இலக்கியம்

இலக்கியம்

உலகம் இறைவனது படைப்பு. அதனால்த்தான் இயற்கை இறைவடிவாய் நின்று உலகில் பல விடயங்களைச் சாதிக்கிறது. சத்தியத்தின் சார்புபட்டார்க்கு அது துணை நிற்கும். பாவத்தின் பாற்பட்டார்க்கு அது வினை விளைக்கும். சடமான இயற்கைக்கு இத்தகு சக்தி இருத்தல் சாத்தியமா? இவ் வினாவுக்கு சாத்தியமாம் என்பதே பதிலாம்.

    

சடமான ஒரு வாகனம் செலுத்துபவனால் நெறி செய்யப்படுமாப் போல சடமான இவ் இயற்கையும் பேரறிவினனான இறைவனால் நெறிசெய்யப்படுவதால் அது நல்லார்க்குத் துணையாயும் அல்லார்க்கு வினையாயும் இருப்பது சாத்தியமேயாம். தீயாரை அழிவு நோக்கி நகர்த்துதல் போலவே நல்லாரைப்;; பிழை செய்யாவண்ணம் அவ் இயற்கை காக்கிறது. இவ் உண்மையைக் கம்பன் தன் காவியத்தில் பதிவு செய்யும் ஓர் நுட்பமான இடத்தினைக் காண்பாம்.



அயோத்தி மாநகரின் பேரரசனான தசரதன்> ஏழுலகையும் அறம் தவறாது காத்து வந்தனன் என்கிறார் கம்பர். அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன் செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான். தன் நாட்டு மக்களைத் தாயாகவும் தவமாகவும் சேயாகவும் மருந்தாகவும் மட்டுமன்றி அறிவாகவும் நின்று அவன் காத்தனனாம்.

 

தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின்

சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்> நுணங்கு கேள்வி

ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்> எவர்க்கும் அன்னான்.



வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசயர் உள்ளமும் ஒரு வழி ஓட நின்ற தள்ளறும் பெரும் புகழ் தசரதன் அவன். தசரதனின் பெருமை உரைப்பது இக் கட்டுரையின் நோக்கமன்றாம். ஆனாலும் எடுத்துக் கொண்ட விடயத்தை விளங்குவதற்காக தசரதன் பற்றிய முக்கியமான மற்றொரு விடயத்தையும் இங்கு காண வேண்டியிருக்கிறது.

    

தசரதனின் பெருமைகளை இன்னும் பலவாய் பல்வேறு இடங்களில் விரித்துரைக்கிறார் கம்பர். அங்ஙனம் அவர் உரைக்கும் விடயங்களில் ஒன்று கற்றோர் கவனத்தை ஈர்த்து அவர்தமை வியக்க வைக்கிறது. அவ்விடயத்தைச் சுருங்கக் காண்பாம்.

    

மறுநாள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என முடிவு செய்துவிட்டு அவ் இனிய செய்தியைக் கூறி கைகேயியை மகிழ்விக்கவென அவள் வதியும் அந்தப்புரத்திற்கு வருகிறான் தசரதன். கூனியால் மனமாற்றம் உற்றிருந்த கைகேயியோ முன்னர் தசரதனிடம் தான் பெற்றிருந்த இருவரங்களைக் கொண்டு இராமன் காடேகவும் பரதன் நாடாளவும் வரம் வேண்டுகிறாள். அதிர்ந்து போன தசரதன் அவள் காலில் வீழ்ந்து ‘இராமனை காடனுப்பாது ஒழிவாயாக!’ என இரந்து வேண்ட இரக்கமுறாத கைகேயி ‘முன் தந்த வரத்தை மாற்றுகிறாயோ? நீயே சத்தியம் தவறின் வாய்மைக்கு இனி யாருளர்?’ என வார்த்தைகளால் அவன் நெஞ்சைப் பிளக்கின்றாள்.

 

இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்

தன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்

முன்னே தந்தாய் இவ் வரம்> நல்காய்> முனிவாயேல்>

என்னே? மன்னா? யார் உளர் வாய்மைக்கு இனி? என்றாள்.



அசையாத வன்மை கொண்ட கைகேயியின் உரையைக் கேட்டு துடித்துப் போன தசரதன் நச்சுத் தீயே பெண்ணுருக்கொண்டு வந்ததோ? என அவளை இகழ்ந்து பின் மூச்சையுற்று மயங்கி விழுகிறான்.

 

அச் சொல் கேளா> ஆவி புழுங்கா> அயர்கின்றான்>

பொய்ச் சொல் கேளா வாய்மொழி மன்னன்> பொறை கூர>

நச்சுத் தீயே பெண் உரு அன்றோ? என நாணா>

முச்சு அற்றார் போல்> பின்னும் இரந்தே மொழிகின்றான்.

    

கற்றோர் மனதில் ஆச்சரியத்தைக் கிளப்பும் ஒர் அடியை இப்பாடலில் பதிவு செய்கிறார் கம்பர். தசரதன் பற்றிய புகழுரையாய் கம்பர் இடும் பொய்ச் சொல் கேளா வாய்மொழி மன்னன்> எனும் அடியே கற்றோர் மனதில் வியப்பை ஏற்படுத்துகிறது. தசரதன் பொய்ச் சொற்களைக் கேட்டும் அறியாதவன் என்பதே இப்பாடல் அடி தரும் விளக்கமாம்.



உலகியலில் பொய்யுரையாமல் இருப்பதே அரிய காரியமாய் இருக்கையில் பொய்யுரையைக் கேளாமலும் ஒருவர் இருத்தல் கூடுமோ? இதுவே கற்றோர் மனதைக் குழப்பும் கேள்வியாம். இக் கேள்வியால் மனம் குழம்பி வை.மு.கோ பதிப்பில் அமைந்த பொய்ச் சொல் கேளா வாய்மொழி மன்னன் எனும் அடியை> பின்னாளில் கம்பகாவியத்தைப் பதிப்பித்த வேறு சில அறிஞர்கள் இது இயற்கை முரண் எனக் கருதி> பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன் என> மாற்றிப் பதிப்பித்துத் தவறிழைத்தனர்.



அவர்தமை முற்றாய்க் குறை சொல்லவும் இடமில்லையாம். உலகியலுக்கு முரணான> அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை> அவர்கள் தவறெனக் கருதியமையே அவர்தம் பிழைக்காம் காரணமாயிற்று. நம் அறிவைக் கடந்த எத்தனையோ அதிசயங்கள் இன்றும் இவ் உலக இயற்கையில் பொதிந்தே கிடக்கின்றன. அதனால்த்தான் உலகில் தோன்றிய அனைத்து மொழி அகராதிகளும்> அதிசயம்’ என்ற சொல்லை உள்வாங்கத் தவறவில்லை எனலாம். அங்ஙனம் அறிவைக் கடந்த அதிசயம் ஒன்றாகவே> பொய்ச் சொல் கேளா வாய்மொழி மன்னன்> என்ற அடியையும் நாம் கொள்ளவேண்டியுள்ளது.

    

தசரதனின் வீரியமான சத்திய வேட்கையால் அவன் மட்டுமன்றி அவனைச் சார்ந்தாரும் பொய்யுரையா வல்லமை பெற்றனராம். அஃது சாத்தியமோ எனின்> இயற்கை> பொய்யுரைக்கும் தேவையை> அவர்களுக்கு இல்லாமலாக்கிற்று என நாம் அமைதி கொள்ளல் வேண்டும். இவ்விடத்தில் வாசகர்கள் இக்கட்டுரையின் முதல் பத்தியை> மீண்டும் ஒருதரம் வாசித்துத் தொடர்தல் நன்றாம்.

    

இயற்கை> ஒருவர்க்குப் பொய்யுரையாச் சாத்தியத்தை ஏற்படுத்தும் பேருண்மையைக் கம்பர் தன் காவியத்தின் ஓரிடத்தில் பதிவு செய்கிறார். அவ்விடத்தைக் கண்டு மகிழ்வதுவே இக்கட்டுரையின் மூலநோக்கமாம்.



கைகேயி பெற்ற வரத்தால் இராமன் காடேகி விடுகிறான். இராமன் காடேகிய செய்தி கேட்டு தசரதனின் உயிர் பிரிகிறது. நான்கு குமாரர்களைப் பெற்றிருந்தும் அவனது இறுதிக்கிரியைகளை இயற்ற புதல்வர்கள் யாரும் அப்போது அருகில் இல்லாததால் உரிமையுள்ள பரத> சத்துருக்கர்களை கேகேயத்திலிருந்து அழைத்து வரவென> தசரதன் கட்டளை போல் ஒரு திருமுகம் எழுதி அதனை தூதர் இருவரிடம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு அறுபதினாயிரம் மனைவியரும் கடலெனச் சூழ்ந்து கதறி அழுதிருக்க தசரதனின் உடலை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து பரதன் வரும் வரை அது கெடாதிருக்கும் பொருட்டு> தயிலக் கொப்பறை ஒன்றில் இட்டு வைக்கும்படியாய் உத்தரவிட்ட வசிட்டர் தன் இருப்பிடம் சேர்ந்தனராம்.

 

செய்யக் கடவ செயற்கு உரிய சிறுவர்> ஈண்டையார் அல்லர்

எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா’ என்ன> இயல்பு என்னா

மையற் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று> என்ன

தையல்கடல் நின்று எடுத்து> அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான்.



ஆயிரமான மனைவியர் சூழக்கிடந்த தசரதனின் உடலை தயிலக் கொப்பறையில் இட்ட செயலை தையல்கடல் நின்று எடுத்து> அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான் எனப் பதிவு செய்யும் கம்பனின் கவிநயம் எண்ணி எண்ணி ரசிக்கத்தக்கதாம்.

    

வசிட்டரால் அனுப்பப்பட்ட தூதுவர் இருவரும் இரவு> பகல் தூஞ்சாது கேகேய நாடு வந்து சேர்கின்றனர். மிதிலை அரண்மனை வாயிலில் நின்ற காவலரிடம் தாம் தூது வந்த செய்தியை பரதர்க்கு உரைக்கும்படி அவர்கள் வேண்ட அக்காவலரும் பரதன் அடி சேர்ந்து அச்செய்தியை உரைத்தனர்.

 

பொரு இல் தூதுவர் போயினர்> பொய் இலார்>

இரவும் நன் பகலும் கடிது ஏகினார்>

பரதன் கோயில் உற்றார்> படிகாரிர்! எம்

வரவு சொல்லுதிர் மன்னவற்கே!’ என்றார்.



மேற்பாடலில் கம்பர் ஒரு நுட்பக் குறிப்பினைப் பதிவு செய்கிறார். தசரதன் இறந்த செய்தியை உரைக்காது அவனே உயிருடன் இருந்து அழைக்குமாப்போல் ஓர் பொய்ச் செய்தியை உரைக்கவே இத்தூதுவர் வந்தனராம். அங்ஙனம் இருக்க அத் தூதுவரை பொய் இலார்> என்கிறார் கம்பர். இது பொருந்துமோ எனும்  கேள்வி பிறக்க அதுபற்றி ஆராய்தல் அவசியமாகிறது.

    

அதற்கு முன்பாக தசரதன் இறந்த பின்பு அவன் கட்டளையாய் ‘நாடு திரும்புக!’ என வசிட்டர் ஓலை அனுப்பியதன் காரணத்தை நாம் ஆராய்தல் வேண்டும். துறவியர்க்கு ‘வாய்மை’ இலக்கணமாம்.  அங்ஙனமிருக்க துறவியாகிய வசிட்டர்> பொய் ஓலை விடுத்தது ஏன்? சிந்திக்கத் தூண்டுகிறது அறிவு. தசரதனும் இராமனும்> வானும் காணும் ஏகிய செய்தி அறிந்தால்> பரதன் உயிர் விடுவான் என அஞ்சியே> வசிட்டர் அங்ஙனம் ஒரு பொய் ஒலையை விடுத்தார் எனக் கொள்ளல் வேண்டும். வாய்மையைப் போற்றவேண்டிய துறவியான வசிட்டர் அங்ஙனம் பொய் உரைக்கலாமோ? என மீண்டும் வினா பிறக்கும். இவ்விடத்தில்>

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்

பொய்மையும் வாய்மை இடத்த என>

வாய்மைக்கு வள்ளுவர் வகுத்த வரைவினை நினைக்க> வசிட்டர் உரைத்ததும் வாய்மையேயாம் எனக் கொள்ளுதல் கூடுமாம்.

    

இனி> வந்த தூதுவர் பற்றி நாம் ஆராய்தலும் அவசியமாகிறது. தசரதன் இறந்த உண்மையை அறிந்தும் அவ் உண்மையை மறைத்துப் பொய்யுரைத்து> பரதனை நாட்டிற்கு அழைத்துச் செல்லவெனவே இத்தூதுவர் வருகின்றனர்.  அத்தகைய தூதுவரை பொய் இலார் என> கம்பர் விளிக்கிறார். முரண்பாடான இவ்விளிப்பினை கம்பர் உரைத்ததன் காரணம் என்ன?

 

    

இவ்விடத்தில் ஓர் பேருண்மையை நமக்கு உணர்த்துகிறார் கம்பர். தசரதனை பொய்ச் சொல் கேளா வாய்மொழி மன்னன் என> தான் முன் உரைத்ததனை இவ்விடத்தில் நிறுவ நினைக்கிறார் அவர். சத்திய வடிவினனான தசரதனைச் சூழ வாழ்ந்தாரும் பொய்யற்றே வாழ்ந்ததால்த்தான் பொய்ச் சொல் கேளாது தசரதன் வாழ்ந்தான் என முன் நாம் பதிவு செய்த விடயத்தை இவ்விடத்தில் மீள நினைதல் அவசியம். கொணர்ந்த செய்தி பொய்யே ஆயினும் இத் தூதர் பொய்யுரைக்கும் இயல்பினர் அல்லராம். இவ் உண்மையைப் பதிவு செய்வதற்காகவே அவரைப் போற்றி உரைக்க எத்தனையோ வார்த்தைகள் இருந்தும் வேண்டுமென்றே இவ்விடத்திற்குப் பொருத்தமற்ற பொய் இலார் எனும் வார்த்தையைக் கம்பர் இடுகிறார் என்க!



இக்கட்டுரையின் முன்னுரையில்  நான் உரைத்த ஓர் பேருண்மையை இங்கு கம்பர் சித்தாந்தப்படுத்தும் அழகினைக் கண்டு நாம் அதிசயிக்கிறோம். சத்தியத்தின் சார்புபட்டார்க்கு இயற்கை துணை நின்று அவரை பிழை செய்யாது காக்கும் என முன் உரைக்கப்பட்ட செய்தியை இவ்விடத்தில் மிக நுட்பமாகக் கம்பர் பதிவு செய்கிறார். அவ் அழகினைக் காண்பாம்.



அவ் அழகினைக் கண்டு மகிழ இனி> காதையின் தொடர்ச்சிக்குள் நாம் மீண்டும் நுழைகிறோம். அயோத்தியிலிருந்து தூதர் வந்த செய்தியை கேகேய நாட்டுக் காவலர்கள் பரதனிடம் சென்று உரைக்கின்றனர். தாதையின் ஓலையோடு தூதர் வந்தனர் எனும் செய்தி கேட்டு அன்பினால் சிந்தை களிப்புற இங்கு அவர்களை அழைத்துவருக! என உத்தரவிடுகிறான் பரதன். உள்ளே நுழைந்த அயோத்தித் தூதுவர்கள் அவனைப் பணிந்து வணங்க> பரதனிடமிருந்து சங்கடத்திற்குரிய கேள்வி ஒன்று தூதரை நோக்கிப் பாய்கிறது. முடிக்குரிய சக்கரவர்த்தி தீதின்றி இருக்கிறாரா? என்பதே> பரதன் கேட்ட அக்கேள்வியாம்.

தூதர் வந்தனர்> உந்தை சொல்லோடு என

காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்>

போதுக ஈங்கு என> புக்கு> அவர் கைதொழ

தீது இலன்கொல் திரு முடியோன்? என்றான்.

    

தசரதச் சக்கரவர்த்தி நலமுடன் இருக்கின்றனரா? என> பரதன் கேட்டிருப்பின் தூதர் பொய்யுரைக்க வேண்டி வந்திருக்கும். பொய் அறியா அத்தூதரைக் காக்க எண்ணிய இயற்கை முடிக்குரிய சக்கரவர்த்தி நலமா? என பரதனைக் கேட்க வைக்கிறது. அக்கேள்வியால் தூதர்தம் மனப் பாரம் குறைகிறது. கைகேயி வேண்ட தசரதன் கொடுத்த வரத்தால் இப்போது பரதனே முடிக்குரிய சக்கரவர்த்தியாம். ஆதலால் முடிக்குரிய சக்கரவர்த்தி நலமா? என பரதன் கேட்க தூதர்க்குப் பொய் உரைக்கவேண்டிய தேவை இல்லாது போகிறது. பரதனை மேலும் கீழும் பார்த்த அவர்கள் முடிக்குரிய தலைவன் ‘வலியன்’ என்கின்றனர். அவர்கள் மறைத்துரைத்த வார்த்தைகளின் கருத்துணராத பரதன் மகிழ்வுற்று அவர்களை நோக்கி அடுத்த கேள்வியைத் தொடுக்கிறான்.



    

ஆபரணங்களை அணிந்த இளைய பெருமாள் எம் தலைவனோடு குறைவற்ற செல்வனாய் இருக்கின்றானோ? இதுவே பரதன் கேட்ட அடுத்த கேள்வி. இங்கும் இயற்கை பொய்யுரையா வண்ணம் தூதரைக் காக்கிறது. இராமன் என்றோ இலக்குவன் என்றோ குறிப்பிடாமல் பிரான் என்றும் இளங்கோ என்றும் பொதுப்பட உரைத்து பரதன் வினவியதால் தூதர் மீண்டும் பரதனையும் அருகிருந்த சத்துருக்கனையும் நோக்கியபின் அங்ஙனமே அவர் இருக்கின்றார் எனப் பதிலுரைக்கின்றனர். அது கேட்டு> தலையில் கைகுவித்து மகிழ்கிறான் பரதன்.

 

வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்

இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்

உலைவு இல் செல்வத்தனோ? என> உண்டு என

தலையின் ஏந்தினன். தாழ் தடக் கைகளே.



தசரதனையும் இராமனையும் இலக்குவனையும் தனித்துப் பெயர் சுட்டி விளிக்காது திருமுடியோன் எனவும் பிரான் எனவும் இளங்கோ எனவும் பொதுப்படச் சுட்டி பரதனை வினவ வைக்கிறது நல்லாரைக் காக்கின்ற இயற்கை. அவன் வினவ நினைத்த விடயங்கள் வேறாயினும் அவன் வாயில் வந்த வார்த்தைகள் அனைத்தும் தசரதனையும் பரதனையும் சத்துருக்கனையும் குறிப்பதாய் அமைந்துவிட வந்த தூதுவர்க்குப் பொய்யுரைக்கும் தேவை அற்றுப்போகிறது. அதனால் அவர்கள் பொதுப்பட பதிலுரைத்துப் பொய்யுரைக்காது தப்பிக் கொள்கின்றனர். தெய்வக்கவியாம் கம்பரின் வாயிலிருந்து வந்த பொய் இலார் எனும் வார்த்தை நிஜமாகிறது.



பொய் உரைத்து அறியாத அத்தூதுவரை> பரதன்முன் பொய்யுரைக்கும்படி செய்யாமல்> இயற்கை காத்தது எனும் செய்தி நிஜமோ? அன்றேல்> காக்கை இருக்கப் பனம்பழம் விழுந்தாற் போன்றதொரு> தற்செயல் நிகழ்வோ? கற்போர் மனதில் ஐயம் பிறக்கும். இஃது தற்செயல் நிகழ்வன்றாம். உண்மை உள்ளவர்களுக்குச் சார்பாக இயற்கைத் துணை செய்து நிற்கும் எனும் செய்தியை நினைந்தே> கம்பர் இவ்விடத்தில் இக்காட்சியைப் பதிவு செய்ததாய்க் கொள்ளல் வேண்டும். அதனால்த்தான் பொய்ச் செய்தியோடு வந்த> தூதரின் தூய்மையை உணர்த்த> வேண்டுமென்றே பொய் இலார் என அவரை விளித்து> தொடர்ந்து அவரைப் பொய்யுரையா வண்ணம் இயற்கை காத்து நிற்கும் காட்சியையும் கம்பர் அமைக்கிறார்.

    

இயற்கையில் அமைந்த நுட்ப விடயங்களை மறுப்பது எவர்க்கும் சுலபமாம். அங்ஙனம் மறுப்பதற்கு அறிவின் தேவையும் இல்லையாம். இயற்கை காட்டும் அவ் அற நுட்பங்களை உணர்வதே கடினம். அதனை உணர்வதற்கே கூர்த்த நுண்ணறிவு தேவைப்படுகிறது. அத்தகு அறிவுள்ளார் இக்கட்டுரைக் கருத்தினை ஏற்பராம். மற்றவர்?



 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.