கந்தன் கவிஅமுதம் 14
கோபுரம்தான் எழுந்து நடைபயில்கிறதோ எனும்படியாய்
கொடி உயர்த்திச் சப்பறமும் கோலமுற அசைந்து வரும்
தாவி வரும் இளைஞரெலாம் தாம் முந்தி வடம் பிடித்துத்
தரணியிலே காதலியர் கண் காண இழுத்திடுவர்
கூவி அவன் நாமமதைக் குவிந்த கரத்தோடிருந்து
கொண்டாடும் அடியரெலாம் குலப்பயனாம் என நினைவர்
மேதினியில் நல்லூரான் மேன்மைதனை மனம் நினைந்து
மிகும் அன்பால் வேதியர்கள் வேதமழை பொழிந்திடுவர்
அக்கினியைக் குண்டத்தில் அமைத்தெடுத்து முன் செல்வர்
அருமுருகன் தன் வேலும் அலங்கரித்து ரதம் ஏறும்
பக்கம் இருதேவியரும் பார்த்திருப்பர் பார் நிரம்ப
பழவினைகள் தீர்வதற்காய் பக்தரெலாம் குவிந்திடுவர்
தக்கபடி இளையோரும் தாம் மோதி வடம் பிடிப்பர்
தரணியிலே தன் மகனின் தனிப்பெருமை கண்டேதான்
முக்கணுடைச் சிவனாரும் முறுவலித்து அருள் புரிவார்
முழுத்திங்கள் வந்தாற் போல் முருகனவன் வலம் வருவான்