அரசியற்களம் 06 - "செத்தும் கொடுத்த சீதக்காதிகள் !"

அரசியற்களம் 06 - "செத்தும் கொடுத்த சீதக்காதிகள் !"
 
உயர்ந்தோர் பற்றிய பல கதைகள் தமிழில் உள்ளன.
அவற்றுள் சீதக்காதியின் கதையும் ஒன்று.
சீதக்காதி என்பவன் பெரும் கொடைவள்ளல்.
தன்னிடம் உதவிகோரி வந்தோர்க்கு,
இல்லை என்னாது அள்ளிக்கொடுப்பவன்.
ஒருநாள் அவன் இறந்து போனான்.
 

அவன் இறந்தது தெரியாத ஒருவன்,
அவனிடம் உதவி கோரிவந்தானாம்.
சீதக்காதி இறந்ததை அறிந்த அவன்,
அவனின் சமாதியில் போய் விழுந்து அழுதானாம்.
அப்போது அச்சமாதியினுள் இருந்து,
சீதக்காதியின் வைர மோதிரம் போட்ட கை வெளியில் நீண்டதாம்.
இதனைத்தான் செத்தும் கொடுத்த சீதக்காதியின் கதை என்பார்கள்.

***
ஈழத்தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி,
இலங்கை அரசியலிலும்,
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக,
தவிர்க்க முடியாத சக்தியாய் விளங்கியவர்கள்,
விடுதலைப்புலிகள் அமைப்பினர்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை முன்வைத்து,
ஆயுதப் போராட்டம் தொடங்கிய குழுவினர்களுள்,
தம் வலிமையாலும், கட்டுப்பாட்டாலும் முதன்மைபெற்று,
மற்றைய அமைப்புக்களை இல்லாதொழித்து,
போராட்டத்திற்கு உரிமைகோரும் தனி அமைப்பாய்,
புலிகள் அமைப்பு தன்;னை வளர்த்துக்கொண்டது.

***
ஈழப்பிரச்சினையில் தலையிட்ட பிறநாடுகள் எல்லாம் கூட,
பிற்காலத்தில் தமிழர் பிரச்சினை பற்றி,
இலங்கை அரசுக்குச் சமானமாய்,
புலிகள் அமைப்பையே ஏற்று,
பேசவும் செயற்படவும் தொடங்கின.

***
1994 இல் இலங்கை அரசாங்கம்,
வடக்கும் கிழக்கும் கூட,
தமது பாராளுமன்ற அரசியலுக்கு உட்பட்டு நிற்பதாய் உலகுக்குக் காட்ட,
மிகுந்த பாதுகாப்போடு தன் கட்டுப்பாட்டுக்குள் அமைந்த பிரதேசங்களில்,
ஒரு தேர்தலை நீண்ட காலத்தின் பின் நடத்தியது.
அப்போது புலிகள் அமைப்பை எதிர்த்து அரசுடன் இணைந்து செயற்பட்;ட,
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி குழுவினர்,
அரச ஆதரவோடு யாழ் மாவட்டத்தல் இத் தேர்தலில் குதித்தனர்.

***
இத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சியினர்,
யாழ் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று,
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி பெற்றனர்.
அக்காலத்தில் தேர்தல் நடந்த முறைபற்றி,
பல விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் அத்தேர்தல் மூலம் ஜனநாயகத்தினுள் நுழைந்து,
ஈ.பி.டி.பி. தன்னைப் பதிவு செய்து கொண்டது.

***

இங்குதான் புலிகள் அமைப்பினர்க்கு பிரச்சினை ஆரம்பமானது.
புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்ட பல நாடுகள் கூட,
உலகளாவி ஜனநாயக முகம் காட்ட விரும்பி,
பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த,
ஈ.பி.டி.பி. கட்சியினரை, தமிழர் பிரதிநிதிகளாய் ஓரளவு அங்கீகரிக்க முனைந்தன.
அதுமட்டுமன்றி 2001ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக்கோபுர தாக்குதலோடு
தீவிரவாதத்தை உலகளாவி அமெரிக்கா எதிர்க்கத் தலைப்பட,
உள்ளூரிலும் உலகளாவியும் தமக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக
ஈ.பி.டி.பி. கட்சியினரின் ஜனநாயக முகத்திற்கு மாற்றாக
தமக்கும் ஒரு ஜனநாயக முகம் தேவையென்பதை 
புலிகள் உணரத்தொடங்கினர்.

***
எனினும் ஜனநாயக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாத புலிகள்,
மாற்று முகத்தோடு ஜனநாயகப் பாதையிலும் குதிக்க முடிவு செய்து,
தமது ‘பினாமிகளாக’ ஒரு குழுவினை,
பாராளுமன்றத்திற்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
அங்ஙனம் தாம் அனுப்பும் குழு,
முழுக்க முழுக்க, தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றும்,
சுயம் ஏதும் இல்லாமல் தம் கருத்தை மட்டுமே,
பாராளுமன்றில் அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கருதிய புலிகள்,
அத்தகைய ஒரு குழுவினைத் தேர்ந்தெடுத்தனர்.

***
70 களில் தமிழர் பிரச்சினைக்குத் தனி ஈழமே தீர்வு எனச் சொல்லி,
பிரிந்து கிடந்த தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ் போன்ற கட்சிகள்,
ஓரணியாகி தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் பெயரிலான கட்சியாகி,
தனி ஈழ முழக்கங்களைக் கிளப்பி அப்போதைய தேர்தலில் பெரு வெற்றியடைந்தன.
வெற்றியின் பின்னர் தமது கொள்கையினின்றும் வழுவி,
அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்று,
அவர்கள் தமக்கு வழங்கிய தனிப்பட்ட வசதிகளையும் பெற்றுக்கொண்டு,
கூட்டணியினர் தம் நோக்கத்தினின்றும் பின்வாங்கத் தொடங்கினர்.

***
இந்தச் சூழ்நிலையில்தான்,
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா,
தென்கிழக்காசியாவில் புவியியல் முக்கியத்துவம் பெறும் இலங்கையை,
அமெரிக்கச் சார்புபடுத்தி இந்தியாவிற்கு எதிராக செயற்பட முனைய,
அந்நேரத்தில் எழுந்த 83 இனக்கலவரத்தை அடிப்படையாய் வைத்து,
அப்போதைய இந்தியப் பிரதமர்,
கூட்டணியினரால் தீவிரவாதப் போக்கில் கிளப்பிவிடப்பட்டு,
பின்னர் அவர்கள் போக்கால் விரக்தியுற்றிருந்த  இளைஞர்களை,
இந்தியாவிற்கு அழைப்பித்து, பயிற்சியும், ஆயுதங்களும் அளித்து,
ஆயுதக்குழுக்களாய் இலங்கையினுள் நுழைவித்தார்.

***
தமக்கெதிராய் ஜனநாயக முகம் காட்டும் தமிழர் கூட்டணியின் நிலைத்தல்,
தமது அரசியல் போக்கிற்கு இடைஞ்சலாகும் என ஆயதக் குழுக்கள் கருதத் தொடங்கின.
அதனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வலிய தலைவராய் விளங்கிய அமிர்தலிங்கத்தையும்,
அவரோடு உடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனையும்,
இனந்தெரியாத சிலர் சுட்டுக்கொன்றனர்.
அது போலவே தமிழர் கூட்டணி அமைப்பின் தலைவர்களான,
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், தங்கத்துரை போன்ற தலைவர்களும்,
பின்னர் இனந்தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தமிழ்த் தீவிரவாதக் குழுக்களைச் சார்ந்தோரே,
அக்கொலைகளைச் செய்ததாய் அப்போது உறுதிபடப் பேசப்பட்டது.
நடந்த தலைவர்களின் கொலைகள் கண்டு அஞ்சி,
எஞ்சியிருந்த கூட்டணித் தலைவர்கள்,
தம் கட்சியோடு தாமும் உறைநிலைக்குச் சென்றனர்.
அதன் பின்னர் இந்தியா எதிர்பார்;த்தபடியே,
இங்குவந்த ஆயுதக்குழுக்கள்  ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள,
இறுதியில் பலத்தோடு உறுதி கொண்ட குழுவாய், புலிகள் அமைப்பு நிலைபெற்றது.

***

இங்ஙனமாய், கொலைகளுக்கு அஞ்சி சுயமிழந்து மௌனித்துப் போய்,
யாழ் மாவட்டத்தைவிட்டு வெளியேறியிருந்த,
கூட்டணித் தலைவர்களே தமது 'பினாமிகளாய்;',
பாராளுமன்றம் செல்லத் தகுதியானவர்கள் என முடிவு செய்த புலிகள்,
அத்தேவைக்காய் அவர்களை அணுகினர்.
எப்போதும் பதவி நோக்கிய விருப்புடைய கூட்டணித்தலைவர்கள்,
யாருக்கு அஞ்சி ஒடுங்கியிருந்தார்களோ,
அவர்களிடமிருந்தே அழைப்புவர ஆனந்தித்துப் போய்,
ஆரவாரமாய்த் தேர்தலில் குதிக்கச் சம்மதித்தனர்.

***

கூட்டணிக்குள் இணைந்திருந்த தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் கட்சி ஆகியவையும்,
ஆனந்தசங்கரி தலைமை வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கட்சியும்,
அக்காலத்தில் புலிகளிடம் தோற்று ஒடுங்கிப் போய் எஞ்சியிருந்த,
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்களும்,
புலிகளின் அழைப்பை ஏற்று,
ஜனநாயக ஆட்சிக்கு முகம் கொடுக்க ஆர்வத்தோடு முன்வர,
புலிகளின் ஆசியோடு இவ் அமைப்புக்கள்,
2001 தேர்தலில் ஒன்றிணைக்கப்பட்டு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உருவாக்கப்பட்டது.

***

பின்னர் நடந்த தேர்தல்களில்,
புலிகளால் நிறுத்தப்பட்டவர்கள் எனும் தகுதியால்,
தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று,
பாராளுமன்றப் பதவிகளை இக்கூட்டமைப்பு கைப்பற்றத் தொடங்கியது.
புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பின்னர்,
கூட்டமைப்பின் செயற்பாடுகளையெல்லாம் புலிகளே தீர்மானித்தனர்.
பின்னர் நடந்த தேர்தல்களில்,
கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்பட்ட,
முகம் தெரியாத வேட்பாளர்களெல்லாம்,
புலிகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டமைப்புக்குள் இணைந்த அணிகள் எல்லாம்,
புலிகளின் பலத்திற்கு அஞ்சியும் தமது பாதுகாப்புக் கருதியும்,
வெறுந் தலையாட்டி பொம்மைகளாகவே அக்காலத்தில் இயங்கினர்.

***

தம்மால் ஆதரிக்கப்பட்டாலும் இக் கூட்டமைப்பு,
அதிகம் தலையெடுத்துவிடக் கூடாது எனும் விடயத்தில்,
புலிகள் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தனர்.
கூட்டமைப்பு முகம் கொடுத்த முதல் தேர்தலில்,
இவ் அமைப்பின் சார்பாக வெற்றி பெற்று,
பாராளுமன்றம் சென்ற அத்தனை பேரும்,
புலிகளின் ஆசி பெறவென தனி வாகனத்தில் வன்னி சென்றபோது,
சந்திக்க நேரமில்லை என புலிகளின் அரசியல் பொறுப்பாளர்,
தமிழ்ச்செல்வனால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இக் குழுவினர் தமக்கு நேர்ந்த அவமரியாதையினைப் பெரிதுபடுத்தாமல் திரும்பி வந்து,
பின்னர் வேறொருநாளில் அவர்களைச் சென்று சந்தித்தனர்.
தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையினர் போல்,
அப்போது அடங்கிப் போவதைத் தவிர,
கூட்டமைப்பினருக்கு வேறு வழியிருக்கவில்லை.

***

இவை நடந்து முடிந்த கதைகள்.
திடீரென 2009 மே 19 இல் புலிகள் அமைப்பு முற்றாய் அழிக்கப்பட,
கூட்டமைப்பினரின் பொற்காலம் தொடங்கியது.
அப்போது இவர்களை எதிர்த்து நின்ற,
ஈ.பி.டி.பி. கட்சியினரின் மேல்,
அரசோடு இணைந்தவர்கள் எனும் பழி பொருந்தியிருந்ததால்;,
புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தாமே என உரைத்து,
தமிழ்த் தலைமை மகுடத்தை,
தமக்குத் தாமே அவர்கள் சூட்டிக் கொண்டனர்.
தமிழரின் வீரியம் வெளிப்படப் போராடி அழிந்துபோன,
புலிகள்பால் கொண்ட ஈர்ப்பால்,
தமிழ் மக்கள்,
புலிகளின் ஆசிபெற்றவர்கள் இவர்களே எனும் கருத்துக்கு எடுபட்டு,
கூட்டமைப்பை முழுமையாய் ஆதரிக்கத் தொடங்கினர்.
அவ் ஆதரவினால் தொடர்வதுதான் இன்றைய கூட்டமைப்பினரின் வாழ்வு.

***
இக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன,
சீதக்காதி கதைக்கும் இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? என்று,
கேள்வி பிறக்கும்.
இனித்தான் அக்கேள்விக்கான பதிலை உரைக்கப்போகிறேன்.

***

சரியோ, பிழையோ போராட்டக் காலத்தைத் தம்வயப்படுத்தி,
கடைசிவரை தமிழினப் பிரிதிநிதிகளாய்,
தம்மை இனம் காட்டிய புலிகள் அமைப்பினர்,
போரின் முடிவில் அழிந்த பிறகும்,
இன்றுள்ள தமிழினத் தலைமைகள் மட்டுமன்றி
இலங்கையின் அனைத்துக்கட்சியினரும் நின்று நிலைக்க ஏதோ வகையில்,
செத்தும் கொடுத்த சீதக்காதியைப் போல,
துணைசெய்து நிற்கின்றனர் என்பதைச் சொல்லத்தான்,
இக்கட்டுரையின் தொடக்கத்தில் அக்கதையைச் சொன்னேன்.

***

இன்று ஜனநாயக ஆட்சி தமிழர் பிரதேசங்களில் புகுத்தப்பட்டபின்னர்,
தமிழர் தலைமையாய்த் தம்மை இனங்காட்டி நிற்போரை,
பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்குள் அமைந்த,
தமிழரசுக் கட்சி,
ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு,
ரெலோ அமைப்பு,
பின்னால்இணைத்துக் கொள்ளப்பட்ட புளொட் அமைப்பு என்பனவும்,
புலிகளின் எதிரிகளாய் தம்மை இனங்காட்டி,
ஆரம்பத்திலிருந்து தனித்துவம் பேணி நின்ற ஈ.பி.டி.பி. அமைப்பும்,
கூட்டமைப்பில் இணைந்திருந்து பின்னர் பிரிந்த,
தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பும்,
தமிழ் காங்கிரஸ் அமைப்பும்,
புதிதாய்த் தோன்றியிருக்கும் புதிய போராளிகளின் கட்சி என்பனவுமாய்,
தமிழர் மண்ணில் தலைகாட்டி நிற்கும் ஜனநாயகக் கட்சிகள் பலவாகும்.
இவையெல்லாமே ஏதோ வகையில்,
புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடாத்த நினைப்பதுதான் ஆச்சரியமான விடயம்.
அதனாற்றான் புலிகள் அமைப்பினரை,
செத்தும் கொடுத்த சீதக்காதிகள் என்கிறேன்.

***

இக் கட்சிகளுள் முக்கியமாக,
தமிழ்க் கூட்டமைப்பைச் சொல்லவேண்டும்.
அக்காலத்தில் பட்டத்து யானையால் தூக்கி முதுகில் வைக்கப்பட்டு,
அரசரானவர்கள் போல்
புலிகளால் இனங்காட்டப்பட்டுத் தலைமை கொண்டவர்கள் இவ் அமைப்பினர்.
இக் கூட்டமைப்புக்குள் ஒன்றுக்கொன்று பொருந்தாத,
வேறு வேறு முகம் கொண்ட பல கட்சியினர்,
பதவி நோக்கி ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
அதனால் இவர்களுக்கிடையிலான,
முரண்பாடுகள் நாளுக்கு நாள் விரிந்தபடி செல்கின்றன.
ஏற்கனவே இவ் அமைப்புக்குள் இருந்து,
பின்னர் வெளியேறி நிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்,
தமிழ் காங்கிரஸ் கட்சியும் தனித்து இயங்கி நிற்கும் நிலையில்,
இன்று கூட்டமைப்புக்குள் வேறு பல விரிசல்களும் உண்டாகத் தொடங்கியிருக்கின்றன.

***

கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்று,
அக்கட்சிக்குள் இருக்கும் பழைய போராளிக்குழுவினர் போராட,
தமிழரசுக் கட்சியினர்,
பதவிப் போட்டியில் தமது வாய்ப்புக் குன்றும் என்ற காரணத்தினால்,
அவர்கள் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர்.
அறிஞர் என்ற காரணத்தால்,
வடமாகாணசபைக்கு முதலமைச்சராய் வலிந்திழுத்து வரப்பட்ட,
தமிழர் உரிமைப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் செய்யாத,
சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்,
முன்னாள் தீவிரவாதக் குழுக்களோடு சேர்ந்து இயங்கமுடியாது என்று,
பதவி பெற்றபின் வெளிப்படையாய் அவர்களோடு முரண்பட்டார்.
அரச நிதி உதவி, வெளிநாட்டுப் பேச்சுவார்த்தை, ஐ.நா விசாரணை அறிக்கை என ,
பல விடயங்களிலும் இவர்களுக்குள் உலகறிய இன்று முரண்பாடுகள் வெடித்துள்ளன.

***

முன்பு புலிகளோடு முற்று முழுதாக முரண்பட்ட,
கூட்டமைப்புக்குள் பொருந்தி நிற்கும் கட்சிகளின் தலைவர்கள்,
தம்மைப் புலிகளின் பிரதிநிதிகளாய் இனங்காட்டி,
அரசியல் செய்ய முனைவதுதான் இதில் ஆச்சரியமான விடயம்.
கூட்டமைப்புக்குள் பொருந்தி நிற்கும் கட்சித்தலைவர்கள்,
புலிகளின் பிரதிநிதிகளாயும் தம்மைக் காட்டிக்கொண்டு,
புலிகளால் சுடப்பட்டதாய்க் கருதப்படும்,
தம் கட்சித்தலைவர்களின் நினைவு நாட்களையும் கொண்டாடிக்கொண்டு,
இரண்டு வேடமிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஒன்று சுடப்பட்ட தம் கட்சித்தலைவர்கள் குற்றவாளிகள் என ஏற்கவேண்டும்.
அல்லது தம் கட்சித்தலைவர்களை சுட்டதாய்க் கருதப்படும் புலிகள்,
குற்றவாளிகள் என உரைக்கவேண்டும்.
இவர்களோ இரண்டையும் அங்கீகரித்து நிற்கிறார்கள்.
பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்குமீன் விளையாட்டுத்தான் இது.
இப்பொய்மையை அங்கீகரிக்க பொதுமக்கள் தயாராயிருக்கையில் அவர்களுக்கென்ன கவலை?

***

புலிகளின் எதிரிகள் என்ற அடையாளமே,
ஜனநாயக அரசியலில் ஈ.பி.டி.பியின் அடையாளம்.
புலிகளால் பாதிக்கப்பட்டவரை தம்வயப்படுத்தியே,
ஈ.பி.டி.பி. தம் அரசியல் வாழ்வை ஆரம்பத்தில் நகர்த்தியது.
இன்றுவரை நாம் காட்டியது உண்மை முகம்.
கூட்டமைப்பே பொய்முகம் காட்டி தமிழ்மக்களை ஏமாற்றி வருகிறது எனச்சொல்லி,
ஈ.பி.டி.பி. தமிழ்மக்களை ஈர்க்க முனைகிறது.
அதுமட்டுமன்றி இம்முறை தேர்தலில் நிற்கும்,
ஈ.பி.டி.பி. யின் வேட்பாளர் ஒருவர் சற்று மேலே போய்,
புலிகளுக்கு உங்களால் முத்திரை வெளியிட முடியுமா?
எனக் கேள்வி கேட்டு கூட்டமைப்பினர்க்கு சவால் விட்டிருக்கிறார்
இங்ஙனமாய்  ஏதோ வகையில் புலிகளோடு தொடர்புபட்டே
வெல்லவேண்டும் எனும் நிலைக்கு,
ஈ.பி.டி.பி. கட்சியும் தள்ளப்பட்டிருக்கிறது.

***

அதுபோலவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியும்,
கூட்டமைப்புக்கு எதிராக ஓரளவு செல்வாக்குப் பெற்று,
கூட்டமைப்பு வழிமாறிவிட்டதென்று குற்றம் சாட்டி,
போராளிகளின் தியாகத்தை மதித்து நாம் செயற்படுவோம் என உரைத்து,
ஏதோ வகையில் புலிப்புகழ் பாடியே தமது வெற்றி நோக்கி விரைகின்றனர்.

***

பத்திரிகையாளர்  வித்தியாதரனால் புதிதாய் அமைக்கப்பட்டிருக்கும்,
புதிய போராளிகளின் கட்சியும்,
உயிர்த்தியாகம் செய்த புலிப்போராளிகளின் பெயர் சொல்லி,
உயிரோடிருக்கும் போராளிகளின் மறுவாழ்வைக் காரணங்காட்டியே,
தேர்தலுக்கு முகம் கொடுக்க முன்வந்திருக்கிறது.

***

இவை தவிர,
புலிகளைக் கொன்றொழித்தோம் என சுதந்திரக்கட்சியினரும்,
புலிகளைப் பிரித்து அவர்கள் அழிவிற்கு வழிசெய்தோம் என,
ஐ.தே.கட்சியினரும் ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும்,
புலிகளை வைத்தே தம் வாக்குகளைப் பெருக்குகின்றனர்.
இலங்கை பூராகவும் உள்ள,
பெரும்பான்மை இன சிறு சிறு கட்சிகள் கூட,
ஏதோ வகையில் புலிகளின் பெயர் சொல்லியே,
தம் நிலைத்தலை உறுதிசெய்கின்றனர்.
புரட்சியாளர்கள் எனத் தம்மைச் சொல்லிக்கொண்ட,
கொமியூனிஸ்டுகளும் கூட இதற்கு விலக்காகவில்லை.
மொத்தத்தில் இலங்கையில் அனைத்து கட்சிகளுக்கும்,
வெற்றி வாய்ப்பை வழங்கும் வீரியம் உள்ளவர்களாய் ,
செத்தும் கொடுக்கும் சீதக்காதிகளாய்,
இன்றும் புலிகள் இருப்பதுதான் ஆச்சரியம்.

******
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.