வற்றாது விருதுகளைக் குவித்து நிற்பாய் நர்த்தகி! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்

வற்றாது விருதுகளைக் குவித்து நிற்பாய் நர்த்தகி!  -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்
 

('பத்மஸ்ரீ' விருது பெற்றிருக்கும் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இலங்கைக் கம்பன் கழகத்தின் வாழ்த்து)

யர் விருதாம் 'பத்மஸ்ரீ' உன்னைச் சேர
        உளம் மகிழ்ந்து நாம் நின்றோம் உணர்வு பொங்க
அயர்வறியாப் பேருழைப்பால் முனைந்து நின்று
        அனைவருமே வாயடைக்க விருது கொண்டாய்
தயவுடைய இறையவனும் ஓரம் செய்தும்
        தாளாது மனமதனில் வன்மம் கொண்டு
வியந்திடவே உளமதனில் வீறுகொண்டாய்
        வெற்றி மகளாய் இன்று விருதும் கொண்டாய்

ஆணோடு பெண்ணவளும் கலந்து நின்ற
        ஆண்டவனின் வடிவுனக்கு வாய்த்ததாலோ
மானாடும் கை இறைவன் போல எங்கள்
        மண்வியக்க பரதமதில் தேர்ச்சி கொண்டாய்
தேனாடும் உந்தனது நடனம் கண்டு
        திகட்டாது சபையெல்லாம் திகைத்து நிற்கும்
வானாடர் அருள் சுரக்க மேலும் நீயும்
        வற்றாது விருதுகளைக் குவித்து நிற்பாய்!

 

ஈழத்தில் கம்பனது கழகந்தன்னில்
        ஏற்றமுடன் நீ நடித்த நடனம் தன்னின்
ஆழத்தைக் கண்டேதான் அதிர்ந்து நின்றோம்.
        அற்புதமாம் உனதாற்றல் அறிந்து கொண்டோம்.
 வேழத்தை ஒத்தேதான் வீறுகொண்டு
        விறுவிறுப்பாய் நீ மாற்றும் பாவந் தன்னில்
காலத்தை மறந்தேதான் யோகம் செய்தோம்.
        கருத்தோடு விருதீந்து பெருமை செய்தார்.

ஆண்டவனின் படைப்பதனில் நிகழ்ந்த குற்றம்
        அதனினையே உந்தனது வாழ்வால் மாற்றி
நீண்ட பெரும் புகழ் உனக்கு மட்டுமன்றி
        நெடியவனாம் இறையவர்க்கும் ஆக்கித்தந்தாய்
நாண்டெழுந்து நாட்டியமாம் கலையைக் கற்று
        நல்லவர்கள் மனம் புகுந்து நயமே பொங்க
மீண்டு உனைப் புத்துயிராய் ஆக்கி இந்த
        மேதினியை வென்றவளே மேன்மைகொள்வாய்!
                                             ✤✤✤

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.