'பொன்னான வேல் வடிவாய் முருகன் நிற்பான்!' -கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
கவிதை முற்றம் 25 Aug 2019
உளம் மகிழ நல்லூரான் கொடியும் ஏற
உற்சவத்தின் பெருமைதனை எண்ணி எண்ணி
நிலமகளும் வானவரும் மகிழ்ந்து நிற்பர்
நேசமுடை நெஞ்சரெலாம் தொழுது நிற்பர்
தளமதனின் அமைப்பெல்லாம் மாறிப் போக
தனித்தேதான் நல்லூரும் எழுந்து நிற்கும்
வலம்வரு நல் அடியரெலாம் உருகி நெஞ்சம்
வந்ததுவாம் வசந்தம் என வணங்கி நிற்பர்.
புத்தாடை, புதுச்சட்டி, புதிய வாழ்வு
பொன்னாக மலர்ந்திடவே அடியரெல்லாம்
இத்தோடு நம் வினைகள் தீர்ந்து போகும்
என எண்ணிக் கந்தனது அடியைச் சார்வார்.
வித்தாக வந்தமரர் துயர்கள் தீர்த்த
வேலவனின் தாள்பணிந்து விரதம் காத்து
முத்தாக அவன் நாமம் சொல்லிச் சொல்லி
மூழ்கித்தான் போயிடுவர் முருகன் தாளில்
கோபுரத்துக் கொடியதனில் சேவல் நின்று
கொக்கரக்கோ எனக் கூவி முருகன் தன்னை
தாபமுடன் சிறகடித்து அழைத்து நிற்கும்
தன் ஒலியால் கந்தனது நினைவை ஊட்டி
நாபுரத்தும் மணிகளெலாம் அசைந்து ஆடி
நம்முருகன் அருகிருக்கப் பயம் ஏன் என்னும்
பாபமெலாம் தீர்க்கின்ற கந்தன் வேலும்
பக்திமையால் தொழுவோர்க்கு அபயம் நல்கும்
ஓங்குகிற வடிவேலும் ஒளிர்ந்து நிற்கும்
ஒப்பற்ற தேவியரும் சார்ந்து நிற்பர்
பாங்குடனே மயில் மீது பரமன் தானும்
பலர் வியக்க அலங்காரப் 'பவிசு' கொள்வான்
வீங்குகிற தோள் சிறக்க விரும்பி நல்ல
வீறுடனே அவன் பாரம் தன்னை ஏற்று
தாங்குகிற அடியார்கள் கண்கள் சோர
தவம் இதென எண்ணித்தான் தளத்தில் நிற்பார்.
மாதிருவர் தனையேற்று மகிழ்ந்து நல்ல
மாண்பான குழலிசையில் மயங்கும் கந்தன்
போதுகளால் விதம்விதமாய் புனிதம் சேர
பொன்னான வடிவெடுத்து மனதை ஈர்ப்பான்.
ஏதிவனின் அழகென்று இமைகள் சோரா
இருந்தேதான் அடியவரும் உருகி நிற்க
நாதவடிவான மயில் நல்லைதன்னில்
நர்த்தனங்கள் செய்வதனை என்ன சொல்ல?
ஒய்யாரத் தேவியளாம் வள்ளிதானும்
ஒருபக்கம் அமர்ந்தேதான் அருளைச் செய்வாள்
எய்யாத வேல் நிகர்த்த விழிகள் கொண்ட
ஏந்திழையாள் தெய்வானை இனிமை சேர்ப்பாள்
பொய்யாத அடியவரின் குறைகள் கேட்டுப்
பொன்னான வேல் வடிவாய் முருகன் நின்று
மெய்யான அருள் சுரக்க மிளிர்ந்து நல்ல
மேதினியில் வாழ்வுயரும் மேன்மை சேரும்.
மண்ணதனைப் பொன்னெனவே மாந்தி மாந்தி
மாறாத பக்தியொடு இளைஞர் கூட்டம்
எண்ணரிய பேறென்று எண்ணித் தம்மின்
ஏற்றமுறும் உடல் உருட்டி இனிமை கொள்வார்
விண் அதிர அடியரெலாம் முருக நாமம்
வீறுடனே ஒலிபரப்ப விளங்கித் தேரும்
கண்ணெதிரே வருங்காட்சி காண்பார்க்கெல்லாம்
கதி கொடுத்து கந்தனது அடிகள் சேர்க்கும்.
💧 💧 💧 💧 💧 💧 💧 💧 💧 💧 💧 💧 💧