கந்தன் கவிஅமுதம் 15
சூரனையே வதம் செய்த வேலன் தன்னின்
சுடர்மிகுந்த நல்வேலை நல்லூர்க் கந்தன்
பாரதையே ஈர்ப்பதற்கு வைத்தே போக
பல அடியார் குவிந்தேதான் வணக்கம் செய்வார்
தேரதனில் அசைந்து வரும் போது ஐயன்
தெவிட்டாது நம்மையெல்லாம் தேற வைப்பான்
ஆரிதனின் மேல் அழகு பெறுவாரென்று
அதிசயித்து மக்களெலாம் அழுது நிற்பார்.
நாதமதும் கீதமதும் நயந்து பொங்கும்
நல்லூரான் மணியோசை நலங்கள் சேர்க்கும்
பாதமலர் ஒளியதனில் பாரோர் தங்கள்
பாவமெல்லாம் கரைந்தோட பக்தி பொங்கும்
வேதவொலி விண்ணவரை ஈர்த்து நிற்கும்
விளங்குகிற வேலினொளி வினைகள் தீர்க்கும்
ஆதவனாய் நல்லூரான் தேரில் ஏற
ஐம்புலனும் அவன் வடிவில் ஒன்றிப் போகும்
விண்ணவரும் தொழுதேத்த வேலன் தானும்
விளங்கிடவே தேரதனில் இவர்ந்து நிற்பான்
மண்ணதனில் ஓடாது மக்கள் தங்கள்
மாண்பான தலைகளிலே ஓடுமாற்போல்
கண்ணெதிரில் தேர் நகர்ந்து செல்லும் காட்சி
காண்பார் தம் பிறவிதனை அறுத்து ஓட்டும்
தென்னிலங்கை மக்களெலாம் தேடி வந்து
திகழுகிற நல்லூரான் தேரைக் காண்பார்.
பச்சைதனைச் சாத்தித்தான் நல்லூர்க் கந்தன்
பாரதனில் தேர்விட்டு இறங்கி வந்தால்
இச்சையிலா ஞானியர்தம் மனத்தில் கூட
ஏற்றமுறும் பற்றெல்லாம், ஐயன் வந்து
விச்சையெலாம் தான் அடக்கி விளங்கும் ஞானம்
வேலதனால் எழச் செய்து வீடுந் தந்து
உச்சமுற அன்பர்களை ஏற்றி வைப்பான்
உயிர்க்கெல்லாம் பிறவியிடர் நீக்கி வைப்பான்