ஏற்றந்தானா?
கவிதை முற்றம் 12 Aug 2015
உண்பதற்கு விதம் விதமாய்ப் பண்டம் செய்து
உவப்புடனே அன்னையவள் எடுத்துவந்தாள்
கண்விழித்துப் படிக்கின்ற பிள்ளை தன்னைக்
கனிவுடனே தலைதடவி மைந்த! சற்று
என்னுடனே உரையாடி இனிய நல்ல
ஏற்றமிகு பலகாரம் எடுத்து ஊட்ட
திண்டதனை மகிழ்ந்திட்டால் அன்னை உள்ளம்
திகட்டாத மகிழ்வெய்தும் என்றே சொன்னாள்.
பிள்ளையவன் நூல் மூடி பின்னால் கைகள்
பிணைத்தேதான் சோம்பல் முறித்(து) அன்னை தன்னை
வெள்ளமென அன்பு நிறை கண்கள் தன்னால்
விழித்தவளின் மடிமீது தலையை சாய்த்து
தள்ளறிய பெரும் சுவைசேர் உணவுப்பண்டம்
தாய் தீத்த வாய்வழிய உண்டு தீர்த்தான்.
செல்லமதால் தாய் கேட்ட கேள்விக்கெல்லாம்
சிணுங்காது பதிலுரைத்தான் சிரித்துக் கொண்டே.
தம்பியொடு தங்கைகளும் தாவி வந்து
தமையனவன் முதுகேறி தள்ளிப்பார்க்க
நெம்பியவர் தமையேற்று நேராய் நின்று
நிமிர் ஆண்மை தனைக்காட்டி அண்ணன் நின்றான்.
தம்முடைய குழந்தைகளின் உறவு கண்டு
தாய் தந்தை மனம் மகிழ இல்லமெல்லாம்
உம்பருடை நாடெனவே மகிழ்ச்சி பொங்க
ஒருகாலம் இருந்த சுகம் இன்றோ இல்லை.
இன்று
உண்பதற்குப் பாண் வெட்டி 'சான்விச்" செய்து
ஒருபக்கம் 'ரி.வி"யில் மனமே வைத்து
அன்பதனைத் தொலைத்திட்ட அன்னைதானும்
ஆர்வமிலா மனத்தோடு அருகில் வந்து
கண் அசையா நிலையோடு கணனி தன்னில்
கையதனால் கதைக்கின்ற மகனைப் பார்த்து
என்ன இது செயலெனவே ஏசலுற்றாள்
எப்போதும் இதுதானோ வேலை என்றாள்?
காதுக்குள் கருவிகளைப் பொருத்திக்கொண்டு
கதைப்பதுவும் கேட்காமல் கவனம் சிந்தி
ஏதுக்கு இப்படித்தான் இருக்கின்றாயோ?
எப்போதும் என் பேச்சைக் கேட்பதில்லை.
வாதுக்கு அன்னை வர வளர்ந்த பிள்ளை
வாய் திறந்து பேசாமல் வளைந்து பார்த்தான்.
மோதுக்கு அப்பாவும் இல்லையென்றோ
முறைக்கின்றாய் என்னை என முனிந்து சொன்னான்
அப்போது அங்குற்ற தம்பி தங்கை
அண்ணா! என்றழைத்தேதான் உள்ளே வந்து
தப்பாது அண்ணனவன் தோளைச் சேர்ந்து
தாவியவன் முதுகேற தமையன் தானும்
தொப்பென்று அவர்தம்மைத் தள்ளி வீழ்த்தி
துளியளவும் அன்பின்றி சீறிப்பாய்ந்தான்.
வெப்பான மனத்தோடு அன்னைதானும்
விரைந்தாளே தொலைக்காட்சித் தொடரைக்காண.
முடிவுரை
உலகதனைக் கிராமம் என ஆக்கிவிட்டோம்
உரைக்கின்றார் பலர் இங்கு பெருமையாக
நலமதனால் விளைந்ததுவா? அதுதான் கேள்வி
நல்ல பல கருவிகளால் உலகை இங்கு
விலை கொடுத்து சுருக்கியதால் விளைந்தது என்ன?
வேறாகி மனிதரெலாம் தூரத்தூர
தளமதனில் பிரிந்தேதான் மனத்தினாலே
தரைகடல்வான் கடந்தின்று தள்ளிப்போனோம்.
கருவிகளை வளர்ச்சியெனக் கண்டு நாங்கள்
கனிவான அன்பதனை இழந்து விட்டோம்.
ஒருவரொடு ஒருவர் தமக்குறவுமில்லை
ஒன்றான வீட்டுக்குள் தனித்தீவானோம்.
மர்மமதே வாழ்வென்று வேறு வேறாய்
மனந்திறந்து பேசற்கும் நேரமின்றி
அருமையதாம் உறவிழந்து வாழுகின்றோம்.
அன்னியமாய் பிரிந்தின்று மாளுகின்றோம்.
ஒன்றாக இருந்தன்பாய் உணர்வு சிந்தி
ஒருநேர உணவு உண்ண எவர்க்கும் இங்கு
நன்றான பொழுதில்லை நரகவாழ்வை
நலமென்று வாழ்கின்றார் நாய்கள் போல
அன்றான இன்பங்கள் அனைத்தும் மாள
அணி அணியாய்ப் பிரிந்தில்லம் அகன்று போச்சு
இன்றான பெருமைமிகு வாழ்வு என்று
இதனைத்தான் சொல்கின்றோம் ஏற்றந்தானா?
*****