'கன்னியாசுல்க்கம்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'கன்னியாசுல்க்கம்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
(சென்ற வாரம்)
மாற்றுக் கருத்தாளர், தம்வாதத்தைக் கீழ்க்கண்டவாறு அமைப்பர். இராமன் தசரதனது மூத்த மைந்தன் ஆதலால், அவனுக்குக் கோசல இராச்சியம் குலமரபால் உரித்தாவது. உரித்தான அவ் இராச்சியத்தை, தசரதன் இராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. இப்பாடலில் கொடுத்த பேரரசு எனக் கம்பன் தொடர் அமைத்ததால், இது தானமாய்க் கொடுக்கப்பட்ட அரசு என்றும், குலமரபால், இளையனான பரதற்கு ஆட்சியுரிமை இல்லையேனும், கன்னியாசுல்க்கத்தால்' இவ்வரசு அவனுக்குக் கொடுக்கப்பட்டதால்தான், கொடுத்த பேரரசு எனக் கூனி உரைத்தாள் என்றும் இவர்கள் வாதிடுவர்.  இப்பாடலில் வரும் கொடுத்த எனும் சொல், தானமாய்க் கொடுத்தல் எனும் பொருளையே தரும் என்பது இவர்தம் முடிபு. இக்கருத்தை ஆராய்வாம். இப்பாடலில், ஒரு மகற்கெனக் கூனி உரைப்பது யாரை? இராமனையா? பரதனையா? கேள்விக்கு விடை காணல் அவசியமாகிறது.

☀ ☀ ☀ 
யர் தமிழில் ஒரு சொல் பல பொருளைத் தருதல் இயற்கையாம்.
அவ் அடிப்படையில் ஒரு மகற்கென எனும் தொடரை,
நாம் ஆராய்தல் அவசியமாகிறது.
'ஒரு' என்ற சொல், ஒன்று என்ற எண்ணிக்கையையும்,
ஒப்பற்ற என்ற கருத்தையும் தருதலால்,
ஒரு மகன் எனும் தொடருக்கு,
நால்வரில் குறித்த ஒரு மகன் என்ற பொருளும்,
நால்வரில் ஒப்பற்ற மகன் என்ற பொருளும் பொருத்தமாய் அமையுமாம்.
நான்கு மைந்தரில் இராமனைத் தனித்துக் குறிக்கும்போது,
கம்பன், ஒப்பற்ற என்ற பொருளில் ஒரு என்ற சொல்லையிட்டு,
அவனை இனங்காட்ட நினைப்பதற்காம் முன்னுதாரணம் உண்டு.
அதனைக் காண்பாம்.

☀ ☀ ☀ 


விஸ்வாமித்திரன், தன் வேள்வி காக்க இராமனைத் தருக எனக் கேட்குமிடத்தில்,
நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி! எனக் கேட்பதாய்,
கம்பன் அமைக்குமிடம் கவனத்திற்குரியது.
கரிய செம்மல்களாய் இராமன், பரதன் இருவரும் இருப்பினும்,
விஸ்வாமித்திரன் கேட்டது இராமனையே என,
தசரதனும், சபையோரும் உணர்கின்றனர்.
இது, கம்பன் எப்பாத்திர வாயிலாகப் பேசினும்,
இராமனை ஒப்பற்றவனாய் உரைப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தான் என்பதற்காம் சான்றாம்.
எனவே, மேற்பாடலிலும் ஒரு மகன் என அவன் கூனி வாயிலாக உரைப்பது,
இராமனையே என உறுதி கொள்ளலாம்.

☀ ☀ ☀ 

இப்பாடலில் வரும் ஒரு மகன் எனும் கூற்று, கூனியின் கூற்றாம்.
இராமன்மேல் பகைகொண்ட கூனி,
இராமனை ஒப்பற்றவன் என உரைப்பாளோ? எனக் கேள்வி பிறக்கும்.
கேள்வி நியாயமானது.
இக் கேள்விக்குப் பின்வருமாறு விடை காணலாம்.
ஒப்பற்றவன் என்ற பொருளை, கூனி தன்கருத்தாய் உரைக்காமல்,
தசரதன் கருத்தாய் நினைந்து உரைத்தாள் எனப் பொருள் கொள்ள,
இந்த ஐய இடரும் நீங்கும்.
கூனியும்,
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கெனவே
கொடுத்த பேரரசு என,
தசரதன் கூற்றாகவே  ஒரு மகற்கென எனும் தொடரை அமைத்தமை வெளிப்படை.

☀ ☀ ☀ 

இனி, கொடுத்த எனும் சொல் தரும் இடருக்கு விடை காண்பாம்.
கொடுத்த எனும் சொல்லுக்கு மேற்பெரியோர் உரைத்தபடி,
தானமாய்க் கொடுத்த எனப் பொருள் கொள்ளும் கட்டாயத்தை,
அச் சொற்பொருள் உறுதியாய் வரையறை செய்யவில்லை.
தாம் நினைந்த வாதத்தை உறுதியாய் நிரூபணஞ் செய்ய,
ஒரு சொல்லுக்கான பொருள் உரைக்கையில்,
அச் சொல் அவர் உரைத்த பொருளையன்றி,
வேறு பொருளைக் கொள்ளாதிருத்தல் அவசியம்.
கொடுத்தல் எனும் சொல் அத்தகையதோர் சொல்லன்று.
அச்சொற்கு,
அணைவித்தல், ஈதல், உண்டாக்கல் என,
முப்பொருள்களை அகராதி தருகிறது.
இம் முப்பொருள்களுள் ஈதல் எனும் பொருள்கொண்டு,
மேற்பெரியோர், தம் கருத்தை முன்வைக்கின்றனர்.
இக்கருத்தையே முடிந்த கருத்தெனக் கொள்ளவேண்டிய அவசியம் ஏதுமில்லை.

☀ ☀ ☀ 

இம்முப்பொருள்களில் அணைவித்தல் எனும்
பொருளை இந்தச் சொல்லுக்காம் பொருளாக்கின்,
காவிய நோக்கத்திற்கு இடரில்லாப் பொருள் கொள்ள முடிகிறது.
அணைவித்தல் என்ற சொல்லுக்குச் சேர்ப்பித்தல் என்பது பொருளாம்.
இப்பொருள் கொண்டு நோக்க,
தான் ஆண்ட பேரரசை,
குலமரபு பற்றித் தசரதன் இராமனிடம் சேர்ப்பித்தான் எனும் பொருள்,
இலகுவாகவும், வெளிப்படையாகவும், பொருத்தமாகவும் அமைதல் கண்கூடு.
இங்ஙனமிருக்க கொடுத்தல் எனுஞ் சொல்லை, தானத்துடன் பொருத்தி,
அப்பாடல் அடிக்கு அவ்வரசு 'கன்னியாசுல்க்கத்தால்',
தானமாய்க் கொடுக்கப்பட்டது எனும் கருத்துக்கொண்டு,
அதுவே முடிந்த பொருளென உரைப்பதற்கு,
தர்க்கம் இடந்தராது என்பது வெளிப்படை.

☀ ☀ ☀ 

ஆதலால், கொடுத்த எனும் சொல்லுக்காம் விளக்கம் மட்டுமே,
அவர்தம் வாதத்தை உறுதி செய்யப் போதுமானதன்றாம்.
அச்சொல் தரும் பொருள் கொண்டே,
அவர்தம் கருத்திற்கு மாறான பொருளினையும் கொள்ளல் கூடுமாகிறது.
மாறுபட்ட இவ்விரு கருத்துகளுக்கும் அச்சொல் இடந்தரும் பட்சத்தில்,
காவிய ஓட்டமுணர்ந்து,
பாத்திரங்களையும், அறத்தினையும், கவியுள்ளத்தையும் மனங்கொண்டு,
பொருள் கோடலே பொருந்தும் செயலாம்.
அவ்வடிப்படை கொண்டு நோக்க,
பின் உரைத்த பொருளே பொருத்தத்தில் முன்னிற்பதை உணரலாம்.

☀ ☀ ☀ 

இனி,
கொடுத்த என இறந்தகாலத்தால் இப்பாடல் உரைப்பதால்,
முன்பு 'கன்னியாசுல்க்கமாய்க்' கொடுத்த எனப் பொருள் கொள்தலே பொருத்தமென,
இப் பெரியோர் வாதிடுகின்றனர்.
இவ் வாதமும் பொருத்தமானதன்றாம்.
கழிந்த நிமிடமோ, வருடமோ இறந்த காலத்தாலேயே குறிக்கப்படும்.
கைகேயி, கூனி சந்திப்பின் முன்னரே,
தசரதன் அவையைக் கூட்டி,
இராமனுக்கு இராஜ்ஜிய பாரத்தைத் தருவதாய் வாக்களித்தனன்.
எனவே, கொடுத்த எனும் இறந்த காலச்சொல்,
இராமனுக்கு அரசவையில் பேரரசு நல்கிய தசரதன் செயலையும் குறிக்குமாதலால்,
இப் பெரியோர் உரைக்கும் வாதமே
நிலைத்த வாதமெனக் கொள்ளுதல் அவசியமன்றாம்.

☀ ☀ ☀ 

தமிழில் அ,இ,உ எனும் மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துக்களாம்.
அவன், இவன், உவன்,
அது, இது, உது என,
இவ்வெழுத்துகள் சுட்டுப்பொருளைத் தரும் என்பது இலக்கணம்.
இந்தச் சுட்டெழுத்துகள்,
படர்க்கை, முன்னிலை, தன்மை என்பதான,
இட நிலைகளையும் குறிக்குமாம்.
இஃது பெரியோர் துணிபு.
அவர்தம் கருத்தின்படி,
அவன் - படர்க்கையினையும்,
இவன் - தன்மையருகினையும்,
உவன்-  முன்னிலையருகினையும் உணர்த்தும் சொற்களாம்.
இச் சொற்களுக்கு உறவு நிலை விளக்கம் தரும் ஆற்றலுமுண்டு என்கின்றனர் அறிஞர்கள்.
தமக்கு நெருங்கிய உறவானோரை இவன் எனும் சொல்லாலும்,
பிறரை, அவன், உவன் என்னும் சொற்களாலும் குறித்தல் மரபாம்.
இச் செய்திக்கு மேற்கோளாய், ஞானசம்பந்தரின் முதற் பாடலில் வரும்,
பெம்மான் இவனன்றே எனும் தொடரைக் கொள்ளலாம்.
சிவனார்க்கும், தனக்குமுள்ள உறவை வெளிப்படுத்தவே,
சம்பந்தப் பெருமான் இவன் எனும் தன்மையருகுச் சொல்லால்,
சிவனைக் குறித்தனர் என்பது இலக்கிய ஆழங்காற் கண்டார்தம் முடிவாம்.

☀ ☀ ☀ 

மேற் கருத்தேற்று,
கூனியின் கூற்றாய் அமைந்த இப்பாடலுள் மீண்டும் நுழைவாம்.
இப்பாடலில் தசரதன் தந்த இராஜ்ஜிய பாரம்,
பெற்ற மைந்தர்க்கும், அவர்தம் குலத்தார்க்கும்,
அவர்க்கு நெருக்கமாய் நின்ற தம்பிக்குமே ஆகும் என்கிறாள் கூனி.
உடையவன் ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு
அவன் குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கு ஆகுமோ?
இப்பாடலில், ஒரு மகன் எனக் கூனி உரைப்பது,
இராமனையே என்பதற்குச் சான்றாய்,
கூனி உரைத்த, அவன் எனும் சுட்டுச்சொல்லைக் கொள்ளலாம்.
பகையாய்த் தான் கருதிய இராமனை,
கூனி, அவன் எனும் படர்க்கைச் சொல்லாற் குறிப்பிடுகின்றாள்.
பரதனை அவள் உரைத்திருப்பின்,
பரதனோடு கொண்ட உளநெருக்கங் கருதி,
இவன் எனும் தன்மையருகுச் சொல்லினையே இட்டிருத்தல் வேண்டும்.
அங்ஙனமிடாது, அவன் எனக் கூனி குறிப்பதால்,
இலக்கணநுண்மை நோக்கில்,
அவள் குறிப்பது இராமனையே என்பது நிரூபணமாகிறது.

☀ ☀ ☀ 

அப்பெரியார்தம் வாதங்களுக்குத் துணையாய் அமைந்த,
அடுத்த இரு பாடல்களுள் நுழையலாம்.
காடேகிய இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வரச் செல்கிறான் பரதன்.
நாடு வந்து அரசேற்க வேண்டும் என்ற பரதனுக்கு,
இராமன் சொல்லும் சமாதானமாய் அமையும்,
இரு பாடல்களுள் முதலாமதைக் காண்பாம்.

☀ ☀ ☀ ☀ ☀ ☀ 
                                                                                                  (கன்னியாசுல்க்கம் தொடரும்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.