தூண்டில் : மக்கள் கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்

தூண்டில் : மக்கள் கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்
 
1: சிவலக்சன் வரதராஜா
 
கேள்வி :  உள்ளுராட்சித் தேர்தலால் பயனிருக்குமா?
பதில் :   நிச்சயம் இருக்கும்! தலைவர்களுக்கும் அவர் தம் கட்சிக்கும்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்: இத்தால் அனைவர்க்கும் அறியத்தருவது என்னவென்றால் மீண்டும் வாரிதியார் வாரத் தொடங்கிவிட்டார்!
 
****************
2: விஷ்ணு தாஸ் 
 
கேள்வி: என்ன? ரொம்ப நாளாய் 'தலைக்கறுப்பைக்' காணவில்லையே யாராவது மிரட்டிவிட்டார்களோ?
பதில் :   'அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்சவருவதும் இல்லை'
 
கூத்தாடியின் கொமன்ஸ்: இந்தாளையாவது மிரட்டுவதாவது. இவரது எழுத்துக்களால் அவனவன்  மிரண்டுபோய்க் கிடக்கிறான். அது தெரியாமல் இதென்ன கேள்வி.
 
3: நரேந்திர சர்மா 
 
கேள்வி : உள்ளூராட்சித் தேர்தலையாவது நம் தலைவர்கள் சரிவரப் பயன்படுத்துவார்களா?
 
பதில் :  தலைவர்களை விடுங்கள்! முதலில் இத்தேர்தலையாவது மக்கள் சரிவரப் பயன்படுத்தட்டும்.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- மக்களாய் இருந்தால் பயன்படுத்துவார்கள்.
 
4: விதுர்ஷன் கணேசலிங்கம்
 
கேள்வி : எல்லாத்தலைவர்களையும்  திட்டவும் செய்கிறீர்கள். பாராட்டவும் செய்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் முழுமனதாய் ஏற்கும் தலைவர் யார்?
 
பதில் :  அவர் முன்பு இருந்தார்! இனிவருவார்!
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- இவரும் 'அவரைத்' தான் சொல்லுறாரோ?
 
5. பிரவீந்
 
கேள்வி : மழுப்பல் வேண்டாம் தெளிவாய்ப் பதில் சொல்லுங்கள். இம்முறை என்ன நடக்கப்போகிறது? 
 
பதில் : வீட்டிலிருப்போர் வெளிக்கிட்டு சைக்கிளில் ஏறலாம். சைக்கிளில் ஏறியோர் வீட்டிற்கும் வரலாம். தேர்தல்தான் பதில் சொல்லப்போகிறது. ஆனால் ஒன்று நிச்சயம். இரண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- பதில் ரொம்பத்தான் தெளிவு???????
 
6: குணதர்ஷன் ஞானகுரு
 
கேள்வி : சம்பந்தருக்கு அடுத்த தலைவர் யாரென்று கூட்டமைப்பு ஏன் இன்னும் சொல்லாமலிருக்கிறது. 
 
பதில் : முதலமைச்சருக்கு அடுத்த தலைவர் யார் என்று தமிழ்மக்கள்பேரவை சொல்லாததால் இருக்குமோ?
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- இந்த 'குசும்பு'தானே வேணாமென்கிறது.
 
7: நிதர்ஷன் ஜெயானந்தவேல்
 
கேள்வி : தேர்தலின் பின் நல்லாட்சி அரசாங்கம் நிலைக்குமா?
பதில் : நல்லாட்சி எப்போதோ நிலைக்கமாமல் போய்விட்டது. இனி அரசாங்கம் நிலைத்தாலென்ன? நிலைக்காமல் விட்டாலென்ன?
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- 'நடக்கும் என்பார் நடக்காது!'
 
8: சுதன் சோதி
 
கேள்வி : தமிழ்நாட்டில் அடிக்கடி விருதுகள் தருகிறார்கள் போல. வரவர அறிவு வளர்கிறதோ?
 
பதில் : விருதுகள், தருகிறவர்களின் அன்பைச் சுட்டுகின்றனவேயன்றி பெறுகிறவர்களின் அறிவைச் சுட்டுவதில்லை
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- தன்னடக்கம் தலையைச் சுத்தவைக்குதுங்கோ
 
9: திவாகரன் திவா
 
கேள்வி : நாளை நமதா?
பதில் : முதலில் இன்று நமதாகட்டும்!
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- அப்ப இன்று ஆற்றையாம்?
 
10: சண்முகதாஸ் ரவி
 
கேள்வி : பிணை, முறி விவகாரம் பற்றி?
பதில் :  மனம் முறி விவகாரம் ஆகப்போகிறது!
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- காசா லேசா?- காசாலே சா!
 
11: ரகு தர்ஷன்
 
கேள்வி : மறைந்த உங்கள் தலைவர் அமரர் ஈஸ்வரனைப் பற்றி?
 
பதில் : அகதிகளாய் வந்த எங்களை அதிதிகளாய் ஏற்று கடைசி வரை காவல் செய்தவர்.  எங்களைப் பெருமைப்படுத்தி தான் மகிழ்ந்தவர். கழகத்திற்கு வரும் இன்பங்களெல்லாம் எங்களைச்சேர துன்பங்களை தனியே தாங்கியவர். உலக மனிதர் என்ற அடையாளத்திற்குரியவர். பெருமையால் வானைத் தொட்டும் எளிமையால் மண்ணிலேயே நின்றவர். கழகம் தன் காவல் தெய்வத்தை இழந்து தவிக்கிறது.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- அத்தனையும் சத்தியங்கள்.
 
12: ராகுலன் திரு
 
கேள்வி :பதவி, சலுகைகளுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளை உருவாக்குங்கள் என்று தேர்தல் தினத்திற்கு இன்னும் இருநாட்கள் இருக்கும் நிலையில் எமது வடக்கின் முதலமைச்சர் விட்டிருக்கும் அறிக்கை பற்றி உங்கள் கருத்து?
 
பதில் : அவர் யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஒரு காலத்தில் எந்தப் பிரச்சினை பற்றியும் நேரடியாகப் பேசும் துணிவு பெற்றிருந்த நீதியரசர் இன்று முதலமைச்சரானதும் தன் கருத்தை நேரடியாகச் சொல்லும் ஆத்ம பலத்தை இழந்து இருப்பது வருத்தத்திற்குரிய விடயம். இந்த நிமிடம் வரை 'இன்னாரை நிராகரியுங்கள் இன்னாருக்கு வாக்களியுங்கள்' என்று  உறுதியாய்ச் சொல்லத் தெரியாமல் தத்தளிக்கிறார் அவர். இந்தத் தேர்தலின் வெற்றியைப் பொறுத்து அவர்களை வெளிப்படையாய் உரைப்பார் போல. எது எப்படியோ அவர் சொல்லியிருக்கும் கருத்து உண்மையானது. ஆனால் ஒன்று, கூட்டிவந்த அணி 'வெளியில் போ' என்று துரத்தாத குறையாகக் கரைச்சல் கொடுக்க பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியில் போகாமல் இருந்து கொண்டும் முதலமைச்சருக்கான அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்று அனுபவித்துக் கொண்டும் மேற்கருத்தை முதலமைச்சர் சொல்வது பொருத்தமாய் இல்லை.
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லையடி' 
 
13: ரஜிந்தன்
 
கேள்வி : 'போர் குற்றச்சாட்டு எதுவும் இல்லை' என்றும் 'வெளிநாட்டு நீதிபதிகளுக்கு    இடம் கொடேன்' என்றும் நல்லாட்சி செய்யவந்த ஜனாதிபதி பேசியிருப்பது பற்றி?
 
பதில் : பாவம் அவருந்தான் என்ன செய்வார்? ஒரு பக்கம் விழுங்கத்தயாராய் வாய்பிளந்து நிற்கும் ஐக்கியதேசியக் கட்சி, மறுபக்கம் குழி தோண்டி விழுத்தத் தயாராயிருக்கும் தன் கட்சி, கடைசி மூச்சைக் காப்பாற்ற இனச்சார்பு பேசியே ஆகவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அவர். இந்த நாட்டில்  நல்லாட்சி நடத்துவதன் சிரமம் இப்பொழுதுதான் அவருக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது.  ஏறத்தயாராக இல்லாத பேரினம் ஒருபக்கம். இறங்கத் தயாராக இல்லாத சிற்றினம் மறுபக்கம். இவர்களுக்கிடையில் சமரசம் செய்வது இலேசான வேலையா? அதனால்த்தான் நாட்டின் நலன் மறந்து தன்னலன் பற்றி ஜனாதிபதியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார் போல. இந்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் முடிந்தவரை ஆட்சி செய்துவிட்டு பதவியைத் தூக்கி எறிந்து வெளியே வந்திருந்தாரானால் அவரின் மதிப்பு எங்கேயோ போயிருக்கும். நடக்க இருக்கும் தேர்தல் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்போவது மட்டும் நிச்சயம்!
 
கூத்தாடியின் கொமன்ஸ்:- 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே உந்தன் காரியத்தில  கண்வையடா தாண்டவக்கோனே!' என்று நல்லாட்சித் தலைவரும் பாடத் தொடங்கிவிட்டார் போல 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.