கவலையுடன் ஒரு கடிதம்.. -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கவலையுடன் ஒரு கடிதம்..  -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்,
 எம்.ஏ. சுமந்திரன் அவர்கட்கு,
பேரன்புடையீர்! வணக்கம்.
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
நாட்டின் நடப்புச் சூழ்நிலையில்,
தங்களினதும் கூட்டமைப்பினதும் பாரிய பங்களிப்பினை ரசித்துவருகிறேன்.
ஒற்றுமையின் பலத்தை நம் மக்களுக்கும் பேரினத்தார்க்கும் ஒருங்கே உணர்த்தியுள்ளீர்கள்.
பேரினத்து இனவாதிகள், தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்து,
உரிமை கோரி எழுந்த தமிழர்களின் போராட்டங்களை எக்காலத்திலும் மதிக்காமல்,
இடையிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்தி,
தமிழர்களுக்கு நினைக்கமுடியா இம்சை செய்ததோடு,
ஆயுதப் போராட்டத்தை நசுக்குகிறோம் என்ற போர்வையில்,
பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை அழித்து ஒழித்து,
உலகமே நடுங்கும் வண்ணம் அட்டூழியங்களைச் செய்தது வரலாறு.

 



இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் வெடித்து,
இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குறியாய் ஆகியிருக்கும் நிலையில்,
பழைய சம்பவங்களை மனங்கொண்டு, பேரினத்தைப் பழிவாங்க நினையாமல்,
நடுநிலையோடும் நேர்மையோடும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க,
நீங்களும் உங்கள் கட்சியினரும் செய்த முன்னெடுப்புக்கள்,
பேரினத்தாரின் நடுநிலையாளர்களை தம் தவறு நினைந்து தலைகுனியச் செய்திருக்கிறது.
தமிழர்தம் கண்ணியத்தையும் உறுதிப்பாட்டையும், அறிவாற்றலையும்,
இலங்கைத் தேசத்தின்மீதான அவர்களது அக்கறையையும் தெளிவாக உணர்த்தி,
தமிழர்கள் இலங்கைத் தேசத்தின் எதிரிகள் அல்லர் என்பதையும்,
அவர்கள் கோருவது தம் நியாயபூர்வமான உரிமையைத்தான் என்பதையும்,
தக்கநேரத்தில் தக்கபடி உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.-மகிழ்கிறேன்!



உங்களின் நடவடிக்கைகள்,
தமிழினத்தின்மீதான மதிப்பை உலகளாவி உயர்த்தியிருப்பது நிஜம்.
முக்கியமாக, பாராளுமன்ற ஜனநாயக முறை ஜனாதிபதியால் சிதைக்கப்பட்டபோது,
நீதிமன்றில் ஆற்றல் காட்டி நீங்கள் தனிப்பட்ட விதத்தில் நடந்து கொண்டவிதம்,
தமிழினத்தின் அடுத்த தலைமைத் தகுதியை உங்களை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சரின் சூழ்ச்சிகள் பொங்கி எழுந்து,
கூட்டமைப்பு வீழ்ந்ததோ? என பலரும் நினைத்தவேளையில்,
தற்போதைய உங்களின் செயற்பாடுகள் அதைத் தணியச் செய்துள்ளன.
இவை அனைத்துக்குமாக உங்களைப் பாராட்டுகின்றேன்.



அதே நேரத்தில் வேறு சிலவற்றையும் உங்களுக்கு உரைக்கவேண்டியிருக்கிறது.
போர் அழிவின் பின்னர், உலகம் தமிழர்க்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியபோது,
தமிழினம் ஒருமித்து நின்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும் என்று,
அறிவுசார் பெருமக்கள் பலரும் நினைந்தார்கள்.
அதனால்த்தான் புலிகள் காலத்தில் அவர்தம் அழுத்தத்தால் உருவான,
தமிழர் தேசிய கூட்டமைப்பை தமிழர்தம் ஏகத்தலைமையாய் ஏற்கவேண்டும் என,
உங்கள் கட்சி விடுத்த கோரிக்கையை ஏற்று,
தேர்தலில் உங்களை வலிமையுடன் வெற்றி பெற வைத்தார்கள் தமிழர்கள்.
அந்த வெற்றி உங்கள் சமநிலையை குழப்பியதும் உண்மையே.



இனம் என்ற எல்லை மறந்து கட்சி என்ற எல்லைக்குள் நீங்கள் நுழையத் தலைப்பட்டீர்கள்.
கூட்டமைப்புக்குள் உங்களது தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தை,
நீங்கள் விரும்பத்  தலைப்பட்டது வெளிப்படை.
அதனால்த்தான் கூட்டமைப்பை ஒரு கட்சியாய்ப் பதிவு செய்யவேண்டும் என்ற,
உங்களோடிருந்த மாற்றணியினரின் கருத்தை நீங்கள் மறுதலித்தீர்கள்.
உங்கள் உணர்வு மாற்றணியினரையும் பற்றிக் கொள்ள,
கூட்டமைப்பில் இணைந்திருந்த அனைத்துக் கட்சிகளுமே,
இன அரசியலிலிருந்து கட்சி அரசியலுக்குள் தாவின.



இவற்றையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு நான் எழுதுவது காரணத்தோடுதான்.
புலிகளுக்குப் பின் இனத்தலைமையை சம்பந்தர் ஏற்ற பிறகு,
அவரது நம்பிக்கைக்குரிய கையாளாய் நீங்கள் செயற்பட்டது வெளிப்படை.
அவர் உங்களை இயக்குகிறாரா? அல்லது நீங்கள் அவரை இயக்குகிறீர்களா? என்பது,
இன்றுவரை கேள்விக்குரிய விடயமாகத்தான் இருக்கிறது.-அது ஒருபக்கம் இருக்கட்டும்.
உங்கள் இருவரது ஒன்றுபட்ட செயற்பாட்டில் உடனிருந்த மற்றவர்களை,
நீங்கள் மதியாது விட்டதுதான், பிரச்சினைகளை ஆரம்பித்து வைத்தது.
உடனிருந்த மற்றவர்களை ஒடுக்குதற்காய் எங்கோ இருந்த ஒருவரை வலிந்து அழைத்து வந்து,
முதலமைச்சர் பதவியைக் கொடுத்து, நீங்கள் செய்த இராஜதந்திரம்,
படுதோல்வியில் முடிந்து, உங்களையும் இனத்தையும் பலயீனப்படுத்திற்று.
இந்த விடயத்தில் நீங்கள் மட்டுமன்றி எங்களைப் போன்ற பலரும்கூட ஏமாந்துதான் போனோம்.



எப்படி இன்றைய பாராளுமன்றப் பிரச்சினையில்,
கட்சியைத்தாண்டி உங்கள் பெயர் தனித்து அடிபடுகிறதோ,
அதுபோலவே அன்று கட்சியின் உடைவுக்கும் இனத்தின் உடைவுக்கும்,
நீங்களே காரணராய்ப் பேசப்பட்டீர்கள்.
அதனால்த்தான் இனத்தினதும் கட்சியினதும் உயர்வு தாழ்வுகளில்,
முக்கியப்படுத்தப்படும் உங்களை நோக்கி இக்கடிதத்தை வரைகிறேன்.



தமிழர்தம் உரிமைப் பிரச்சினை என்பது நீண்டநாட்களாய்ப் புரையோடிப்போய்க் கிடக்கும் ஒன்று.
அப்பிரச்சினையில் காலத்திற்குக் காலம் பலரும் முதன்மை பெற்றிருக்கின்றனர்.
அரசியல்த் தலைவர்களிலிருந்து இயக்கத்தலைவர்கள் வரை,
அங்ஙனம் முதன்மை பெற்றவர்களில் அடங்குவர்.
அந்த வரிசையில்த்தான் இன்று உங்களுக்கான முதன்மை கிடைத்திருக்கிறது.
இதனை நீங்கள் மறத்தலாகாது.
அதனால் அப்பிரச்சினையை அணுகும் போது இன்றைய காலவரம்பை மட்டும் வைத்து அணுகாமல்,
தூரநோக்கோடும் கட்சிப்பற்றுதலைத் தாண்டிய  இன உணர்வோடும்,
அதனை அணுகுதல் அவசியம் என்பதை தங்களுக்கு உறுதியாய் நினைவுபடுத்த விரும்புகிறேன்.



அதனால்,
பழையபடி உங்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில்,
நீங்களும் உங்களைச் சார்ந்த கட்சியும் தொடரப்போகும் உங்கள் நடவடிக்கைகள் பற்றி,
மறுபரிசீலனை செய்து கொள்வது நல்லதென்றுபடுகிறது.
ஏலவே தமிழர்கள் சிறுபான்மையாய் ஆனதால்த்தான்,
இந்நாட்டில் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் வரலாற்றுப் பதிவுகளை மறந்து,
கட்சி, தன்முனைப்பு போன்ற சிறுசிறு விடயங்களுக்காக,
மேலும் இனத்தைப் பிரிவு செய்து பலயீனப்படுத்துவது,
எவ்விதத்திலும் சரியான செயலாய் இராது என்பது என் எண்ணம்.
தொன்மைமிக்க ஒரு கட்சியும், அதன் வன்மை மிக்க உறுப்பினராகிய நீங்களும்,
இப்பிழைக்கு வழிசமைத்தலாகாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



அரசியல் அனுபவம் இல்லாத - அரசியலிலும் நிர்வாகத்திலும் தோற்றுப்போன,
மு.முதலமைச்சர் இத்தகு காரியத்தில் ஈடுபடுவது என்பது வேறு.
அனுபவமிக்க ஒரு கட்சியும் அதன் உறுப்பினர்களும் இத்தகு காரியத்தில் ஈடுபடுவது என்பது வேறு.
இன்றுவரை மக்கள் தந்த ஏகத்தலைமை என்ற தகுதி உங்களிடம்தான் இருக்கிறது.
அந்நிலையை உணர்ந்தே இப்பிரச்சினைகளை நீங்கள் கையாளவேண்டும் என்பது என் விருப்பம்.



கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், புளொட்டும் முதலமைச்சரால் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.
சுரேஸ{க்கும் அந்நிலை விரைவில் ஏற்படலாம்.
இந்நேரத்தில் நீண்ட வரலாற்றையும் தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பெற்ற உங்கள் கட்சி,
எப்படி பேரினத்தார்க்கு நிதானத்தோடு பெருந்தன்மையை உணர்த்தியுள்ளதோ,
அதுபோன்ற பெருந்தன்மையுடனும் தாய்மை உணர்வுடனும்,
உங்களை விட்டுப் பிரிந்து சென்ற மற்றைக் கட்சியினருக்கும்,
அப்பெருந்தன்மையைக் காட்டுதல் அவசியமாம்.
'தமிழினத்தின் நன்மை நோக்கி ஒன்றுபட வாருங்கள்!" என,
அவர்களை நோக்கி நீங்கள் ஒருதரம் அழைப்பு விடுத்தால்…..,
அது தமிழ் மக்களையும் கூட்டமைப்பின் பலத்தையும்,
நிச்சயம் வலிமைப்படுத்தும் என நம்புகிறேன்.
ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார், சுரேஸ் போன்றோர்க்கு மட்டுமல்லாமல்,
 டக்ளஸ், வரதராஜப் பெருமாள்,ஜனநாயக போராளிகள் கட்சியினர். ஆகியோருக்கும் கூட,
இவ்வழைப்பு உங்களால் விடப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
இது யதார்த்தத்திற்கு முரண் என்று நீங்கள் கருதுவீர்கள்.
சாத்தியப்படாத முயற்சி என்று நினைப்பீர்கள்.
அவற்றை அறியாது நான் இதை எழுதவில்லை.



காலவிஷேடத்தால் சில குழுக்களை,
நம் இனம் துரோகிகள் என முத்திரைகுத்தி வைத்திருக்கிறது.
அவ்வப்போது அம்முத்திரைகளில் மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.
பலரின் பகையையும் சம்பாதிப்பேன் என்று தெரிந்துகொண்டே எழுதுகிறேன்.
அங்ஙனம் துரோகி முத்திரை குத்த வேண்டுமானால்,
அம்முத்திரை நம் எல்லாத் தலைமைகள் மீதும் விழும் வாய்ப்பிருக்கிறது.
பழமையைப் பேசி பகை வளர்த்துப் பிரயோசனம் இல்லை.
அங்ஙனம் பேசவேண்டுமானால் நிகழ்ந்த இனக்கலவரங்கள் எல்லாவற்றிலும் பங்களிப்புச் செய்த,
ஐக்கியதேசியக் கட்சியின் சார்பாக இன்று நீங்கள் செயற்படுவதில் அர்த்தம் இல்லாமால் போகும்.
காலமாற்றத்தில் நல்லவர் தீயவராவதும், தீயவர் நல்லவராவதும் இயற்கையேயாம்.
இவ் உண்மை உணர்ந்தே, இன்றைய நிலையில் நீங்கள் செயற்படவேண்டும் என விரும்புகிறேன்.



கூட்டமைப்பின் மீதான மதிப்பு உயர்ந்திருக்கிற நேரம் இது.
மற்றவர்கள் உங்கள் அழைப்பேற்று வருகிறார்களோ இல்லையோ,
இந்நேரத்தில் நீங்கள் விடுக்கிற அழைப்பு என்பது,
உங்கள் கட்சியின் மீதான மதிப்பை நிச்சயம் உயர்த்தும்,
ஏகத்தலைமை என்ற ஒன்றை உருவாக்குவதற்கும் அது காரணமாய் அமையும்.
இதுதான் அனைத்துத் தமிழரதும் ஒன்றுபட்ட அமைப்பு என்ற உணர்வை அது உருவாக்கும்.
உயர்ந்திருக்கையில் காட்டும் பணிவு மக்கள் மனதைக் கவரவல்லது.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு என்கிறார் வள்ளுவர்.
சுருக்கத்தில் உயர்வு காட்டி நிமிர்ந்தீர்கள். இப்போது பெருக்கத்திலும் பணிவு காட்டி,
மக்கள் மனதை நீங்கள் கவரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.



ஆயிரம்தான் பலம் இருந்தாலும் மக்கள் ஆதரவுதான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு!
அது இன உரிமைக்கோரிக்கையின் முதுகெலும்புமாம்!
அதனைப் பலப்படுத்தவேண்டிய நிலையில் தங்கள் கட்சியும்,
ஏன் தாங்களும்கூட இருப்பதாய்ப்படுகிறது.
மானம் பார்க்காத சில விட்டுக்கொடுப்புக்கள் உங்கள்மீதான மதிப்பை நிச்சயம் உயர்த்தும்.
கட்சியைப் பலப்படுத்த நீங்கள் சில காரியங்களைச் செய்தே ஆகவேண்டும்.
உங்கள் செயற்பாடுகள் வலிமையாய் இருந்தபோதும்,
மக்கள் மயப்பட்டு இருக்கவில்லை என்பது என் கருத்து.
மக்களை ஈர்க்கும் முயற்சியில், தனிப்பட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும்,
நீங்கள் சிறிதுகூட ஈடுபடுவதாய்த் தெரியவில்லை.
முன்பொருமுறை கட்சியைப் பலப்படுத்த கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும்? என்பது பற்றி,
கட்சியைச் சீரமைக்க கூட்டமைப்பினருக்கு சில ஆலோசனைகள் என்ற தலைப்பில்
நான் ஓர் கட்டுரை எழுதியிருந்தேன்.
(அக்கட்டுரையை உகரத்தின் அரசியல்களத்தினுள் இப்போதும் காணலாம்.)
அக்கட்டுரை தங்களால் பார்க்கப்படவில்லை என்று  தெரிகிறது.
எதிரிகளின் கருத்துக்களையே தள்ளக்கூடாது என்ற நிலையில்,
நடுநிலையாளரின் கருத்தைக்கூட கவனிக்காத உங்கள் நிலை கவலை தருகிறது.
இப்படியே போனால் மக்களிலிருந்து அந்நியப்பட்டுப் போவீர்கள்.
இன்று ஏற்பட்;டிருக்கும் மீள் எழுச்சியில்,
நீங்கள் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.
உங்கள் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவன் என்ற வகையிலேயே,
இவற்றை எழுதுகிறேன்.
உங்;கள் மீதான அக்கறை என்பது இனத்தின்மீதான அக்கறை!
உங்கள் உயர்வு நோக்கி எனது வாழ்த்துக்கள்.
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை"
அன்புடன்,
இ.ஜெயராஜ்

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.