உன்னை நொந்தே நாம் உரைப்பதினால் என்ன பயன்? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
கவிதை முற்றம் 15 Apr 2018
உ
உன்னைக் கவிஞனென உலகறியக் காட்டித்தான்பொன்னை நிகர்த்துன்னைப் போற்றிடவே வழிசெய்தோம்.
நின்னைப் புகழ்கையிலே நெஞ்சம் மிகமகிழ்ந்தாய்
பின்னை பிழை உரைத்தால் பேதைமையால் கவல்கின்றாய்.
தண்ணீரைப் பன்னீராய் தாம் நினைந்து விளையாடும்
சின்னஞ்சிறுசுகளின் செயலேகாண் உன் கவிதை
எண்ணம் அதுவோ இமயத்தைத் தொட்டதுவாய்
உன்னை நினைக்கையிலே உள்ளம் கவல்கிறது.
என் கவிதை பெரிதென்று ஏனோ தருக்குற்று
விண்ணதனைத் தொட்டால் போல் விழலுக் குளறுகிறாய்
முன்னிருந்த கம்பனவன் மூளும் பெருநெருப்பாய்
தன் கவிதை ஆக்கிடினும் தன்னை வியந்திலனாம்!
'வியவற்க எஞ்ஞான்றும் தன்னை'யென வீறுடைய
நயமிக்க வள்ளுவரும் நன்றாய் உரைத்தனராம்
பயமின்றி உன்னை நீ பாராட்டும் நிலைகண்டால்
நியமிப்பர் அறிவர் உனை நீசர் வரிசையிலே
கச்சிக் கவிஞனவன் கவிதையிலும் பிழை கண்டார்
உச்சிப் புலமைமிகு கம்பனொடும் உரசிட்டார்
விச்சை பிழையெனவே வீறுடைய வள்ளுவனை
கொச்சைப் படுத்திடவும் கோபமுறவில்லை அவர்.
(கச்சிக் கவிஞன் -கச்சியப்பசிவாச்சாரியார்)
தம்மைப் பெரியரென தருக்குற்ற புலவரையே
நம்மின் தமிழ்ப்பாட்டி நயமிக்க ஒளவை அவள்
உம்மைப் புகழ்ந்தே நீர் உரையாதீர்! சிற்றுயிர்கள்
செம்மையுறச் செய்வினைகள் செய்வீரோ? எனக் கேட்டாள்.
முன்னைப் புலவர்களை முனைந்தே நீ கற்றிருந்தால்
சின்னப் புத்தியதும் சேராமல் போயிருக்கும்
எண்ணம் மிகப்பெரிது இருப்பதுவோ மிகச்சிறிது
உன்னை நொந்தே நாம் உரைப்பதிலே என்ன பயன்?
பயச்சிக்கல் கொண்டு மனம் பலபலவாய் நீ பாடும்
பயிற்சிக் கவிதையிலே பலமில்லை என்றுரைத்தால்
அயர்ச்சி உறுகின்றாய் அவர் தம்மை வைதேதான்
உயர்ச்சி அடைந்திடவே ஓடி விழைகின்றாய்.
கயமைக்கு வால் பிடித்த காரணத்தால் உன் கவிதை
சயமற்று அரங்குகளில் சரிவதனைக் காண்கின்றேன்
வியவுற்று உன்னை நீ விற்பதனைக் காண்கையிலுன்
வயமற்று அறிவதனின் வழி மாறும் நிலை உணர்ந்தேன்.
உங்கள் கவிதைகளை நான் உரைக்கேன் என்றேதான்
பொங்கும் கோபத்தில் பொழிந்திருந்தாய் புன்மை மிகு
மங்கும் கவிதை அது மறுபடியும் மறுபடியும்
பங்கமுறச் சொன்னதையே பகன்றதனை என்சொல்வேன்?
எந்தன் கருத்ததனை ஏற்றேதான் கவிபாட
சிந்தை தெளிந்த பலர் சீரோடு இருக்கின்றார்.
பந்தமுற நீ முதலில் பார் வியக்க நற்கவிதை
நந்தமிழில் ஆக்கிடவே நன்முயற்சி செய்திடுவாய்.
ஆயிரமாம் பேர் கூடும் அறிஞர் அமர் பேரவையில்
நீயியற்றி வழி மொழிந்த நெடும் உரையைக் கேட்டிருந்தோர்
வாய் திறந்து கை பொருத்தி வாழ்த்திடவே இல்லையடா
ஆய்ந்தறியும் அறிவிருப்பின் அஃதொன்றே நிலை உரைக்கும்
ஆயிரமாய்ப் பொருள் திரட்டி அழகுறவே அரங்கியற்றி
வாய் திறந்து ரசிக்கின்ற வல்லாளர் தமைத் திரட்டி
மாய்ந்துழைத்து உனை விரும்பி மக்கட்குக் கவிபாட
ஆய்ந்தழைத்தோம், உந்தனுக்கு அதனருமை தெரியலையே.
காலையில் உம் நிலையுணர்ந்து கவியரங்கை நாம் மாற்ற
மாலையிலே நாம் பாட வேண்டுமென மாரடித்தீர்
பாலையிலே மழையதனைப் பார்த்திருந்த மூடர்போல்
வேளையிலே கவிகாத்து வீணாகத் தலைகுனிந்தோம்.
என் கொள்கை அதனைத்தான் எழுதிடுவேன் என்றுரைத்தாய்
உன் கொள்கை எதுவென்று உரைத்திடவும் முடிந்திடுமோ?
முன் கொள்கை 'புலி' என்றாய் மூண்டு பல பதவி வர
பின் கொள்கை மாறியதை பேதையரும் அறிவாரே.
பதவிப் பவிசதனால் பலரும் உனை வழிமொழிவார்
நிதமும் உனைச் சுற்றி நெஞ்சறியப் பொய் உரைப்பார்
அதனைப் பரிசென்று அறிவதனால்த்தான் எங்கள்
சிதையாத நற்கருத்தைச் சீரின்றிச் சினக்கின்றாய்.
முன்பும் பலதரமாய் மூடமதாம் மனத்தோடு
உண்மை உணராது உரைத்தவைகள் நாம் பொறுத்தோம்.
சின்னப்பிள்ளை இவன் சீர் பெறுவான் என்றிருந்தால்
இன்னும் பிழையதனில் ஏற்றமுற வளர்கின்றாய்.
காட்டரசன் யாரென்று களிறதனைக் வினவியதோர்
மோட்டு முயல் எறிபட்டு முணங்கிற்றாம் தன்னுள்ளே
கேட்டதுவும் ஒரு பிழையா? கேள்வி விடை தெரியாதேல்
வாட்டமுற எந்தன்னை வருத்துவதும் சரியாமோ?
முயலுக்குப் பதில் சொல்லும் முறை அதுதான் என்றந்த
நயமிக்க களிறறிந்த நல்விடயம் அறியாமல்
நியமித்த பிழை பொறுத்து நேசித்திருந்தோம் நாம்
பயமற்றுச் 'செம்மாந்தாய்' பதில் இனிமேல் இதுதான் காண்.
அய்வர்க்கு நெஞ்சும் எம் அரண்மனைக்கு வயிறுமென
வய்தான் துரியனவன் வளம் மிக்க விதுரனையே
பொய்யாய் உரைத்தவனின் புன்மைமிகு வாசகமும்
மெய்யாய் உன்தனுக்கே மேதினியில் சேருமடா!
நல்மரமாய் தாம் நினைந்து நட்டதுவும் நயமிழந்து
பொல்லாத நச்சுமரம் ஆகிப் பொலிந்திடினும்
கொல்லார் உயர்ந்தோர்கள் கொண்ட மன அன்பதனால்
செல்லா உன்கவிதைநாம் செரித்ததுவும் அங்ஙனமே.
நாளையுமென் கவிதையினை நான் மாற்றமாட்டேனென்(று)
ஊளையிடுகின்றாய் நீ! உன் நிலையும் அதுவெனிலோ
காலையிலோ மாலையிலோ கவியரங்கை வீண் செய்ய
வேலையினி வாராது வீணர்க்காய் கவிபாடு.
நெஞ்சில் நிமிர்விருந்தால் நீ நினைக்கும் பேரறிஞர்
அஞ்சாறு பேரை நீ அழைத்திடுவாய்! அவர் முன்னால்
அஞ்சாது உன் கவிதை அதனைப் படித்தேதான்
எஞ்சும் கவித்துவமாம் ஏற்றமுறும் அடிகாட்டு!
வசனமதை முறித்தேதான் வளக்கவிதை என இயற்றும்
பசல் உனக்குப் பதிலாகப் பல உரைத்து என்ன பயன்?
விசனமுற வேண்டாம் நீ வெற்றவைக்குக் கவிபாடு
நிசமதனை அறிவிருந்தால் நினைந்திடுவாய் பின்னேனும்
எவருக்காய் இக்கவிதை என்று வினா தொடுப்போரே!
அவருக்கே என்றுணர்வீர் ஆர் அவரோ? என வினவின்
'பவரு'க்காய் கவி செய்யும் பால் போலும் சுண்ணாம்பை
உவமிக்கும் கவிஞர்க்காம் உணர்ந்திடுவீர் உலகீரே!
✦✦✦