புத்துயிர்ப்பெய்தட்டும் புதிய யுகப்புரட்சி ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

 புத்துயிர்ப்பெய்தட்டும் புதிய யுகப்புரட்சி ! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
 
லகில் நிகழ்ந்த உன்னத புரட்சிகளுக்கு நிகராய்,
தமிழ்நாட்டில் நிகழ்ந்த ‘ஜல்லிக்கட்டுப் புரட்சி’ வரலாற்றில் பதிவாகிவிட்டது.
திட்டமிடல், ஆட்சேர்த்தல், பாதை தீர்மானித்தல் என்பனவான,
புரட்சிக்கான ஆயத்தங்கள் ஏதுமின்றி,
எப்படி நடந்தது? யார் நடத்தினார்? எவர் துணைநின்றார்? என்ற ஏதும் தெரியாமல்,
நேர்த்தொடர்புகள் இன்றி எங்கோ சூரியன் உதிக்க எங்கோ தாமரை விரிந்தால்போல்,
அலங்காநல்லூரில் இவ்வாண்டும் ஜல்லிக்கட்டு தடைப்பட,
கண்மூடி கண்திறக்கும் கால எல்லைக்குள் தமிழகமே மிரண்டு போகும்படி,
பெரும்புரட்சி வெடித்தது.தமிழகமென்ன தமிழகம்? பாரதம் என்ற எல்லையைக்கூடக் கடந்து,
உலகம் முழுவதினதும் கவனத்தை முழுமையாய் ஈர்த்த இப்புரட்சி,
அறிஞர், அரசியலாளர், ஆய்வாளர் என அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.
எங்கிருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? என்று சிந்திக்கும் முன்பாக,
இலட்சக்கணக்கில் ‘மரீனாவில்’ கூடிய கூட்டம் கண்டு,
வியப்பின் உச்சத்திற்கே போனது உலகம்.
குறித்த ஒரு சில நாட்களுக்குள்,
நூற்றுக்கணக்கில் தொடங்கி ஆயிரக்கணக்கில் வளர்ந்து,
இலட்சக்கணக்காய் மாறிய கூட்ட எண்ணிக்கை கண்டு,
அனைவரும் விதிர்விதிர்த்துப் போனது உண்மை.
பணமும் பிரியாணியும் கொடுக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி வரப்படுவதாய்ச் சொல்லப்படும்,
அரசியல் கூட்டங்களில் கூட இத்தனை பெரிய கூட்டம் கூடியதில்லை.
குறிப்பிட்ட எந்த அரசியல் தலைவரினதும் ஈர்ப்புக்காய் வராதகூட்டம் இது.
குறிப்பிட்ட எந்த புகழ்பெற்ற நடிகர்களின் காட்சிக்காய் வராத கூட்டம் இது,
பயனேதும் எதிர்பார்க்காது உணர்ச்சியால் மட்டும் கூடிய கூட்டம் இது.
சுருங்கச் சொன்னால் மற்றைய கூட்டங்களைப் போல,
கூட்டிய கூட்டம் அல்ல. இது கூடிய கூட்டம்.பாரதத்தில் காந்தியின் எழுச்சிக்குப் பின் எழுந்த சரித்திரம் இது என்று துணிந்து சொல்லலாம்.
காந்தி கூட மெல்ல மெல்லத் தன் ஆத்ம சக்தியை வளர்த்து அகிம்சையைக் கருவியாக்கி,
நீண்ட காலமெடுத்தே இத்தகைய புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்.
இங்கோ அவை ஏதுமின்றி ஆச்சரியமாய் இப்புரட்சி நடந்தது.
அதர்மம் மிகுகிற பொழுது தர்மம் காக்க யுகம் தோறும் வருவேன் என்றான் கண்ணன்.
கண்ணனின் கூற்றை காலம் உறுதி செய்திருக்கிறது.
அதில் கூட ஒரு ஆச்சரியம்!
இறைச்சக்தி தர்மம் காக்க எழுகின்றபொழுது ஏதோ ஒரு மனிதரூபத்தில் பிரவாகித்தே,
புரட்சிகளை நிகழ்த்துவிக்கும்.
இங்கோ தனித்த மனிதர்கள் என்று இல்லாமல்,
காலத்தையே கருவியாக்கி அறத்தைக் காக்க இறைச்சக்தி எழுந்தது.
இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
ஹிட்லரின் கொடூரத்தின் வீழ்ச்சியை இயற்கையின் வடிவாய் நின்று,
ரஷ்யப்பனிப்பொழிவால் நிகழ்த்திக் காட்டினாற்போல,
தமிழ்நாட்டின் அறப்பிறழ்வுகளை சகிக்க முடியாது,
ஜல்லிக்கட்டு எனும் ஒரு சம்பவத்தைக் காரணமாக்கி,
கால ரூபத்தில் அறம் காக்க ஆண்டவன் எழுந்தான்!
அதிசயித்தது உலகம் !தலைமை தாங்குபவனோ, வழிகாட்டுபவனோ இல்லாமல்,
புரட்சிகள் எங்கும் நடந்ததாய் வரலாறில்லை.
இங்கு அவ்வரலாற்றுப் புதுமையும் நடந்தது.
யார் நெறிப்படுத்தினார்? யார் தலைமை தாங்கினார்? என்று,
குறித்த ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாமல் பொதுவில் எழுந்த புரட்சி இது.
பத்துப்பேர் கூடினாலே பலரினதும் முரண்பட்ட எண்ணச் சிதைவால்,
ஒத்துப்போகாத உடைவும், ஒழுக்கயீனமும் விளைவது இயல்பு.
இலட்சம் பேர் கூடியபோதும் ஒற்றுமையாய் கட்டுப்பாட்டில் அசைவின்றி இருந்த,
இக் கூட்டத்தின் நெறிகண்டு வியவாதாரே இல்லை எனலாம்.இத்தனைக்கும் அத்தனையும் இளைஞர் கூட்டம்.
வேகமும் காமமும் கலந்து வீறு கொள்ளும் வயதினர்,
முனிவர்கள் போலாகி முன்னின்று,
உலகம் வியக்க ஒழுக்கம் கடைப்பிடித்துக் காட்டினர்.
இதுநாள் வரை பெண்களைக் கண்டாலே,
சேட்டை, சில்மிஷம் என்றிருந்த துடிப்புமிகு இளைஞரெலாம்,
அருகிருந்த அழகுப் பெண்களை,
தங்கையாகவும், தமக்கையாகவும் பார்த்துப் பாதுகாத்த அதிசயம்,
உலகவரலாற்றில் இல்லாத இன்னொரு அதிசயம்.இளையோரின் இக்கட்டுப்பாட்டின் காரணியாய் இருந்தது,
தமிழ் உணர்ச்சியே என்பது அதிசயங்களின் அடுத்தபடி.
அறிஞர்கள், அரசியலார், ஊடகக்காரர், கலைத்துறையினர், பிரமுகர்கள்,
நிர்வாகிகள் என பெரும்பாலானோர் அறத்தை அழுக்காய் நினைத்து,
அறமீறலை அணியாய்க் கொண்டு ஆட்டம்போட்டு,
அன்னைத்தமிழின் துகிலுரியத் தொடங்கியிருந்த காலத்தில்,
இளைஞர்களின் இவ் அற எழுச்சி கண்டு,
எம் தமிழ்த்தாய் எதிரிகள் பற்றியிழுத்துக் கொண்டிருந்த முந்தானையை,
ஆவேசத்துடன் பறித்து தன் அங்கம் மூடி அழுதபடி சிரித்திருப்பாள்.உயிரிலிருந்து ஒழுக்கம் வரை விலைபேசி விளையாடிக்கொண்டிருந்த,
தமிழகத்தின் அனைத்துத் துறையினரும்,
அந்த இளைஞர்களின் ஏற்றமிகு தவத்தின் ஒளியில் தம் இருள் கலைந்தார்கள்.
‘கவர்’களையும் பெட்டிகளையும் பெறாமலே,
இவ் இளையோர்தம் அறத்திற்கு ஆதரவு செய்யத் துணிந்த,
அவர்தம் செயலே மேற்செய்திக்காம் சான்று.
வன்முறைகள் ஏதுமின்றி இவ் இளையோர் வளர்த்த அற அக்கினி சுட,
மத்தி, மாநிலம் என அனைத்து நிர்வாகத்தாரும்,
கசிந்து அசையவேண்டிய கதி ஏற்பட்டது.
பொய்மை ஒழித்துத் தமிழகம் தர்மத்தின் கையில் தானாய் விழுந்தது என,
நினைந்து மகிழ்ந்திருக்கையில் …..,
நிறைவு நாளில் மீண்டும் கலி விளையாடிற்று.
அறம் தலைகவிழ்ந்தது.
பொறுமை காக்காமல் அவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறை கண்டு,
அதிர்ந்து போனது உலகம்.இன்று,
போராட்டக்காரர்கள், அரசியலார் என,
இரு சாரார்க்கும் சாதக, பாதகமான கருத்துக்களை,
இராப்பகலாய் விவாதித்து வியாபாரம் பெருக்குகின்றன ஊடகங்கள்.
போராட்டம் சிதைய, சிதைந்ததற்காம் காரணங்களை,
இப்போது அனைவரும் அடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
விளைந்ததற்கான காரணம் தெரியாதவர்கள்,
விழுந்ததற்கான காரணம் கண்டு பிடிக்கிறார்கள்.
தமிழகம் பழையபடி தன் மறப்பாதைக்குத் திரும்புகிறதோ என,
சான்றோர் வருந்தி நிற்கின்றனர்.நிகழ்ந்த சீர்குலைவுக்கு யார் காரணம்?
நிதானமாய் ஆராயப்படவேண்டிய விடயம் இது.
சரி, பிழை எப்படியிருந்தாலும் நடந்த அரச வன்முறைக்கு,
எவ்விதத்திலும் சமாதானம் காண முடியாதென்பது மட்டும் உறுதி.
காலத்தால் முகிழ்த்தெழுந்த ஓர் அற ஒளியினை,
காத்து வளர்க்க வேண்டிய கடமையை மறந்து,
அரசும் காவல்துறையும் நடந்து கொண்ட விதம்,
தமிழக வரலாற்றில் ஒரு கறையாய்ப் பதிந்துவிட்டது.போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் நடந்து கொண்ட விதத்தை,
தொலைக்காட்சிகளினூடு காண நெஞ்சம் பதைக்கிறது.
ஈவிரக்கமேதுமின்றி, துளிகூட நெஞ்சில் கருணையில்லாமல்,
இளையோரை அவர்கள் தாக்கும் காட்சிகளைக் காண,
அடிவயிறில் அக்கினி எழுகின்றது.
‘காவல்துறை’ என்றதன் அர்த்தமே அவர்களுக்குப் புரியவில்லை.
அறத்தைக் காக்க அமைந்ததால் அவ் அமைப்புக்கு வந்த பெயர் அது.
அன்றைய அவர்களின் செயற்பாட்டில் அறத்தின் சாயலைக்கூட காணமுடியவில்லை.
கடமை எனும் நிலைகடந்து பகையுணர்வோடு மக்களை அவர்கள் தாக்கினார்கள்.
ஆண், பெண் என்ற பேதமின்றி அவர்கள் காட்டிய அட்டூழியம்,
அசிங்கத்தின் உச்சம்!கையில் வைத்திருந்த காட்டுத்தடிகளால் மிருகங்களைத் தாக்குவது போல,
அவர்கள் மக்களை ஆவேசத்தோடு தாக்கும் காட்சிகள் அடிவயிற்றைக் கலக்குகின்றன.
ஆத்திரப்படவேண்டிய இளையோர் அறத்திற்காய் அழுது நிற்கின்றார்கள்.
அமைதி காக்க வேண்டிய பொலிசார் அராஜகம் செய்கின்றார்கள்.
வேலியே பயிரை மேய்ந்த விளையாட்டு இது!
தம் கட்டளைக்கு அடிபணிந்து விலகி ஓடுகிறவனைக் கூட,
தடுத்து வீழ்த்தி சூழ்ந்து நின்று ஒருவர் மாறி ஒருவராய்,
நீண்ட கம்புகளால் பாம்பை அடிக்குமாப்போல அவர்கள் இளையோரை அடிக்கும் காட்சி,
நீண்ட காலத்திற்கு நம் நெஞ்சைவிட்டு அகலாது என்பது நிச்சயம்.காட்டுக் கற்களால் மக்களைத் தாக்குவதும்,
வாகனங்களுக்குத் தாமே தீ மூட்டுவதும்,
பெண்களின் துகில் பற்றியிழுப்பதும்,
கர்ப்பிணிகள் என்று கூடக் கருணைகாட்டாது வதைப்பதும்,
எதிரி நாட்டுப்படையினரைத் தாக்குமாப்போல்,
இரத்தம் பீறிட இளையோரைத் தாக்குவதுமாக,
அவர்கள் நடந்து கொண்டவிதம் அருவருப்பின் உச்சம்.இளையோர் மாடு பிடித்தலே மிருகவதையாம் என்று,
வழக்காடி வம்பு வளர்த்த ‘பீற்றா’ நிறுவனத்தினர்.
இளையோரைக் காவல்துறையினர் இரக்கமேயின்றி,
மிருகங்களைப் போல் வதைத்த காட்சி கண்டும் மௌனித்திருக்கிறார்கள்.
இப்போது எங்கே போயிற்று அவர்களது ஜீவகாருண்யம்?
விளையாட அனுமதி கேட்டுப் போராடிய இளைஞர்களை,
‘காமக் களியாட்டர்கள்’ என்று வக்கிரமாய் உரைத்த வனிதை,
இன்று வாய்மூடி இருப்பதன் மர்மம் என்ன?
மாட்டுக்காய்ப் பேசி நம் மரபொழித்தால், மாற்றார் பணம் தருவர்.
நாட்டுக்காய்ப் பேசி நடக்கப்போவதென்ன?
எங்கோ இருப்பவர் நூல் பிடிக்க இங்கு ஆடும் பொம்மைகள்.
இத்தகையோர் பாதம் பட்டாலே நிலமடந்தை நீசமுறுவாள் என்பது நிச்சயம்!நேர்முக வர்ணனையாய் இக்கொடிய காட்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க,
தமிழ்நாட்டுத் தலைவர்களெல்லாம் அவரவர் வேலையில்.
பேருக்கு அறிக்கை விட்டதோடு அவர்தம் வேலை முடிந்தது.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடி,
தத்தம் கட்சிக்குக் காவல் செய்து கொண்டிருந்தனர்.
‘நிறுத்து! உன் நீசத்தை’ என்று சொல்ல அங்கு ஒருத்தர் இல்லை.
மரபுக்காய் உண்ணாவிரதமிருந்த மனிதர்க்காய் உண்ணாவிரதமிருக்க,
ஒரு தலைவர் தானும் உடன் முன்வரவில்லை.
இத்தடியடிக் காட்சியில் தம் பிள்ளைகளையும்,
துகிலுரிக்காட்சியில் தம் துணைவியரையும் கண்டிருந்தால்,
இங்ஙனம் வாய்மூடி மௌனித்திருந்திருப்பார்களா இவர்கள்?
தவறு! தவறு! அவர்களெல்லாம் ஏன் இங்கு வரப்போகிறார்கள்?
அடுத்த தலைவர்களாய் ஆக வழிதேடிக் கொண்டிருக்கும் அவர்கள்,
போராடும் களங்களுக்குள் ஏன் புகப் போகிறார்கள்?
அதனால்த்தான் ஊரான் பிள்ளை உதைபட்டால் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள்.
வேற்று மண்ணில் வாழும் எம் நெஞ்சம் தமிழ்த் தொடர்பால் மட்டுமே தத்தளிக்கிறது.
தம் மண்ணின் மைந்தர்களின் வதையை இவர்கள் எங்ஙனம் தாங்கி நிற்கின்றனரோ?
பரந்து கெடுக உலகியற்றியான்.கேள்விகள் சில நெஞ்சைக் குடைந்தபடி இருக்கின்றன.
ஈழத்தில், மாற்றினத்தார்தான் எம்மை மாடுகளாய் வதைத்தார்கள்.
இவர்களோ தம் இனத்தையே தாம் தாக்கி மகிழ்ந்து நிற்கின்றார்கள்.
எப்படி மனம் வந்தது இவர்களுக்கு-இதுவே முதற்கேள்வி.
ஒட்டுமொத்தமாய் ஊரே எழுச்சி பெற்றபோது,
அந்த உணர்வின் ஒருதுளி தானும்,
காவல்துறையினரின் இதயத்தினுள் புகவில்லையா?
இவர்களும் தமிழ் மண்ணின் மைந்தர்கள் தானா?
வீழ்ந்தவனை வீராவேசமாய் சூழ்ந்து தாக்கியபோது,
‘ஐயோ! இதுவும் என் விழுதல்லவா’ என்று,
இவரில் எவர்க்கேனும் இதயம் துடிக்கவில்லையா?
காக்கிச்சட்டை என்பது என்ன கருணையை மூடும் கவசமா?
இது நம் நெஞ்சைக்குடையும் அடுத்த கேள்வி.
வேடுவராய் அன்று அவர்கள் செய்த வினை கண்டு வெட்கிப்போனோம்.
தமிழகத்தைத் தாய் மண்ணாய் நினைந்து மகிழ்ந்திருக்கிறோம்.
இன்று அந் நினைப்பினாலேயே தலைகுனிகிறோம்.
நெடுமையால் இங்கு அன்று நமை வருத்திய சிங்கள நீசர்களை,
இன்று தங்கள் கொடுமையால் உயர்ந்தவர்களாய் ஆக்கிவிட்டார்கள்.
தமிழகக் காவல்துறையினர்.
ஓரடியே தாங்கமுடியாமல் ஓடிச்சுருண்டவனின் மேல்,
வேறடி அடித்து விளையாடிய அவர்கள் வக்கிரகத்தில்,
காவலும் இல்லை! கருணையும் இல்லை!சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல் என்று,
கலங்கிக் கதறிய கண்ணகியின் குரல் இன்றும் காலத்துள் பதிவதாய்ப்படுகிறது.
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயேஎன்று,
பாண்டியன் அரண்மனை வாயிலில் நின்று பதைத்துக் கூவிய கண்ணகியின் கூவல்,
இன்றும் எங்கோ பரவுவதாய்ப்படுகிறது.
அல்லல்பட்டு ஆற்றாது நின்ற அபலைப் பெண்ணின் குரலுக்காய்,
ஆன்றோர் பலர் பிறந்த தமிழ்நாட்டு அறமண்,
அன்று மன்னவனை வீழ்த்தி மதுரையை எரித்ததாம்.
அல்லல்பட்டு ஆற்றாது அறத்திற்காய் அழுது நின்ற இன்றைய இளையோர்க்காய்,
அம்மண் எந்தப் பாண்டியனை வீழ்த்தி எந்த மதுரையை எரியப்போகிறதோ?
நினைக்கவே நெஞ்சு சுடுகிறது!இத்தனையும் ஒருபுறம் கிடக்கட்டும்.
இறையருள் போல் எழுந்த இவ் எழுச்சி இழிவுற்றதன் காரணம் என்ன?
நடுநிலையோடு ஆராய்தலும் அவசியமாகிறது.நம் இளைஞர்கள் செய்த தவறுகளும் சில உள!
வருந்திக்கிடக்கும் அவர்கள் வாடுவார்கள் என்று அறிந்தும்,
இதனைச் சொல்வது அவசியமாகிறது.
பிழை எது என்று கண்டுபிடித்தால்த்தானே,
தொடரும் பாதையில் சரியைச் சமைக்கலாம்.
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்பதும் அவசியமல்லவா.
ஆகவே அவர்தம் பிழைகள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.தலைமையின்றி இயங்குகிறோம் என்று இளையோர் தருக்குற்றார்கள்.
அதுவே அவர்களது பலமும் பலயீனமும் ஆயிற்று.
விரல் அளவாய் அவர்கள் நினைந்த புரட்சி திடீரென விண்ணளவாய் உயர்ந்ததும்,
அவர்களது சமநிலை தவறிப்போனது நிஜம்.
கூட்டம் கூடக்கூட வெற்றிக் குதூகலத்தில் விழுந்தார்களேயன்றி,
எதிர்பாராத இவ் எழுச்சியை எங்ஙனம் கையாள்வது என்பது பற்றி,
கூடித்திட்டமிடாதது அவர்களது குற்றமேயாம்!
தம் நினைப்பைக் கடந்த கூட்டம் கூடிய பின்னேனும்,
இக் கூட்டத்தை எங்ஙனம் கையாளப்போகிறோம் என்று,
திட்டமிடாதது அவர்கள் விட்ட பெருந்தவறு!
இளையர்க்கே உரிய இயல்பால்,
ஏற்றம் கண்டு எழுச்சி கொண்டவர்கள்.
கூட்டம் கண்டு குதூகலித்தவர்கள்.
மாற்றம் கண்டு நிலைமையை மறு மதிப்பிட மறந்தது மாபெரும் குற்றமே !தனித்தலைமையை நியமிக்க விரும்பாத,
அவர்தம் செயற்பாட்டிலும் நியாயம் இருக்கவே செய்தது.
பயத்தாலும் பணத்தாலும் தலைவர்கள் விலைபேசப்படுவதை கண்டிருந்ததாலேயே,
அவர்கள், தம் புரட்சிக்குத் தனித்தலைமை வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் கட்டுக்கடங்காது கூட்டம் கூடிய பின்னேனும்,
அதனை நெறி  செய்ய ஒரு கூட்டுத்தலைமை நிர்வாகத்தையேனும்,
நிச்சயம் அவர்கள் உருவாக்கியிருக்கவேண்டும்.
இத்தனை சாதனையும் செய்த இளையவர்கள்,
அரசுக்கெதிரான பெரும் போராட்டத்தில்,
தம் சார்பாக அவர்களுடன் பேச ஓர்அணியையேனும் உருவாக்காதது அதிசயமே.
கற்ற இளைஞர்களுக்கு இக்கருத்து வாராதது ஏனோ?
விதியின் விளையாட்டன்றி வேறென்ன?தேச எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், கட்சி எதிர்ப்பாளர்கள், மத எதிர்ப்பாளர்கள் என,
பல வேண்டாச்சக்திகள் கடைசி நேரத்தில் உள்நுழைந்து விட்டதாய்,
ஆர்ப்பாட்டத்திற்குக் காரணமாய் இருந்தோரில் ஒருவரான ஆதி பேசியிருக்கிறார்.
தடுக்கமுடியாமல், தான் பின்வாங்கியதை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அங்ஙனம் தீயசக்திகளைத் தடுக்கமுடியாமல் போனதற்குத் தலைமை இல்லாததே காரணம்.
எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் என்பது வெறும் வார்த்தைக்கு மட்டுமே அழகு தரும் விடயம்.
நடைமுறையில் அது என்றும் சாத்தியப்படாத ஒன்றே.
தலையின்றி அங்கங்கள் இயங்குவது எங்ஙனம்?தனித்தலைமையின்றி இக் கூட்டத்தில் எல்லோரும் மன்னர்களானதால்,
பொதுவில் கிடந்த அம் மகுடத்தைத்தம் தலைசூட்டி,
மாற்றாரும் உள்நுழைந்திருக்கிறார்கள் போல.
வேலியில்லா நிலத்தில் விளையும் பயிர் என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
காலி செய்ய எண்ணிய அக்கயவர்தம் எண்ணம் நிறைவேறியிருக்கிறது.மக்கள் கூட்டம் பெருகத் தொடங்கியதுமே,
ஒரு கூட்டுத்தலைமையை இளையோர் உருவாக்கியிருக்கவேண்டும்.
விரிந்த நிலப்பரப்பில் இடம்பிரித்து,
ஆயிரம்பேருக்கொருவராய் நிர்வாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.
ஆயிரத்தில் ஒருவரான அப்பொறுப்பாளர் அனைவரையும் சேர்த்து ஒரு தலைமைக்குழுவும்,
அத்தலைமைக்குழுவுள் அறிவும் நிதானமும் உடன் முடிவெடுக்கும் ஆற்றலும் உள்ள,
ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து,
போராட்டக் கருத்தை உரைக்கும் தகுதியை அவர்க்கு வழங்கியிருக்கவேண்டும்.
சகாயம் போன்ற நீதியான அறிவாளர் ஒருசிலரைத் தேர்ந்து,
தமக்கு நெறி உரைப்போராய் அமர்த்திக் கொண்டிருக்கவேண்டும்.
இங்ஙனம் பிரிவுகள் செய்திருந்தால் மாற்றார் உட்புக வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.அதுநாள்வரை தமிழினத்தின் ஆற்றல் தெரியாமல் தமிழர்களைப் புல்லென மதித்து வந்த,
மத்திய ஆட்சியாளர் ஆரம்பத்தில் இவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அசையாது நின்றனர்.
போராட்ட ஆரம்பத்தில் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சரை,
மறுப்புரைத்து திருப்பி அனுப்பினார் பிரதமர்.
ஆனால் அடுத்தடுத்து திரண்ட மக்கள் கூட்டத்தின் எழுச்சி கண்டு,
மத்திய அரசும் அதிர்ந்து போனது உண்மை.‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்றாற் போல,
இவ் இளையோர் புரட்சி அரசியல் புரட்சியாய் ஆகிவிடலாம் என்று அஞ்சி,
இதன்மேலும் பிரச்சினையை வளரவிடாது அடங்கிவிட வேண்டும் என நினைத்து,
வருடங்களால் ஆகாத செயலை ஒரு வாரத்துள் நிகழ்த்தி,
அவசர அவசரமாய் அனைத்தும் செய்து,
சம்பவ தினத்திற்கு முதல்தினமே அவசர சட்டம் இயற்றி,
இளையோரின் கொள்கையை ஏற்க முன் வந்தது மத்திய அரசு.அந்நிலை இளையோருக்குக் கிடைத்த பெருவெற்றி என்பதில் ஐயமில்லை.
அவ்வெற்றியைக் கையாளத் தெரியாமல் போனது  இளையோர்தம் குற்றமே.
‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்த சேராது’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
அனுபவஸ்தினரின் ஆழ்ந்த பதிவு இது.
கவனித்துப் பாருங்கள்!
சிறு பிள்ளை வேளாண்மை விளையாது என்று அவர்கள் சொல்லவில்லை.
வீடு வந்து சேராது என்றே சொன்னார்கள்.
வேகம் கொண்ட இளையோரின் முயற்சி நிச்சயம் விளைவைத்தரும் என்பதில் அவர்கட்கு ஐயமில்லை.
ஆனால் பொறுமையுடன் விளைவை ஒன்றாக்கி பாதுகாத்துப் பேணி வீடுசேர்க்கும் பொறுமை,
அவர்களிடம் இருக்காது என்பதே அவர்தம் கருத்தாய் இருந்திருக்கிறது.
அவர்கள் அங்ஙனம் நினைக்கக் காரணம்,
விளைவைக் கண்டதும் தம் ஆற்றல் வியந்து சமநிலை கெட,
மிகை ஊக்கத்தால் வெற்றிக் கொண்டாட்டத்தில் விளைவில் கவனம் சிதைய,
வெற்றியைப் பாதுகாக்கும் வீரியம் இழப்பார்கள் அவர்கள் என்பதேயாம்.
அது வயது தரும் வேகத்தின் விளைவு.இங்கு நடந்ததும் இதுவேதான்.
நான் மேலே சொன்னால்போல ஒரு நிர்வாகம் அமைத்திருந்தால்,
போராட்டக்காரர்கள் சார்பில் பேச நிர்ணயிக்கப்பட்டவர்கள்,
ஒன்று, அன்றே போராட்டத்தை வாபஸ் பெறுவதாயோ அல்லது,
மறுநாள் சட்டசபையில் சட்டம் நிறைவேறிய பின்பு வாபஸ் பெறுவதாயோ,
அரசு பணிந்த மறுகணமே ஓர் அறிக்கை விட்டிருக்கலாம்.
அங்ஙனம் அறிக்கை விட்டிருந்தால்,
மறுநாள் கூட்டத்தைக் குழப்ப காவல்துறைக்குக் காரணம்  இல்லாமல் போயிருக்கும்.
குழப்பமின்றி கூட்டம் முடிவடைந்திருக்கும்.
விளைச்சல் வீடு சேர்ந்திருக்கும்.இச்சறுக்கல்களால் எத்தனை வாய்ப்புக்களை இழந்து போனார்கள் இவர்கள்.
அமைதியாய்ப் போராட்டம் வெற்றியோடு முடிந்திருந்தால்,
இனியும் இவர்கள் எப்போ வேண்டுமானாலும் கூடலாம் எனும் அச்சத்தில்,
ஆட்சியாளர்கள் தம்மைத்தாம் திருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்.
தமிழரையும் தமிழ்நாட்டையும் ஏதும் செய்யலாம் எனும்,
மத்திய ஆட்சியின் மனநிலை மாறியிருக்கும்.
தமிழ்நாட்டின் அரசியல் போக்கே அதிர்ந்து திசைதிரும்பியிருக்கும்.
வெற்றியின் விளிம்பு வரை வந்துவிட்டு வீணே தோற்றுநிற்கிறார்கள்.மரமொன்றில் ஏறுகிறவன் அதன் உச்சியைத் தொட்டபின்பும்,
ஊக்கமிகுதியால் மேலும் ஏறத்தலைப்பட்டால்,
அது அவனது உயிர்க்கு இறுதியாகிவிடும் என்று,
அன்றே நம் பாட்டன் வள்ளுவன் சொன்னான்.
‘நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்’
வெளிநாட்டிலிருந்து வேற்றுப்பாசையில் சொல்லியிருந்தால் கேட்டிருப்போம்.
நம் நாட்டிலிருந்து நமது பாசையில் சொன்னதால் அலட்சியப்படுத்திவிட்டோம்.‘பூனை மெலிந்தால் எலி சுகம் கேட்குமாம்.’
உங்களது விஸ்வரூபம் கண்டு,
ஆடி அதிர்ந்து அசைவற்று நின்றவர்கள் எல்லாம்,
இன்று உங்கள் முயற்சி வீழ,
மீண்டும் தம் உபதேசப் படலத்தைத் தொடக்கியுள்ளனர்.
அரசியலாளர், நடிகர்கள், அறிஞர்கள் என பல்துறை சார்ந்தாரும்,
ஆதரவு காட்டியும், அறிவுரை கூறியும் வெளியிடும்,
அறிக்கைகளையும் பேச்சுக்களையும் கேட்க ஆத்திரமாய் வருகிறது.
உங்கள் அவசரத்தால் வந்த விளைவு.இன்று அனைவரது கோபமும் காவல்துறையினரின் மீதாகியிருக்கிறது.
ஆழச் சிந்தித்தால் அவர்களையும் முழுமையாய்க் குற்றம் சொல்ல முடியாதெனவேபடுகிறது.
உத்தரவிற்குப் பணிந்து இயங்குவது அவர்களுக்கு ஊட்டப்பட்ட முதற்பாடம்.
நீங்கள் போராடத்தொடங்கிய காலத்திலிருந்து உங்கள்மீது,
அவர்கள் அன்பும் அனுசரணையும் காட்டி நின்றதை மறக்கமுடியாது.
நிறைவுநாளில் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகளாய்த்தான்,
அவர்களைக் கருதவேண்டியிருக்கிறது.
இம்மாபெரும் புரட்சி இளைஞர் திறனால் வென்றதாய் முடிந்தால்,
மக்கள் ஆதரவு அவர்கள்பால் திரும்பி,
தம் அரசியல் பாதையை அடைக்கும் கல்லாகிவிடும் என நினைந்த,
யாரோ ஒருவரின் உத்தரவே காவல்துறையை இந்த அளவுக்கு இறக்கியிருக்கிறது.
அந்த உத்தரவு மத்தியிலிருந்து வந்ததோ? மாநிலத்திலிருந்து வந்ததோ?,
யார் அறிவார்! அது இறைவனுக்கே வெளிச்சம்.அதுவரை நட்பாயிருந்த காவல்துறையின் நிறைவுநாள் கோரிக்கையை,
உங்கள் போராட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டநிலையில்,
அஞ்சாமல் நீங்கள் ஏற்றிருக்கலாம்.
அப்போதே நீங்கள் கலைந்திருந்தால் காவல்துறையை முன் வைத்து,
உங்களை வீழ்த்த திட்டம் போட்டவர்களின் எண்ணம் சிதைந்திருக்கும்.
வீணாக நீங்களே அவர்தம் சூழ்ச்சிக்கு வழிதிறந்து விட்டீர்கள்.பல தீயசக்திகள் உட்புகுந்து விட்டதாய் இன்று நீங்களே சொல்கிறீர்கள்.
ஒரு பேச்சுக்காய் வைத்துக் கொள்ளுங்கள்.
இத்தனை இலட்சம் பேர் கூடியிருந்த அவ்விடத்தில்,
நெஞ்சில் நஞ்சு பதித்த யாராவது ஒரு தீயவன்,
குண்டொன்றை வெடிக்கச் செய்திருந்தால் நிலைமை என்னாகியிருக்கும்?
அப்போது உலகம் யாரைப் பழி சொல்லியிருக்கும்.
இந்நிலைமையையும் நாம் எண்ணிப்பார்க்கத்தான் வேண்டும்.
காவல்துறை என்ற அமைப்பு சமுதாயத்தின் காவல் அமைப்பு.
குறித்த உங்களின் நேர்மையான எழுச்சிக்காக,
அதன் கட்டுப்பாட்டை உடைக்க நினைத்தால்,
அதனை முன்னுதாரணமாகக் கொண்டு,
தீயர் பலரும் அப்பாதையைப் பயன்படுத்த நினைப்பர்.
அங்ஙனம் நினைந்தால் சமுதாயத்தின் நிலை என்னாகும்?
எனவே காவல்துறையின் கட்டுப்பாட்டை மீற நினைந்தது,
உங்கள் தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும்.எவர் சொல்லி செய்திருந்தாலும் எக்காரணத்தால் செய்திருந்தாலும்,
உங்களை அடக்கக் காவல்துறை கையாண்ட மிருக நெறிக்கு,
எவரும் எதனாலும் சமாதானம் காண முடியாதென்பது மட்டும் நிச்சயம்.
அது எத்தகைய உத்தரவாக இருந்தாலும்,
நிற்பவன் என்  இளைஞன், அவன் நெறிகடவாது நிற்கின்றான்.
நிமிர்ந்த அவனது இலட்சியம் நேர்மையானது என்பவற்றையெல்லாம்,
துளியளவேனும் அவர்கள் நினைந்திருந்தால்,
இங்ஙனம் நெறிகடந்து இயங்கியிருக்கமாட்டார்கள்.
நேர்மையைக் காக்கத்தான் நெஞ்சத்தைக் கல்லாக்கவேண்டும்.
அநீதிக்கும் அதுவே விதியாகுமா?
துளியளவேனும் அவர்கள் நெஞ்சில் அறம் இருந்தால்,
சாகும்வரை இனி அவர்களால் நிம்மதியாய்ச் சோறுண்ண முடியாது என்பது மட்டும் நிச்சயம்.நிறைவாய் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
இலட்சியப் பாதையில் வெற்றியும் தோல்வியும் சகஜமே.
ஒரு சில சறுக்கல்களால் உச்சம் தொடும் வாய்ப்பிழந்து போனீர்கள் அவ்வளவே!
ஆனாலும் நீங்கள் உண்டாக்கிய அதிர்வு தமிழகத்தைத் தாண்டி,
பாரதத்தையே அசைத்து விட்டது என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
ஆயிரம் காரணங்கள் சொல்லி அலைக்கழித்தவர்கள்,
ஒரே வாரத்தில் உங்கள் போராட்டத்திற்கு அடிபணிந்த ஒன்றே,
உங்களின் ஆற்றலுக்காம் வீரிய சான்றிதழ்.வெற்றி மகிழ்வைத்தரும்!
தோல்வி அனுபவத்தைத்தரும்!
உங்களுக்கு அனுபவம் வாய்த்திருக்கிறது.
உங்கள் வெற்றியின் உயரங்கள் அதிகரிக்க நிச்சயம் அவ் அனுபவம் உதவும்.
தோல்வியில் வரும் பெரிய ஆபத்தே தளர்ச்சிதான்.
ஒருவரில் ஒருவர் கைபற்றி தமிழகத்தையே வளைத்து நின்ற உங்களின் இணைப்பில்,
தோல்வியால் தளர்ச்சி வந்துவிடாமல் உடன் உறுதிப்படுங்கள்.
இளகிய இரும்பபைக் கண்டால் கொல்லன் ஓங்கி ஓங்கி அடிப்பானாம்.
நீங்கள் இளகினாலும் நிலைமை அதுவாகத்தான் இருக்கும்.
அரசியலாளர், விமர்சகர்கள் எனப் பலரும்,
உங்கள் தளர்ச்சியினூடு நுழைந்து தம் தலைமையை உறுதி செய்ய நினைப்பர்.
அதற்கான அடையாளங்கள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டன.
அவர்களை வெற்றி பெற விட்டுவிடாதீர்கள்.தோல்வியில் சிறு தளரச்சி வருவது இயல்புதான்.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து,
அக்காரணங்கள் மீண்டும் வராமலிருக்க வழி சமைப்பதே அறிவுடமை.
உங்கள் எழுச்சியோடு ஒப்பிடுகையில் நிகழ்ந்திருக்கும் தோல்வி மிகச் சிறிதே.
அத்தோல்வித் தளர்வினால், விளைந்த அப்பெரு வெற்றியை வீழவிட்டு விடாதீர்கள்.
இனி தமிழ்நாட்டில் தவறு செய்ய நினைக்கும் எவரும் உங்கள் ஆற்றல் நினைந்து அஞ்சவேண்டும்!நீங்களும் ஒதுங்கிவிட்டால்,
இனித்தமிழ்நாட்டில் தர்மம் காக்க வேறெவரும் முன்வரப்போவதில்லை
அது நினைந்து தளர்ந்த உங்கள் கைகளை மீண்டும் இணைத்து உறுதி செய்யுங்கள்.
இத்தோல்வி உங்களின் உறுதிப்பாட்டிற்கு இறைவன் வைத்திருக்கும் சோதனை.
வென்று காட்டுவதில்த்தான் உங்கள் வெற்றி தங்கியிருக்கிறது.
உங்கள் வெற்றி மட்டுமல்ல தமிழர்களின் வெற்றியுமாம்.உண்மையான உயர்ந்தவர்கள் ஒருசிலரை முன்வைத்து,
மீண்டும் ஓரிடத்தில் கூடுங்கள்.
உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை,
பகிரங்க அரங்குகளில் விமர்சனம் செய்வதை விடுத்து,
தனித்துக் கூடித் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இனிமேல் நிகழப்போகும் உங்கள் செயற்பாட்டை நிர்வாகமயப்படுத்துங்கள்.
இன்று மக்களின் கரைகடந்த பரிதாபம் உங்கள்மேல் பரவிக்கிடக்கிறது.
இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.
மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்கள் தோறும் கூட,
உங்கள் நேர்மை நிர்வாகம் விரியவேண்டும்.
தேசப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, அறப்பற்று என்பவற்றை உறுதி செய்து,
எவரும் உங்களை நிராகரிக்கமுடியாத நிலை எய்துங்கள்.
பாரதத்தின் உயர்வுக்கு தமிழர்கள் வழிகாட்டினர் என்னும் வரலாற்றுப் பெருமையை,
அசையாது நின்று உறுதி செய்யுங்கள்.
உங்கள
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.