இதயம் பேசுகிறது
உலகம் தலைகீழாய் மாறிக் கொண்டிருக்கிறது. நல்லவர்களைத் தீயவர்களாகவும், தீயவர்களை நல்லவர்களாகவும் உரைப்பவர் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறுமதியாளர்கள் சிலரின் தூண்டுதலால், சிந்தனையின்றிச் செயற்படும் ஒருசில நபர்களே, மேற்சொன்னவாறு, உண்மையைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்தம் செயலால் நல்லவர் நெஞ்சங்கள் வாடி நிற்கின்றன.
இத்தகைய புரட்டுச் செயல்களில் ஒன்றாகத்தான், இராவணனை உயர்த்தியும் இராமனைத் தாழ்த்தியும் உரைக்க, ஒருசிலர் முனைந்து வருகின்றனர். இவர்தமக்கு, இராவணனே கதாநாயகனாம், இராமனே வில்லனாம். காரணமின்றிக் கருத்துரைக்கும் இவர்தம்மை, கற்றோர் உலகம் கவலையோடு நோக்கி நிற்கிறது.
மேற்கூறியவாறு கருத்துரைப்போர், அந்த அளவிலே நிறுத்திக் கொள்ளாமல், இராவணனே நம் தமிழினத்தின் பாட்டன் எனவும் உரைத்து, நம் இனத்தின் பெருமையை உயர்த்துவதாய் நினைந்து, இழிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
காவியங்களை முழுமையாய்க் கற்காமல், மேற் சொன்னோர்தம் சொல்வன்மையால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் சொல்வதே இராமகாதை என நினையும், புதிய தலைமுறையினரில் சிலர், இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக்கருதி, இராவணனைத் தம் பாட்டனாய்ப் போற்றத் தொடங்கும் அவலம், இன்று நிகழத் தொடங்கியிருக்கிறது.
உண்மையில் இராவணன் நம் பாட்டன் தானா? இராவணனை நம் பாட்டன் என்று உரைப்பதால், நம் தமிழினம் பெருமை கொள்ளுமா? சர்ச்சைக்குரிய இக் கருத்துக்கள் பற்றி ஆராய்வதே, இக்கட்டுரையின் நோக்கமாம்.
மேற்பொய் உரையாளர்கள், இராவணனைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்பவற்றை, பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• இராவணன்தான் நம் தமிழர்களின் மூதாதையன்.
• அவன் ஆரியர்களை எதிர்த்து நின்ற உண்மைத் திராவிடன்.
• அவன் சிறந்த ஒழுக்கசீலன்.
• மாறாத இனப்பற்றாளன்.
• சிறந்த சிவபக்தன்.
இவைதான் மேற்சொன்னவர்களால் உரைக்கப்படும் கருத்துக்கலாம்.
இராமகாதை நடந்த காலத்தை, இன்றுவரை எவராலும் சரியாகக் கணிக்க இயலவில்லை. சொல்லப்படும் காலக்கணிப்புக்கள் எல்லாம்கூட, கற்பனையானவையேயாம். அதனால் வரலாற்று அடிப்படையில், மேற்சொன்னவர்தம் கருத்துக்களை, ஆராய்ந்து உறுதிப்படுத்த முடியாதென்பது திண்ணம்.
பழையதான இந்த இராமகாதை, பிற்காலத்தில் காவியங்கள் ஆக்கப்பட்டது. வடமொழியில் வான்மீகரால் செய்யப்பட்ட இராமாயணமும், தமிழ் மொழியில் கம்பரால் செய்யப்பட்ட இராமகாதையும், அங்ஙனம் ஆக்கப்பட்ட காவியங்களுள் முதன்மையானவையாம்.
இவையே இராமன், இராவணன் பற்றிய செய்திகளை, முழுமையாய் நமக்குத் தொகுத்துத் தருகின்றன. இச்செய்திகளைக் கொண்டே, இராமன், இராவணன் பற்றிய உண்மைகளை, நாம் ஆராயவேண்டியிருக்கிறது.
இக்காவியங்களில் பதியப்பட்டுள்ள இராமகாதையைத் தவிர, தமிழில் தோன்றிய வேறு சில இலக்கியங்களிலும், இராமகாதை பற்றிய சில செய்திகள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. நமக்குத் தெரிந்த அளவில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார்கள் பாசுரம், திருமுறைகள், திருப்புகழ் முதலிய படைப்புக்களிலும், இராமன், இராவணன் பற்றிய செய்திகள் சில, நமக்குக் கிடைத்தாலும் அவற்றில், இராமகாதை பற்றிய முழுமைப் பதிவுகள் இல்லை.
ஆனாலும் மேற்படி இலக்கியங்கள் தரும் செய்திகள்கூட, இராமனது பெருமையை உயர்த்தியும், இராவணனது சிறுமையை வெளிப்படுத்தியுமே நிற்கின்றன. அவை வெளிப்படுத்தும் செய்திகளுக்கும், வான்மீகர், கம்பர் ஆகியோர் வெளிப்படுத்தும் செய்திகளுக்கும் இடையில், பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராமகாதை, வரலாறா? கற்பனையா? என்று முழுமையாய் உரைக்க, எவராலும் முடியாதாம். கம்பரும் வான்மீகியும் தந்த காவியங்கள் கற்பனையேயானாலும், அவை தரும் கருத்துக்களை வைத்தே இராமகாதை பற்றிய விபரங்களை நாம் அறிய முடிகிறது.
அதனால் இராமன் நல்லவனா? இராவணன் நல்லவனா? என்பது பற்றி, இக்காவியங்கள் தரும் செய்திகளை வைத்தே, நாம் முடிவு செய்யத் துணிகிறோம். அந்தவகையில் இக்காவியங்கள் தரும் செய்திகளால், இராமனை நல்லவன் என்றும், இராவணனைத் தீயவன் என்றும், நாம் தெளிவாய்த் தெரிந்து கொள்கிறோம்.
இன்று இராவணனை உயர்த்திப் பேசும் பலருக்கும்கூட, அவனை அறிமுகம் செய்தது மேற்படி இலக்கியங்களேயாம். இவ் இலக்கியங்கள் இராவணனைப் பற்றி உரைக்கும் செய்திகளை, முதலில் நாம் ஆராய்தல் அவசியமாகிறது.
அந்த வகையில், மேற்சொன்னவர்களால் உரைக்கப்பட்ட, இராவணன் பற்றிய கருத்துக்களை, இனி நாம் ஒவ்வொன்றாய் ஆராயலாம்.
1. இராவணன்தான் நம் தமிழர்களின் மூதாதையனா?
இராவணனை தமிழர்களின் மூதாதையன் என்றுரைக்கும், மேற் சொன்ன கருத்து சரியானதா என்பது பற்றி, முதலில் நாம் ஆராயலாம்.
மேற்படி கருத்துக்கான நேரடி ஆதாரம் எதனையும், கம்பர், வான்மீகி ஆகியோர் படைத்த காவியங்களிலும், மற்றைய இலக்கியங்கள் தரும் இராமகாதை பற்றிய செய்திகளிலும், வரையறுத்து நாம் அறிய முடியவில்லை.
ஆனால் அவன் நம் தமிழர்களின் மூதாதையன் அல்லன் என்பதை, வேறு வகையால் நாம உணரமுடிகிறது. ஒருவருக்குத் துன்பம் நேர்கையில் அவரிடமிருந்து வெளிப்படும் மொழி, அவரது தாய்மொழியாகவே இருத்தல் இயல்பு. இராவணன் “கயிலையைப்” பெயர்த்தெடுக்க முற்பட்டபொழுது, சிவனார் அம் மலையைத் தன் பெருவிரலால் அழுத்துகிறார். அதனால் இராவணன் அம்மலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறான். அப்போது அவன் சிவனை நோக்கி. சாமவேதத்தைப் பாடினான் என்று பல நூல்களும் உரைக்கின்றன.
சாமவேதம் வடமொழியாலானது. இராவணன் தமிழனாய் இருந்திருப்பானேயாகில், அத் துன்பவேளையில் அவன் தனது தாய்மொழியாகிய. தமிழிலேயே இறைவனைத் துதித்திருப்பான். ஆனால் அவன் அங்ஙனம் செய்தானில்லை. வடமொழியிலான வேதத்தையே அவன் பாடினான். இவ் உண்மை கொண்டு நோக்க, இராவணன் ஓர் தமிழன் அல்லன் என்பதை, நாம் அனுமானித்து அறிய முடிகிறது.
மேற்சொன்ன விடயத்தால், இராவணன் தமிழன் அல்லன் என்பதும், அவன் தமிழர்களின் மூதாதையன் அல்லன் என்பதும், மிகத் தெளிவாகத் தெரிகிறது.
2. இராவணன் உண்மைத் திராவிடனா?
இனி இரண்டாவதாகிய மேற் கருத்துப் பற்றி ஆராயவேண்டியுள்ளது. இராவணனை, திராவிடன் என்று எந்த ஆதாரமும் இன்றி, சிலர் சொல்லி வருகின்றனர். அது தவறாம்!
கம்பரது காவியத்தில், இராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பணகை, அவனை அடைய நினைந்து, தன் வடிவை மிக அழகாய் மாற்றிக் கொண்டு, இராமன் இருக்கும் இடத்திற்கு வந்து, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இரந்து நிற்கிறாள்.
அவளது கோரிக்கையை ஏற்க மறுக்கும் இராமன், தான் அவளை ஏற்க முடியாததற்கான காரணங்களைச் சொல்கையில், நீ அந்தணப்பெண் நான் சத்திரியன் ஆகையால், இந்த வர்ண வேறுபாட்டின் காரணமாய், நான் உன்னை ஏற்க முடியாதென்கிறான். “அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன்” இஃது கம்பன் இடும் பாடல் அடி.
இதிலிருந்து இராவணன் முதலியோர், திராவிடர்கள் அல்லர் எனவும் அவர்கள் அந்தண வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெளிவாகத் தெரியவருகிறது.
அதுமட்டுமன்றி நமது புராணங்கள் இராவணன், தந்தை வழியில் பிராமண குலத்தையும் தாயின் வழியில் அரக்கர் குலத்தையும் சேர்ந்தவன் என்று உரைக்கின்றன. பிரம்மாவின் மானச புத்திரர்களில் “புலஸ்திய” முனிவர் ஒருவர். அவரது மகன் “விஸ்ரவசு”. அவரது மகனே “இராவணன்”. பிரம்மன் வழி வந்தோரே பிராமணர்கள் எனப்படுவர். அந்தவகையில் இராவணனும் பிராமணன் என்பது தெளிவாகிறது. இக் காரணங்களால் இராவணன், திராவிடன் அல்லன் ஆரியன் என்பதையும் நாம் அறியமுடிகிறது.
3. இராவணன் சிறந்த ஒழுக்கசீலனா?
அடுத்ததாக இராவணனை உயர்த்திக் கூறுவோர் சொல்லும் செய்தி இதுவாம். இராவணன் ஒழுக்கசீலனா? ஆராயப் புகுகிறோம். இலக்கியங்களிலும் புராணங்களிலும் பதிவாகியுள்ள, இராவணனின் ஒழுக்க மீறல்கள் பற்றிய செய்திகளை,
பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
• அவன் இராமனது மனைவியாகிய சீதையைக் கவர்ந்தவன்.
• சகோதரனான குபேரனுக்குச் சொந்தமான இலங்கையைப் பறித்தெடுத்தவன்.
• “வேதவதி” என்கின்ற பெண்ணை அவளது விருப்பமின்றி கெடுத்தவன்.
• அதே போல “புஞ்சிகஸ்தலை” என்கின்ற பெண்ணையும் மானபங்கம் செய்தவன்.
• சூர்ப்பணகையின் கணவனான “வித்யுத்ஜிஹ்வான்” என்கின்ற தனது மைத்துனனைக் கொன்றவன்.
• தேவர்களை வருத்தியவன்.
இவைகொண்டு நோக்க இராவணன் ஒழுக்கசீலனா என்பது பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
வேறு ஒருசிலர் இராவணன் ஒழுக்கசீலன் என்பதற்குச் சான்றாக மற்றொரு செய்தியையும் பதிவு செய்வர். அவர்கள், இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றானேயன்றி அவளைத் தீண்டினானில்லை. அச்செயல் அவனது உயர் பண்பைக் காட்டுகிறது என்பர். நூற்பயிற்சி இல்லாத இவர்களது கருத்து நகைப்பிற்குரியதாம்.
“விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தீண்டினால், உனது தலை வெடித்துவிடும்” என்று, பலரால் தனக்கு இடப்பட்ட சாபங்களின் காரணமாகவே இராவணன் சீதையைத் தீண்டாதிருந்தான் என்று பல இடங்களிலிருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இராவணன் தேவலோக மங்கையான “ரம்பை”யை அவளது விருப்பமின்றி பலவந்தப்படுத்தியதால் கோபமடைந்த அவளது கணவன் “நளகூபரன்”, இந்தச் சாபத்தை அவனுக்கு வழங்கினான் என்பது உரைக்கப்படும் முதல் செய்தி.
பிரம்மாவின் மகளான “புஞ்சிகஸ்தலை”யிடம் இராவணன் தவறாக நடக்க முயன்றபோது, பிரம்மா இத்தகைய சாபத்தை அவனுக்கு அளித்தார் என்பது பதிவாகியிருக்கும் மற்றொரு செய்தி.
இந்தச் சாபங்களிற்குப் பயந்தே இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்தான் என்பதே உண்மை நிலையாம். அங்ஙனம் இருக்க இராவணன் சீதையைத் தீண்டாமல் இருந்தது அவனது ஒழுக்கத்தினால் என்று உரைப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாம்.
இராமாயணச் செய்திகள் பதிவாக்கியுள்ள எந்த இலக்கியமும் இராவணனை, அறவழிப்பட்டவனாகவோ, நல்லவனாகவோ, ஒழுக்கமுள்ளவனாகவோ காட்டாததோடு மேற்கருத்துகளுக்கு எதிர்மாறான கீழ்மைப் பண்புடைய ஒருவனாகவே அவனைக் காட்டுகின்றன.
இராவணின் சிறப்பை ஓரளவேனும் உயர்த்தி உரைத்த பெருமை, கம்பனையே சாருமாம். தனது காவியத்தில் இராவணனது குற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்யத் தவறாத கவிச்சக்கரவர்த்தி கம்பர், இராவணனது வீரத்தைப் புகழ்ந்துரைத்ததன் மூலம் அவனது சிறப்பையும் பதிவு செய்கிறார்.
4. இராவணன் மாறாத இனப்பற்றாளனா?
அடுத்து மேற்கூறப்பட்ட இக்கருத்து உண்மையானதா? என நாம் ஆராயப் புகலாம். ஒரு சிறந்த இனப்பற்றாளனின் அடையாளங்கள் எவை?
• அவன் தன் இனத்தை உயரச் செய்வான்.
• தன் இனத்தின் உயர்வுக்காகத் தன்னைத் தியாகம் செய்வான்.
• தன் இனத்தின் இளையோரை வாழவைப்பான்.
மேற்சொன்ன அளவுகோல்களை வைத்து இராவணன் இனப்பற்றாளனா, என ஆராயப்புறப்படுகிறோம்.
மேற்சொன்னவற்றில் முதல் அளவுகோலின்படி மட்டுமே இராவணன் சிறிது உயர்வடைகிறான். அவன் தன் இனத்தை உயர்த்தினான் என்பதில் மாறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் மற்றைய அளவுகோல்களின்படி இராவணனின் நிலை மிகத் தாழ்ச்சி உறுகிறது.
தன் இனத்தின் உயர்வுக்காக, தன்னைத் தியாகம் செய்தல் என்கின்ற விடயத்தில், இராவணன் பெருந்தோல்வி அடைகிறான். தனது முறையில்லாக் காமத்திற்காக, தன் வீரத்தம்பியான கும்பகர்ணன் உள்ளிட்ட, சுற்றத்தார் அனைவரையும் அழியக்கொடுத்த அவனை, இனப்பற்றாளன் என்று எவரும் உரைக்க முன்வரார்.
அதுபோலவே தனது காமத்திற்காக, இளவயதில் இருந்தவர்களான தனது புதல்வர்களை, அவர்கள் எடுத்துச் சொல்லியும் கேளாமல், போருக்கு அனுப்பி மாளச்செய்த இராவணனை, இனப்பற்றாளன் என எவரும் உரைப்பின், உலகம் அவரைக் கண்டு நகைக்கவே செய்யும்.
5. இராவணன் சிறந்த சிவபக்தனா?
நிறைவாக, இராவணனின் பெருமைக்காய், வலிந்து சொல்லப்படும் செய்தி இது. சிலர் இராவணனை சிவபக்தனாய்க் காட்டி, அவனை உயர்த்தி வைக்க முயல்கின்றனர். ஆனால் நம் சைவ இலக்கியங்களும், இராவணன் சீதையைக் கவர்ந்ததான குற்றத்தை, பதிவு செய்யத் தவறவில்லை. எனவே, ஒழுக்கம் பேணாத இராவணனை, சிவபக்தனாய் உரைப்பது, உண்மைச் சிவபக்தருக்கும், சைவத்திற்கும் செய்யும் பேரிழுக்காம்.
அதுவுமன்றி, இராவணன் உண்மைச் சிவபக்தனாய் இருந்திருப்பானேயாகில், சிவனார் வீற்றிருக்கும் கயிலை மலையைக் கண்டதும், தனது புஸ்பக விமானத்தில் இருந்து இறங்கி, அம்மலையையும் சிவனாரையும் வலம் வந்து வணங்கியிருப்பான். ஆனால் அவன் அங்ஙனம் செய்தானில்லை. அம்மலை தனது வழியை மறித்து நிற்பதாய்க் கருதி, அதனைத் தனது பராக்கிரமத்தால் நகர்த்த முற்படுகிறான். இதுவே அவனது சிவபக்தியின்மைக்குத் தக்க சான்றாம்.
அவன் சிவபக்தன் இல்லாதுவிடின், சிவன் அவனுக்கு வரங்களை வழங்கியது எப்படி? என, அடுத்து கேள்வி பிறக்கும். பெருங்கருணையாளரான சிவனார், வருந்தித் தன்னை வழிபடுபவர்க்கு, வரங்களை ஈயும் வழக்கமுடையவர். அதனால்த்தான் பசுமாசுரன், பாணாசூரன், அந்தகாசூரன், கஜாசூரன், திரிபுராசுரர்கள் போன்ற, தீய அரக்கர்களுக்கும் அவர் வரங்களை ஈந்ததாய், நமது புராணங்கள் உரைக்கின்றன.
அங்ஙனமே இராவணனும் தன்னை வருத்திக் கொண்டு, சாமகீதம் பாடியதைக் கேட்டு மனம் இரங்கிய சிவனார், அவனுக்கு வரங்கள் ஈந்தனர் என நாம் அறிதல் வேண்டும். அதுவன்றி அவனை சிவபக்தனாய்க் கொண்டு, வரங்கள் ஈந்தார் என்பது அறிவுக்கு முரணான செய்தியாம்.
மற்றொரு சாரார், திருஞானசம்பந்தர் தனது பதிகங்களின், எட்டாவது பாடல்கள் தோறும் இராவணன் பற்றி, பதிவு செய்திருப்பதால். இராவணனின் உயர்வு உணரப்படுகிறது என்பர். அவர்தம் கருத்தும் தவறானதாம்.
சம்பந்த நாயனார் தனது எட்டாவது பாடல்களில், இராவணன் பற்றிய செய்தியை அமைத்ததற்கான காரணத்தை, பெரிய புராணத்தைச் செய்த தெய்வச் சேக்கிழார்பெருமான், தனது நூலிலேயே பதிவு செய்திருக்கிறார்.
“மன்னுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமில்லா வல்லரக்கன் எடுத்து முறித்து இசைபாட
அண்ணல் அவர்க்(கு) அருள் புரிந்த ஆக்கப்பா (டு) அருள் செய்தார்.”
இஃதே சேக்கிழார் தம் கருத்துரைக்கும் பாடலாம். இராவணனை திருஞானசம்பந்தர், தனது எட்டாவது பாடல்களில் அமைத்துப்பாடியது, அவனது பெருமை நோக்கி அன்றாம். சிவபெருமான் பிழை செய்தவர்க்கும் அருள் செய்வான் என்பதை, உணர்த்துதற்கே என்கிறார் நம் சேக்கிழார். சேக்கிழாரைவிடவா நமக்குச் சைவம் தெரிந்துவிடப் போகிறது?
இராவணனை தமிழர்களின் மூதாதையன் எனவும், திராவிடன் எனவும், ஒரு சிறந்த ஒழுக்கசீலன் எனவும், மாறாத இனப்பற்றாளன் எனவும், சிறந்த சிவபக்தன் எனவும் எந்தச் சான்றோர்களேனும் உரைத்தனரோ? என்னின், அதற்காம் ஆதாரம் எங்கும் இல்லை என்பதே உண்மையாம்.
திராவிடர் கழகம் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்தில், உலகத்தார் கருத்தைத் தம்பக்கமாய் ஈர்க்க, அவர்களுக்கு ஏதேனும் ஒரு கருவி தேவைப்பட்டது. தமிழ்மக்களின் மனதில் சுலபமாக உட்புக, அவர்களின் மனதில் இலக்கியமாகவும் இதிகாசமாகவும், ஏலவே ஆழமாய்ப் பதிந்திருந்த இராமகாதையை, எதிர்ப்பதுவே சுலபவழி என நினைத்த அவர்கள் அது கருதி ஆரம்பத்தில் இராமாயணத்தை எதிர்க்கத் தலைப்பட்டனர்.
அவ் எதிர்ப்பும் காலப்போக்கில் நின்று பிடிக்கவில்லை. பின்னாளில் அக்கருத்தை வழிமொழிந்தவரான, அறிஞர் அண்ணா அவர்கள் கூட, “திருவாசகத்தையும் கம்பகாவியத்தையும் கற்காதவன், உண்மைத் தமிழன் ஆகான்” என்று உரைத்தார் என்பர். அதுமட்டுமல்லாமல் அக்கழகத்தைச் சார்ந்த தலைவர்கள் பலரும், பின்னாளில் கம்பன்கழகங்கள் நடாத்திய கம்பன் விழாக்களில், கலந்து கொள்ளவும் செய்தனராம்.
திராவிடர் கழகத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்த, புலவர் குழந்தை அவர்களால், “இராவணகாவியம்” என்ற ஒன்று பாடப்பட்டது. அக்காவியத்தில் அவர் இராவணனைப் புகழ்ந்துரைக்கிறார். அதனோடு இராமனின் செயல்களை இழித்துரைக்கவும் செய்கிறார்.
இப்புலவர் வேண்டுமென்றே எந்த மேற்கோள்களும் இன்றி, தன் காவியத்தில் இராவணனையும், அவனைச் சார்ந்தோரையும் நல்லவர்களாகவும், இராமனையும் அவனைச் சார்ந்தோரையும், தீயவர்களாகவும் காட்ட முயன்றார்.
இங்ஙனம் அறத்திற்கு மாறாக, அவர் துணிந்து காவியம் அமைத்தாலும்கூட, இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்ற செய்தியை, அவராலும் மறைக்க முடியவில்லை. அஃதொன்றே இராவணனை உயர்த்த நினைத்தவரின், மனதின் அடியிலும் அவன் பற்றிய கருமை பதிந்திருந்தமையை, நமக்கு உணர்த்துகிறது.
இவரைப் போலவே, திராவிடர் கழகங்களில் ஈடுபாடு கொண்டு, கம்பனை மறுத்து இராவணனை உயர்த்திப் பாடி நின்ற, கவிஞர் பாரதிதாசனார் அவர்களும், கம்பனின் பாடல்களில் பலவற்றை, இவை கம்பனின் பாடல்கள் அல்ல என, “ரசிகமணி” டி.கே.சி அவர்கள் ஒதுக்கியபோது, “கம்பனில் கை வைக்க இந்தக் கொம்பன் யார்?” என, கொதித்தெழுந்ததையும் நாம் நினைவு கூறல்வேண்டும்.
இவையெல்லாம் கம்பனும் இராமகாதையும், தமிழர்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டவை, என்பதற்காம் தகுந்த சான்றுகளாம்.
இராவணன் தீயவன் என்ற உண்மையை, நம் தமிழினத்தின் பெரும் புலவர்களின் வாக்குகளாலும், நாம் அறிந்து கொள்கிறோம்.
தீயவனாய் நாம் அறிந்து கொள்ளும் இந்த இராவணனை, நல்லவன் என்றும், அவனே கதாநாயகன் என்றும் உரைப்போர், அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி, தமது கருத்தை நிரூபித்தல் வேண்டும். அஃதன்றேல் அவர்தம் கருத்து, வெற்றுக்கூச்சல்களாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் தீயவனான இராவணன்தான், நம் தமிழினத்தின் பாட்டன் என்று உரைப்பது, எத்துனை தூரம் பொருத்தமானது என நாம் சிந்தித்தல் அவசியம். திராவிடன் அல்லாத, ஒழுக்கமில்லாத, அறம் பேணாத, தன் இச்சைக்காய் இனத்தைப் பலி கொடுக்கத் துணிந்த, ஆண்டவனையே அலட்சியம் செய்த ஒருவனை, நம் தமிழினத்தின் பாட்டன் என உரைப்போர், அதனால் தமிழினம் இழிவுபடுத்தப்படுவதை உணரவேண்டும்.