கம்பஅறம்-2
உலகம் இறைவனது படைப்பு என்பதை,
அனைத்துச் சமயங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்குமான ஓர் ஒழுங்கு நிலையை,
உலகப் படைப்பின்போதே இறைவன் அமைத்திருக்கிறான்.
அதனையே அவ்வப் பொருள்களுக்குரிய ஒழுக்கம் என்கின்றனர் நம் ஆன்றோர்.
இயற்கையாய் அமைந்த அவ் ஒழுக்கநிலையை,
கடைப்பிடிக்கையில் பொருள்கள் நிலைத்தலும்,
அவற்றை மீறிச் செயற்படுகையில் அப்பொருள்கள் அழிந்து போதலும்,
இயற்கையில் அமைந்த அதிசயங்கள்.
இவ் ஒழுக்கநிலையே அறம் என்று சொல்லப்படுகிறது.
எவ்வளவு பலசாலியாக இருந்தாலும்,
அறத்தை மீறுகிறவன் இறுதியில் அழிந்து போகிறான்.
எவ்வளவு பலயீனனாக இருந்தாலும்,
அறவழி நிற்பவன் நிறைவில் வெற்றி பெறுகிறான்.
இஃது வரலாறு கூறும் உண்மை.
அதற்கான காரணம் என்ன?
அறத்தை மீறுகிறவன் இயற்கையோடு முரண்படுவதால்,
ஒருவகையில் இறைவனோடு முரண்படுகிறான்.
அறத்தின்வழி நிற்பவன் இயற்கையை அங்கீகரித்து வாழ்வதால்,
இறைவனின் அங்கீகாரம் பெறுகிறான்.
இறைவனை விடப்பெரிய சக்தி எங்குள்ளது?
அச்சக்தியால் அங்கீகரிக்கப்படுபவன் வாழ்வதும்,
நிராகரிக்கப்படுபவன் அழிவதும்,
இயற்கை அமைப்பில் இருக்கும் ரகசியங்களாம்.
இந்த ரகசியத்தை, கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
தன் காவியத்தில் அற்புதமாய்ப் பதிவு செய்கிறார்.
தன்மேல் கொண்ட அசாத்தியமான நம்பிக்கையினால்,
முதல்நாள் போர்க்களத்திற்குச் செல்ல பலரும் இருக்கவும்,
இராவணன் அவர்களைத் தவிர்த்து தானே போருக்குச் செல்கிறான்.
வலிமை மிக்கவனாகிய இராவணன்,
அப்போரில் தன் வலிமையோடு மகுடமும் இழந்து நாணி நிற்கிறான்.
அவனது தோல்வி பற்றி, சொல்லவந்த கம்பர்,
அதனை இராவணனது தோல்வி என்று உரைக்காமல்,
அறத்தினைக் கடந்தவர்களது தோல்வி இது என,
உலகம் ஆர்த்தது என்கிறார்.
“அறம் கடந்தவர் செயல் இது என்று உலகெலாம் ஆர்ப்ப”
தோற்று நிற்கும் இராவணனைப் பார்த்து,
பேசத் தொடங்கும் இராமன்,
தான் பெற்ற வெற்றியைத் தனது வெற்றியாய் உரைக்காமல்,
அறத்தினது வெற்றி என்று உரைப்பதாய்,
மீண்டும் பதிவு செய்கிறார் கம்பர்.
தேவர்கலேயானாலும் போரில் வெற்றி பெறவேண்டுமானால்,
அறத்தினாலன்றி அஃது மறத்தினாலாகாது என்று,
இராமன் உரைப்பதாய்க்கூறி அறத்தின் வலிமையை,
இவ்விடத்தில் கம்பர் உறுதிபட நிலைநாட்டுகிறார்.
“அறத்தினாலன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி”
இக்காட்சியில் இராவணனின் தோல்வியை,
அறம் கடந்ததால் வந்த தோல்வி என்றும்,
வெற்றி எவர்க்கேனும் அறத்தினாலன்றி அமையாதென்றும்,
சொன்னதன் மூலம்,
அறமே வெற்றியின் ஆதாரம் என்னும்,
செய்தியைக் கம்பர் உறுதிப்படுத்துகிறார்.
ஒரு புலவன், தான் இயற்றும் காவியத்தின்,
ஊடு பொருளாய்ச் சொல்ல வரும் செய்தியை,
அக்காவியத்தின் ‘பாவிகம்’ என்றுரைப்பது வழக்கம்.
கம்பகாவியத்தின் ‘பாவிகம்’ யாது? எனும் கேள்வி எழும்.
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதே,
கம்பகாவியத்தின் பாவிகமாம்.
அதனையும் கம்பர் சுந்தரகாண்டத்தில் தெளிவுபடுத்துகிறார்.
அந்த இடத்தினையும் நாம் காண்போம்.
சீதையைத் தேடி கடல்கடந்து சென்ற அனுமன்,
தன் பெருவடிவைச் சுருக்கி,
குறுகிய வடிவொடு இலங்கையினுள் நுழைய முற்படுகிறான்.
அந்நகரின் மதிலின் மாண்பினையும்,
வாயிற்காவலின் சிறப்பினையும் கண்டு வியந்து நின்ற அவன்,
பின்னர் அம்மதிலைத் தாண்டி இலங்கையினுள் புக முனைகிறான்.
அப்போது அவனை ஒரு கை தடுக்கிறது.
தடுப்பது யார்? என நிமிர்ந்து பார்க்கிறான் அனுமன்.
எட்டுத்தோள்களும், நான்கு முகங்களும்,
ஏழுலகத்தையும் தொட்டுப் பெயர்க்கும் ஆற்றலும் கொண்டு,
சுழலும் கண்களோடு ஒருத்தி நிற்கிறாள்.
இலங்கைமாதேவி என்பது அவள் பெயர்.
அவள் கைகளிலோ பல்வகை ஆயுதங்கள்.
அவள்தான் இலங்கையின் காவல்தெய்வமாம்.
‘நில்லாய்! நில்லாய்!’ என்றபடி,
பாய்ந்து வந்த அவளைக் கண்டு, சற்றும் அஞ்சாது,
‘வருக!’ என அவளை வரவேற்கிறான் மாருதி.
“நில்லாய் ! நில்லாய்! என்று உரை நேரா, நினையாமுன்
வல்லே சென்றாள், மாருதி கண்டான், வருகென்றான்.”
தன்னைக் கண்டு அஞ்சாத அனுமனின் செயலால்,
மேலும் ஆத்திரமுற்ற இலங்கைமாதேவி,
“இவ் இலங்கையின் மதிலைத் தாண்ட நினைந்து,
என்னைப் பகைத்துக் கொள்ளாதே!,
இங்கிருந்து உடன் போய்விடு!” என்று,
அனுமனுக்கு உத்தரவிடுகிறாள்.
அவள் உத்தரவால் சிறிதும் அதிர்வடையாத அனுமனோ,
“இவ் ஊரின் அழகு காணும் ஆசையால் வந்தேன்.
நான் இலங்கையில் நுழைந்தால்,
உனக்கு என்ன கேடு வந்தது?” என்கிறான்.
அவன் பதிலைக் கேட்டு, இடியெனச் சிரித்த இலங்கைமாதேவி,
“போவெனச் சொன்னபின்பும் போகாது பதிலுரைத்து நிற்கின்றாயோ?
முப்புரங்களை எரித்த சிவபெருமான் போன்றோரும்,
இந்நகருள் புக அஞ்சுவர்.
உன் போன்றவர்கள் ஆசையால் பார்க்கும் ஊர் அல்ல இது”
என ஆத்திரத்தோடு சீறுகிறாள்.
அனுமனோ அப்போதும் அசையாது நின்று,
“இவ் ஊரினுள் நுழையாமல் போகமாட்டேன்” என்கிறான்.
என்னைக் கண்டால் இயமனே அஞ்சுவான்,
இவனோ விடமுண்ட சிவனைப்போல்,
அஞ்சாது சிரித்து நிற்கிறான் என நினைந்த இலங்கைமாதேவி,
பல அஸ்திரங்களை அனுமனை நோக்கிப் பிரயோகிக்கிறாள்.
அவள் விடுத்த தெய்வ அஸ்திரங்கள் பல,
அனுமனால் பலனற்றுப் போகின்றன.
கோபங் கொண்ட இலங்கைமாதேவி,
தனது கையால் அனுமனை ஓங்கி அடிக்க முனைகிறாள்.
அங்ஙனம் அவள் கையோங்கி அடிக்கவர,
ஓங்கிய அவளது கைகளை,
தனது ஒரு கையால் பற்றிப் பிடிக்கிறான் அனுமன்.
இராமதூதனாகிய அவன்,
பெண்ணாகிய இவளைக் கொல்லக்கூடாது என நினைந்து,
மறுகையால் ஓங்கி அவள் மார்பில் ஓர் அடி அடிக்க,
அவ் அடியின் வேகம் தாங்காமல் வீழ்கிறாள் இலங்கைமாதேவி.
விழுந்து எழுந்த இலங்கைமாதேவி,
அனுமன் முன் நின்று பேசத் தொடங்குகிறாள்.
“பிரம்மனின் சாபத்தினால் அவன் உத்தரவுப்படி,
இவ் இலங்கையை இதுவரை காத்து வந்தேன்.
எத்தனை காலம் இவ் இலங்கையை நான் காப்பது என்று,
பிரம்மனைக் கேட்டபோது,
வலிமைமிக்க ஒரு குரங்கினால் அடிவாங்கிச் சாய்கிற அன்று,
என்னை நீ வந்து காண்பாய்,
அன்றோடு இந்நகரத்து அழிவு தொடங்கும் என்றான் அவன்,”
என்கிறாள் இலங்கைமாதேவி.
முடிவுரையாய் அவள் மீண்டும் பேசத் தொடங்குகிறாள்.
“அனுமனே! அந்த பிரம்மன் சொன்னது நடந்துவிட்டது.
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற உண்மையை,
சொல்லவும் வேண்டுமோ?
நீ நினைந்ததெல்லாம் இனி நடக்கும்.
உன்னால் முடியாதது ஏதும் உண்டோ?
இவ் அழகிய நகருக்குள் இனி நீ புகுவாயாக!” என்று கூறி,
விடைகொடுக்கிறாள்.
அவள் கூற்றுப்படி இலங்கையினுள் அனுமன் கால்வைக்க,
அதன் அழிவு ஆரம்பமாகிறது.
‘அன்னதே முடிந்தது ஐய, அறம் வெல்லும், பாவம் தோற்கும்’
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும், உனக்கு முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி’ என்னாப் புகழ்ந்து அவள் இறைஞ்சிப் போனாள்.
காவியத்தின் பாவிகமான,
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ எனும் பேருண்மையை,
கம்பர் அற்புதமாய்ப் பதிவு செய்யும் இடம் இது.
பாவத்தின் குறியீடாய் இருந்த இலங்கையின் வாயிலில் வைத்து,
அவ் இலங்கையின் காவல் தெய்வத்தைக் கொண்டே,
இப்பேருண்மையை வெளிப்படுத்துகிறார் கம்பர்.
கம்பர் சொன்ன இராமகாவியத்தின் பாவிகம்,
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ எனக் கண்டோம்.
இதனையே மறுதலையாய் பாரதத்தின் பாவிகமாக்கி,
‘தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்,
மீண்டும் தர்மம் வெல்லும்’ என்கிறார் பாரதியார்.
இரு பெரும் இதிகாச காவியங்களும்,
அறத்தின் வெற்றியை உறுதி செய்வதை அறிந்து,
அறத்தின் வலிமையை உணர்வதோடு,
நாமும் அறவழி நடப்போமாக!