கம்பஅறம்

கம்பஅறம்

உலகம் பொருள் வயப்பட்டது.

பொருளால் நிம்மதி கிடைத்துவிடும் என்று நம்பி,

பலரும் அதன்பின் ஓடத் தலைப்படுகின்றனர்.

வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் என்பதில் ஐயமில்லை.

அதனாற்றான் வள்ளுவனார், “பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்றார்.

ஆனால் பொருளே நிம்மதியைத் தரும் என்ற நினைப்புத் தவறானது.

செல்வத்தால் நன்மைகள் விளைவது போலவே,

தீமைகள் பல விளைவதும் நிஜமாம்.



திடீரென வரும் செல்வம்,

நம் மனநிலையை மாற்றிவிடும்.

நிலையில் திரியச் செய்து தடுமாற வைக்கும்.

வறுமையிலும், துன்பத்திலும் இருக்கும் ஒருவன்,

எப்போதும் இறைவனை நினைந்திருப்பான்.

செல்வமும், இன்பமும் வந்தால் அந் நினைப்பு மறப்பாகும்.

வறுமை மற்றவரைப் பேணச் செய்யும்.

செல்வம் மற்றவரை உதாசீனம் செய்யும்.

இங்ஙனமாய் செல்வம் தரும் தீமைகள் பற்பலவாம்.



செல்வம் ஏற்படுத்தும் மனமாற்றம்,

சாதாரணர்களை மட்டுமன்றி ஞானியர்களையும் கூடப் பாதிக்குமாம்.

இவ் உண்மையை அறப் போதனைகளில் ஒன்றாக,

கம்பநாட்டாழ்வார் எடுத்துக் காட்டுகிறார்.

அங்ஙனம் இவ் உண்மையை,

அவர் பதிவு செய்யும் இடம் சுவாரஸ்யமானது.



இந்த உயர்ந்த உண்மையை,

மிகத் தாழ்ந்த பாத்திரத்தினூடாக வெளிப்படுத்தி,

புதுமை செய்கிறார் கம்பர்.

அவ்விடத்தை விரியக் காண்பாம்.



இராமனுக்கு முடிசூட்டும் செய்தி அறிந்து,

அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்கின்றார்கள்.

ஆனால் அச் செய்தியால் ஒருத்தி மட்டும்,

வெறுப்பும், விரக்தியும் அடைகிறாள்.

அவள் பெயர் கூனி.



மந்தரை என்பது அவளது இயற்பெயர்.

அவளது உடல் வளைந்திருந்ததால்,

கூனி என்பது அவள் காரணப்பெயர் ஆயிற்று.

அக் கூனி உடலால் மட்டுமன்றி,

உள்ளத்தாலும் கோணியவள் என்று,

கம்பநாடார் அவளை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

“உள்ளமும் கோணிய கொடியாள்”



அக் கூனிக்கு இராமன்மேல் தீராத கோபம்.

இராமன், விளையாட்டாய் தன் சிறுபராயத்தில்,

அவளின் முதுகில் மண் உருண்டையால் அடித்த கோபம்,

அவளது நெஞ்சில் மாறாவடுவாய்ப் பதிந்திருந்தது.



அப் பகையைத் தன் மனதில் கொண்டு,

இராமனுக்குத் தீமை செய்யக் காத்திருந்த கூனி,

இராமனின் முடிசூட்டுவிழாச் செய்தியை அறிந்து,

அவ் விழாவைத் தடுக்க நினைக்கிறாள்.

தன் வஞ்சனை எண்ணத்தை நிறைவேற்ற,

கைகேயியைக் கருவியாக்க நினைந்து,

அவள் அரண்மனை நோக்கிச் செல்கிறாள்.



தூய சிந்தையளாகிய கைகேயி,

தனது அரண்மனையில் இருந்த வெண்மை நிறப்பஞ்சணை ஒன்றில்,

கண்ணில் கருணை பொங்க உறங்கிக் கிடக்கிறாள்.

வெண்மை நிறப் பஞ்சணையில் படுத்திருக்கும் கைகேயிக்கு,

பாற்கடலில் இருக்கும் மகாலட்சுமியை உவமையாக்குகிறார் கம்பர்.

 

“நாற்கடல் படு மணி நளினம் பூத்ததோர்

பாற்கடல் படு திரைப் பவளவல்லியே

போற் கடைக்கண் அளி பொழிய பஞ்சணை

மேற்கிடந்தாள் தனை விரைவின் நண்ணினாள்”

 



வஞ்சனையின்றி உறங்கிக்கிடந்த கைகேயியின்,

கால்களைத் தொட்டெழுப்புகிறாள் கூனி.

அச்செய்தியைக் கூறும் கவிச்சக்கரவர்த்தி,

கூனி கைகேயியை “தொட்டாள்” என்று உரையாமல்,

“தீண்டினாள்” என்றுரைத்துப் பாடலை அமைக்கின்றார்.

 

“எய்தி அக் கேகயன் மடந்தை ஏடு அவிழ்

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்

செய்த பேர் உவமைசால் செம்பொற் சீறடி

கைகளில் தீண்டினள் காலக் கோள் அனாள்”

 



கம்பர், தீண்டினாள் என உரைத்தமைக்கான காரணம் என்ன?

பாம்புதான் மற்றவர்களைத் தீண்டும்.

அது மற்றவர்களைத் தீண்டும்போது,

தன்னிடமிருந்த விஷத்தை மற்றவர்கள்மேல் ஏற்றிவிடும்.

இராமன்மேலான பகை என்னும் விஷத்தைத் தன்னுட் கொண்டிருந்த கூனி,

அதனைக் கைகேயிக்குள்ளும் ஏற்றப் போகிறாள் என்பதனை நமக்கு உணர்த்தவே,

கம்பனாடார், தீண்டினாள் என்னும் சொல்லை அவ்விடத்தில் இடுகின்றார்.



தூங்கும் கைகேயியைத் தீண்டி எழுப்பிய கூனி,

அவள் மனதை மாற்ற முற்பட்டு வஞ்சனையுடன் பேசத் தொடங்குகிறாள்.

“ராகு, கேதுக்களாகிய பாம்புகள், தன்னை விழுங்க வருவதை அறியாது,

ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும் சந்திரனைப்போல,

பெருந்துன்பம் உன்னைப் பீடிக்க வரவும்,

நீ உறங்கிக் கிடக்கின்றாயே” என்றுரைத்து,

தனது எண்ணத்தை நிறைவேற்றத் தொடங்குகிறாள்.

 

“அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்

குணம் கெடாது ஒளிவிரி குளிர் வெண் திங்கள் போல்

பிணங்கு வான் பேரிடர் பிணிக்க நண்ணவும்

உணங்கு வாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள்.”

 



கூனியின் எண்ணம் நிறைவேறவில்லை.

தூயளாகிய கைகேயி, கூனியின் வார்த்தைகள் கேட்டு,

சிறிதும் கலக்கமுறாதவளாய்,

“இராமனைப் பெற்ற எனக்கு இடரும் வருமோ?” என்கிறாள்.

 

“பராவ அரும் புதல்வரைப் பயக்க யாவரும்

உராவ அருந் துயரை விட்டு உறுதி காண்பரால்

விராவ அரும் புவிக்கெலாம் வேதமே அன

இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ? என்றாள்.”

 



இராமனுக்கெதிராய் கைகேயியைத் திருப்ப நினைந்த கூனி,

அந்த இராமனையே கைகேயி புகழ்வதைக் கண்டு சினமுறுகிறாள்.

தன் வஞ்சனை ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி,

கைகேயியின் மனதை மாற்ற மேலும் அவள் முனைகிறாள்.



மீண்டும் அவள் கைகேயியை நோக்கி அழுதபடி பேசத் தொடங்குகிறாள்.

“பெண்ணே உனது நலமும் திருவும் இன்றுடன் வீழ்ந்தது.

புத்தி உடையவளான கோசலையே இனி வாழ்வாள்” என்கிறாள்.

 

“ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்

சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள்

‘வீழ்ந்தது நின் நலம், திருவும் வீந்தது

வாழ்ந்தனள் கோசலை, மதியினால்’ என்றாள்.”

 



மாற்றாள்மேல் இருக்கும் பகையைக் கிளப்பி,

கைகேயியின் மனதை மாற்ற நினைத்த கூனி,

“கோசலை வாழ்ந்தாள்! நீ வீழ்ந்தாய்!”என்று உரைத்து,

சாதுரியத்தோடு பகை விளைக்க முயல்கிறாள்.



“உன் மாற்றாள் வாழ்ந்தாள் நீ வீழ்ந்தாய்” என கூனி கூறிய வார்த்தைகள்

கைகேயியின் மனதில் சிறியதோர் மாற்றத்தை உருவாக்குகிறது.

கைகேயி, கோசலைமீது  கொண்டிருந்த உட்பகையை,

கம்பர் வெளிப்படையாய் உரைக்காவிடினும்,

இவ்விடத்தில் அதனைக் குறிப்பால் நமக்கு உணர்த்துகிறார்.



“இராமனைப் பெற்ற எனக்கு இடர் உண்டோ” என,

சற்று முன்னர் பேசிய கைகேயி,

இப்போது, “கோசலை வாழ்ந்தாள்” எனக் கூனி சொன்னதும்,

தனது வார்த்தைகளில் சிறிய மாற்றம் செய்கிறாள்.

“மன்னர் மன்னனான தசரதர் என் கணவர்,

பெரும் புகழ் கொண்ட பரதனோ என் மகன்,

இதற்குமேல் கோசலைக்கு, என்ன வாழ்வு வந்துவிடப்போகிறது?”,

என அகங்காரத்தோடு வினவுகிறாள்.

 

“அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை,

மன்னவர் மன்னனேல் கணவன், மைந்தனேல்

பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன், பார்தனில்

என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு? என்றாள்.”



கைகேயியின் மனதில் சிறு சலனம் தோன்றியதை,

அவளது வார்த்தைகளால் உய்த்தறிந்த கூனி,

கைகேயியின் மனம் தடுமாறத் தொடங்கியதை அறிந்து,

தான் எண்ணிவந்த காரியத்தைத் தொடர்கிறாள்.



“கோசலைக்கு என்ன வாழ்வு வந்துவிட்டது?”

எனக் கேட்ட கைகேயியை நோக்கி,

இராமனுக்கு முடிசூட்டுவிழா நிச்சயமான செய்தியை,

அவன்மேல் வெறுப்பேற்படும்படி எடுத்துரைக்கின்றாள் அவள்.

“ஆடவர்கள் நகைக்கும்படியாகவும், ஆண்மை மாசுறும்படியாகவும்,

தாடகை என்ற பெண்ணைக் கொன்ற இராமனுக்கு,

நாளை முடிசூட்டப் போகிறார்களாம்,

அதுதான் கோசலைக்கு வந்த வாழ்வு” என்கிறாள்.

 

“ஆடவர் நகை உற, ஆண்மை மாசு உற,

தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,

கோடிய வரி சிலை இராமன் கோமுடி

சூடுவன் நாளை வாழ்வு இது” எனக் கூறினாள்.



ஆனால் மீண்டும் கூனியின் எண்ணம் தவறுகிறது.

கைகேயி கோசலையை வெறுத்தாளேயன்றி,

இராமன்மீதான அவள் அன்பில் துளியளவேனும் குறை இருக்கவில்லை.

அதனால் வஞ்சனையற்ற கைகேயியின் மனம்,

இராமன் முடிசூடப்போகிறான் எனக் கூனி சொன்ன செய்தி கேட்டு மகிழ்கிறது.

நற்செய்தி சொன்ன கூனியைப் பாராட்டி,

அவளுக்கு ஒளி பொருந்திய ஓர் மாலையை,

பரிசாய் அளிக்கிறாள் அவள்.

 

“ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ

தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற

தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்

நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்”

 



அதுகண்டு ஆத்திரப்பட்ட கூனி,

தன் எண்ணம் ஈடேறாததை அறிந்து சினமுறுகிறாள்.

எப்படியும் கைகேயியின் மனதை மாற்ற வேண்டும் நினைந்த அவள்,

தனது வஞ்சனை நாடகத்தை வலிமைப்படுத்துகிறாள்.

கடுங்கோபத்துடன் கைகேயி தந்த அம்மாலையை நிலத்தில் வீசி எறிகிறாள்.

 

“அழித்தனள், அழுதனள் அம் பொன் மாலையால்

குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே”



தன் முயற்சியில் ஓயாத கூனி,

இராமன் முடிசூட்டினால் பரதன் சிறுமையுறுவான் என்பதற்கான,

பல காரணங்களை அடுக்கத் தொடங்குகிறாள்.

கைகேயியை, “பேதை நீ!, பித்தி நீ!” என்று திட்டிய அவள்,

“சீதையும் இராமனும் சிம்மாசனத்தில் இருக்க,

உன் மகன் பரதன் வெற்று நிலத்தில் இருப்பதைக் கண்டு,

மகிழப் போகிறாயோ?” என்றும்,

“பாக்கியம் புரிந்திலாதவன் நம் பரதன்” என்றும்,

“பரதனுக்குத் தந்தையும் கொடியன், தாயும் தீயள்” என்றும்,

“கல்வியும் இளமையும் கணக்கிலா ஆற்றலும்,

வில் அதன் வலிமையும் வீரமும் அழகும்,

எல்லையில் நற்குணங்களும் பரதனுக்கு இருந்து என்ன பயன்?

அவையெல்லாம் புல்லிலே ஊற்றிய அமுதம் போலாயிற்றே” என்றும் கூறி,

கைகேயியை மனம்மாற்ற முனைகிறாள் அவள்.



இராமனைத் தாழ்த்திக் கூறிய கூனியின் வார்த்தைகளைக் கேட்ட கைகேயி,

கோபமுறுகிறாள். - அவளது கண்கள் சிவக்கின்றன.

கூனியை “மதியில்லா மனத்தவளே!” என விளித்த கைகேயி,

“நீ எனக்கோ, என் மகன் பரதனுக்கோ,

ஏன் உனக்கேகூட நல்லவள் அல்லை.

ஊழ்வினை தூண்ட இங்ஙனம் பேசினாய்,

ஆதலால் என் எதிரே நிற்காது போய்விடு!,

தோழி என்ற காரணத்தால், உன் நாவை அறுக்காது நான் பொறுத்தேன்.

நீதியற்றதுவும் நெறியற்றதுவுமான விடயங்களை நினைந்தவளே!,

அறிவிலி! அடங்கு!” எனக் கொதித்தாள்.

 

‘எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன்

தனக்கு நல்லையும் அல்லை அத் தருமமே நோக்கின்

உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட

மனக்கு நல்லன சொல்லினை மதி இலா மனத்தோய்!’

 

‘போதி, என் எதிர் நின்று நின் புன் பொறி நாவைச்

சேதியாது இது பொறுத்தனன், புறம் சிலர் அறியின்,

நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய்

ஆதி, ஆதலின், அறிவு இலி! அடங்குதி’ என்றாள்.

 



கைகேயியின் கோபம் கண்டும் கூனி அடங்கினாள் அல்லல்.

அவள், தொடர்ந்து கைகேயியின் மனதை மாற்ற முனைகிறாள்.

“இராமன் ஆண்டால் கோசலை வாழ்வாள்,

இங்கு அனைத்தும் அவள் உரிமையாகும்,

உன் பிள்ளையும் நீயும் அவர்களிடம் இரந்து வாழவேண்டியதுதான்,

என்றெல்லாம் பலவற்றையும் அவள் கூற,

கைகேயியின் தூய சிந்தையும் திரியலாயிற்று.

 

“தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி

தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,

ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.”

 



இவ்விடத்தில்த்தான் கம்பர் பெருமான்,

நான் இக்கட்டுரையின் முன்னுரையில் சொன்ன,

செல்வம் அனைவரது மனதையும் மாற்றிவிடும்,

என்பதான உண்மையை கூனியின் வார்த்தையாகப் பதிவு செய்கிறார்.

கைகேயியின் மனதை மாற்ற கூனி உரைத்த செய்திகளில் ஒன்றாய்,

மேற்செய்தியையும் அவர் பதிவிடுகிறார்.



 “இராமன் ஆட்சியைப் பெற்றதும்,

கோசலை முதலானோரின் மனநிலை நிச்சயம் மாறும் என்று உரைத்த கூனி,

செல்வத்தால் மனம் மாறும் என்பதனை வலியுறுத்த நினைந்து,

செல்வம் வந்துவிட்டால் துறவிகளின் மனமும் மாறுபடும் என உரைக்கின்றாள்.

 

“அறன் நிரம்பிய அருளுடை அருந் தவர்க்கேனும்

பெறல் அருந் திருப் பெற்றபின், சிந்தனை பிறிதாம்,

மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்

இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல்.”

 



ஒரு யதார்த்த உண்மையைப் பதிவு செய்ய,

கம்பர் தேர்ந்தெடுத்த இடம் நம்மை வியக்க வைக்கிறது.

பொருள் அறத்தை விளக்கம் செய்ய நினைந்த அவர்,

ஒரு தீய பாத்திரம் தனது தீய எண்ணத்தை,

வெளிப்படுத்தும் இடத்தைத் தேர்ந்து,

அதில் இந்த நல்ல கருத்தைப் பதிவு செய்வது புதுமை.

கம்பரின் வித்தகம் கண்டு வியப்புறுகிறோம் நாம்.



 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.