திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 3: "தித்திக்கப் பேசுவாய்” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 3: "தித்திக்கப் பேசுவாய்” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
 
மூன்றாம் பெண்வீட்டு முற்றமதில் நங்கையரும்,
தோழியவள் பெயர் சொல்லி துலங்க அழைக்கின்றார்.
திறக்காத கதவம், அத்திருவுடைய பெண்ணாளும்,
உறக்கத்துள் ஆழ்ந்திட்டாள் எனும் உண்மை உரைக்கிறது.
பரமன் புகழ்பாடும் பாவையர்க்கோ ஆச்சரியம்!
இறைபெயரைச் சொன்னாலே ஏக்குற்று வாயூறும்,
முறைகொண்ட நங்கையிவள், முன்வந்து நமையெழுப்பும்,
திறம் கொண்ட பெண்ணாள், திறக்காது கண்மூடி,
உறக்கத்துள் ஆழ்வாளோ? உண்மையோ? எனவியந்து,
பாவையர்கள் எல்லோரும் பற்றோடப்பாவைதனை,
விரும்பி அழைத்தே விளம்புகிறார். கேட்போம் நாம்.
 
✠  ✠  ✠
 
 
பாவை நோன்பென்றதனால் பால்துறந்து, நெய்துறந்து,
மையிட்டு எழுதாது மலரிட்டு முடியாது,
வாயதனில் தாம்பூல வளம்கூடச் சேர்க்காமல்,
முத்தாகப் பல்துலங்க முன்வந்து சிரிப்பவளே?
நித்தம் எமையெல்லாம் நீயன்றோ எழுப்பிடுவாய்?
பற்றில்லாச் சிவனாரை பாசமிகு தந்தையென, 
சொல்லித்தான் ஆனந்த சுகம்கண்டு நின்றிடுவாய்.
கேட்டாலும், சொன்னாலும் கிளர்ச்சிதரும் நாமத்தான்,
ஆனந்தன் அவனென்றே அன்பதனால் உருகிடுவாய்.
மனத்தாலே நினைந்திடவே மரணம் தவிர்த்துவிடும்,
அவனன்றோ அமுதன் என அன்றாடம் சொல்லிடுவாய்.
வாயூறி வாயூறி வளம்பொங்கச் சிவன்நாமம்,
நீயூறிச் சொல்லுகிற நிலையை நாம் என்சொல்வோம்? 
முத்தென்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
 
✠  ✠  ✠
 
தித்திக்கப் பேசுகிற திறத்தாளே! உடன்வந்து,
பற்றிக் கதவமெனும் பாசத் திரையகற்றி,
எத்திக்கும் கேட்க இறைநாமம் பகராயோ?
என்றே அந்நங்கையர்கள் ஏங்கிக்குரல் கொடுத்தார்.
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைகிறவாய் 
 
✠  ✠  ✠
 
மாட விளக்கேற்றி மனத்துள்ளே சிவன்நாமம்,
பாடி உள்ளுருகி பரவசத்தில் தனைமறந்து,
கூடத்தில் இருந்திட்ட கூர்விழியாள், குரல்கேட்டு,
மெல்லச்சிரித்தாள். தன்மேலான அன்பதனால்,
புலர்வதன்முன் துயிலெழுந்து, போற்றி அவர் வரவை,
காத்திருக்க அறியாராய் கண்துயின்றதாய் நினைந்து,
துயில் எழுப்பும் அவர்தம்மை தூண்டி விளையாட,
நினைந்தாள் அந்நங்கை-நித்திரையால் அப்பொழுதே,
எழுந்தாள்போல் மெல்ல இழைத்த குரலதனால்,
உங்களைப்போல் உயர்தகுதி ஒன்றறியா ஏழ்மைமிகு,
நங்கை எனக்காகிடுமோ? நாளும் சிவன்நாமம்,
பாசத்தால் ஓதுகிற பற்றுமிகும் பழவடியீர்!
பாங்குள்ள உம்தமக்கு பாவைநிகர் ஆவேனோ? 
பொல்லா மனத்தேன் புத்தடியேன் எந்தன்னின்
புன்மைதீர்த் ஆட்கொண்டால் பொல்லாதோ? புன்மையதோ?
என்றுரைத்து உள்நகைந்தாள் ஏந்திழையாள். 
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
 
✠  ✠  ✠

அவள் தன்னின்,
நையாண்டி அறியாத நங்கையர்கள் நங்கையவள்,
உள்நொந்து மனம் வாடி உரைக்கின்றாள் எனநினைந்து,
மனவருத்தம் நீக்கித்தான் மங்கையவள் தனையழைக்க,
வாடித்தான் உரைத்தாயோ? வார்கண்ணாய் சிவன்நாமம்.
பாடித்தான் அன்றாடம் பரவுகிற உனதன்பை,
நாங்கள் அறியோமோ? நங்காய்! வருந்தாதே! 
என்றுரைத்தார் மங்கையவள் ஏமாந்தீர்! எனவுரைத்து,
முத்தென்ன வெண்ணகையை முகிழ்த்தாள். பின் தோழியரே,
சித்தம் அழகியார் சீர்பொழுதில் சிவன்நாமம்,
பாடாமல் வீண்வார்த்தை பகர்வாரோ? எனவினவ,
ஏமாந்த நங்கையர்கள் இவள்தன்னின குறும்பதனை, 
நாம் ஓர்ந்து அறியாமல் நங்கையிவள் தன்னுடைய,
விளையாட்டில் தோற்றோம். விளங்கும் அருள்நங்காய்!
உன்னை எழுப்பவென உனைத்தேடி வந்ததற்கு,
இத்தனையும் வேண்டுமெமக் கேலோரெம்பாவாயே!
என்றுரைத்து ஊடி பின்இயல்பால் இணைந்தார்கள்.
நன்றுதரும் சிவன்நாமம் நா இனிக்கப் புகழ்ந்தார்கள்.
மீண்டும் அவர் பயணம் மிடுக்கோடு தொடங்கிற்று.
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
 
✠  ✠  ✠
 
ஒப்பற்ற வாசகனார் ஓதியதாம் இப்பாடல்,
எப்பற்றும் நீக்கித்தான் எமை ஏற்றும் சிவனடிக்கே.
இப்பாடல் தனின் உள்ளே ஏற்றமுற நுழைந்தே நாம்,
தப்பாது நுன்பொருள்கள் தமைக் கண்டு மகிழ்ந்திடுவோம்.
 
✠  ✠  ✠
 
முத்தென்ன வெண்ணகையாய் என்றே மொழிந்திவளின்,
புற அழகைச் சொல்லிப் புகழ்ந்தார்கள் தோழியர்கள்.
புறத்தோடு அகம் பொருந்தி நிற்பதுவே பொது இயல்பாம்.
அவ் உண்மை மனமேற்று ஆராய்ந்தால் நம்தமக்கு,
பக்தையவள் உள்ளத்தும் பாங்குடையாள் என்கின்ற,
உண்மை விளங்கும் உவந்தே மனம் மகிழும்.
 
✠  ✠  ✠
 
ஆண்டவனை அப்பெண்ணும் அன்றாடம் மனதிருத்தி,
அத்தன்! என் ஐயனென அன்பாக விழிப்பாளாம்.
அத்தன் எனும் வார்த்தையதால் அன்பான தந்தையென,
நித்தம் அந்நங்கையவள் நினைந்தழைப்பதாய்ச் சொல்லி,
வித்தகனாம் நம் சிவனும் வீறோடு அண்டமெலாம்,
பெத்தெடுத்த பெருஞ்சோதி என்னும் பெருங்கருத்தை,
உத்தமனார் வாசகரும் உரைப்பதனை என் சொல்ல?
 
✠  ✠  ✠
 
ஆனந்தம் தருகின்ற அத்தனையும் நின்றொழியும்,
மாயை உலகதனின் மாறாத இயல்பதுவாம்.
மாறாது என்றும் மனம் நிறைக்கும் ஆனந்தம்,
ஓராது நாமெல்லாம் உழன்று திரிகின்றோம்.
ஆனந்தன் என்றேதன் ஐயன் சிவன்தன்னை
நங்கையவள் உரைப்பதுவாய் நம் பெரிய வாசகனார், 
ஓதுவதில் மாபெரிய உண்மையதும் இருக்கிறது.
வேத முதல்வன் தன் விண்ணார்ந்த அருள் செய்தும்,
பாத நிழலதுவே பரமசுகம் என்பதனை,
ஓத நினைத்தேதான்  உரைக்கின்றார் அவ்வார்த்தை.
 
✠  ✠  ✠
 
அமுதன் அவன் என்கின்ற அருமைமிகு வார்த்தையதால்,
பேரா இயற்கை பெரும்பேறு தனை நல்கி,
மாறாப்பிறவி மயக்கம் அறுவித்தேதான்.
மரணமதை அழிக்கின்ற மாண்புடையான் அவன் என்னும்,
உண்மைதனை உரைத்தேதான் உவக்கின்றார் வாசகனார். 
 
✠  ✠  ✠
 
இறை நாமம் கேட்டேதான் இன்புற்று மனம் மகிழும்,
அடியார்தம் நல்லியல்பை அன்போடு நினைவூட்ட,
தித்திக்கப்பேசுவாய் என்னும் திருவாக்கால்,
பக்திதரும் வார்த்தைக்கு பாவையர்கள் மயங்குதலை,
உத்தியொடு வாசகனார் உரைக்கின்ற அழகென்னே?
 
✠  ✠  ✠
 
சித்தத்துள் தித்திக்கும் சிவனாரைப் பாடுதற்கு,
சித்தத்தின் அழகேதான் சீர்மிகுந்த தகுதியெனும்
தத்துவத்தை உள்ளடக்கி, தகுதியொடு வாசகனார்,
சித்தம் அழகியார் என்றேதான் சீரோடு,
பக்தியினால் நங்கையரைப் பாடும் அழகென்னே?
 
✠  ✠  ✠
 
பாடல் கருத்ததனில் பார் மகிழ வாசகனார்,
தேடி உரைத்திட்ட தெவிட்டாத தேன் சுவைத்து,
நாடிச் சிவனடியை நாமும் பொருந்திடுவோம்.
 
✠  ✠  ✠
 
முத்தென்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைகிறவாய் 
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோன் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
 
 
✠  ✠  ✠
 
 
 
 
 
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.