'உலகெலாம்...': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

'உலகெலாம்...': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-
(சென்றவாரம்)

உலகெலாம் எனும் தொடரில், 'உ' முதல் எழுத்தாகவும், 'ம்' நிறைவெழுத்தாகவும் அமைந்துள்ளது. அகர ஓசை எல்லா எழுத்துள்ளும் கலந்திருப்பதை அறிந்தோம். எனவே, அ, உ, ம் எனும் மூன்று எழுத்தோசைகளின், கலப்பாய் ஒலிக்கும் ஓங்காரமான பிரணவத்தை, 'உலகெலாம்' எனும் தொடர், தன்னுள் அடக்கியிருப்பதை உணரலாம். இவ்வுண்மையால், ஓங்காரத்திலிருந்து உலகம் பிறந்ததையும், உலகம் முழுவதுள்ளும் ஓங்காரம் கலந்திருப்பதையும், உணர்ந்துகொள்கிறோம். எனவே,  வானோசையாய் சேக்கிழார் கேட்ட உலகெலாம் எனும் தொடர், பிரணவமே எனும் உண்மை தெரியவருகிறது. முதற் பாடலின் முதலெழுத்தை, பிரணவ வடிவாய் அமைத்த சேக்கிழார், முதற் பாடலின் முதற்தொடரையும், பிரணவ வடிவமாகவே அமைத்ததை அறிந்து, நம் அகம் மகிழ்கிறது.

முதல்ப் பாடல் பிரணவம்

லகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனும்,
சேக்கிழாரின் முதற்பாடலில்,
முதலெழுத்தும் முதற்றொடரும்,
பிரணவரூபமே! எனக் கண்டோம்.
அஃதன்றி,
அப்பாடலை முழுமையாய் நோக்கினும்,
அப்பாடல் முழுவதும் கூட,
பிரணவ வடிவமாய் இருப்பதை அறியலாம்.
உலகெலாம் என உகரத்தில் ஆரம்பித்து,
வணங்குவாம் என மகரமெய்யில் அப்பாடல் முடிகிறது.
அகரம் எல்லா எழுத்துள்ளும் கலந்த உண்மையை,
முன்னரே அறிந்தோம்.
ஆகவே,
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் எனும் முழுப்பாடலுமே,
அ, உ, ம் எனும் எழுத்துக்களின் கலப்பான,
பிரணவத்தின் வடிவமே என அறியலாம்.
அஃதறிய மேலும் உவக்கிறது நம் நெஞ்சம்.

🏮🏮🏮🏮


காவியம் முழுவதும் பிரணவ வடிவமே

முதலெழுத்து, முதற்தொடர், முதற்பாடல் என்பவற்றோடு அல்லாமல்,
தொண்டர்புராணக் காவிய முழுமையையும் உற்றுநோக்க,
காவியம் முழுவதுமே பிரணவவடிவாய் அமைந்த,
பேருண்மை புரிகிறது.
பெரியபுராண காவியம்,

உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்,
நிலவுலாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்,
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

எனும் பாடலில் வரும் உகரத்துடன் தொடங்கி,

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்,
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட,
மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்,
நின்றது, எங்கும் நிலவி, உலகெலாம்.

எனும் பாடலில் வரும் மகரமெய்யுடன் நிறைவுறுகிறது.
உகரத்தில் தொடங்கி, அகரத்தை உட்படுத்தி,
மகரமெய்யில் நிறைவுறும்,
காவிய அமைப்பை நோக்க,
தொண்டர்புராணக் காவியம் முழுமையும்,
பிரணவ வடிவமே என அறிந்து,
எல்லையற்ற வியப்படைகிறது நம்நெஞ்சம்.

🏮🏮🏮🏮

திருமுறை முழுமையும் கூட
பிரணவ வடிவேயாம்

இப்பாடல் கருத்துக்குப் புறம்பாய் இருப்பினும்,
மேற்சொன்ன கருத்துக்களோடு ஒன்றியும்,
திருமுறைகளின் பெருமையுணர்த்தியும் நிற்கும்,
நுட்பம் ஒன்றினையும்,
இவ்விடத்தில் காண்பது அவசியம்.
பன்னிரு திருமுறைகளில்,
முதலாம் திருமுறையாய் அமைக்கப்பட்டது சம்பந்தர் தேவாரம்.
தோடுடைய செவியன் எனும் சம்பந்தரின் முதற்பாடலுடன்,
அம்முதற்திருமுறை தொடங்குகிறது.
பன்னிரண்டாம் திருமுறையாய் அமைக்கப்பெற்றது,
சேக்கிழாரின் பெரியபுராணம்.
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்,
எனும் அடியோடு திருமுறை நிறைவுறுகிறது.
'தோ' என்பது தகர வித்தையுடன் கூடிய ஓங்காரம்.
த் 10 ஓ ஸ்ரீ தோ
தோடுடைய எனும் சொல்லின் முதலெழுத்தில் கலந்துள்ள,
'ஓ' எனும் எழுத்துடன் தொடங்கி,
பெரியபுராணத்தின் நிறைவுத் தொடரான,
உலகெலாம் எனும் சொல்லிலுள்ள,
'ம்' எனும் எழுத்துடன்,
திருமுறைகள் நிறைவுறுகின்றன.
அவ்விரண்டு அட்சரங்களையும் இணைத்து நோக்க,
'ஓம்' எனும் பிரணவம் உருவாவதைக் காணலாம்.
எனவே, திருமுறைகள் முழுவதும் கூட,
ஓங்கார பிரணவ வடிவே என நாம் உணர்ந்து கொள்கிறோம்.
இவ்வுண்மை உணர சிலிர்க்கிறது நம் சிந்தை.

🏮🏮🏮🏮

தோத்திரத்தில் சிவனும் சீவனும்

இவ்விடத்தில்,
பெரியபுராணத்தை உள்ளடக்கிய திருமுறைத் தொகுப்பின்,
மற்றொரு சிறப்பினையும் காணல் அவசியம்.
திருமுறையின் முதற்பாடலான,
சம்பந்தப் பெருமானின்,
தோடுடைய செவியன் எனும் பாடல்,
சிவன் பெருமையை உரைக்கிறது.
முடிவுப்பாடலான,
சேக்கிழாரின்,
என்றும் இன்பம் பெருகும் எனும் பாடல்,
தொண்டர் பெருமையை உரைத்து நிற்கின்றது.
இதனால் சிவனைச் சீவன் சார அமைக்கப்பட்ட வழியே,
திருமுறைத் தொகுப்பு எனும் உண்மையை உணர்ந்து,
சைவத்தின் சாரத்தை உள்ளடக்கிய,
திருமுறைகளின் பெருமையை நாம் அறிந்துகொள்கிறோம் .

🏮🏮🏮🏮

சாத்திரத்தில் சிவனும் சீவனும்

திருமுறைகள் காட்டும் இந்நெறியினைப் பின்பற்றியே,
சைவ சித்தாந்த சாத்திரங்களும் அமைந்தன.
சைவ சித்தாந்தத்தின் முதன்நூலான சிவஞானபோதமும்,
தன் முதற்சூத்திரத்தில்,
அவன், அவள், அது எனும் அவை மூவினமையின்,
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம், ஆதி என்மனார் புலவர் என,
பதி உண்மையை உரைத்து,
நிறைவான பன்னிரண்டாம் சூத்திரத்தில்,
செம்மலன் நோன்தால், சேரஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரூஇ
மாலறு நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரணெனத் தொழுமே என,
அடியார் வழிபாட்டினை உரைத்து நிற்கிறது.
ஆதலால் சித்தாந்த சாத்திரங்களும்,
சிவனைச் சீவன் அடையும் வழியுரைப்பவையே எனும்,
உண்மை உணர்கிறோம் நாம்.
இவ்வொற்றுமையால்,
தோத்திரங்களும் சாத்திரங்களும் வழியால் வேறுபட்டாலும்,
முடிவால் ஒன்றுபட்ட உண்மை பெறப்படுகிறது.

🏮🏮🏮🏮

உலகு குறிப்பது எதனை?

உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் எனும்,
இவ்வடியில் வரும் உலகு எனும் சொல்லுக்கு,
ஆகுபெயர் இலக்கணத்தை அடிப்படையாய்க் கொண்டு,
உயிர்கள், மனிதர்கள், ஞானியர்கள் என,
மூன்று பொருள்களையும் கொள்ளலாம்.
உயிர்ப்பிறப்பு அனைத்துமே இறையின்பம் நோக்கியவையேயாம்.
ஆதலால்,
உலகு எனும் சொல்லுக்கு,
உயிர்கள் எனப் பொதுப்படப் பொருளுரைக்கினும் அது பொருந்தும்.
உணர்தலும் ஓதலும் மானுடர்க்கே உரிய தனிச்செயல்கள் ஆதலான்,
உயிர் என்றது இங்கு மானுடத்தை எனக் குறித்தலும் கூடும்.
முற்றாய் உணர்தற்கும் ஓதற்கும் உரியார் ஞானியராகலின்,
உலகம் என்றது ஞானியரையே குறிக்கும் என்று உரைக்கினும் பொருத்தமே!
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்னும் இவ் ஓரடி,
இம்மூவர்தம் வழிபாட்டு நிலைகளையும் உணர்த்தி நிற்பது,
புதுமையிலும் புதுமை.

🏮🏮🏮🏮

உணரும் முறைமை

உலகெலாம் உணர்ந்தோதற் கரியன் எனும் பாடல் அடியில் வரும்,
உலகெனும் சொல்லுக்கு உயிர்கள் எனப்பொருள் கொள்ளின்,
அரியன் எனும் சொல்லை முன்னும் கூட்டி,
உணர்தற்கும் அரியன், ஓதற்கும் அரியன் என,
உரைசெய்தல் வேண்டும்.
உலகெனும் சொல்லுக்கு மானுடர் எனப்பொருள் கொள்ளின்,
அவர் ஓதுதற்குரியர் எனினும்,
உணர்ந்து, ஓதுதல் அவர்க்கும் அருமையாம் எனப்பொருள்பட,
உணர்ந்து, ஓதற்கரியவன் என உரைசெய்தல் வேண்டும்.
உலகெனும் சொல்லுக்கு ஞானியர் எனப்பொருள் கொள்ளின்,
அந்த ஞானியர்தாமும்,
ஞானநிலையில் இறையோடு ஒன்றி,
அப்பொருளை உணர வல்லாரேயாயினும்,
உணர்ந்த அந்நிலையில் தாம் அதுவே ஆகிவிடுதலால்,
உரை இறந்துபோக,
உணர்ந்தும் அந்நிலையை உரைக்கவல்லார் அல்லராம்.
இவ்வுண்மையை,
வாக்கு இறந்து அமுதம்,
மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் எனும்,
மணிவாசகர் திருவாக்கால் அறியலாம்.
இக்கருத்தை உணர்த்த,
விகாரத்தால் தொக்க உம்மையை வெளிப்படுத்தி,
இவ் அடிக்கு,
உணர்ந்தும், ஓதற்கரியவன் என உரைசெய்தல் வேண்டும்.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்னும் ஓரடிக்குள்,
உயிர்களின் வகைகளையும்,
அவற்றின் வழிபடு நிலைகளையும் குறிப்பால் உணர்த்திய,
சேக்கிழார்தம் புலமை கண்டு திகைத்து நிற்கிறது நம் சிந்தை.

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
                                                                                                    (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.