கம்பன் ஏமாந்தான்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

கம்பன் ஏமாந்தான்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
லகம் வியக்கும் கம்பகாவியத்தை,
 
ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் கம்பர்.
திருமால்மீது கொண்ட பக்தியினால்,
வைஷ்ணவர்கள் இது நம் காவியம் என உரிமை கொண்டாடி,
கம்பனைச் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அப்பால்,
தமிழ்மேல் கொண்ட காதலை தவிர்க்க முடியாது,
சைவர்களும் பெருந்திரளாய் அங்கு திரண்டிருக்கின்றனர்.
வைஷ்ணவர்கள் சமயத்தால் உரிமை கொண்டாட,
சைவர்கள் தமிழால் உரிமை கொண்டாட,
இருவரையும் திருப்தி செய்து,
காவியத்தை அரங்கேற்றுகிறான் கம்பநாடன்.
 
✠✠✠✠✠
 

பாடும் கதை திருமாலைப் பற்றியதேயானாலும்,
கம்பர் மதம் கடந்த மனநிலையிலேயே,
அக்காவியத்தைப் பாடி அரங்கேற்றுகின்றார்.
மூலப்பரம்பொருளைத் தரிசிப்பார்தம் மனதில்,
சிவன் என்றோ, திருமால் என்றோ வேறுபாடு விளையுமா?
கம்பனுக்கு, திருமால்தான் சிவன்.
சிவன்தான் திருமால்.
பாடுபவன் மனநிலை இது.
கேட்பவர் மனநிலையோ வேறுபட்டிருந்தது.
காவிய நாயகன் திருமாலே என்பதால்,
வைணவர்கள் அதில் முதல் உரிமை கொண்டாடி,
முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
தம்முடைய வைணவப் பற்றால்,
பின் வரிசையில் அமர்ந்திருந்த சைவர்களை இடையிடையே பார்த்து,
'இது நம்மவரது சொத்து உமக்கு இங்கு என்ன வேலை?' என்னும் குறிப்புக்காட்டி,
வாய்க்குள் நமட்டுச் சிரிப்பு வேறு.
கம்பன் கண்களில் இக்காட்சி பட்டது. 
 
✠✠✠✠✠

ஒன்றேயான அவ் உயர்பொருளை,
தத்தம் அறிவுக்குறைபாட்டால் வௌ;வேறாக்கி,
மதச்சண்டை செய்யும் அம்மாண்பிலார்தம் செயற்பாட்டில்,
கம்பனுக்கு உடன்பாடில்லை.
அதனால் அவன் சற்று எரிச்சலுற்றான்.
வம்பனல்லவா அவன்!
அவ்வம்பு அவர்தம்மோடு அவனை விளையாடத் தூண்டிற்று.
விளையாடத் தொடங்கினான்.
 
✠✠✠✠✠

கம்பன் அயோத்தியா காண்டம் சொல்லிக் கொண்டிருந்த வேளை அது.
ஏலவே பாலகாண்டம் சொன்னபோது ஆற்றுப்படலத்தில்,
சிவன், திருமால் எனும் வேற்றுமையைக் கடிந்து வலியுறுத்தி,
ஓர் பாடல் செய்திருந்தான் அவன்.
மேகம் ஒன்று வான்வெளியே சென்று,
கடலின் நீரைப் பருகி மீள்கிறது.
இச் செய்தியைச் சொல்லவந்த கம்பன்,
சிவன், திருமால் என மோதிக்கொள்ளும் குறைமதியாளர் இருபாலார்க்கும்,
அவ்விருவரும் ஒருவரே எனும் செய்தியை வலியுறுத்திச் சொல்ல நினைக்கிறான்.
வெளிப்பட அச்செய்தியைச் சொன்னால்,
அவ்விடத்திலேயே மதச்சண்டை வெடிக்கும் என அறிந்த அவன்,
மேற் சொன்ன மேகம் பற்றிய செய்தியை உரைக்கையில்,
தான் சொல்ல நினைந்த கருத்தை உட்புகுத்தி,
அப்பாடலைப் பாடுகிறான்.
கம்பனின் வர்ணனை விசித்திரமாய்த் தொடங்குகிறது.
 
✠✠✠✠✠
நீரின்றி வெண்ணிறமாய் வந்த மேகம்,
திருநீறணிந்த சிவபெருமானைப்போல் இருந்தது என்றும்,
பின் அது கடல் நீரைக் குடித்து கருநிறமாய் எழுந்தபோது,
நீலவண்ணனான திருமாலைப் போல் மீண்டது என்றும் உரைத்து,
சிவனும் திருமாலும் ஒருவரே எனும் அடிப்படையை உணர்த்தினான்.
 
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
 
இப்பாடலில் வரும், 
ஆறு அணிந்து சென்று, என்ற தொடருக்கு,
ஆற்றை அணிந்து சென்று என்ற அர்த்தம் வர,
தலையில் கங்கையாற்றைச் சூடிய சிவன் என, 
அத்தொடருக்கு விளக்கம் அமைகிறது.
அஃதன்றி ஆறு என்ற சொல்லுக்கு வழி என்ற அர்த்தத்தைப் பொருத்திப் பார்க்க,
மேகம் அவ்வழியை அண்மித்துச் சென்று என்ற அர்த்தத்தை அவ் அடி தருகிறது.
இவ்விதமாய்க் கம்பன் பாடலை அமைத்த விதம் அழகிலும் அழகாம்.
அகில் சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் வீறு அணிந்தவன் என,
திருமால் மகாலட்சுமியைக் தன் மார்பில் அமர்த்திக்கொண்ட செய்தியையும்,
இப்பாடலின் ஈற்றடிகளில் கம்பன் பதிவு செய்கிறான்.
 
✠✠✠✠✠
 
திருமாலே சிவன். சிவனே திருமால் என,
உரைத்துவிட்ட நிறைவில் கம்பருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் கம்பர்தம் எண்ணம் ஈடேறவில்லை.
கம்பனின் மேற்பாடலைக் கண்டும் உண்மை உணராமல்,
சைவம், வைணவம் இரண்டினதும் ஆழம் உணரா அறிவிலிகள் சிலர்,
அப்பாடலையே சான்றாய்க் கொண்டு தம் சர்ச்சையைத் தொடர்ந்தனர்.
'பார்த்தீரோ! எங்கள் சிவனார் தாம் உங்கள் திருமால் ஆகிறார்' என அச்சைவர்களும்,
உலகுயிர்க்குக் கருணை  செய்ய,
திருமாலாய் ஆகினால்த்தான் முடியுமென அறிந்து,
'உங்கள் சிவனார் திருமாலான அதிசயத்தைக் கண்டீரோ' என வைஷ்ணவரும்,
தம்வாதத்தின் வலிமைக்கு,
மத ஒற்றுமைக்காய்க் கம்பன் பாடிய அப்பாடலையே,
சான்றாக்கி முரண்பட்டனர்.
காவிய அரங்கேற்றம் தொடங்கிய வேளையில்,
இதை மேலும் விரித்தல் ஆகாது என நினைந்த கம்பன்,
அப்போதைக்கு மௌனித்தான்.
 
✠✠✠✠✠
 
ஆனாலும் சைவர், வைணவர்க்கிடையிலான வேறுபாட்டை,
ஒழிக்கவேண்டும் எனும் எண்ணம் கம்பன் மனதைவிட்டு நீங்கவில்லை.
அதற்கான சந்தர்ப்பம்,
அயோத்தியா காண்டம் கங்கைப்படலத்தில்,
மீண்டும் வந்து சேர்ந்தது.
 
✠✠✠✠✠
 
கைகேயி வரம் வேண்ட, தசரதன் அளித்த வாக்கினால்,
முடி இழந்த இராமன் காட்டினுள் நுழைகிறான்.
கோசல நகரத்தைக் கடந்து,
அந்நாட்டின் தென் எல்லையிலுள்ள,
கங்கைக் கரையை அடைகிறான் அவன்.
வந்த இராமனை அங்குள்ள முனிவர்கள் வரவேற்று உபசரிக்கின்றனர்.
அவர்கள் இராமனை அமுதுண்ண வேண்டி,
அதன்முன் 'நீராடி அக்கினி காரியம் செய்து வருக' என,
வேண்டுகின்றனர்.
 
காயும், கானில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர், 'தோன்றல்! நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை,
தீயை ஓம்பினை, செய் அமுது' என்றனர்.
 
✠✠✠✠✠
 
இராமன் சீதையின் கைபற்றி, கங்கையில் நீராட இறங்குகிறான்.
கங்கைக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.
ஜீவநதியான அக்கங்காதேவி கைகூப்பி இராமனைத் தொழுகின்றாள்.
இவ்வுலகத்தவர் நீக்கமுடியாத பாவங்களைச் செய்து,
பின் அப்பாவங்களை என்னில் மூழ்கி நீக்குவர்.
அங்ஙனமாய் அவர்தம்மால் என்னுள் நிறைந்து கிடந்த பாவங்களையெல்லாம்,
நீ என்னில் மூழ்கிய காரணத்தால் யான் நீக்கித் தூய்மையுற்றேன் என்றுரைத்து,
மகிழ்கிறாள் கங்கை.
 
கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா,
'பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவார், யானும், இன்று என் தந்த
உன்னின் நீக்கனென், உய்ந்தனென் யான்' என்றாள்.
 
✠✠✠✠✠
 
இப்போது சீதை பார்த்திருக்க இராமன்,
கங்கையில் இறங்கி நீராடுகிறான்.
இச்செய்தியைச் சொல்லத் தொடங்குகிறான் கம்பன்.
அவன் மனதில் திடீரென ஒரு மின்னல்.
இவ்விடத்தில் மீண்டும் திருமாலைச் சிவனாய்க் காட்டி,
மதப்பகை நீக்கினால் என்ன? 
எண்ணம் வர உற்சாகமாகிறான் கம்பன்.
இராமன் நீராடும் காட்சியை இரட்டை அர்த்தத்தில் பாடத் தொடங்குகிறான்.
முதலில் பாடலையும்,
பின்னர் கம்பன் அப்பாடலுக்குக் காட்டும் இரட்டை அர்த்தத்தையும் காண்பாம்.
 
✠✠✠✠✠
 
வெங் கண் நாகக் கரத்தினன், வெண்  நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை 
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
 
சீதை காண இராமன் நீராடுவது காவியக்காட்சி அது.
அக்காட்சியை மனங்கொண்டு,
முதலில் இக்காவியக் காட்சிக்குப் பொருத்தமாக,
கம்பன் தரும் பாடல் அர்த்தத்தினைக் காண்பாம்.
வெங் கண் நாகக் கரத்தினன், -கொடிய கண்ணை உடைய,
யானையின் துதிக்கை போன்ற கையை உடையவனும்.
வெண்  நிறக்கங்கை வார் சடைக் கற்றையன், -வெண்ணிறமுள்ள,
கங்கையின் நீர் ஒழுகப்பெற்ற சடாமுடியோடு நிற்பவனுமான இராமன்,
கற்புடை மங்கை காண நின்று ஆடுகின்றான்,- கற்புடையவளான சீதை,
காணும்படியாக நின்று நீராடுகின்றான்.
வகிர்த் திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.- அங்ஙனம் நீராடிய இராமன்,
சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போலத் தோன்றினான்.
இஃது பாடலுக்கான முதல் அர்த்தம்.
 
✠✠✠✠✠
 
மேற்சொன்ன அர்த்தத்தின்படி,
பாடலின் முதல் மூன்று அடிகளும் நீராடும் இராமனை வர்ணித்து,
பாடலின் நிறைவு அடி அவன் சிவன்போல நின்றான் என்று உரைக்கிறது.
இனி இரட்டுற மொழியும் இப்பாடலுக்காம் அடுத்த அர்த்தத்தில்,
அதே முதல் மூன்று அடிகளையும் கூட சிவனுக்கே ஆக்கும் வண்ணம்,
கம்பன் அமைத்திருக்கும் அழகைக்காண்பாம்.
 
✠✠✠✠✠
 
வெங் கண் நாகக் கரத்தினன், - கொடிய கண்களையுடைய,
நாகத்தைக் கரத்தில் பூண்டவனும்,
வெண்  நிறக்கங்கை வார் சடைக் கற்றையன், - வெண்ணிறம் கொண்ட கங்கை,
பாய்கின்ற சடாமுடியைக் கொண்டவனும்,
கற்புடை மங்கை காண நின்று ஆடுகின்றான்,- கற்புடைய பார்வதிதேவி காணுமாறு,
தில்லையில் ஆடுகின்றவனுமாகிய 
வகிர்த் திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.- பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய,
செல்வனாகிய சிவனைப் போல் தோன்றினான்.
இஃது இப்பாடலுக்கான இரண்டாவது அர்த்தம்.
 
✠✠✠✠✠
இங்ஙனமாக இராமனைச் சிவனாக உவமித்துக் கம்பன் பாட,
கூடி இருந்த வைஷ்ணவர்கள் முகம் சுருங்கிற்று.
சைவர்கள் முகத்திலோ ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்.
'உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை' எனும்,
இலக்கணச் சூத்திரத்தை வைத்து,
உண்மையை விட உவமை சிறந்தது எனும் கருத்தைக் கொண்டு,
கம்பன் இராமனுக்கு உவமையாய்ச் சிவனைக் கூறிய காரணத்தினால்,
சிவனே உயர்ந்தவன் என அவர்கள் கோஷிக்கத் தொடங்கினர்.
 
✠✠✠✠✠
 
கம்பரின்பாடு சங்கடமாயிற்று.
சிவனையும் திருமாலையும் ஒன்றெனக் காட்டும்,
தனது முயற்சி தோற்றுப்போக, கம்பர் சோர்வுற்றார்.
ஆன்மவளர்ச்சியுறாதவர் மத்தியில்,
ஆண்டவனில் வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் எனும்,
உண்மையை  உணர்ந்தார் கம்பர்.
'காணாதான் காட்டுவான் தான் காணான்.
காணாதான் காண்பானாம் தான் கண்டவாறு' எனும் குறள்,
அவர் நினைவில் வர நாணிற்று அவர் மனம்.
அப்போதைக்குத் தன் முயற்சியைக் கைவிட நினைந்தார் அவர்.
இருவரையும் திருப்தியுறச் செய்ய நினைந்து,
ஒருவரும் திருப்தியுறாமல் போவதைவிட,
யாரோ ஒருவரேனும் திருப்தியுறட்டும் எனும் எண்ணம்,
கம்பர் மனதில் தோன்றியது.
உடனேயே தன் பாதையை மாற்றுகிறார் அவர்.
 
✠✠✠✠✠
 
இராமனைத் திருமாலாகவே முழுவதும் வர்ணிக்கும்படி,
மேற்சொன்ன பாடலுக்கு அடுத்தபாடலை அமைக்கிறார் கம்பர்.
வெண்ணிறமுள்ள கங்காநதியின் அலைகளின் நடுவில்,
இராமபிரான் சீதாதேவியோடும் நின்றது,
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனான திருமால்,
தான் பள்ளி கொண்டிருத்தலை விட்டு,
இலக்குமி தேவியோடும் எழுந்து நிற்கும் தன்மையையும் ஒத்தது என்று,
இப்பாடலில் அவர் பேச,
வைணவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி.
 
தள்ளும் நீர்ப் பெருங் கங்கை தரங்கத்தால்,
வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெண் நிறப் பாற் கடல் மேலைநாள்,
பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான்.
 
✠✠✠✠✠
 
கம்பனின் வர்ணனையால்,
திருமாலும் சிவனும் ஒன்றென நினைந்த உயர்ந்தோர்,
ஒன்றி உணர்ந்து உவந்தனர்.
உணராரும் உணராதாராய் வேற்றுமை விரித்து மகிழ்ந்தனர்.
கம்பனின் அரங்கேற்றம் தொடர்ந்தது.
அவ் அற்புதக் காவியத்தை,
திருமாலுக்காய் வைஷ்ணவர்களும், தமிழுக்காய் சைவர்களும்,
பேதம் மறந்து மீண்டும் ரசிக்கத் தொடங்கினர். 
 
✠✠✠✠✠
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.