தார்க்கு,
அப்பாடலில் ஓர் பேர் ஐயம் விளைகிறது.
அவ் ஐயம் தான் என்ன?
காண்பாம்!
❖ ❖ ❖ ❖
ஒருவர் மற்றொருவர்க்கு ஒரு பொருளை வழங்குவதைக் குறிக்க,
தமிழில் மூன்று சொற்கள் உள,
தருதல், கொடுத்தல், ஈதல் என்பவையே அவையாம்.
இம்மூன்று சொற்களும் ஒத்த கருத்துள்ள சொற்களாய்த் தோன்றிடினும்,
பண்பாட்டுப் பார்வையில் இம் மூன்று சொற்களுக்குள்ளும்,
வேற்றுமை உண்டு என்பர் பெரியோர்.
நம்மை விட உயர்ந்தோர்க்கு வழங்குதல் தருதலாம்.
நமக்குச் சமமானவர்களுக்கு வழங்குதல் கொடுத்தலாம்.
நம்மை விடத் தாழ்ந்தோர்க்கு வழங்குதல் ஈதலாம்.
இஃதே இம்மூன்று சொற்களுக்குள்ளும் உள்ள பண்பாட்டுப் பேதம்.
❖ ❖ ❖ ❖
இனி, மேல் பாடலில் விளையும் ஐயம் யாதெனக் காண்பாம்!
கோசலை அருகே கிடக்கும் குழந்தையோ,
மூவுலகும் ஈரடியால் அளந்த முழுமுதல்.
பெயர் சூட்ட வந்த வசிட்டரோ,
அப்பரந்தாமன் அடி தொழும் பக்தன்.
பரமன் பெரியனா? பக்தன் பெரியனா?
பரமனன்றோ பெரியன்!
இங்கு பக்தனான வசிட்டன் பரமனுக்குப் பெயர் வழங்குகிறான்.
பரமனோ பக்தனிடம் பெயர் பெறுகிறான்.
தருபவன் சிறியன் பெறுபவன் பெரியன்.
எனவே தமிழின் பண்பாட்டுத் தளம் அறிந்த கம்பன்,
இராமன் எனப்பெயர் 'தந்தனன் அன்றே' என்றன்றோ பாடியிருத்தல் வேண்டும்.
ஆனால் கம்பனோ இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே, என்று பாடுகிறான்.
ஈந்தனன் என்ற சொல்லின் பண்பாட்டுப் பொருள் விளங்க,
நமக்குக் குழப்பம் உண்டாகிறது.
தம்மை விடத் தாழ்ந்தவர்க்கு வழங்குதலே ஈதலாம்.
உயர்ந்த பரம் பொருளுக்கு வசிட்டன் பெயர் வழங்கிய இவ்விடத்தில்,
ஈந்தனன் எனும் சொல்லைக் கம்பன் எங்ஙனம் இடலாம்.
இஃதே இடர்தரும் ஐயமாம்!
❖ ❖ ❖ ❖
கவிச்சக்கரவர்த்தி கம்பனா தவறிழைப்பான்?
ஆழ்ந்து சிந்திக்க அதிசய விடைகள் இரண்டு அகப்படுகின்றன.
அவ்விடைகள் கம்பனின் கவித்திறத்தை மேலும் உயர்த்துகின்றன.
காணற்கரியது கம்பசூத்திரம் எனும் உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.
அவ்விடைகள் தான் யாவை ?
ஒவ்வொன்றாய்க் காண்பாம்.
❖ ❖ ❖ ❖
முதல் விடையை நம் தமிழ் மூதாட்டி ஒளவை தருகிறாள்.
பெரியது எது எனும் கேள்விக்கு விடை இறுக்கும் ஒளவை,
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்து ஓடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஒளவையின் பார்வையில்,
பரமனைவிடப் பாகவதன் பெரியனாம்.
எனவே பாகவதனான வசிட்டன்,
பரமனான திருமாலுக்கு பெயர் கொடுக்கையில்,
'ஈந்தனன்' எனச் சொல்லுதல் தவறன்றாம்!
❖ ❖ ❖ ❖
இவ்விடையைத் தவிர,
தத்துவார்த்தமான ஓர் விடையும் இருக்கிறது.
இறைவனுக்கு நாமம் ஏதும் இல்லை.
ஒரு நாமம் இல்லாததால்த்தான்,
இறைவனுக்குப் பல நாமங்களைச் சூட்டமுடிகிறது.
எங்ஙனமோ எனின்,
ஒருவனுக்கு கந்தன் எனும் நாமம் இருப்பின்,
அவனைக் கந்தன் என்று மட்டுமே அழைக்கலாம்.
இறைவனுக்கும் குறித்த ஒரு பெயர் இருந்திருப்பின்,
அந்த நாமத்தை மட்டும் கொண்டே,
இறைவனை அழைத்திருக்க முடியும்.
ஆனால் ஒரு இறைவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறான்.
அதிலிருந்து இறைவனுக்குக் குறித்த ஒரு பெயர் இல்லை எனும் உண்மை,
தெளிவுற வெளிப்படுகிறது.
அதனால் தான்,
ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்று மாணிக்கவாசகரும்,
பேராயிரம் படைத்து வானோரேத்தும் பெம்மானே
என வாகீசரும் பாடி மகிழ்ந்தனர்.
❖ ❖ ❖ ❖
இம் மேற்கோள்களால் இறைவன் பெயரற்றவன் எனத் தெரிந்து கொள்கிறோம்.
வசிட்டமா முனிவனோ பெரும் பெயர் பெற்றவன்.
தசரதப் புதல்வனுக்குப் பெயர் சூட்டும் காட்சியில்,
பெயர் அற்ற பரமனுக்கு,
பெயர் பெற்ற பாகவதன் வசிட்டன் பெயர் சூட்டுகிறான்.
இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுக்கிறான்.
எனவே, இல்லாதவர்க்கு இருப்பவர் கொடுத்தலே ஈதலாம்.
இவ் உண்மையின் அடிப்படையில் காண,
இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே என,
கம்பன் இட்ட அடியில்,
ஈந்தனன் எனும் சொல்லின் பொருத்தப்பாடு தெரிகிறது.
கம்பனின் மதிநுட்பம் கண்டு மகிழ்ந்து நிற்கிறோம் நாம்.
❖ ❖ ❖ ❖