"கிணற்றுத் தெளிவு” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

"கிணற்றுத் தெளிவு” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 

லகம் உறங்கிக் கொண்டிருந்தவேளை.
கொழும்பு காலி வீதியில் தனித்து நிற்கிறேன்.
பகல் முழுதுமாய் நிகழ்ந்த,
வாகனக் காமுகர்களின் உழுதலில் இருந்து மீண்டு,
வீதிப் பரத்தை விடுதலையுற்று மல்லாந்து நீண்டு கிடக்கிறாள்.
பாதை தவறிப் பட்டிணத்துட் புகுந்த சாக்குருவி ஒன்று,
சகிக்கமுடியாத தன் சத்தத்தால் மௌனத்திரையை அசிங்கப்படுத்தி அகல்கிறது.
ஊர் அடங்கிப்போக ஒன்று கூடிய நாய்களின் கூட்டத்தில் ஏதோ பகை.
ஒன்றினை மற்றொன்று கடித்துக் குரைக்க,
அமைதியாய் நின்ற அத்தனையும்,
காரணமறியாது ஒன்றையொன்றைக் கவ்வி ஊளையிட்டன.
மதில்மேல் தனித்து நின்ற பூனையொன்று,
அவற்றின் பகையை அதிர்ச்சியாய்ப் பார்த்தது.
ஊர் அடங்கிய அவ்வேளையிலும் என் உளம் அடங்காததால்,
உறக்கமின்றித் தவித்தேன்.
தவிப்பின் காரணம் .....

 

1995 ஆம் ஆண்டு
கந்தசஷ்டி விரத நிறைவுநாள்.
ஆகாயத்தில், மாரி காலத்தின் ஆரம்ப அடையாளங்கள்.
இருளும், வெளிச்சமுமாய் வானம் கலங்கிக் கிடந்தது.
நல்லூர்க் கோயில் வீதி.
சூரன் போர்.
சூரன் பயமுறுத்தி ஓடிவந்தான்.
அவன் சிவந்த நிறமும், பிதுங்கிய விழிகளும்,
பார்ப்பவர்களைப் பயமுறுத்தின.
முழுக்க முழுக்கப் பகையின் வடிவமாய் அவன்.
சூரனைக் காவி ஓடிவந்தவர்கள்,
ஒருதரம் குந்தியெழும்ப,
சூரன் குனிந்து நிமிர்ந்ததாய்ப் பட்டது.
குனிந்து நிமிர்ந்ததில் சூரனில் சிறுதடுமாற்றம்,
காவியவர்களுக்கு அனுபவமில்லை.- பலமுந்தான்.
அனுபவமும், பலமுமுள்ளவர்கள்,
வேறு போர்க்களத்தில், வேறு சூரனோடு.
பலாலியிலிருந்து,
விசிலடித்து ரவுடித்தனமாய்ப் புறப்பட்ட 'ஷெல்' ஒன்று,
ஏவிய சூரன் எவனென்று தெரியாமல் பக்தர்களைக் குழப்பிற்று.



நல்லூர் வீதி யுத்த களமாய்.
முருகன் அசையாது நிற்க,
சூரன் ஆடி, ஓடி அட்டூழியம் பண்ணினான்.
பகை ஆர்ப்பரிக்கவும், உறவு அசையாமல் நின்றது.
முருகனின் பக்கம் இருந்த  கூட்டத்தின் அளவு,
சூரனின் பக்கமும் இருந்தது.
'அரோகரா!'
பகையின் ஒரு தலை அறுக்கப்பட்டது.
தாயின் சேலை பற்றி நின்ற ஒரு பாலகன்,
சூரனின் தலை விழக்கண்டு கைதட்டி முடிக்குமுன்,
புதிய தலையுடன் சூரன் ஓடிவந்தான்.
அந்த முகத்திலும் பகை.
மிரண்ட பாலகன் தாயை இறுகக் கட்டிக்கொண்டான்.
அவன் விழிகளில் மிரட்சி.
அவனுக்குச் சூரனைப் பிடிக்கவில்லை,
முருகனைத்தான் பிடித்தது.
பல சூரன்போர்களைக் கண்ட தாய்,
முருகனையும் கும்பிட்டாள், சூரனையும் கும்பிட்டாள்.



மீண்டும் தலையறுபட்டது.
மீண்டும் தலை புறப்பட்டது.
முருகனிடம் தன் பகை செல்லாதது கண்டு சோர்வுற்று,
பகையும், உறவும் இல்லாத வெற்றுநிலையில்,
சூரன் மரமாகி அசையாது நின்று மயக்கம் செய்தான்.
பகையடக்கி, இயங்காது நின்ற சூரனை இனங்கண்டு,
பகை வேரறுக்க வேலன் வேல் விடுத்தான்.
முருகனின் வேல் இதயம் பிளக்க,
சேவலும், மயிலுமாகிச் சூரன் பறந்தான்.
சேவலும், மயிலும் முருகனைச் சேர்ந்தன.
பகையே நட்பானது.
'அரோகரா!' மீண்டும் பக்தர்கள் ஆர்ப்பரித்தனர்.



சினந்து வந்த சூரன்,
திடீரெனச் சேவலும், மயிலுமாகி முருகனைச்சேர,
பயந்த பிள்ளை கைதட்டிச் சிரித்தான்.
இப்போது அவனுக்குச் சூரனையும் பிடித்தது.
அடுத்த வருடம் சூரன் மீண்டும் வருவான்.
முருகனும் வருவான்.
திரும்பவும் சூரன்போர் நடக்கும்.
உறவு பகையாகும், பின்; பகை உறவாகும்.
தொடர்ந்து நடக்கப்போகும் விளையாட்டு இது.
சூரனுக்கும், முருகனுக்குமான தொடர்பு,
உறவா? பகையா?
என் மனத்துட் கேள்வி.
விடை தெரியாது சிந்தை குழம்பிற்று.



விரதக் களையோடு வீடு திரும்பினேன்.
வடை சுடும் வாசம் 'பாறணை'க்காய்ப் பந்திக்கிழுத்தது.
அருகிலிருந்தவர்களுக்கு ஆசாரம் காட்ட,
ருசி தேடும் பசியை வெளிக்காட்டாது,
மீண்டும் ஒருதரம் முகங்கழுவி விபூதி பூசினேன்.
'சாப்பிடலாம்.'- இது நான்.
'ஆறு மணியாகிட்டுதோ?'
பசியை வெளிக்காட்டாது,
ஆசார நடிப்பில் என்னை வென்றான் மாணவன்.
இலைக்கு முன் உட்கார,
வெளியே ஒலிபெருக்கி,
ஊரைவிட்டுப் புறப்படச் சொன்னது!



'யாழ்ப்பாணத்துள் இராணுவம் நுழையப்போகிறது.'
ஒலிபெருக்கி சொன்ன செய்தி இது.
எல்லோர் கண்களிலும் உயிர் அச்சம்.
கையில் அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஊர் புறப்பட்டது.
கூட்டத்தோடு கூட்டமாய், இரவிரவாய் நடைப் பயணம்.
ஆகாயம் மழையாய்க் கண்ணீர் வடித்தது.
முதன்முதலாய்,
தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு திசையாய்ச் சென்றனர்.



சாவகச்சேரியில் சூரிய தரிசனம்.
விடிகாலையில் வெள்ளமாய்க் கொட்டிய சனம் கண்டு,
ஊர் மிரண்டது.
நாகரிக ஒப்பனை பெற்று நடிக்கத் தயாராகாத கிராமம்,
ஓடிவந்த பட்டினத்தவரை,
உதாசீனம் செய்யாது உள்வாங்கிக் கொண்டது.
சண்டிலிப்பாய் அக்கா குடும்பம்.
கல்வியங்காடு தங்கை குடும்பம்.
கொக்குவில் அண்ணன் குடும்பம்.
எல்லோரும் சாவகச்சேரியில் ஒரு வீட்டில்.
திருமணங்களால் பிரிந்த சகோதரங்களை,
அகதி வாழ்வு மீண்டும் ஒன்றாக்கிற்று.
துன்பக் காரணம் மகிழ்வின் காரணமாயிற்று.



அகதிகளானதில் மகிழ்ச்சியா? ஆச்சரியப்படுவீர்கள்.
ஆனால், அதுவே உண்மை.
உண்மையாகவே என்னுள்ளம் அன்று மகிழ்ந்தது.
காரணம்?
சொல்கிறேன்!



ஐயா, அம்மா, பெரியக்கா, சின்னக்கா,
அண்ணன், தங்கச்சி இதுதான் எங்கள் குடும்பம்.
ஐயா மாற்றலாகிப்போகும் இடமெல்லாம்,
குடும்பத்தையும் கொண்டிழுத்தார்.
ஐயாவின் 'ஓவசியர்' உத்தியோகத்தால்,
வீட்டில் செல்வத்திற்குக் குறையில்லை.
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
சிரிப்புங்கூட.
சகோதரர்களுக்கிடையில் ஓரிரண்டு வயதுதான் வித்தியாசம்.
அதனால், உறவு நட்புப்போல் இறுகிக் கிடந்தது.
சினேகிதமாய்ப் பழகும் பெற்றோர்.
கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?



எங்கள் வீட்டில் எப்போதும் சிரிப்புச் சத்தந்தான்.
மிதமிஞ்சிய சோற்றால் எங்கள் வீட்டு நாய் கொளுத்துக் கிடந்தது.
பூனை ஏறி விழுந்தாலும் அது பேசாமல் கிடக்கும்.
செல்வச்செழிப்பால் பகை மறந்த பண்பு அதற்கும்.
ஐயாவைக் கண்டதும் அரைக்கண் திறந்து,
நன்றி காட்ட அரும்பொட்டாய் வாலாட்டும்.
விடுமுறைக்கு உறவுக்குருவிகள் ஒன்றாய் வந்து உட்கார,
குடும்ப விருட்சம் மேலும் கலகலக்கும்.
ஐயாவின்  இடமாற்றத்தால்,
ஆறு வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வோர் ஊர்.
வஞ்சனை இல்லா இளமையால் சகோதர உறவில் இறுக்கம்.
என் தலையிடிக்காய் ஐயனார்க்கு நேர்த்தி வைத்த சின்னக்கா.
அண்ணன் சோதனை 'பாஸ்'பண்ண அடியளந்த பெரியக்கா.
மாமி தந்த சொக்லேட்டை அப்படியே தங்கைக்குத் தரும் நான்.
கோழியைக் கண்டு பயந்து கத்திய தங்கையின் ஐயோ! எனும் சத்தத்துக்காய்,
மாமரத்தில் நின்று கீழே குதித்துக் கால் முறிந்த அண்ணன்.
அண்ணன் எழுந்து நடக்கும்வரை அன்றாடம் அழுத தங்கை.
இப்படியாய் ஒருவர்க்காய் ஒருவர் உயிர்விடுவோம்.



இது என் பாலப்பருவம்.
திடீரெனக் குடும்பச்சூழலில் மாற்றம்.
பெரியக்காவின் கல்யாணம்.
தொடர்ந்து, சின்னக்கா கல்யாணமாகி வெளிநாடு பயணம்.
அண்ணனுக்குக் கொழும்பில் வேலை.
தேன் கூடு கலைந்தாற்போல், குடும்பம் பிரிந்தது.
தவித்துப்போனேன்.



பெரியக்கா சண்டிலிப்பாயில்.
சின்னக்கா லண்டனில்.
கல்யாணம் முடிய, அண்ணன் கொக்குவிலில்.
காதலித்துத் திருமணமாகித் தங்கை கல்வியங்காட்டில்.
'ஹார்ட் அட்ராக்'கில் ஐயா மரணிக்க,
சின்னாக்காவின் அழைப்பில் அம்மாவும் லண்டன் சென்றார்.
நிரந்தரமாய்த் தனியனானேன்.
பழைய உறவேக்கம் நெஞ்சைத் தகித்தபடி இருந்தது.
அகதி வாழ்வு,
ஒரே நாளில் ஒரே வீட்டில் மீண்டும் உறவுகளை ஒன்றாக்கியது.
இதுதான் நான் முன் சொன்ன என் மகிழ்ச்சியின் காரணம்.



உறவு, நட்பு, அயல் எல்லாம் ஓரிடத்தில்.
துன்பத்திலும் இன்பம்.
கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்?
'ஷெல்' சத்தத்தை எங்கள் சிரிப்புச்சத்தம் வென்றது.
அத்தனையும் ஓரிரு நாட்களுக்குத்தான்.
எதிர்காலம் பற்றிய கேள்வி அனைவரையும் அச்சுறுத்த,
தன்தன் குடும்பம் பற்றிய கவலைநோய்,
சகோதரங்களைத் தொற்றிக் கொண்டது.
'இனி, இஞ்ச இருந்து சரிவராது.
எத்தின நாளைக்கெண்டு இப்பிடி ஆற்றயும் வீட்டில கிடக்கிறது.
கொழும்புப் பக்கம் போனால்,
வெளிநாடு போகவெண்டாலும் முயற்சி பண்ணலாம்.'
ஒன்றான சந்தோசத்தை மறந்து,
பிரியத்துடிக்கும் உறவு ஆச்சரியப்படுத்தியது.



ஊர் குழம்பிய நிலையில் இலகுவாய்ப் 'பாஸ்' கிடைக்க,
முதல் வாரம் குடும்பத்துடன் அக்கா.
இரண்டு வாரங்களில் அண்ணன் குடும்பமும், தங்கை குடும்பமும்.
ஒவ்வொருவராய்க் கொழும்பிற் குடியேற,
மீண்டும் தனிமையிருள்.



அகதி வாழ்வு மீட்டுத்தந்த உறவிறுக்கம்,
மீண்டும் கலைந்தது.
பல காலத்தின்பின் புதுப்பிக்கப்பட்ட பாச அலைகள் நெஞ்சை வருத்தின.
மடியில் கிடந்த மருமகனின் நினைப்பு நெஞ்சையுருக்கி, கண்ணைக் கசிவித்தது.
பகலில் பாயில் கிடந்து பதறி அழுத என்னை,
'திருக்குறள் வகுப்பில் நிலையாமை பற்றி,
ஆயிரம் விளக்கம் சொன்ன ஆசிரியர் இவர்தானா?' என,
மாணவர் குழாம் மருண்டு பார்த்தது.
உறவு ஈர்க்க நானும் கொழும்புக்குப் புறப்பட்டேன்.



அக்கா வெள்ளவத்தையில்.
தங்கை கொட்டேனாவில்.
அண்ணன் தெகிவளையில்.
வருமானம் இல்லாத நிலையிலும் தனித்தனி வாடகை.
ஒன்றாய் இருந்தால் என்ன?
செலவு சுருங்கும், உறவு பெருகும்.
என் புத்தி கணக்கிட்டது.
நாலு அறை வீடு, தேடலின் பின் கிடைக்க மகிழ்ந்தேன்.
ஆளுக்கொரு அறை.
ஒரே சமையல்.
என் முடிவை,
ஆலோசித்து அனைவரும் ஏற்றனர்.
மீண்டும் ஒன்றானோம்.



மகிழ்ச்சிக் கடல் பொங்கப் போகிறது என்ற என் எண்ணத்தில்,
முதல் நாளே இடிவிழுந்தது.
புது வீடு வந்து ஒரு இரவு விடிந்திருந்தது.
காலை ஒன்பது மணி.
வீட்டுக்குப் பொதுவான வரவேற்பறையில்,
எல்லோரும் ஒன்றாய்க் கூடினோம்.
ஒருவர் முகத்திலும் சந்தோசம் இல்லை.
மகிழ்ச்சிக் கடலை எதிர்பார்த்த என் மனதுள் மருட்சி.
ஏன், ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை?



தங்கை வாய் திறந்தாள்.
'அண்ணையிட அறையிலபோல,
எங்கட அறைக்குள்ள 'ரைல்ஸ்' போடேல.
என்ர அவர் குறை நினைக்கிறார்,
அந்த அறையை எங்களுக்குத் தரலாம்தானே?'
அண்ணன் முகம் சிவந்து அண்ணியைப் பார்க்க,
அண்ணி 'வெடுக்கென' உள்ளே போகிறா.
அண்ணன் முகத்திலும் சினம்.
'எங்கட காசிலதானே வீட்டுக்கு, 'அட்வான்ஸ்' கூடக் குடுத்தது.
அதுக்குக் காசு தராயினம், வசதி மட்டும் கனக்க வேணுமெண்டா எப்பிடி?'
அண்ணனும் உள்ளே போகிறார்.
'உவருக்கு எப்பவும் அவற்ர பெஞ்சாதிதான் பெரிசு.
எல்லாம் கடவுள் காட்டுவார்.'
சாபம் கொடுத்துத் தங்கையும் தன் அறைக்குள் புகுந்தாள்.



அதிர்ந்து பெரியக்காவைப் பார்த்தேன்.
'நீரும் நீதி இல்லாத ஆள்தான்.
காசில்லை எண்டுதானே,
எங்களைக் கடைசி அறைக்குள்ள விட்டனீர்.
அந்த 'ரொய்லட்டு'க்க 'கொமட்' இல்ல.
பாவம் அத்தான் குந்தியிருக்க முடியாம படாத பாடுபடுறார்.
எங்களுக்கும் ஒரு காலம் வராமலே போகப்போகுது!'
அழுகையோடு அக்காவும் இடத்தைக் காலிசெய்தா.



ஊரிலிருந்த தம் வழமையான வாழ்வு மறந்து,
ஒவ்வொருவரும் மற்றவரோடு ஒப்பிட்டு வசதி தேடினர்.
'எத்தனை நாள்தான் உங்கள் எல்லாரையும் சுமக்க முடியும்?
எனக்கெண்டும் ஒரு குடும்பம் இருக்கிறத மறந்து போகாதீங்கோ.
கெதியில வேலை தேடப்பாருங்கோ'
தொலைபேசியில் லண்டனிலிருந்து சின்னக்காவின் சலிப்பு.
பெரிய 'ஹோலில்' மீண்டும் தனித்தேன்.



நெஞ்செல்லாம் இருட்டு.
ஒருத்தருக்காய் ஒருத்தர் விரதம் இருந்த சகோதரங்கள்.
உரிமைக்குரல் எழுப்பினர்.
அடுத்த நாளும் சண்டை தொடர்ந்தது.
'அதென்ன அவட மேனுக்கு மட்டும்,
இரண்டு மீன்பொரியல்?' - தங்கை.
'என்ட மேண் மட்டும்,
ஒவ்வொருநாளும் இரவில சோறு தின்ன வேணுமே?' - அக்கா.
'அவவுக்கு புட்டுப் பிடியாது,
தங்கட புருஷன்மாருக்குப் பிடிக்குதெண்டு,
ஒவ்வொரு நாளும் புட்டவிச்சால் எப்பிடி?' - இது அண்ணை.
அன்றிரவே அடுப்பு மூன்றாயிற்று.



ஒருவருக் கொருவராய் உயிர் கொடுத்த உறவுகள்.
தனக்குத் தனக்கென்று குடும்பங்கள் வர,
தனித்தனித் தீவுகளாயின.
பாசத்தின் எல்லையென்று நான் நினைத்திருந்த குடும்பம்,
பகைத்து நின்றது.
எங்கள் இளமைக்கால வீடு நினைவில் வந்தது.
எத்தனை பாசம்? எத்தனை மகிழ்ச்சி? எத்தனை நெருக்கம்?
எல்லாம் பொய்யா?



ஊரில் ஒருநாள், கிணறு இறைப்பு.
'மெசினோடு' பொன்னன் வந்தான்.
அவன் நிற்கும் துணிவில்,
கிணறை ஒருதரம் பயமின்றி எட்டிப்பார்க்கிறேன்.
தண்ணீர் கண்ணாடியாய்த் தெளிந்திருந்தது.
இதை ஏன் இறைக்கிறார்கள்? மனத்துள் கேள்வி.
பொன்னனிடம் கேட்டே விட்டேன்.
'தண்ணி தெளிவாய்த்தானே கிடக்கு?
இதையேன் இறைக்கப்போற?'
பொன்னன் சிரித்தான்.
'வெளியில பாக்க அப்பிடித்தானும் இருக்கும்.
இறங்கிக் கலக்கினாத்தான் சேறு தெரியும்.'-சொன்னவன்,
கயிறு பிடித்து இறங்கிக் கலக்கினான்.
தெளிந்த தண்ணீரில்,
சேறும், சகதியும் கொப்பளிக்க அருவருத்தேன்.
'இப்ப விளங்குதே!,
கலக்கினாத்தானும் உள்ள கிடக்கிறது தெரியவரும்.'
தண்ணீர் வழியும் தலையோடு,
அன்று பொன்னன் சொன்னது,
இன்று உபதேசமாய்ப் பட்டது.



எங்கள் உறவும் கிணற்று நீர்த் தெளிவுதானோ?
வறுமைக் கலக்கத்தால்,
சேறும், சகதியும் தெரியவருகுதோ?
உண்மையின் நிதர்சனம்,
அடிவயிற்றில் பந்தாய் உருளத் தளர்ந்தேன்.
உறவுப்பகை சேறாய்க் கொப்பளித்த உண்மை,
மனதை அருவருக்கச் செய்தது.
உறவெல்லாம் பொய்யென,
மனத்துள் தனித்தேன்.



எல்லாம் ஒருசில நாட்கள்தான்.
ஒன்றானதால் உறவு பகையாக,
ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வு நோக்கி,
கடுமையாய் முயற்சித்தனர்.
அண்ணன் அவுஸ்திரேலியா.
தங்கை லண்டன்.
பெரியக்கா கனடா.
தனிக்கூடு தேடிப் பறவைகள் பறந்தன.
'எயாபோர்ட்'டில் எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.
ஏனென்று தெரியவில்லை?
நான் கேட்கவும் விரும்பவில்லை.
மீண்டும் தனிமை.
ஆனால், இம்முறை மனதில் வாட்டமில்லை.
பிரிவு, சற்று நிம்மதியாய்க்கூட இருந்தது.



இன்று நால்வரிடம் இருந்தும் கடிதங்கள்.
'அண்ணனைக் குறை சொன்ன,
சின்னையா வீட்டுக் கல்யாணத்துக்குப் போகவேண்டாம்.'
பெரியக்கா எழுதியிருந்தா.
'அக்காட மகளின்ட கல்யாணவீட்டுக்கு,
குடும்பமா கனடா போறம்.'
அண்ணன் எழுதியிருந்தார்.
'மாமி, அம்மாவப் பாக்க இஞ்ச வந்தவா,
ஆனா, சின்னக்காட்ட போகேல.
அதால நானும், சின்னக்காவும்,
அவவைப் பாக்கப் போறதில்லயெண்டு முடிவெடுத்துப் போட்டம்.
அண்ணி கால் தவறி விழுந்துபோனாவாம்,
ஐயனாருக்கு அவட பேரில ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ'
தங்கையின் கடிதம் செய்தி சொல்லியது.
'அக்காட மகளிட கல்யாணத்துக்கு,
நானும் கொஞ்சம் காசனுப்பினனான்.
பாவம் அவ தனிய என்ன செய்வா?'
இது சின்னக்காவின் கடிதம் சொன்ன செய்தி.



உறவில் மீண்டும் கிணற்றுத் தெளிவு.
அருகிலிருந்து பகை பாராட்டியவர்கள்,
தூரப்போய் உறவுகாட்டினர்.
பகையிலும் பொய்யில்லை, உறவிலும் பொய்யில்லை.
தெளிவும் உண்மை.
சேறும் உண்மை.
இரண்டையும் நேரே தரிசித்தவன் ஆதலால்,
இரண்டையும் நிராகரிக்க முடியவில்லை.
இது என்ன விந்தை?
பகையும், உறவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களா?

'உறவும் வரும் ஒருநாள் பிரிவும் வரும்,
வரவும் வரும் ஒருநாள் செலவும் வரும்,
பகலும் வரும் உடனே இரவும் வரும்,
பழக வரும் துணையும் விலகி விடும்.'

வானொலியில் கண்ணதாசன் தத்துவம் பேசினார்.
உறவின் எல்லைகளைத் தீர்மானிக்க முடியாது தடுமாறினேன்.
அவர்கள் உறவில் மீண்டும் துளிர்த்த நெருக்கங்கண்டு,
என் நெஞ்சில் மீளவும் தனிமை.
கண்கள் கசிந்தன.
ஊரடங்கிய வேளையில் உறக்கமின்றி,
தனியனாய்க் காலி வீதியில் நிற்கிறேன்.



அதிகாலை.
இருள் என் மனச்சுமையைப்போல் மெல்லக் கரைகிறது.
சூரியனின் வருகையைக் கிழக்கு அறிவிக்கிறது.
ஒளிவர இருள் போனது.
இனியும் இருள் வரும், ஒளி போகும்.
இருளும், ஒளியும் வேறுவேறா? ஒன்றேயா?
குழம்பினேன்.



எச்சில் வாயுடன் வெளியில் வந்த,
தேநீர்க்கடை 'புஞ்சிபண்டா' கல்லெடுத்து எறிய,
இரவு முழுக்க பகைத்து நின்ற நாய்கள்,
சிதறியோடித் தூரப்போய்,
ஒற்றுமையாய் நின்று அவனை நோக்கிக் குரைத்தன.
இதையும் மருட்சியுடன் பார்த்தபடி,
மதில்மேல், உறவின்றித் தனித்து நின்றது,
அதே பூனை.

◈◈

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.