எறிகணை 30
கேள்வி :
திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களது நீண்ட பதில்களை வாசிக்கப் பலரும் சிரமப்படுகிறார்கள். அதனால் நீங்கள் எழுதும் நல்ல பலவிடயங்கள் சேரவேண்டியவர்களைச் சேராமல் வீணாய்ப் போகின்றன. முடிந்தால் சிறிய, சிறிய விடைகளாகப் பதில் தாருங்கள். அல்லது காணொளியாக நீங்களே பதில்களைத் தந்தால் அது இன்னும் அதிக பயனளிக்கும். முயன்று பார்த்தால் என்ன?
பதில் :
ஏற்கனவே, என் மனதில் இந்த எண்ணம் உதிக்கத் தொடங்கிவிட்டது. கம்பன் விழா வேலைகளில் இப்போது மூழ்கியிருக்கிறேன். மிக விரைவில் எனது பதில்களை உங்கள் கருத்துப்படி காணொளியாகத் தர முயல்கிறேன்.
கேள்வி :
நம் தமிழ்த்தலைவர்களை எப்போதும் குறை சொல்கிறீர்கள். அவர்கள்மேல் அப்படி என்னதான் பகை உங்களுக்கு?
பதில் :
பகையென்று ஒன்றுமில்லை. அவர்கள் அனைவரும் என் நண்பர்கள். விமர்சனம் வேறு. பகை வேறு. சிலவேளைகளில் அவர்களது பொறுப்பின்மைதான் எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சில நாட்களின் முன் பாராளுமன்ற உறுப்பினர் “அர்ச்சுனா” அவர்கள் கிளிநொச்சி மக்களையும் மலையக மக்களையும் படிப்பறிவில்லாதவர்கள், நாய்கள் என்ற தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
அவரது அந்த அநாகரீகமான விமர்சனத்தைத் தமிழ்த்தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை. தமிழர் சார்ந்த ஓர் இனக்குழுமத்தையும் ஓர் பிரதேச மக்களையும் தனியொருவர் இப்படிக் கீழ்மையாக விமர்சிக்கையில், அதனை நம் தலைவர்கள் யாரும் கண்டிக்காதது எரிச்சலைத் தந்தது. இதைக்கூட செய்யாமல் நம் தலைவர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்று தெரியவில்லை.
தமிழர்களுக்கிடையில் இத்தகைய இன, பிரதேசப் பகையை ஒருவர் விதைக்கையில், அதைக்கண்டித்து ஓர் அறிக்கைகூட விடாமல் இருந்தது இவர்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தியது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மலையக மக்களை இழிவுபடுத்தியதாய்ச் சொல்லி, அதாவுல்லாவின் மேல் தாக்குதல் நடத்திய மனோகணேசனும், கிளிநொச்சியைத் தன் இராஜதானியாய் ஆக்கி வைத்திருக்கிற சிறீதரனும்கூட, இவ்விடயத்தில் மௌனமாய் இருந்தது ஆச்சரியம் தந்தது.
இவர்கள் அர்ச்சுனா ஒரு பொருட்டே இல்லை என்று மௌனித்திருக்கிறார்களா? அல்லது எது நடந்தால் எமக்கென்ன என்று மௌனித்திருக்கிறார்களா? நம் தலைவர்களின் இத்தகைய பொறுப்பின்மையைத்தான் நான் கண்டித்து வருகிறேன்.
கேள்வி :
ஞானிகளுக்கு உச்சியால்த்தான் உயிர்பிரியும் என்றும், அவர்கள்தான் சமாதி அடைந்தவர்கள் என்றும் அத்தகையவர்களைத்தான் சமாதி வைக்கவேண்டும் என்றும் உங்கள் மாணவர் வாசுதேவா பேசியதை வைத்து உங்களதும் ஆறு.திருமுருகனதும் தலைகளில் பலூன் கட்டிக்காட்டி அருண் வெளியிட்ட படத்தைப் பார்த்தீர்களா?
பதில் :
இத்தகைய செய்திகளை உடனுக்குடன் எனக்கு அனுப்பிவைக்கவென எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்?
அந்த படத்தைச் செய்தவரின் கற்பனையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அருணுக்கு அடிப்படைச் சமயச் செய்திகளும்கூடத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. மற்றவர்களின் குறையைச் சுட்டிக்காட்டத்தான் அவருக்குத் தெரிகிறது. தனது குறையை பிறர் சுட்டிக்காட்டினாலும் அவற்றை அவர் ஏற்க மறுக்கிறார்.
உயிர் பிரிவதை, காற்று பிரிவதாய் அவர் உரைத்திருப்பது அறியாமை. காற்றுத்தான் பலூனை நிரப்பும். உயிர் காற்றல்ல. உயிரை பலூனில் பிடித்துவிடலாம் என்றால், எல்லோரது உயிரையும் நாம் பிடித்து வைத்துவிடலாமே. இதுகூடத் தெரியாதவர் சமய உபதேசம் செய்யத் தொடங்கியிருக்கிறார். எல்லாம் காலத்தின் கோலம்.
கேள்வி :
“ட்ரம்பின்” தற்போதைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அதிகாரத்தைக் கைப்பற்றி, அதன் மூலம் அனைவரையும் அடக்கி ஆள முனைந்தார். நாடுகளுக்குள் புகுந்து தலைவர்களை அத்துமீறிச் சிறைபிடித்தார். ஆரம்பத்தில் அமெரிக்க மக்களுக்கும் அது ஆனந்தமாகத்தான் இருந்தது.
முதல் முறையாக அவரது அந்தப் பயணம் தடைப்பட்டிருக்கிறது. இழப்புக்களைச் சந்தித்த பிறகுதான், அமெரிக்க மக்களுக்கும் புத்தி வந்திருக்கிறது. தோல்வியால் “ட்ரம்ப்” சமநிலைகெட்டு இருப்பதை அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இனங்காட்டுகின்றன. இன்று அவரைப் பார்த்து உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது.
“நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்ற வள்ளுவரின் குறள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
கேள்வி :
அந்தணர்களின் கூத்துக்கள் கேலிக்கிடமாய் இருப்பதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்களா?
பதில் :
உங்கள் கேள்விக்கு முன்பாக “சில” என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருசிலரின் பிழையான நடவடிக்கைக்காக ஓர் இனத்தையே இழிவு செய்வது தவறு.
அதுதவிர இன்னொன்றையும் நாம் சிந்திக்கவேண்டும். நமது சைவசமயம், எல்லா வழிபாடுகளையும் ஏற்றுக்கொள்கிறது. நான் முன்பு சொல்லியிருப்பது போல, அவரவர் ஆன்ம பக்குவத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு அமையும். வேறுபட்ட இவ்வழிபாடுகளைச் சைவசமயம் நிராகரிக்கவில்லை.
பிள்ளையை வெட்டிக் கறிசமைத்த சிறுத்தொண்டர், மகளின் கூந்தலை அறுத்துக் கொடுத்த மானக்கஞ்சாறனார், சிவலிங்கத்தில் செருப்புக் காலைத் தூக்கி வைத்த கண்ணப்பர், லிங்கத்திற்கு கல்லால் எறிந்த சாக்கியநாயனார், சிவனடியாருக்குத் தன் மனைவியைக் கொடுத்த இயற்பகை நாயனார் போன்றவர்களின் வழிபாடுகளையெல்லாம் நம் சைவசமயம் ஏற்றிருக்கிறது. அதனால் வழிபாட்டில் இது சரி, இது பிழை எனச் சொல்லும் உரிமை இறைவனைத் தவிர வேறெவர்க்கும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அதுதவிரவும் அந்தணர்களின் வேலை என்பது, இலேசான ஒன்று அல்ல. ஒரு கோயிலில் போய், தொடர்ந்து அவர்களின் வேலையைச் செய்து பார்த்தால்த்தான் அவ்வேலையின் சிரமம் புரியும். கோயில்கள் அதிகரித்துவிட்டன. அதனால் அந்தணர்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தகுதியற்றவர்களையும் ஆலயங்களில் சேர்க்கவேண்டித்தான் இருக்கிறது.
சைவத்தைக் காக்க நினைக்கிறவர்கள் பிழையான அந்தணர்களை இனங்காட்டுவதை விட சரியான அந்தணர்களைத் தேடிக்கொடுப்பதே நல்லது.