எறிகணை 50
#கேள்வி :
சவுதியில் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும் அனோஜன் பற்றி?
#பதில்:
நான் பலதரம் சொல்லியிருக்கிற விடயம் தான். ஆனாலும் மீளவும் சொல்கிறேன். “விநாசகாலே விபரீதபுத்தி” என்று நம் பெரியவர்கள் சொன்னதைத்தான் இவ்விடத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது.
அனோஜனின் இந்துமதப் பற்றினை நினைப்பதா?, மதப்பற்றால் அவர் காட்டிய அநாகரீகமான பிறமதத் தூஷித்தலை நினைப்பதா?, யதார்த்தம் அறியாத அவரது மூடத்தனத்தை நினைப்பதா?, தான் இட்ட பதிவை “fake” பதிவாகக்கூடப் போட நினைக்காமல், தன் பெயரிலேயே இட்ட அறியாமையை நினைப்பதா? என்று ஒன்றும் புரியவில்லை.
மனிதர்களை ஒன்றிணைப்பதற்காகத்தான் மதங்கள் பிறந்தன. இன்று அம்மதங்களே மனிதரைப் பிரிக்கும் கருவிகளாகிவிட்டன. எத்தனை ஞானிகள் தோன்றிப் போதனைகள் செய்தாலும், மனிதர்கள் தம் இயல்பைவிட்டு மாறமாட்டார்கள் போல.
ஒரு நாயின் நெற்றியில் விபூதி, குங்குமம் இருந்தது என்பதற்காக, அதனை எட்டி உதைத்துத் துன்புறுத்திய அந்த இஸ்லாமிய இளைஞன்தான் இந்தப் பிரச்சினையில் முதல் குற்றவாளி.
இந்தச் சம்பவத்தைத் தொலைபேசிக் கமராவில் பதிவு செய்து வெளியிட்டதன் மூலம் இப் பிரச்சினையை ஊதிப் பெருப்பித்தவர்தான் இந்த விடயத்தின் இரண்டாவது குற்றவாளி.
இச் செய்தி வெளியானதும், தத்தம் மதங்கள் சார்ந்து இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கிய மதவெறியர்கள்தான் இப் பிரச்சினை சார்ந்த மூன்றாவது குற்றவாளிகள்.
உழைப்புத் தேடி இன்னொரு நாட்டிற்குப் போன இடத்தில், தன் வேலையை மட்டும் பார்க்காமல், தேவையில்லாமல் பேசப்போய் இன்று மரணத்தின் வாசலில் நிற்கும் அனோஜன்தான் இப் பிரச்சினையின் கடைசிக் குற்றவாளி.
நபிகள் நாயகம் பற்றி, மிகக்கேவலமான நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட பதிவினை இட்ட அனோஜனின் செயல் மிகத் தவறானது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
அனோஜனது பதிவால் மனம் நொந்து இருக்கக்கூடிய நம்நாட்டு இஸ்லாமிய சகோதரர்களிடம் தவறிழைத்தவன் ஓர் இந்து என்ற காரணத்தினால், இந்நாட்டு இந்துமக்கள் தமது மனவருத்தத்தைத் தெரிவிக்கும் கடமைப்பாடுடையவர்களாய் இருக்கிறார்கள்.
அதுபோலவே இந்து அடையாளத்துடன் இருந்த ஒரு நாயைத் துன்புறுத்தி இத்தகைய பிரச்சினை உருவாவதற்குக் காரணமான இளைஞன் ஓர் இஸ்லாமியன் என்ற காரணத்தால், இந்நாட்டில் வாழும் இஸ்லாமியர்களும் தமது மனவருத்தத்தைத் தெரிவிக்கும் கடமைப்பாடுடையவர்களாய் இருக்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் மத வன்மத்தை இந்த நிமிடம் வரையும் கக்கிக் கொண்டிருக்கக்கூடிய இரண்டு மதங்களையும் சார்ந்த மதவெறியர்களை என்னென்பது?
பலர் பங்கேற்ற இந்தப் பாதகச் செயல்களில், தனி ஒருவன் அகப்பட்டுத் தண்டனை பெற்று நிற்கிறான். ஆயிரம்தான் இருந்தாலும் எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்தச் சம்பவங்களால் ஒரு மனித உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலைபற்றி உயர் மானுட மனத்தவர்கள் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது.
என்னதான் இருந்தாலும், ஓர் இலங்கையன் என்ற வகையில் அனோஜன் நம் சகோதரன் ஆகின்றான். இந்துமக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டு இஸ்லாமியர்களுக்கும் அவன் சகோதரனே! உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாமியர்கள், அந்த உயர்ந்த உணர்வு கொண்டு அனோஜனின் பிரச்சினையை அணுகவேண்டியது அவசியம்.
எனவே நம் மக்கள் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, ஒன்று சேர்ந்து அந்த இளைஞனின் உயிருக்காகப் பிரார்த்தனை செய்வோம். அது ஒன்றே நம்மால் முடிந்த காரியம்.
நமது ஜனாதிபதி அனோஜனின் பெற்றோரைச் சந்தித்த செய்தி வெளிவந்திருப்பது ஆறுதல் தருகிறது. தன் நாட்டு மக்களைப் பேதங்கள் இல்லாமல் தன் மக்களாய்க் கருதும் ஜனாதிபதி அனுர அவர்கள், தம்மால் ஆகக்கூடிய முயற்சிகளைச் செய்து அனோஜனின் உயிரினைக் காத்தால், இலங்கை மக்கள் மனதில் ஏற்கனவே உயர்ந்திருக்கும் அவர், இன்னும் உயர்வடைவார் என்பதில் ஐயமில்லை. நல்லது நடக்க அனைவரும் ஒன்றிணைந்து முயல்வோம்.
#கேள்வி :
முதலீட்டார்களை ஈர்க்கவென லண்டன் சென்ற நடிகர் விஜய், தனது சில செயல்களால் விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பதைப் பார்த்தீர்களா? அதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
#பதில்:
எவ்வளவு பெரிய, நீண்டகாலம் நிலைத்திருந்த, ஓர் ஆலமரத்தை அசைத்து வீழ்த்திவிட்டு, பதவியைக் கைப்பற்றிய விடயத்தின் பெறுமதியை, த.வெ.க. வின் சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும்தான் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், விஜய்க்குக் கூடவா அதன் பெறுமதி தெரியாமற் போயிற்று என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
பெரிய கதாநாயகனாகத் தோன்றும் சினிமாக்களிலும் விஜய் தன்னை ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் காட்டிக் கொள்வார். இப்போது அரசியலிலும் அதுதான் அவரது “ஸ்ரையிலாக” இருக்கிறது.
சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலையில் இந்த விளையாட்டுகள் வெற்றி பெற்றுத் தரக்கூடும். அரசியல் என்னும் நனவுத் தொழிற்சாலைக்கு இந்த விளையாட்டு சரிவரப்போவதில்லை என்பது நிச்சயம்.
“இன்றைக்கு விழப்போகிறது, நாளைக்கு விழப்போகிறது” என்று எதிராளிகள் ஒருபக்கம் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிக் கொஞ்சம் கூட “சீரியஸ்னஸ்” இல்லாமல் விஜய்யும், அவர் கட்சியினரும் அடிக்கும் கூத்துக்களைக் காண எரிச்சல் எரிச்சலாய் வருகிறது.
விஜய்க்கு, அவரது அருகிலிருக்கும் யாரேனும் “நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள்!” என்று அடிக்கடி நினைவூட்டினால் நல்லதென்று தோன்றுகிறது. “கார் றேஸ்” மைதானத்தில் நடிகர் அஜித்தை நோக்கி, குனிந்து கைநீட்டியபடி ஓடிவந்த அவரது “ஸ்ரைல்”, நடிகர் விஜய்க்குப் பொருத்தமாக இருக்கலாம். முதல்வர் விஜய்க்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமாக இருக்கவில்லை.
அவர் யாரை அங்கு கூட்டிக்கொண்டு போனார்? என்ற கேள்வி. நமக்கு அனாவசியமானது. அது அவரது தனிவாழ்வுப் பிரச்சினை. ஆனால் ஒன்று, சென்ற பயணம் அரசைச் சார்ந்தது. அரச செலவில் நடத்தப்பட்டது. அந்தவகையில், இந்தப்பயணத்தில் சில விடயங்களை அவர் தவிர்த்திருந்தால், அது மரியாதையாக இருந்திருக்கும்.
ஒரு தலைவனின் பெருமையில் அவனது தனிவாழ்வுச் சிறப்பும் நிச்சயம் கவனிக்கப்படும். பலகாலமாகத் தமிழ்நாட்டில், தலைமை தாங்குவோர்க்குத் தனிவாழ்வு ஒழுக்கம் அவசியம் இல்லை என்பதான ஒரு கருத்து பதிவாக்கப்பட்டுவிட்டது.
கடந்தகால முதலமைச்சர்கள் எல்லோருமே இந்த இழிந்த தொப்பியைப் போட்டுக்கொள்ளத் தவறியதில்லை. அதனால்த்தானோ என்னவோ, தன் தனிவாழ்வின் கேவலம் பற்றி விஜய் எந்தக் கவலையுமில்லாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
“மனைவி சங்கீதா இல்லாவிட்டால் என்ன? விஜய் அண்ணாவுக்கு எல்லாமாக இருக்க நாங்கள் தயார்” என்று பேட்டிகள் அளித்துவருகின்ற, அவரது பெண் ரசிகர்களைக் காண எரிச்சல் எரிச்சலாக வருகிறது. அவர்கள் சொல்லும் “ எல்லாமாக” என்ற சொல்லுக்கான அர்த்தத்தைச் சிந்திக்க அதிர்ச்சியாய் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் “அண்ணா!” என்ற விழிப்பு வேறு.
தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கச் சென்ற பயணத்தில், தமது தொழில் அமைச்சரைக்கூட அழைத்துச் செல்லாத விஜய்யின் செயல்கண்டு, விமர்சகர்கள் நகைக்கிறார்கள். தேர்தல் காலத்தில் சொன்னாற்போல, “அனைத்திலும் தானே” என்ற எண்ணத்தால்த்தான் விஜய் இங்ஙனம் செயற்படுகிறாரா? அல்லது தன் அமைச்சர்களின் இலட்சணம் அவ்வளவும்தான் என்ற எண்ணத்தில் அங்ஙனம் செயற்படுகிறாரா? ஒன்றும் புரியவில்லை.
என்ன பிழை செய்தாலும் ஆதரிக்க இப்படி ஒரு பெரிய கூட்டம் இருந்தால் யார் தான் பழி பாவத்திற்கு அஞ்சப் போகிறார்கள்? மாற்றத்தை விரும்பிய தமிழ் நாட்டவர்கள் மனம் உடைந்துபோய் கிடக்கிறார்கள்.
#கேள்வி :
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கின் தீர்ப்புப் பற்றி?
#பதில்:
நாட்டில் நடக்கும் குற்றங்களை எல்லாம் ஆட்சி செய்பவர்கள்தான் கண்டுபிடித்துக் கண்டிப்பார்கள். இந்த வழக்கில், நடந்த குற்றங்களின் காரணர்களாய் ஆட்சியாளர்களே இருந்திருக்கிறார்களோ என எண்ண வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை அழிக்க என்று வன்முறை ஆயுதத்தைக் கையில் எடுத்த சிங்கள அரசியலாளர்கள், பின்னர் அந்த ஆயுதத்தைத் தமது சொந்தமக்களுக்கு எதிராகவே பயன்படுத்திய கொடூரத்தை என் சொல்ல?
நல்லகாலம் அநுரவின் புதிய அரசு வந்ததால், குற்றவாளிகள் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியிருக்கிறார்கள். வெளிவந்திருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு, நடந்த ஒட்டுமொத்த குற்றங்களுக்கான முழுமைத் தீர்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.
இத்தீர்ப்பின் பின்னராக, இன்னும் பல உண்மைகள் தோண்டி வெளியெடுக்கப்படலாம். அப்போது அகப்படப்போகிற குற்றவாளிகள் யார் என்பதுபற்றி, மக்கள் இன்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இப் பிரச்சினையின் பின்னால் இருந்த பல பெரிய தலைகள் தாம் தப்பிவிட்டதாய் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், என்றோ ஒருநாள் உண்மை முழுமையாய் வெளிவரத்தான் போகிறது.
#கேள்வி :
இன்று ரஷ்யா- உக்ரேன், ஈரான்- அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையில் நடைபெற்று வரும் போர்கள் எப்போது முடியப் போகின்றன?
#பதில்:
மூன்றாம் உலகயுத்தம் முடியும் போதுதான் இப்போர்களும் முடிவுக்கு வரும் என்று தோன்றுகிறது.
#கேள்வி :
தமிழ்நாட்டில் இன்று பல “யுடியூப் சனல்களும்” பற்பல “யுடியூப்பேர்சும்” தோன்றியிருக்கிறார்கள். இவற்றாலும், இவர்களாலும் மனிதகுலம் மேம்படுமா?
#பதில்:
நன்றாகக் கேட்டீர்கள் போங்கள்! இவற்றால் மனிதகுலம் மேம்படாவிட்டாலும் பரவாயில்லை. தாழ்ந்து போகாமல் இருந்தால் போதாதா? இன்றைய “யுடியூப்புகள்” பலவும் வெறும் ஊடக அமைப்புகளாக இல்லை. அவையெல்லாம் இன்று வர்த்தக அமைப்புகளாக மாறிவிட்டன.
வியாபாரம் என்று வந்துவிட்டால் வெற்றிதான் முக்கியமாகிவிடும். வியாபாரப் போட்டியில் ஈடுபடத் தொடங்கியிருக்கும் பல “யுடியூப்பேர்சுக்கு” “subscribe” ஐ சேர்ப்பதில்த்தான் அக்கறை பெருகியிருக்கிறது.
இவர்களைப் பொறுத்தவரை மனுக்குலமாவது மண்ணாவது! மற்றவர்களின் படுக்கையறைவரை சென்று எட்டிப்பார்க்க இவர்கள் சிறிதும் கூச்சப்படுவதில்லை. மற்றவர்களின் தனிவாழ்வு அசிங்கங்களைக் கற்பனையோடு விமர்சிப்பதற்கென்றே பல “யுடியூப்புகள்” உண்டாகிவிட்டது துரதிஷ்டம்.