மற்றவர்க்காய்ப் பட்ட துயர் - மஹாகவி து.உருத்திரமூர்த்தி
கவிதை முற்றம் 28 Jul 2019
'போகட்டும் ' என்று சொல்லிக்
காட்டர் கொடி எடுக்துக் காட்டக்,
கனைத்தபடி
ஒட்டம் தொடங்கிற்று உயிர் பெற் றொருவண்டி
கட்டிடங்கள் கீரைக் கழனிகளாய், நீள் கடல்போல்
வெட்ட வெளியாய் வெறும் புல் அளவே போல்
நெட்டை நிலங்களிலே நிற்கின்ற தென்னைகளாய்,
மாறிவரக் கண்டு மனம்விட் டிருக்கையிலே
காறி உமிழ்வதற்கென் யன்னற் கதவிடுக்கில்
வேறெருவன் நீட்டும் தலைகண்டேன்.
வெள்ளை மயிர் !
பாவம், கிழவன், பழுத்த உடல் மீது
சாவின் வெளுப்பு, சளியோடு வெற்றிலையின்
காவி நீர் துப்பிக் கடைவாய் துடையாமல்,
நிற்கின்றான் மீண்டும் நிமிர்ந்தும், நிமிராமல்.
கற்கொண்ட நெஞ்சம்
கனிவுண்டெழுந்து கொண்டு உட்கார விட்டேன்,
உவகையோ டுட்கார்ந்தான்.
வண்டி முழுதும் சனங்கள்,
வலதுகையை
மிண்டு கொடுத்து, விழிமுன் மரச்சுவரே
கண்டபடி நின்ற என் கால்கள் கடுத்தன.
யன்னலிலே வைத்த கரத்தில் தலை சாய்த்துச்
சின்னக் கிழவனோ சிற்றுலகை முற்றும் மறந்து
என்ன நினைவும் இல்லாமல்
துயின்றிருந்தான்.
ஆதலினல் இன்பம் அடைந்தேனோ ?
அப்பனே,
வேதனையிற் கூட விளையும் சுகம் உளதோ ?
சாதலிலும் பேரின்பம்
காணல் தகும்போலும் ?
எட்டுமணிமணி நேரம்
எழுந்து நின்ற அவ்வளவில்
கிட்டும் நிறைவு மனதில் கிளுகிளுக்கச்
'சிட்டெழிலூர் ' என்றின்று செப்பப் படுகின்ற
'சிட்டுக்காடு ' என்னும் சிற்றூரில்
வண்டிகொண்டு
விட்டுவிட, வீடு விரைகின்றேன்.
மற்றவர்க்காய்ப்
பட்டதுயர்
இன்பம் பயக்கும் என்று பாடுகிறேன்.
☻☻☻