தமிழர்களின் தன்மான எழுச்சி ஈது ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

தமிழர்களின் தன்மான எழுச்சி ஈது ! | கம்பவாரிதி  இலங்கை ஜெயராஜ்
 
 
 
லகமெலாம் விழி உயர்த்தி விதிர்த்து நிற்க
        ஒப்பற்ற இளைஞர் படை ஒன்றாய்ச் சேர்ந்து
நலமுடைய தமிழரினை எவருமிங்கு
        நலித்திடவே முடியாதென்றுரைத்து நின்றார்
தலமதனில் அவர்தம்மின் எழுச்சி கண்டு
        தலைவரெனத் தமைத்தாமே சொல்லி நின்றார்
பலமிழந்து செய்தல் அறியாது நின்றார்
        பாரதனில் கலி வீழ பாதை செய்தார்.
 
 

உயர் தமிழின் எழுச்சி இது உறங்கி நின்ற
        உறவான தமிழ்நாட்டின் எழுச்சி ஈது
அயர்வறியா இளைஞர்களின் எழுச்சி ஈது
        அறமதனை உயிர்ப்பிக்கும் எழுச்சி ஈது
வியர்வையிலே ஊறித்தான் உழைத்து நிற்கும்
        வீறான உழவர்களின் எழுச்சி ஈது
பயமறியாத் தமிழர்களின் எழுச்சி ஈது
        பண்பாட்டை நிறுத்துகின்ற எழுச்சி ஈது
 
தமிழ் நாட்டில் இளைஞர்களின் எழுச்சிகண்டு
        தரணியெலாம் வாழுகின்ற தமிழரெல்லாம்
அமிழ்தனைய நம் இளைஞர் முயற்சியாலே
        அவனிதனில் இனித் தமிழே வாழுமென்று
நிமிர்ந்தேதான் நின்றார்கள் நெகிழ்ச்சி பொங்க
        நெற்றிதனை நிலம் வைத்து வணங்கினார்கள்.
திமிராலே தமிழர்களை ஆள எண்ணி
        திட்டங்கள் போட்டோரும் திகைத்து நின்றார்.

மனிதர்களின் உயிரதனை மதித்திடாது
        மண்ணாக்கும் பிறநாட்டார் மனிதம் பேசி
இனியதென விலங்கினுயிர் காக்க வந்தார்
        எப்போதும் அவையறுத்து உண்ணும் பேய்கள்
வணிகமதை நம் மண்ணில் விதைக்க எண்ணி
        வந்தோர்க்கு நம் பண்பு தெரியுமாமோ?
புனிதமென உயிர் அனைத்தும் மதிக்கும் நல்ல
        பொன்னான தமிழர்க்கு அறங்கள் சொன்னார்.

பேயதுவும் வேதமதை ஓதினால் போல்
        பெரிய பழி சூழ்ந்தவர்கள் அறங்கள்  சொல்லி
தாய்த்தமிழின் வேரதனை அசைக்கப் பார்த்தார்
        தமிழர்களின் தன்மானம் சிதைக்கப் பார்த்தார்
மாயவிடோம் தமிழர்களின் மாண்பை என்று
        மண்ணதனின் மைந்தரெலாம் எழுச்சி கொள்ள
போய் ஒளிந்து கொண்டார்கள் பொய்யர் தாமும்
        பொன்னான இளைஞர்களால் மானம் காத்தோம்.

ஏறு தழுவும் நல்ல இனிய பண்பு
        எங்களது தமிழர்களின் வீரப்பண்பு
ஆரிதனில் தலையிடலாம் அலிகளாக்கி
        ஆண்மையினைச் சிதைத்திடவே நினைந்தார்போலும்
வேறிடத்தில் அவிந்திடலாம் இந்தப் பொய்கள்
        வேழமெனத் தமிழ் இளைஞர் வெகுண்டு காட்டி
நீறெனவே பொய்யர்களை நிலத்தில் சாய்த்தார்
        நிமிர்ந்ததுவாம் தமிழரினம் நீசர் மாய!

வீறிழந்து தாயினையும் விற்கும் பண்பு
        வீரமில்லாத் தலைமையிடம் வந்ததாலே
ஏறு பிடித்தாற்போல இனிய நல்ல
        எழுச்சிமிகு தமிழரையும் பிடிக்க எண்ணி
ஆரிதனைக் கேட்டிடவே முடியுமென்று
        ஆணவத்தால் கொக்கரித்தார் அடங்கிப்போனார்
கூறிடவும் முடிந்திடுமோ? எங்கள் நல்ல
        கொள்கை மிகு இளைஞர்களின் எழுச்சி தன்னை!

சத்தியத்தின் எழுச்சி இது சகத்தில் நல்ல
        தமிழர்களின் தன்மான எழுச்சி ஈது
வித்தகராய் ஒற்றுமையின் திறத்தைக் காட்டி
        வீறோடு எழுந்தவர்க்கு ஒன்று சொல்வேன்
இத்தரையில் தமிழரினம் எழுச்சி கொள்ள
        இனிமேலும் போராட்டம் தொடரவேண்டும்.
உத்தமரே! உறுதியுடன் நின்று நீவீர்
        உவப்பான புது உலகு சமைத்துத் தாரீர்!
                                                     ▇  ▇
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.