"கணக்கும் கடவுளும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"கணக்கும் கடவுளும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 

லகம் இன்று நாத்திக மயமாகிக் கிடக்கிறது.
இறை நம்பிக்கையற்றார் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது.
இறை என்று ஒரு பொருள் இல்லை என்பதே இந்நாத்திகர்களின் வாதம்.
உலகு தோன்றி நிலைத்து மறைகின்றதே.
இது யாரால் நிகழ்த்தப்படுகின்றது எனக் கேட்டால்?
அனைத்தும் இயற்கை எனச் சுலபமாக இவர்கள் பதிலளிப்பர்.
இந் நாத்திகவாதம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல,
தொன்று தொட்டே இக்கருத்துடையார் இருந்துள்ளனர்.
நிரீச்சுவர வாதிகள் என இவர்களை அக்காலத்தில் சுட்டினர்.
புலன்களால் காணப்படுபவை மட்டுமே உண்மை என்பது,
இந் நிரீச்சுவர வாதிகள்தம்  கொள்கை.
***
 

அறிவுலகு ஓர் உண்மையை நிரூபிக்க மூன்று நெறிகளைக் கையாண்டது.
இவ்வழிகளை வடநூலார் பிரமாணங்கள் என்றுரைப்பர்.
ஓர் உண்மையைப் புலன்களால் கண்டறிவது அவற்றுள் ஒன்று.
இதனைக்காட்சிப் பிரமாணம் என்பர்.
ஓர் உண்மையை ஊகித்தறிவது மற்றொன்று.
இதனை அனுமானப்பிரமாணம் என்பர்.
புகை உண்டெனில் அவ்விடத்தில் நெருப்புண்டு என்று,
ஊகித்தறிவது அதற்காம் உதாரணம்.
இவை தவிர உயர்ந்தோர் சொல்ல ஒப்புவது என்பது,
ஓர் உண்மையை அறிவதற்காம் மூன்றாவது வழி.
இதனை ஆகமப் பிரமாணம் என்பர்.
உனக்கு வந்திருப்பது இன்ன நோய் என,
வைத்தியர் சொல்ல ஏற்றுக் கொள்வது இதற்காம் சுலப உதாரணம்.
***

தத்துவவாதிகள்
இம் மூன்று பிரமாணங்களின் அடிப்படையிலேயே
உண்மைகளை நிறுவுவர்.
ஆனால், கடவுள் மறுப்புக்கொள்கையாளர்
இம் மூன்று பிரமாணங்களில் காட்சிப் பிரமாணம் தவிர்ந்த
மற்றைய இரு பிரமாணங்களையும் ஒத்துக் கொள்ளார்.
கண்ணால் கண்டதே மெய் எனும் அவர் கருத்து,
புலனறிவின் அடிப்படையிலேயே
அவர்கள் உண்மையை ஒப்புவர் என்பதற்காம் சான்று.
இக்கருத்துடைய இவர்கள்
பூதங்கள் ஐந்து எனும் கருத்தினையே மறுத்து நிற்பர்.
இவர்களைப் பொறுத்தவரை பூதங்கள் நான்காம்.
நிலம், நீர், தீ, காற்று எனும்
காட்சிக்கு உட்படும் பூதங்களை ஏற்றுக்கொள்ளும் இவர்கள்,
காட்சிக்கு உட்படாத ஆகாயத்தை பூதம் என ஒப்ப  மறுப்பர்.
ஊக அறிவுக்கோ, உயர்ந்தோர் சொல்ல ஒப்பும் அறிவுக்கோ
இவர்கள் அகராதியில் இடமில்லை.
***

வழி வழி வந்த இக் கடவுள் மறுப்புக் கொள்கையாளரின் வலிமை,
தமிழர்கள் மத்தியில்,
மார்க்ஸிசக் கொள்கையாலும்,
திராவிட இயக்கங்களின் வருகையாலும்,
சென்ற நூற்றாண்டில் கூர்மையுற்று
இந்த நூற்றாண்டிலும் ஓரளவு தொடர்கின்றது.
***

எப்போதும் எது ஒன்றையும்
இல்லையென மறுப்பது சுலபமானது.
எந்த ஒன்றையும் இல்லையெனச் சொல்வதற்கு
அறிவோ தேடலோ தேவையில்லை.
இருக்கிறது எனச் சொல்வதற்கே
அறிவும் தேடலும் அவசியமாகின்றன.
இக்கடவுள் மறுப்புக் கொள்கையாளர் வலிமையுறுவதற்கு
அறிவும் தேடலும் அவசியமற்ற இந்நிலையே காரணமாயிற்று.
***

நவீன இறைமறுப்புக் கொள்கையாளர்கள்
பெரும்பாலும் விஞ்ஞானக் கருத்தின் அடிப்படையிலேயே
தமது இறைமறுப்புக் கொள்கையை முன்வைக்கின்றனர்.
எதனையும், கற்பனைக்கு இடமின்றி, பகுத்தறிந்து
காரண காரியத் தொடர்புகளோடு உரைப்பதுவே
விஞ்ஞானம் என்பது இவர்தம் உறுதியான கொள்கை.
அதனால், தம் கடவுள் மறுப்புக் கொள்கையினை,
பகுத்தறிவு வாதம் என்றே இவர்கள் உரைத்து வருகின்றனர்.
விரிந்து கிடக்கும் விடயங்கள் அனைத்தும்
மனித அறிவுக்கு அகப்படும் என்பது
இவர்தம் அசையாத நம்பிக்கை.
இவ்வடிப்படையிலேயே,
பெரும்பாலும் ஊக அறிவால் உணரப்படும்
இறைக்கொள்கையை இவர்கள் மறுக்கின்றனர்.
***

இவர்தம் முடிவு சரியானதா?
விஞ்ஞானம், அறிவின் எல்லைகளை அளக்கக்கூடியதா?
இன்றைய விஞ்ஞானம்
அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் ஆற்றல் கொண்டதா?
பகுத்தறிவால் விடை பகரமுடியாத வினாக்கள் எவையும் இன்று இல்லையா?
காட்சிப் பிரமாணத்தைக் கடந்த உண்மைகள் இன்றும் இருக்கின்றனவா?
இன்றைய வளர்ச்சி நிலையிலும் விஞ்ஞானத்தைக் கடந்த விடயங்கள் இருத்தல்கூடுமா?
ஆராய்வது அவசியமாகின்றது.
***

ஒரு பொருளைத் தாங்க இன்னொரு பொருள் வேண்டும்.
இஃது விஞ்ஞானம் ஒப்பும் ஓர் அடிப்படை உண்மை.
பொருள் என்பது எல்லைகளைக் கொண்டது.
இஃதும் அங்ஙனம் ஏற்கப்பட்ட உண்மைகளில் ஒன்று.
இவ்வடிப்படைகளைக் கொண்டு
விஞ்ஞான நிரூபணம் செய்வார் மேல்,
ஆத்திக வாதிகளால் ஒரு வினா தொடுக்கப்படுகின்றது.
ஆகாயம் ஒரு பொருளா? அன்றா?
இதுவே அவ் எளிய வினா.
***

பகுத்தறிவால் இவ் வினாவுக்கு வரையறுத்து விடைகூறுதல் கூடுமா?
எவ்வளவு வலிமைபெற்றவராயினும்
இவ்வினாவுக்கு விடையளித்தல் ஆகாதாம்.
எங்ஙனமோ எனின்,
ஆகாயம் பொருள் அன்று எனின்,
அவ் ஆகாயத்தில் இவ் அண்டங்கள் எங்ஙனம் நிலைக்கின்றன?
இவ் வினா அவர்களைத் திகைப்பிக்கும்.
அன்று! ஆகாயம் பொருளே என அவர்கள் உரைப்பின்,
பொருள் எனின் அது எல்லைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அங்ஙனமாயின் ஆகாயத்தின் தொடக்க முடிவு எல்லைகள் எவை?
ஆகாயம் எங்கு தொடங்குகின்றது? எங்கு முடிகின்றது?
இவ்வினாக்களுக்கு விடையளிக்க வல்லார் விஞ்ஞான உலகில் உளரா?
இங்ஙனமாய் இவ்விறை மறுப்புக் கொள்கையாளரை,
தர்க்க அறிவு கொண்டே திகைக்கச்செய்யலாம்!
***

அங்ஙனமன்றி அவர்தம் நம்பிக்கை வேரான
விஞ்ஞான அறிவின் நம்பகத்தன்மையை அசைத்துக்காட்டின்
உறுதியாய் நினைந்து அவர்கள் கட்டிவைத்திருக்கும்,
பகுத்தறிவுவாதம் சிதறிப்போகும்.
அதை நிரூபித்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாம்.
***

விஞ்ஞானம், விஞ்ஞானமென
இன்றைய அறிவியலார் உரைக்கும் அஃது,
இரசாயனம்,பௌதீகம்,உயிரியல் போன்ற
பல கூறுகளாய் விரித்துரைக்கப்படுகின்றது.
இவ்விஞ்ஞானக் கூறுகள்  வளர்ச்சியுற
அடிப்படையாவது கணிதமே.
கணிதம் இன்றேல் ஆய்வுகள் இல்லை.
கணிதம் என்று சொல்லப்படுவதன்
அடிப்படையாய்க் கருதப்படுபவை,
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களேயாம்.
இவ்வுண்மையை அறிய, விஞ்ஞானத்தின் அடிப்படை
கணிதம் என்பதும்,
கணிதத்தின் அடிப்படை எண்கள் என்பதும்
தெற்றெனத் தெளிவாகும்.
***

எனவே, விஞ்ஞானத்தின் அடிப்படையாய் அமையும் எண்களின்
நம்பகத்தன்மை அசைந்தால்,
விஞ்ஞானம் அசைவுறும் என்பதும்,
அவ்விஞ்ஞானத்தை நம்பி,
வைக்கப்படும் பகுத்தறிவு வாதம் அசையும் என்பதும்,
சொல்லாமலே தெளிவாகும்.
அது சாத்தியமா?
ஆராய்வோம்.
***

இறை நம்பிக்கையாளர்களால் கூறப்படும் இறை,
எல்லைகளற்ற பொருள் எனும் கூற்றே
பகுத்தறிவுவாதிகளால் முதலில் கேலி செய்யப்படும் விடயமாகிறது.
எல்லைப்படுத்தப்படாத பொருளும் உண்டா?
இது அவர்கள் தொடுக்கும் வினா.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி” எனும்
ஆத்திகர்களின் இறை பற்றிய கூற்றை
அவர்கள் முற்றாய் நிராகரிப்பர்.
இக்கருத்தை மனதிருத்தி
அவர்தம் விஞ்ஞான அடிப்படையான கணிதத்துள் நுழைவோம்.
***

கணிதத்தின் அடிப்படையான எண்களுள்
மிகப்பெரிய எண் எது?
இவ்வினாவுக்கு பதிலிறுப்போர்
எத்தகு பெரிய எண்ணைப் பதிலாய் உரைப்பினும்,
அதனோடு ஒன்றைக் கூட்ட அடுத்த பெரிய எண் வந்துவிடும்.
இவ்வுண்மையறிந்த கணித மேதைகள்
எண்களின் உயர்வரிசை,
முடிவற்றது எனத் தெளிவாய் உரைத்தனர்.
அக்கருத்தை உரைக்க அவர்கள்
முடிவிலி எனும் பதத்தை அவர்கள் பாவித்தனர்.
முடிவிலி என்பதனை குறிக்க கணிதத்தில் ∞ எனும் குறியீடு பாவிக்கப்படுகிறது.
சிந்தனையில்லா கணித மாணவர்கள்
இக்குறியீட்டினையே ஒரு எண்ணாய்க் கருதி மயங்குவர்.
உண்மையில் இக்குறியீடு உரைக்கும் செய்தி
முடிவில்லாதது என்பதேயாம்.
எனவே, கணித அடிப்படையான எண்களின்
மேல் நிலையும் முடிவற்றதாகவே விஞ்ஞானத்தால் உரைக்கப்படுகின்றது.
***

இனி இறங்கு வரிசையில்
எண்களில் கடைசி எண் எது?
இது அடுத்த கேள்வி.
இங்கும் பதிலுரைப்போர்
குறைந்த எண்ணாய் எதைச் சொன்னாலும்,
அதிலிருந்து ஒன்றைக் கழிக்க,
அடுத்த குறைந்த எண் வந்துவிடும்.
அதனால் கணித மேதைகள்
இக் கேள்விக்கும் முன் சொன்னது போலவே,
முடிவிலி என்பதையே பதிலாய் உரைக்கின்றனர்.
விஞ்ஞானத்தின் அடிப்படை கணிதம் என்றும்,
கணிதத்தின் அடிப்படை எண்கள் என்றும் அறிந்தோம்.
இத் தொடர்பில் எண்களே விஞ்ஞானத்தின்
முதல் நிலையாகின்றன.
விஞ்ஞானத்தின் முதல் நிலையான எண்களும்,
முடிவும், தொடக்கமும் அற்றவையே எனும் உண்மை,
மேற்கூறப்பட்ட ஆய்வால் வெளிப்பட
கடவுள் மட்டுமன்றிக் கணக்கும்
ஆதியும், அந்தமும் அற்றதுதான் எனத் தெரிந்து கொள்கிறோம்
***

அடுத்து, இறைக்கு உருவம் கொடுப்பது பற்றிய ஒரு பிரச்சினை
நாத்திகர்களால் கிளப்பப்படுகின்றது.
தொடக்கமும் முடிவும் அற்ற பொருள் என்று
இறையை உரைப்பின்
பின்னர் அதற்கு வடிவம் கற்பிப்பது எங்ஙனம்?
இதுவே அவர்தம் வினா.
அது பற்றியும் சிந்தித்தல் அவசியமாகின்றது.
***

இவ் விஞ்ஞான வாதிகள்,
முடிவிலி என்பதைக் குறிக்க  எனும் அடையாளத்தை இடுகின்றனர்.
முடிவிலி எனும் குறியீடு
முடிவற்றது எனும் கருத்தையே உரைக்கின்றது.
முடிவற்ற பொருள்களுக்கு வடிவம் உரைக்க முடியாது என்பதுவே,
கடவுள் கொள்கையில் அவர் தம் வாதமாயிற்று.
அங்ஙனமாயின் எதுவென தெரியாத முடிவற்ற ஒரு எண்ணுக்கு,
இவர்கள்  எனும் அடையாளத்தை இட்டது எங்ஙனம்?
வினாத்தொடுக்க அவர்தம் வாய்கள் தானாய் மூடும்.
***

அது மட்டுமன்றி,
பூச்சியத்திற்கு மேற்பட்ட,
மேல் வரிசை எண்களுக்கு (+) அடையாளத்தையும்,
பூச்சியத்திற்கு கீழ்ப்பட்ட,
கீழ் வரிசை எண்களுக்கு () அடையாளத்தையும் இடும்
இவ் அறிவியலாளர்கள்,
மேலும், கீழும் அமைந்த முடிவிலிகளுக்கும்
இவ் அடையாளங்களை இடுகின்றனர்.
அறியப்படாதவை என்பதுவே முடிவிலி அடையாளத்தின் கருத்தெனக் கண்டோம்.
அங்ஙனமாயின் அறியப்படாத முடிவிலிக்கு,
 (+) (-)அடையாளங்களை இடுவது எங்ஙனம் பொருத்தமாகும்?
ஒரு வேளை மேல் வரிசை எண்கள் அனைத்தும்
(+) அடையாளத்தைக் கொண்டதாலும்
கீழ் வரிசை எண்கள் அனைத்தும்
(-) அடையாளத்தைக் கொண்டதாலும்
மேலும் கீழும் வரும் முடிவிலிகளும்
அவ்வடையாளங்களையே கொள்ளும் என அவர்கள் வாதிடக்கூடும்.
அங்ஙனம் அவர்கள் உரைப்பின்,
அவர்களை நோக்கி ஒரு வினாக் கிளம்பும்.
அறியப்படாத ஒரு எண்ணுக்கு வரிசை நோக்கி அடையாளமிடுதல்
அனுமானப்பிரமாணமே அன்றி காட்சிப் பிரமாணம் ஆகுமா?
என்பதுவே அவ்வினா?
***

அனுமானப் பிரமாணத்தை அவர்கள் ஒத்துக்கொள்வது இல்லை.
எனவே அவர் தம் கருத்துப்படியே
அவர்களின் வாதம் தவறாகிறது.
ஊகத்தால் அடையாளமிடுதல்
கணித தேவைக்கு அவசியம் என்று அவர் உரைப்பின்
அதனையேதான் கடவுள் கொள்கையாளரும் செய்தனர் என்பதை ஒப்ப வேண்டும்.
எனவே, இவ்விடயத்திலும் கணக்கும், கடவுளும் ஒன்றாகின்றன.
***

பகுத்தறிவுதான் விஞ்ஞானத்தின் அடிப்படை
என்றுரைக்கும் அவர்களை நோக்கி மற்றொரு கேள்வியும் எழுகிறது.
கணித எண் வரிசையில்,
பூச்சியத்தையும் ஓர்  எண்ணாகவே அவர்கள் உரைக்கின்றனர்.
எண்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட பெறுமதி கொண்டவை என்பது
அவர் தம் உறுதியான கொள்கை.
இக் கொள்கையை வைத்தே கணிதத்தை இவர்கள் விருத்தி செய்கின்றனர்.
5 இல் ஒன்று 5 தரம் அடங்கும்.
5 இல் இரண்டு 2 தரம் அடங்கி ஒன்று மிகுதியாகும்.
5 இல் மூன்று 1 தரம் அடங்கி இரண்டு மிகுதியாகும்.
இங்ஙனமாய் எண்களுக்கான தொடர்பினை
உறுதி செய்து கணிதத்தினை இவர்கள் வளர்ப்பர்.
இங்குதான் கேள்வி பிறக்கிறது.
இவ் எண்களுக்கான தொடர்புகள் தர்க்கரீதியானவை எனின்,
அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பூச்சிய எண்
இத் தர்க்க எல்லைக்குள் அடங்குமா?
இதுவே விஸ்வரூபம் எடுக்கும் கேள்வியாம்.
***

மேல் கேள்வியை விரிக்க,
ஐயங்கள் வளர்ந்துக்கொண்டே போகின்றன.
பூச்சியம் ஓர் எண்ணானால்,
எத்தனை பூச்சியங்கள் சேர்ந்தால் 01 உருவாகும்?
இது திகைப்பூட்டும் முதற் கேள்வி.
எண்கள் கீழும் மேலுமாய் (), (+) அடையாளங்களைக் கொண்டவை.
பூச்சியமும் ஓர் எண்ணானால் அதற்கான அடையாளம் எது?
பூச்சியத்தின் மேல் (+) வும், கீழ் () வும் வருவதற்கான காரணங்கள் என்ன?
வினாக்கள் இங்ஙனமாய் விரிகின்றன.
விடை சொல்லி விஞ்ஞானத்தை காக்கவல்லார் யாரோ?
***

ஒரு  சிலர் குயுக்தியாய்ப் பூச்சியம் ஓர் எண்ணே அல்ல என்றும்,
அது வெறுமையைக் குறிக்கும் ஓர் அடையாளம் என்றும் உரைக்கத்தலைப்படுவர்.
அவர் கருத்தும் வலிமையற்றதே.
பூச்சிய விடயத்தில் விஞ்ஞானம் பூச்சியமாகவே இருக்கிறது.
ஒன்றில் இருந்து ஒன்று போனால் வரும் விடை பூச்சியம் என்கின்றனர்.
இவ்விடத்தில் அவர்கள் வெறுமை என்பதைப் பூச்சியத்தின் பெறுமதியாக்குகின்றனர்.
பின் இவர்களே, ஓர் எண்ணை பூச்சியத்தால் பிரிக்க வரும் விடை
முடிவிலி என்கின்றனர்.
ஒன்றும் இல்லாத பூச்சியத்தால்,
ஓர் எண்ணை பிரிக்க அதே எண்ணே விடையாய் வரவேண்டும்.
ஆனால், இவர்களோ அப்பிரித்தலின் விடையாய்
முடிவிலியை உரைக்கின்றனர்.
இவ்விடத்தில் அவர்களால் பூச்சியத்திற்கு,
அறிய முடியாத ஒரு நுண் பெறுமதி வழங்கப்படுகின்றது.
***

இவ்விடத்தில் இவ்விஞ்ஞானகாரர்களின் அடிப்படையே ஆட்டம் காண்கின்றது.
குறித்த ஓர் எண்ணுக்கான பெறுமதி வரையறுக்கப்பட்டது எனும் இவர் கருத்து,
பூச்சிய விடயத்தில் மாறுபடுதல் தெளிவாகிறது.
ஓர் இடத்தில் பெறுமதி அற்றதாயும்,
மற்றோர் இடத்தில் நுண் பெறுமதி உள்ளதாயும் உரைக்கப்படும்,
பூச்சியம் பற்றிய விஞ்ஞானத்தின் கருத்தறிய
தனித்து தவித்து நிற்கின்றனர் இவ்விஞ்ஞானக்காரர்கள்.
***

பூச்சியத்திற்குப் பெறுமதி இல்லை என்றும் சொல்ல முடியவில்லை.
இருப்பதாயும் கொள்ள முடியவில்லை.
இந் நிலையில்
அன்றே என்னின் அன்றேயாம். ஆம் என்று உரைக்கின் ஆமேயாம்”எனும்
கம்பனது கடவுள் கொள்கையே
கணக்கினது கொள்கையுமாதல் கண்கூடாகிறது.
***

பூச்சியம் என்பது ஒன்றும் இல்லை எனின்
பூச்சியத்தில் இருந்து ஒன்றை கழிப்பது எங்ஙனம்?
பூச்சியத்தில் இருந்து ஒன்றை கழிக்க வரும் எண்ணை,
(-1) என உரைக்கின்றனர்
இல்லாத ஒன்றில் இருந்து ஒன்றை கழிப்பது எங்ஙனம் என்றும்,
அதற்கு விடை வருதல் எங்ஙனம் என்றும் கேட்டால்
இல்லாத ஒன்றுக்கு இடப்படும் கற்பனைப்பெயரே அஃது என்கின்றனர்.
காட்சிப் பிரமாணம் தவிர்ந்த மற்றவற்றை ஏற்காதவர்கள்,
கற்பனையாய் ஓர் எண்ணை ஏற்றுக்கொள்வது எங்ஙனம்?
முடிவில் விஞ்ஞானமும் “கற்பனை கடந்த சோதியாய்” ஆவதைக் காண்கிறோம்.
***

கற்பனையாய் அமைந்த மறை எண்கள் இல்லாவிட்டால்
கணிதம் செயலற்றுப்போம்.
இவ்வுண்மையை விஞ்ஞானத்தின் அடிப்படையாய் அமைந்த
கணிதத்தின் எண்களிலேயே காணும்போது
கற்பனையும் நிராகரிக்கப்பட முடியாததென்றும்
கற்பனையின்றேல் நிஜம் இல்லைஎன்றும்
தெளிந்து மகிழ்கிறோம் நாம்.
***

மொத்தத்தில் காட்சிப் பிரமாணமே பிரமாணம்!
விஞ்ஞானமே உண்மைகளின் அடிப்படை!
உண்மை வேறு, கற்பனை வேறு!
அறிவுக்கு அகப்படாதது ஏதும் இல்லை!
வரையறுத்து உரைக்கப்படாதது எல்லாம் பொய்யே!
எல்லைகள் அற்றது என்று எப்பொருளும் இல்லை!
என்றெல்லாம் உரைப்பாரை நோக்கி
மேல் நிரூபணங்களால்,
வினாக்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன.
***

மேலும் கீழுமாய் முடிவற்ற எண்கள் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
முடிவற்ற பொருளுக்கு குறியீடு இட்டது எங்ஙனம்?
அறிவு நிலையில் கற்பனை எண் என்பது சாத்தியமா?
பூச்சியம் ஓர் எண்ணா? எண்ணன்றா?
எண்ணாயின் அதன் பெறுமதி என்ன?
எண் அன்றாயின் அது ஏன்; கணிதத்தில் பயன்படுத்தப்படுகின்றது?
இக்கேள்விகளுக்கு பதிலளிக்க வல்லார் யார்?
***

இதுவரை நாத்திகர்களின் கேள்விகளால் மிரண்டு நின்ற
ஆன்மீகவாதிகளின் குனிந்த தலைகள் நிமிர்கின்றன.
மேல் நிரூபணப்படி,
கணிதக் கொள்கை சரியானால் கடவுள் கொள்கையும் சரியே!
கடவுள் கொள்கை பிழையானால் கணிதக் கொள்கையும் பிழையே!
கற்பனை கடந்து நிற்கும் பூச்சியத்தை முழுமையாய் விளங்க முடிந்தால்
கடவுளையும் விளங்கி விடலாம்.
விஞ்ஞானமே முடிந்த முடிவென்றும்,
கடவுள் கொள்கை கற்பனை என்றும் வாதிட முனைவார்,
மேல் வினாக்களுக்கு விடைதர தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.
இயலாமல் போயின்,
விஞ்ஞானத்தை கடந்தது கடவுள் கொள்கை
எனும் உண்மையை அவர்கள் ஒப்ப வேண்டும்
***

நிறைவாய் முடிவுரைப்பின்
விஞ்ஞானத்தை அறிய கணிதத்தை அறிதலும்,
கணிதத்தை அறிய எண்களை அறிதலும்,
எண்களை அறிய, பூச்சியத்தை முழுமையாய் அறிதலும் அவசியமாம்.
பூச்சியத்தை அறிந்தவன்,
இறையின் இராச்சியத்தை அறிவான்.
கண்ணதாசன் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
“பூச்சியத்திற்குள்ளே ஓரு
இராச்சியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன்.
அவனைப் புரிந்து கொண்டால் 
அவன்தான் இறைவன்.”
******
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.