எறிகணை 32

எறிகணை 32
எறிகணை 16 May 2026

கேள்வி :

விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்:

வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்? ஆனால் அதைச் சொன்னபிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றிகள், தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பாடுபடவேண்டியிருக்கும். விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

மக்;கள்தொண்டு, சிறந்தஇலட்சியம், கொள்கைப்பிடிப்பு, கொடைத்தன்மை, தனிவாழ்வுத்தூய்மை போன்ற எதுவும் இல்லாமல் கிடைத்திருக்கும் வெற்றியை, அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லை, மக்கள் விஜய்க்கு அளித்திருக்கும் இந்த வெற்றியை, அவர்மீதான பற்றுதலால் மட்டும் விளைந்தது என்று சொல்ல முடியாது. அது பழைய ஆட்சியாளர்களின் மீதான பகையாலும் விளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் இதுவரை தனது தலைமைப்பண்பை, சினிமாவில் மட்டுந்தான் காட்டியிருக்கிறார். நிஜத்தில் அதனை இதுவரை அவர் காட்டியதாய்த் தெரியவில்லை. பதவியேற்றதன் பின்னான  இந்த சில நாட்களிலும் அவரது அப்பண்பு முழுமையாய் வெளிப்படவில்லை.

பதவி ஏற்பின்போது அவர் பேசியவிதத்திலும், ஊழியர்களோடு சேர்ந்து மேசை தூக்கிய விதத்திலும், நாடகத்தன்மை தான் மேலிட்டுத் தோன்றியது. அன்று கம்பீரமாய் அவர் பேசிய பேச்சில், இயற்கையைவிட செயற்கையே அதிகரித்திருந்தது. அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது, “பாகுபலியை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழினத் தலைவராய் சட்டசபைக்குள், “கோர்ட்டும் சூட்டுமாய்” அவர் நுழைந்த விதம் ரசிக்கும்படியாய் இல்லை. அத்தனை பேரும் தமிழர் கலாசார உடையில் இருக்க, முதல்வர் மட்டும் மேற்கத்தைய உடையில் வந்ததன் காரணம் புரியவில்லை. இவ் உடை, ஒருவேளை இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது அவரை, ஒரு தமிழ்த் தலைவராய்ப் பாமரமக்களின் நெஞ்சில் பதிய விடாதென்றே தோன்றுகிறது.

அடுத்து, விமர்சனத்துக்குரிய அவரது தோழிக்கு பதவியேற்பு வைபவத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெருமைக்குரிய ஒன்றாய்த் தோன்றவில்லை. இன்னொரு ஜெயலலிதா உருவாக்கப்படுகிறாரோ? என்று எண்ணத் தோன்றியது. அரசியலில் புதியபாதை அமைக்க நினைக்கும் விஜய், தன் தனிவாழ்வில் பழைய தலைவர்களின் பாதையிலேயே நடக்க நினைப்பது துரதிஷ்டமே!

பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆசிபெற்ற செயலில் அரசியற்பண்பாடு இருந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது உண்மையெனின், அவர் எடப்பாடிபழனிச்சாமி அவர்களையும் சந்தித்திருக்கவேண்டும். அங்ஙனம் சந்திக்காததால், அவரது மற்றைய சந்திப்புக்களெல்லாம் தனது பதவி நிலைப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே கருத வேண்டியிருக்கிறது.

தனது ஆஸ்தான சோதிடரை உதவியாளராய் நியமித்து, பின் மற்றவர்களின் எதிர்ப்பால், அவருக்குக் கொடுத்த பதவியை இரத்துச் செய்தவிதம், அவரது எண்ணித் துணியாத இயல்பை வெளிப்படுத்தியது.

சட்டசபையில் விஜய்யை வைத்துக்கொண்டே, அவரையும் அவரது கட்சியின் செயற்பாட்டையும் உதயநிதி வெகு சாவகாசமாக இழித்துரைத்தபோது, அதனை உடன் எதிர்கொள்ளாமல், விஜய் தலைகவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தவிதம் எரிச்சலூட்டியது.

அந்த இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை. “பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்குமாம்” என்ற கதைதான். சபையில் பதிலுரைக்காமல், பின்னர் உதயநிதியின் தூற்றுதலுக்கான எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கும் விதம் மதிப்புக்குரியதாய் இல்லை.

மேலதிக வாக்குகளுக்காக, பழைய பகைவர்களிடம் கையேந்தினால், இப்படித்தான் இருக்க வேண்டிவரும். “நக்கினார் நாவிழந்தார்” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

சிங்கம், முயல், புலி, மான், பாம்பு, கீரி, நாய், பூனை என ஒன்றுக்கொன்று பகையான அனைத்தையும் ஒரு கூட்டிற்குள் அடைத்து, அக்கூட்டின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அதனால் தினம்தினம் அவரது சிம்மாசனம் ஆடிக் கொண்டுதான் இருக்கப்போகிறது.

நிர்வாகம் என்பது இலேசான வேலையில்லை. இலட்சியங்களைச் சுலபமாக வாயால் பேசிவிடலாம். அவற்றை நிறைவேற்றுவதில்த்தான் ஆளுமை தங்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அவர் இட்டிருக்கும் சில கட்டளைகள் மகிழ்வு தருவதென்னவோ உண்மைதான். ஆனால், அவற்றை அவரால் தொடர்ந்து உறுதியாய்க் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.

விஜய்க்கு இனி சம்பாதிக்க வேண்டிய தேவையேதுமில்லை என்பது நிஜமே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களை வைத்துக்கொண்டு, இவரால் தூய அரசியல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே! மிளகாய்ப் பொடியை போட்டு, பாயாசத்தை இனிக்க வைப்பேன் என்பதுபோல்த்தான் இதுவும் இருக்கிறது. “மந்திரத்தால் மாங்காய் விழுத்தத்” தெரிந்தால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். 

சினிமாக் கதாநாயகனான விஜய்யை, உண்மைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டுதான், இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டிருக்கிறது. மாற்றம் வேண்டியே தமிழ்நாட்டுமக்கள் விஜய்யை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அவர்களைத் திருப்திசெய்ய, விஜய் நிறையப்போராட வேண்டியிருக்கப்போகிறது. மேற்சொன்னவற்றை நிதர்சனம் உணர்ந்தே கூறியிருக்கிறேன். இத்தகைய  எதிர்ப்புக் கடல்களை விஜய் நீந்திக் கடப்பாரானால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். 

 

கேள்வி :

கூட்டமைப்பிலிருந்து பிரிந்துபோன மற்றைய கட்சிகளைத் தமிழரசுக்கட்சி மீண்டும் ஒன்றிணைக்க முயல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

நல்ல விடயம் தான். இப்போதாவது  ஒற்றுமையின்  தேவையை அவர்கள் உணர்ந்தது மகிழ்ச்சி தருகிறது. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று நம் பெரியவர்கள் சும்மாவொன்றும் சொல்லவில்லை.

ஒற்றுமை முயற்சிகளைச் சிலர் எதிர்க்கத் தலைப்படுகிறார்கள். “தூய்மைவாதம்” பேசும் அவர்களின் நெஞ்சில் உண்மை இருப்பதாய்த் தோன்றவில்லை. தமது சுயநலம் நோக்கிய அவர்களது செயற்பாடு, நம் இனத்தை மேலும் கீழிறக்கப்போகிறது. இத்தகையோரை இனங்கண்டு ஒதுக்கவேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும்.

ஒரு பொது எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் அனைவரும் ஒன்றுபடாமல் ஆளுக்காள் முரண்பட்டு நிற்பதைப்போல ஒரு மூடத்தனம் இருக்க முடியுமா?  சாத்வீகமும் தோற்று, வன்முறையும் தோற்றுப்போய் நிற்கின்ற இந்த இக்கட்டான நேரத்தில், தம் சுயநலத்திற்காகப்  பகை விளைவித்துக் கொண்டிருக்கிற அனைவரையும் நான் இனத்துரோகிகள் என்றுதான் சொல்வேன்.

கேள்வி :

விருது பெற்ற ஜனாதிபதி உங்களைக் கவர்ந்தாரா?

பதில்:

கவர்ந்ததால்த்தானே விருது பெற்றார்.

 

கேள்வி :

முன்பு ஈ.பி.டி.பி  கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களை, தமிழரசுக்கட்சியில்  இணைத்தால், அவரோடு தன்னால் இணைந்து பயணிக்கமுடியாது என்று, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரன் போர்க்கொடி தூக்கியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

இப்போது மட்டும்  அவர் தமிழரசுச்கட்சியோடு  இணைந்து பயணிக்கிறாரா என்ன? ஸ்ரீதரன் அனைவரோடும் பகை வளர்க்கும் தன்மையை குறைத்துக் கொள்வது நல்லது. அவர் தனக்குத்தானே “புலிமுத்திரை” குத்திக்கொண்டு, புலிகளின் பிரதிநிதியாய் தன்னைப் பிரகடனப்படுத்திச்  செயற்படப் பார்க்கிறார்.

அதுகூடப் பரவாயில்லை. ஆனால் அந்த “லைசென்சைக்” காட்டி மற்றவர்களையெல்லாம் இனத்துரோகியாய் அடையாளப்படுத்த அவர் நினைப்பது பெரும் தவறு.

“குற்றம்” என்று பார்த்தால் போராளிக் குழுக்களைச் சார்ந்த எவரும் அப்பழியிலிருந்து முழுமையாகத் தப்பமுடியாது என்பது நிச்சயம். தவறுகளையெல்லாம் மறந்துதான், புலிகளே மாற்று இயக்கத்தலைவர்களை கூட்டமைப்புக்குள் உள் வாங்கினார்கள்.

அப்படியிருக்க பழையவற்றைச் சொல்லி, மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரை  புறந்தள்ள நினைப்பது, புத்திசாலித்தனமான செயலல்ல. சந்திரகுமாரை தமிழரசுக்கட்சியுடன் இணைத்தால் அவரின் ஆதரவாளர்களால் தமிழரசுக்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்பது உண்மை. அவரது மக்கள்பலம், ஸ்ரீதரனின் மக்கள் பலத்தை நிச்சயம் பாதிக்கதென்றே நான் நினைக்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.