கந்தன் கவியமுதம் 6
கவிதை முற்றம் 31 Aug 2026
முறுகித்தான் கொம்பதனால் முட்டப் பாயும்
மூர்க்கமிகு கிடாயதனில் முருகன் ஏற
தருக்கடங்கி அது கந்தன் தாள்கள் தாங்கி
தனி வெள்ளி வாகனமாய்த் தரணி சுற்றும்
உருக்கமிகு இக் காட்சி காண வென்று
ஓடித்தான் வருவார்கள் பக்தரெல்லாம்
வெறுக்கத்தான் நினைத்தார்க்கும் கந்தன் கோலம்
விருப்பதனை ஏற்றுகிற பெருமை என்னே?
வெல்லுகிற வேல்பிடித்து முருகன் தானும்
வீறுடனே மூர்க்கமிகு கிடாயின் மீது
வள்ளியொடு தெய்வானை சூழ வந்து
வற்றாது அருள் தந்து உள்ளம் ஈப்பான்
துள்ளுகிற நம் மனமும் ஆட்டைப் போல
துவண்டேதான் முருகனது அடியைச் சாரும்
நல்லூரின் திருவிழவில் நாமும் சென்று
நற்பயனைச் சேர்த்திடலாம் நயந்து வாரீர்.