சிறுமைச் சாதனைகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
அரசியல்களம் 07 Dec 2018
உள்ளத்தின் விருப்பு வெறுப்புக்களைத் தவிர்த்து,
உண்மை வயப்பட்டு எல்லோரும் இயங்கின்,
அதனால் சமூகம் உயர்வடையும்.
சமூக விடயத்தில் நாம் சார்புபட்டு இயங்குதல் ஆகாது.
விருப்புக்குரியவர்கள் செய்யும் தீயவற்றைச் சரி என்றும்,
வெறுப்புக்குரியவர்கள் செய்யும் நல்லவற்றைப் பிழை என்றும் கூறி,
பக்கச்சார்பாய் இயங்கத் தலைப்படின் அச்சமூகம் உருப்படாதாம்.
அறம் நோக்கிய நடுநிலைப் பார்வையோடு இயங்குதலே,
ஒரு நற்சமூகத்தின் அடையாளம்.
அங்ஙனம் வாழும் சமூகம் உயர்வடைதலும்,
எதிர்மறையாய் வாழும் சமூகம் தாழ்வடைதலும் இயற்கை.
இன்று நம் இலங்கைச் சமூகம் தாழ்வடையத் தொடங்கியிருக்கிறது.
✦✦✦
மாபெரும் இந்து சமுத்திரத்துள் கிடக்கும் அழகிய சிறுமுத்து என்று,
ஒரு காலத்தில் உலகோரால் நம் நாடு போற்றப்பட்டது.
யார் கண்பட்டதோ என்னவோ? அவ் அழகிய முத்தை,
நம் அரசியலாளர்கள் திட்டமிட்டுச் சிதைத்தார்கள்.
தம் வாழ்வுக்காகவும் பதவிக்காகவும் இத்தேசத்தின் தலைவர்களும் கட்சிகளும்,
இனப்பகை என்னும் விஷ வித்தை மண்ணுள் விதைத்து,
புகழும் பொலிவுமாய்க் கிடந்த இத்தேசத்தை இரத்தச் சகதியாக்கினார்கள்.
கடந்த பல தசாப்தங்களாக இந்நாட்டின் வரலாறு,
இனப்பகை என்னும் இரத்தக் கறையாலேயே எழுதப்பட்டது.
✦✦✦
வெகுளிகளாய் இருந்த சிங்கள மக்கள்,
தம் தலைவர்களின் வஞ்சக வலைக்குள் அகப்பட்டு,
சுயநலத்தோடு அவர்கள் சொன்ன பொய்களை நம்பி,
தமிழர்களைத் தம் குலப் பகைவர்களாய் எண்ணத் தலைப்பட்டார்கள்.
தமிழர்களின் எழுச்சி சிங்களவர்களின் வீழ்ச்சி என்று,
அத்தலைவர்கள் செய்த பொய்ப் பிரச்சாரத்திற்கு ஆட்பட்டு,
தமிழினத்திற்கும் இத்தேசத்திற்கும் அவர்கள் செய்த அநியாயங்கள் பல.
அவ் அநியாயங்களை விதைத்த கட்சிகளதும், தலைவர்களதும்,
பொய் முகத்திரை இன்று கிழியத் தொடங்கியிருக்கிறது.
✦✦✦
சிரமமின்றிக் கிடைத்த எதனதும்,
அருமை உணரப்படாது என்பார்கள் பெரியோர்கள்.
எமது நாட்டிற்கும் சுதந்திரம் சிரமமின்றியே கிடைத்தது.
அக்காலத்தில் 'சூரியன் மறையாத தேசம்" என்று புகழப்பட்ட,
பிரித்தானியாவுக்கு எதிராக இந்திய தேசத்தில் பிரமாண்டமாய் எழுந்த,
சுதந்திரப் போராட்டத்தின் அதிர்வுகளைத் தாங்கமுடியாது,
இந்தியாவுக்கு சுதந்திரமளித்துவிட்டு பின்வாங்கத் தலைப்பட்ட பிரித்தானிய அரசு,
அச்சுதந்தரத்துக்கு 'கொசுறு" ஆகவே,
இலங்கைக்கான சுதந்திரத்தையும் வழங்கிச் சென்றது.
அங்ஙனம் சிரமமின்றிக் கிடைத்த காரணத்தால்த்தானோ என்னவோ?
அச்சுதந்திரத்தின் அருமை உணரப்படாது,
இன்று இலங்கை இந்தப் பாடுபடுகிறது.
✦✦✦
தமிழர்களை எதிரிகளாக நினைந்து,
அவர்களைத் தலைதூக்க விடக்கூடாது என்பதற்காக,
காலத்திற்குக் காலம் பெரும்பான்மையின இனவாதிகள்,
திட்டமிட்டுத் திட்டமிட்டுச் செய்த சட்டங்களெல்லாம்,
இன்று அவர்களையே சூழ்ந்து நிற்கிறது.
எதிரிகளுக்காய் விரித்த வலையில் தாமே அகப்பட்டு,
தள்ளாடி நிற்கிறார்கள் அத் தலைவர்கள்.
வினை விதைத்தவர்கள் வினை அறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சமணர்களால் தனக்கு இடப்பட்ட நெருப்புக்கு,
'பையவே சென்று பாண்டியர்க்காகவே" என்று,
ஞானசம்பந்தர் கட்டளையிட்டது போல,
ஈழத்தமிழர்களின் எந்த ஞானி கட்டளையிட்டானோ?,
தமிழர்களுக்காய் திட்டமிட்டு இடப்பட்ட அரசியல் பொறியில்,
இன்று சிங்களப் பேரினம் அகப்பட்டு அல்லல்படுகிறது.
பெரியோர்கள் 'செய்வினை" என்று இதனைத்தான் சொன்னார்கள்; போலும்.
✦✦✦
தமிழ்ப் போராளிகளால்,
இத்தேசத்தின் சுதந்திரமும் ஒருமைப்பாடும் தொலையப் போகிறது என்று,
உலகெல்லாம் ஊளையிட்டுத் திரிந்த பேரினவாத நரிகள்,
இன்று தாமே அதற்குக் காரணமாகி,
இத்தேசத்தின் சுதந்திரத்தையும் தன்னாதிக்கத்தையும்,
அழிவின் விளிம்புவரை கொணர்ந்து,
ஆணவ விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
✦✦✦
இலங்கையின் சுதந்திர வரலாற்றில்,
என்றுமில்லாதவாறு இன்று சில சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அத்தனையும் பெருமைச் சாதனைகளன்று, சிறுமைச் சாதனைகளாம்!
ஓரிரு வருடங்களுக்கு முன்,
யாரும் எதிர்பாராத வகையில் மஹிந்தவிடமிருந்து பிரிந்து,
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணி சேர்ந்து ஜனாதிபதியாகி,
'தேசத்தைக் கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேன்" எனக் கூறி,
திடீரென 'ஹீரோ" அவதாரம் எடுத்த ஜனாதிபதி மைத்திரி,
இன்று மீண்டும் கட்சி மாறி,
யாரைக் கொலைகாரர்கள் என்றாரோ அவர்களையே சார்ந்து,
இப்போது தான் முன் சேர்ந்த அணியினரை 'இவர்களே கொலைகாரர்" என்கிறார்.
இங்ஙனமாய் புதிய புரட்சி செய்யப்போய்,
'ஹீரா" பட்டத்தை இழந்து வில்லனாகியிருக்கும் மைத்திரியே,
இன்றைய சிறுமைச் சாதனைகளின் நாயகனாகவும் இருக்கிறார்.
✦✦✦
பெரும்பான்மை பெற்ற ஓர் அரசைத் திடீரெனக் கலைத்து,
பெரும்பான்மை இல்லாத ஒரு குழுவை ஆட்சிக்குக் கொண்டுவந்தது,
ஜனாதிபதி செய்த முதற் சிறுமைச் சாதனை.
பின்னர் பாராளுமன்றைக் கூட்டாது எம்.பி.க்களை விலைபேச வழி செய்து,
தானே முன்னின்று அதனை நடாத்தியது,
ஜனாதிபதி செய்த இரண்டாவது சிறுமைச் சாதனை.
முன்பு அரசமைத்திருந்த கட்சி, தனது பெரும்பான்மையை,
பாராளுமன்றில் நிரூபித்த பிறகும் சாட்டுக்கள் சொல்லி அம்முடிவை ஏற்க மறுத்தது,
ஜனாதிபதி செய்த மூன்றாவது சிறுமைச் சாதனை.
பாராளுமன்றக் கலைப்புக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக,
நீதிமன்று இடைக்கால தடை உத்தரவை விதித்த பின்பு,
அரசாங்கம் இல்லாத அபாக்கிய சூழ்நிலையில்,
நாட்டைத் தொடர்ந்தும் வைத்திருப்பது,
ஜனாதிபதி செய்த நான்காவது சிறுமைச் சாதனை.
தனது அத்தனை அஸ்திரங்களும் பயனற்றுப் போக,
ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க நினைத்து,
பிரதமர் பதவியை 'அவர்க்குத் தருகிறேன்! இவர்க்குத் தருகிறேன்!" என,
பெருமைமிக்க அப்பதவியை விலைபேசி நின்றது,
ஜனாதிபதி செய்த ஐந்தாவது சிறுமைச் சாதனை.
நீதிமன்றம், பாராளுமன்றம் அனைத்தும் கைவிட்ட பின்பும் அடங்காது,
அமைச்சின் செயலாளர்களை வைத்து ஆட்சி நடத்த முனைவது,
ஜனாதிபதி செய்த ஆறாவது சிறுமைச் சாதனை.
ஐக்கிய தேசியக் கட்சி தனது வலைவீசல்களுக்குள் அகப்படாமல்,
பெரும்பான்மையை பாராளுமன்றில் உறுதியாய் நிரூபித்த பின்பும்,
'கடைசிவரை ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கமாட்டேன்!" என்று,
தனது தனிப்பகையைச் சாதித்து நிற்பது,
ஜனாதிபதி செய்த ஏழாவது சிறுமைச் சாதனை.
பெரும்பான்மையை நிரூபித்த ஒரு கட்சி,
தனது தலைவரைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை நிராகரித்து,
அக்கட்சியின் உரிமையைத் தனது உரிமையாக்கி,
தனக்குப் பிடித்தவர்தான் பிரதமராக வரலாம் என்று பிடிவாதம் பிடித்து நிற்பது,
ஜனாதிபதி செய்த எட்டாவது சிறுமைச் சாதனை.
உலகின் ஜனநாயகநாடுகள் அனைத்தும் இக் கீழ்மைகளை எதிர்த்து,
தமது மறைமுக எதிர்ப்பைக் காட்டி நிற்கவும் அவற்றை அலட்சியம் செய்து,
உலக சமுதாயத்திலிருந்து இலங்கையை ஒதுங்க வைத்திருப்பது,
ஜனாதிபதி செய்த ஒன்பதாவது சிறுமைச் சாதனை.
இப்படியாய் உலகம் இகழும் வண்ணம்,
கீழ்மைச் சாதனைகள் புரிந்து நிற்கும் ஜனாதிபதியின் செயல்களால்,
இலங்கையின் சுதந்தரத்தின் அத்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது.
✦✦✦
இதுநாள் வரையும், தமிழர்களையும், தமிழ்த் தலைவர்களையும்,
பகையாய் நினைந்து உதாசீனம் செய்த சிங்களக் கட்சிகளும் தலைவர்களும்,
இன்று அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு கோரி நிற்பது,
காலத்தின் கோலமேயாம்!
தமிழர்க்கான உரிமைகளைத் தரமறுப்பதும்,
ஒருவர் தர தலைப்பட்டால் மற்றவர் அதைத் தடுப்பதுமாக,
காலத்தைப் போக்கிக் கொண்டிருந்த சிங்களத் தலைவர்கள்,
'இன்று அதைத் தருகிறேன்! இதைத் தருகிறேன்!" என ஆசைகாட்டி,
தமிழ்த்தலைவர்களைத் தம் அணியில் சேர்க்கப் படும்பாடு நகைப்பைத் தருகிறது.
நல்லாட்சி அமைத்து மூன்றரை வருட காலமாகியும்,
அரசியல் கைதிகளை விட மறுத்து நின்றவர்கள்,
இன்று தமக்கு ஆதரவு தந்தால் நாளையே அவர்களை விடுகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்.
இலங்கையில் நீதியின் நிலைகண்டு உலகம் சிரிக்கிறது.
சந்திரிக்கா காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வுத்திட்டப் பிரேரணையை
"தமிழர்களுக்கு இதனை வழங்க விடமாட்டோம்" என்று கூறி,
பாராளுமன்றத்தில் பகிரங்கமாய் அதனைக் கிழித்துப் போட்ட,
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
இப்போது அடுத்த சுதந்திரதினத்தின் முன்,
தீர்வுத்திட்ட நகலை பாராளுமன்றில் சமர்ப்பிப்பேன் என்கிறார்.
✦✦✦
இதுவரை காலமும்,
சிங்களவர்களின் வாழ்க்கையை அழிக்கக் காத்திருப்போரே, தமிழர்கள் என்றும்,
தமிழர்களுக்கு வழங்கும் உரிமை சிங்களவர்களை அடிமைகளாக்கிவிடும் என்றும்,
பொய்மையை உண்மை போல் சொல்லிச் சொல்லி,
அப்பாவிச் சிங்கள மக்களை 'உசுப்பேத்தி",
ஒற்றுமையாய் இருந்த சிங்கள, தமிழ் இனங்களை பகையாக்கியவர்கள்,
இனக்கலவரங்கள் என்ற பெயரிலும், இனப் போர் என்ற பெயரிலும்,
இம்மண்ணில் இரத்த வெள்ளத்தை ஓடச்செய்தார்கள்.
இன்றுவரை அருகருகில் இருக்கும் இவ்விரு இனத்தாரையும் ஒன்றுபடவிடாமல்,
பகைச்சுவர் எழுப்பி பிரித்து வைத்திருக்கும் இந்நாட்டின் பேரினவாதத் தலைவர்கள்,
இன்று தமக்கும் தமது கட்சிக்கும் பதவி தேவை என்ற நிலை வந்ததும்,
தமிழர்களுக்கான உரிமைகளை 'நான் தருகிறேன்! நீ தருகிறேன்!" என்று,
போட்டி போட்டு அவற்றை அள்ளி வழங்கத் தயாராகி நிற்கின்றனர்.
இவர்தம் பொய்மையால்,
இனப்பகையில் பொசுங்கிப்போன சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களுக்கு,
இத்தலைவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ?
✦✦✦
இத்தலைவர்களது பொய்மைகளை,
இனியேனும் சிங்களமக்கள் புரிந்து கொள்வார்களா?
சிங்களவர்கள் தமிழர்களின் பகைவர்களல்லர்.
தமிழர்களும் சிங்களவர்களின் பகைவர்களல்லர்.
அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் மத நெறிகளைத்தான்,
சிங்களவர்களும் தமிழர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
இரு இனத்தாரினதும் பாஷைகளில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் பண்பாட்டில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் பண்டிகைகளில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் வழிபாட்டில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் உணவுகளில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் உடைகளில் ஒற்றுமை!
இரு இனத்தாரினதும் உறவு முறைகளில் ஒற்றுமை! என,
ஒன்றுபட்டு வாழ, காரணங்கள் ஆயிரமாய் இருக்க,
தத்தமது பதவிக்காய் பகை விதைத்து,
பல்லாண்டுகளாய் நிலைத்த இத்தேசத்தின் ஒற்றுமையை,
தம் சுயநலத்திற்காய் சிதைத்து வைத்திருக்கும்,
இப்பொய்மை அரசியல்வாதிகளின் புறவேஷத்தை,
இனியேனும் சிங்களமக்கள் உணர்வார்களா?
✦✦✦
தலைவர்களை நியமிப்பது மக்களை வழிநடத்தவேயாம்.
அவ்விடயத்தில் நம் தேசத்தலைவர்கள் முழுமையாய் தோற்றுப்போயினர்.
இனியும் அவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை.
தலைவர்களை வழிநடத்த இனி மக்கள் முன் வரவேண்டியதுதான்.
'இறைமுறை பிழைத்தோய்!" என்று அழைத்து,
பாண்டியனுக்கு எதிராய் சிலம்பைக் கையில் எடுத்த கண்ணகி போல,
இத்தேசத்து மக்கள் அரசியல்வாதிகளைத் தவிர்த்து,
இனங்களுக்கிடையிலான அன்புப்பாதை அமைக்க முன்வருவார்களோயானால்,
இலங்கை அன்னை இருவிழி மலர ஆனந்தக் கண்ணீர் சொரிந்து,
அம்மக்களை வாழ்த்துவாள் என்பது திண்ணம்.
நடக்கிறதோ இல்லையோ! நல்லதை நினைப்போம்.!
✦✦✦✦✦✦✦