உயர்ந்தவனே இனும் நூறு வாழவேண்டும்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

உயர்ந்தவனே இனும் நூறு வாழவேண்டும்!  -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்
(நூற்றாண்டு விழாக் காணும் புதுவைக் கம்பன்கழகத் தலைவர்
'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்களுக்கு இலங்கைக்
கம்பன்கழகத்தின் வாழ்த்து)


லகமெலாம் புகழ் கம்பன் கழகம் தன்னை
        உயிரெனவே நினைந்து நிதம் வளர்த்த எந்தை
பலர் அறிய தமதுடைமை அனைத்தும் ஈந்து
        பார் புகழப் புதுவையிலே கம்பன் தன்னின்
வளம் மிகுந்த கழகமதை நிமிரச் செய்து
        வாஞ்சையுடன் தன் மகவாய் நினைந்து போற்றி
தளமதனில் புகழ் கொண்ட மூத்தோன் இன்று
        தன்னிகரில் நூறகவை கண்டு வென்றான்.

 


கலைமகளும் அலைமகளும் போட்டி கொண்டு
        கண்ணியனாம் இவன் வாழ்வில் வரங்கள் ஈந்து
விலையதிலா அறிவதுவும் வெற்றிதானும்
        விளங்குகிற செல்வமொடு அனைத்தும் ஈந்து
தலைநிமிரக் கம்பனது கழகமெல்லாம்
        தன்னிகரில் தலைவனிவன் என்று போற்ற
நிலையதுவாம் புகழ் கொண்டு நிமிர்ந்து நின்றான்
        நிறைவாழ்வில் நூறகவை கண்டு வென்றான்.

வாய் திறந்தால் கம்பனது பாடல் கொட்டும்
        வளமான தமிழ்நூல்கள் வந்து முட்டும்.
ஆய்ந்தறிந்து கற்றவரும் அதிசயிக்க
        அத்தனையும் மனத்திருந்து சொல்லி நிற்பான்.
காய்ந்து பிழை உரைப்பவரைக் கடிந்து நல்ல
        கனிவான குரலாலே அவரை மாற்றி
தேய்ந்த அவர் அறிவையெலாம் செழிக்கச் செய்வான்.
        தேற்றி அவர் அறிவுலகில் நிலைக்கச் செய்வான்.

ஒப்பற்ற புதுவையிலே மதுவை வெல்ல
        ஒளிருகிற கம்பனது சுவையை நாட்டி
தப்பற்ற பெரும்புகழை மண்ணுக்கீந்தான்.
        தன் புகழால் தமிழ்தன்னை வாழச் செய்தான்
முப்பற்றும் துறந்தவராம் தம்மைப் போற்றி
        மூளுகிற பக்தியொடு அவரை வாழ்த்தி
எப்போதும் நல்லவர்கள் சூழ நின்றோன்
        ஏற்றமொடு நூறகவை காணுகின்றான்.

'கம்பவாணர்' தன்னின் கரங்கள் பற்றி
        கருத்தோடு கம்பனவன் புகழைப் பாட
நம்பித்தான் முன்வந்த பெரிய ஐயன்
        நானிலத்தோர் போற்றிடவே பணிகள் செய்தான்
அம்புவியில் அறிஞர்களை ஒன்றுகூட்டி
        ஆண்டுதொறும் பலர் வியக்க அணிகள் செய்து
தெம்பு தரும் விழவெடுத்து தேற்றம் செய்தான்.
        தேன் தமிழால் உலகுக்கே ஊற்றம் செய்தான்.

மாப்பிள்ளை முதலி எனப் பலரும் போற்ற
        மங்களமாம் வடிவமொடு என்றும் நிற்பான்
பூப்படையாத் தமிழின் மேல் காதல் கொண்டு
        போற்றுகிற இடமெல்லாம் தானும் சென்று
நாப்பிளக்கத் தமிழ் உரைப்பார் நயங்கள் நாடி
        நன்னெஞ்சால் உருகிடுவான் நயந்து நிற்பான்
காப்பிவனே கம்பனது தமிழுக்கென்று
        கற்றவர்கள் போற்றிடவே நூறைத் தொட்டான்.

எங்களது ஈழத்துக் கழகந்தன்னை
        இதயத்தில் வைத்தேதான் உரிமை சொல்லி
மங்களமாய் நாம் தந்த விருதுதன்னை
        மாண்புறவே பெற்றமகன் மதியில் மிக்கான்
தங்களது உறவெனவே எம்மைப் போற்றி
        தன் பொருளால் அறம் நிறுத்தி வைப்புச் செய்து
இங்கெமது மக்களையும் ஈர்த்து நின்றான்.
        இவன் பெருமை என்னென்போம் ஏந்தல் வாழ்க!

தன் முதுமை சிறிதேயும் எண்ணிடாது
        தளர்வுற்ற காலத்தும் கடலைத்தாண்டி
அன்றந்த அனுமன் போல் இலங்கை தேடி
        ஆண்டுதொறும் வந்தெங்கள் விழவைப் போற்றி
இன்முகத்தோடிருந்தெங்கள் தமிழை ஏற்ற
        ஏந்தல் இவன் பெருமையினை என்னவென்போம்?
தன்னிகரில் இறைவனவன் அருளதாலே
        தாண்டிடுக இன்னுமொரு நூறு ஆண்டு!

மங்களமாம் நல் வடிவு மனத்தினாலே
        மற்றவரை ஈர்க்கின்ற மாறா அன்பு
பொங்குகிற வார்த்தையெலாம் பொலியும் நல்ல
        பொன்னான தமிழதனில் இனிய பண்பு
எங்கிருந்து தமிழ்ச்சத்தம் எழுந்திட்டாலும்
        ஏங்கி அதைக் கேட்டிடவே ஓடி முன்பு
பங்கமிலாச் சபை நிரப்பி அமர்ந்து நிற்கும்
        பண்பாளன் இவனுக்கோ தமிழே இன்பு

உந்தனது நூற்றாண்டு விழவுகாண
        ஒப்பற்ற அருள் தானும் வாய்க்கவில்லை.
மைந்தரது வருகை தனைக் காண எண்ணி
        மனம் நொந்து போயிருப்பாய் மனத்துள் நீயும்
வந்தடையாக் குற்றமதைப் பொறுத்து எம்மை
        வாயார என்றென்றும் வாழ்த்தல் வேண்டும்.
செந்தமிழின் வடிவம் என நிற்கும் என்தாய்
        செழித்தேதான் பல்லாண்டு நீயும் வாழ்க!

கம்பனது புகழ் போல வாழவேண்டும்!
        கன்னியளாம் தமிழ் போல வாழவேண்டும்!
தெம்புதர எம்தமக்காய் வாழவேண்டும்!
        தேற்றமுறத் தமிழ் வளர்க்க வாழவேண்டும்!
நம்புகிற நல்லோர்க்காய் வாழவேண்டும்!
        நானிலத்தில் அறம் வளர வாழவேண்டும்!
உம்பரெலாம் உனை வாழ்த்த வாழவேண்டும்!
        உயர்ந்தவனே இனும் நூறு வாழவேண்டும்!
                                                ✤✤✤

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.