கட்டுரை

கட்டுரை

உளம் பதிந்துவிட்ட ஒருவரின் செயல்களை,

தாமும் செய்ய நினைப்பது உலகத்தார் இயல்பு.

சிவனடியார்கள் சிவவேடம் பூணுவதும்,

நல்ல மாணாக்கர்கள் தம் உளம் கவர்ந்த ஆசிரியர்களைப் போல,

தம் இயல்பை மாற்றிக் கொள்வதும்,

திருவிழாக்களில் தமை ஈர்த்த,

நாதஸ்வரக் கச்சேரியைக் கண்ட குழந்தைகள்,

மறுநாள் வீட்டில் பூவரசங்குழல் கொண்டு நாதஸ்வரம் வாசிப்பதும்,

சினிமா ரசிகர்கள் தம்மனம் பதிந்த நடிகர்களைப் போல,

தாமும் பாவனைகள் செய்வதும்.

மேற்சொன்ன உண்மைக்காம் சான்றுகள்.



இந்த உலகியல்பு,

நம் கவிச்சக்கரவர்த்தி கம்பரையும் பாதித்தது என்கிறார் ஒரு புலவர்.

அவர் கருத்தின்படி, கம்பர்தம் உள்ளத்தைக் கவர்ந்தவர் யார்?

அவரின் எந்தச் செயல் கம்பரின் மனதில் பதிந்தது?

அவரைப் போல் கம்பன் செய்த பாவனை என்ன?

மேற்படி வினாக்களுக்கு அப்புலவர் பதில் தருகிறார்.



கம்பர்தம் உள்ளத்தைக் கவர்ந்தவர் எவர்?

இம் முதல் வினாவிற்கு விடைகாணப் புகுந்த அப்புலவர்,

திருமாலே அவராம் என அறிந்து கொள்கிறார்.

திருமால் தன் உள்ளத்தைக் கவர்ந்ததாலன்றோ,

அவரது அவதாரமாகிய இராமனை,

கம்பன் தன் காவியத்திற்குத் தலைவனாக்கினான்,

எனும் உண்மை நினைவில் வர,

முதல் வினாவிற்கு விடைகண்டு திருப்தியுறுகிறது,

அப் புலவர்தம் மனம்.



அடுத்து,

திருமாலின் எந்தச் செயல் கம்பர் மனதில் ஆழப்பதிந்திருக்கும்?

ஆராயப் புகுகிறார் அப்புலவர்.

உலகத்தாரைக் காக்கவென, அவதாரங்கள் செய்தவர் திருமால்.

இராமனாய் வந்தும் அவர் அக்காரியத்தையே நிறைவேற்றினார்.

எனவே உலகைக் காக்க திருமால் செய்த ஏதோ ஒரு செயலே,

கம்பர் மனதில் ஆழப்பதிந்திருக்கும் என உணர்கிறார் அப்புலவர்.

அச்செயல் எதுவாயிருக்கும்? என மீண்டும் கேள்வி பிறக்க,

அப்புலவரின் மனம் ஆராய்ச்சியைத் தொடர்கிறது.



தேவர்களைக் காத்த,

திருமாலின் ஏதோ ஒரு அருட்செயலே,

கம்பர் மனதில் ஆழப்பதிந்திருக்கும் என,

முடிவு செய்கிறார் அப்புலவர்.



சாகா நிலைபெற விரும்பிய தேவர்களும் அசுரர்களும்,

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க முயன்றனர்.

அதற்காக “மந்தார” மலையை மத்தாகவும்,

“வாசுகி” என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு,

அக்கடலை அவர்கள் கடைய முனைந்தார்கள்.



பாற்கடலுள் வைக்கப்பட்ட மந்தார மலை தாழத் தொடங்கிற்று.

மலை தரையைத் தொட்டால் அது அசைவற்றுப் போகும்.

அதனால் பாற்கடலைக் கடையும் முயற்சி,

இயலாமற் போகுமே எனத் தேவர்கள் அஞ்சினர்.



காக்கும் கடவுளாகிய திருமாலிடம் அவர்கள் சரண்புக,

அவர்களுக்கு இரங்கிய பெருங்கருணையாளராகிய திருமால்,

ஆமை வடிவு கொண்டு பாற்கடலுள் புகுந்து,

அம்மந்தார மலை தரை தொடாமல்,

அதனைத் தாங்கி நின்றனர்.



திருமாலின் இக்கருணையினால்,

தேவாசுரர்களால் பாற்கடல் கடையப்பட,

அமிர்தம் வெளிப்பட்டது.

திருமால் துணை புரிய,

தேவர்கள் அமிர்தத்தைத் தமக்காக்கி உண்டார்கள்.



உலக நன்மை நோக்கி,

பாவிகளான அரக்கரிடம் அமிர்தம் சேராமல்,

தேவர்களிடம் அதனைச் சேர்ப்பித்த,

திருமாலது இச்செயல்,

கம்பர் மனதைக் கவர்ந்திருக்கும் என நினைந்து

அப்புலவர் தன் பாடலைத் தொடங்குகிறார்.

“அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த

தம்பிரான் என்ன.....”



பாற்கடலைக் கடைவித்து,

வானுலகத் தேவர்களுக்கு,

அமிர்தம் கொடுத்த திருமாலின் செயல்போல,

தானும் ஓர் பாற்கடலைக் கடைந்து,

இப்பூவுலக மானுடர்களுக்கு அமிர்தம் வழங்க விரும்பி,

முயற்சி செய்தான் கம்பன் என்கிறார் அப்புலவர்.



இச்சம்பவத்தில் உலகைக் காக்கவென,

திருமால் செய்த முதல் வேலை யாது?

நீருக்குள்ளே மலையை இடை நிறுத்தி அதை அசைவித்து,

பாற்கடலைக் கடையச் செய்ததே அவ்வேலையாம்.



கடையப்பட்டது பாற்கடல்.

அது உவர்ப்புக்கடல் அன்று சுவைக்கடலாம்!

அக்கடல் இறையாம் திருமாலைத் தாங்கி நிற்பது.

கடையக் கடைய அமிர்தத்தை மட்டுமன்றி,

இலட்சுமி, சந்திரன், ஐராவதம், கற்பகதரு, காமதேனு போன்ற,

அரும்பொருட்களையெல்லாம் அள்ளிக் கொடுத்த கடல் அது.

இத்தனையும் நினைவில் வர,

கம்பரின் செயலோடு அச்செயல்களை ஒப்பிட முயல்கிறார் அப்புலவர்.



நம் தமிழும் ஓர் பாற்கடலாம்.

அத் தமிழ்க் கடலும் உவர்ப்பின்றி சுவைப்பது.

தன் படைப்புக்களால் இறையவரைத் தாங்கி நிற்பது.

விரிந்த காவியங்களால் அளக்க முடியாத அகலம் கொண்டது.

ஆழ்ந்த கருத்துக்களால் எல்லையற்ற ஆழம் கொண்டது.

அறிவினால் கடையக் கடைய அற்புதப் பயன்களை அள்ளித்தருவது.

நிறைவில் சாகா நிலையாகிய முக்தி இன்பத்தையும் ஈயவல்லது.

இவ் ஒப்புமைகள் கொண்டு நோக்க,

அப்புலவர்தம் நினைவில் தமிழே பாற்கடலாயிற்றாம்.



இனி, அப்பாற்கடலைக் கடைவதற்கான,

மந்தார மலையைப் பற்றிச் சிந்திக்கிறார் அப்புலவர்.

மந்தார மலை அசையாத உறுதி கொண்டது.

மந்தார மலை காண்போரை மலைக்கச் செய்வது,

மந்தார மலை, மற்றைய மலைகள் போல் அல்லாமல்,

அசைந்து கொடுத்து அமிர்தம் விளைவித்தது.

மந்தார மலை பாற்கடல் ஈரத்துள் இடைநின்று ஏற்றந் தந்தது.

மேற்சொன்ன மந்தார மலையின் இயல்புகளையும்,

கம்பரது நாவின் இயல்புகளையும்,

ஒப்புவித்துப் பார்க்க முனைகிறார் அப்புலவர்.



கம்பரது நாவும் அசையாத சொல்லுறுதி கொண்டது.

கம்பரது நாவன்மையும் கேட்போரை மலைக்கச் செய்வது.

கம்பரது நாவும் அசைந்து, அசைந்து,

கம்பகாவியம் எனும் அமிர்தத்தைத் தந்தது.

கம்பரது நாவும் உமிழ்நீராகிய ஈரத்துள் அமைந்து ஏற்றந் தந்தது.

இந்த உவமைகளை நோக்க,

கம்பர் நாவுக்கும், மந்தார மலைக்குமான,

பொருத்தப்பாட்டை உணருகிறார் அப்புலவர்.



மந்தார மலையால் பாற்கடலைக் கடைந்து,

பலராலும் விரும்பப்படும் சாகா மருந்தாகிய,

அமிர்தத்தை ஈந்தான் எம் பெருமான்.

கம்பரும் தன் “நா” என்னும் மலையை அசைவித்து,

தமிழ் என்னும் பாற்கடலைக் கடைந்து,

பலராலும் விரும்பப்படும் “இராமகாதை” எனும்,

“வீடியல் வழி” யதாக்கும் அமிர்தத்தை ஈந்தான்.



இந்த ஒப்புமைகளை நோக்க கவிச்சக்கரவர்த்தி கம்பர்,

திருமால்மேல் தான் கொண்ட ஈர்ப்பினால்,

அவரைப் போலவே தானும் பிரதி பண்ணி,

கம்பகாவியத்தை உலகிற்கு நல்கினார் என்று,

தன் பாடலை முடிக்கிறார் அப்புலவர்.



 

“அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த

தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டி

கம்பநாடுடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல்

நம்பு பாமாலையாலே நரருக்கு ஈன்றமுதம் ஈந்தான்.”

(தால்-நாக்கு, நம்பு-விரும்பு, நரர்-மனிதர்)



தேவர்கள்மேல் கொண்ட கருணையினால்,

அவர்க்கு அமுதம் ஈந்த இறையாகிய திருமாலைப் போல,

உலகத்தார் மேல் கொண்ட கருணையினால்,

மானுடர்க்கு இராமகாதை என்னும் அமுதத்தை ஈந்தான் கம்பன்.

தெய்வச்சாதனையை மானுடர் செய்வது இலேசான வேலையா என்ன?

அதுநோக்கியே கம்பரை அப்புலவர்,

கம்பநாடுடைய வள்ளல் என்று குறிப்பிடுகிறார்.



அதுமட்டுமன்றி,

இராமகாதையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கம்பர், அதனை “நம்பு பாமாலை” என்கிறார்.

இத்தொடரில் வரும் “நம்பு” என்ற சொல்லுக்கு,

விரும்பப்படுகிற என்பது பொருளாம்.

இத்தொடரில் கூட அப்புலவர் பதித்திருக்கும்,

அற்புதமான ஒரு நயம் உண்டு.



தமிழில் வினைத்தொகை என்று ஓர் இலக்கணம் உண்டு.

முக்காலத்தையும் உள்ளடக்கி உரைக்கும் ஒரு வினைச்சொல்லை,

வினைத்தொகை என்று உரைப்பர் இலக்கண ஆசிரியர்கள்.



ஊறுகாய், சுடுகாடு என்பன இவ் இலக்கணத்திற்காம் உதாரணங்கள்.

ஊறியகாய், ஊறுகிறகாய், ஊறும்காய் என்றும்,

சுட்டகாடு, சுடுகிறகாடு, சுடும்காடு என்றும்,

இச்சொற்கள் முக்காலத்தையும் உள்ளடக்கி நிற்குமாம்.



இப்பாடலின் இறுதி அடியிலும் அப்புலவர் பெருமான்,

கம்பகாவியத்தை “நம்பு பாமாலை” என,

வினைத்தொகை இலக்கணத்தால் சுட்டுகிறார்.

அது கொண்டு நோக்க,

கம்பரால் செய்யப்பட்ட இராமகாதை,

மக்களால் முன்பும் விருப்பப்பட்டது,

இப்போதும் விரும்பப்படுகிறது,

இனியும் விரும்பப்படும் எனும் உண்மையை,

அப்புலவர் எடுத்துக்காட்ட நாம் அறிந்து கொள்கிறோம்.

என்றும் சுவைக்கப்போகும் இக்காவியத்தை,

கற்கக் கிடைத்தது நம் பாக்கியமாம்.



 

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.