கந்தன் கவியமுதம் 5
சித்தர்களும் சூழ்ந்திருக்கத் திருக்கை வேலன்
திகழ்ந்திடவே நல்லூரில் அமர்ந்திருந்து
பத்தர்களை ஈர்த்தேதான் அருளி நிற்பான்
பாரெல்லாம் தன் வேலால் வினைகள் தீர்ப்பான்
முத்திதனை வேண்டுகிற முனிவர் தம்மின்
முன் வினைகள் தானறுத்து முழுதும் தந்து
நித்தியமாய் அருள் பொழியும் நேர்த்தி என்னே?
நெஞ்சமெலாம் அவன் வடிவே நிறைந்து நிற்கும்.
செல்லப்பா சாமியுடன் சித்தர் யோகர்
சேர்ந்தேதான் அருளியதாம் நல்லூர் வீதி
கள்ளத்தால் தமை அடியார் போலக் காட்டி
கரவதனைச் செய்கின்ற கடையர் தம்மை
மெல்லத்தான் வீழ்த்திய பின் மீண்டும் ஏற்பான்
மேன்மையுறும் அவனருளை என்னவென்பேன்?
உள்ளத்தால் அன்புருகத் தொழுவோர் தம்மை
உயர்த்திடுவான் நல்லூரான் உறுதி கண்டீர்!