திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 4: "இன்னும் புலர்ந்தின்றோ"-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 4: "இன்னும் புலர்ந்தின்றோ"-கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
நான்காம் பெண்வீட்டின் நயம்மிகுந்த முற்றத்தில்,
ஆங்காரம்தனை நீக்கி ஐயன்தன் பெயர் சொல்லும்,
பாங்கான மங்கையர்கள் பற்றோடே வந்தார்கள்.
ஓங்காரத்துட்பொருளை ஓங்கித்தான் ஒலித்தார்கள்.
தோழியவள் விரைந்தேதான் துலங்கும் நல்முகத்தோடு,
வாழியெனச் சொல்லி வந்தணைவாள் என நினைந்த,
நங்கையர்க்கு ஏமாற்றம். நல்லாளோ வரக்காணோம்.
மங்கையவள் தான்மயங்கி மஞ்சத்தின்மேற் கிடந்தாள்.
மாயையாம் உறக்கத்தின் மயக்கமது தெளியாமல்,
கொஞ்சம் விழிப்படைந்து குறுந்தூக்கம் தான் கலந்து,
நெஞ்ச மயக்கத்தில் நேரிழையாள் கிடந்தாளாம்.


 

ஐயன்தன் புகழ்பாட அகத்துள்ளே பெருவிருப்பம்,
தூக்கத்தில் மூழ்கிடவும் துலங்காத சிறுவிருப்பம்,
தெளிவில்லா அறிவோடு தேன்மொழியாள் தான்கிடந்தாள்.
மாயை இருளுக்கும் மன்னன்தன் அருளுக்கும்,
நேயமனத்தோடு நெறிபிறழ்ந்து அவள் கிடந்தாள்.
முற்றும் இறையடியில் மூழ்கத்தான் முடியாது
சின்னவிழிப்புற்ற சீவர்களின் மனம்போல,
மறுவில்லா மங்கையவள் மனம்மயங்கித் தான்கிடந்தாள்.
முற்றாய்த் தம் ஆணவத்தின் முனை முறிக்க முடியாது
பற்றைச் சிவன்பாலே படரத்தான் விட்டவர்கள்
தம்மை சிவனவனும் சார்ந்தேதான் நிலம் வந்து,
குருவாக ஆளுகிற கொள்கைபோல் நங்கையர்கள்,
விருப்போடு அம்மங்கை விழிதிறந்து வருதற்காய்,
தெருநின்று அன்போடு தேற்றமுற அழைக்கின்றார்.

  

ஒளிவீசும் முத்தன்ன ஒய்யாரப் புன்னகையாய்!
(ஒள் நித்தில நகையாய்!)
ஒளிவந்து இருள் போன உண்மை அறியாயோ?
புன்மை யிருள்நீங்கிப் புலர்ந்ததனை அறியாயோ?
ஏந்திழையே! உந்தனக்கு இன்னும் விடியலையோ?
(இன்னும் புலர்ந்தின்றோ?)
மங்கை அவள் தன்னுடைய மயக்கம் தெளிவிக்க,
நங்கையர்கள் ஒன்றாகி நயந்தே குரல் கொடுத்தார்.

  

தோழியர்கள் குரல்கேட்டுத் துயில்கலைந்த அப்பெண்ணும்,
மீண்டும் துயிலுதற்கு மிகவிருப்பு உடையவளாய்,
காரணத்தைத்தேடிக் கதைக்கின்றாள் கேளுங்கள்?
என்னைத் துயிலெழுப்பும் ஏந்திழையீர்! என்றும்போல்,
பொன்னை நிகர்த்தவராம் பூவையர்கள் எல்லோரும்,
வந்தனரோ? இங்கவர்கள் வரவு நிறையாமல்,
முன்னை எனை எழுப்ப முனைந்தீரோ? முதலுரைப்பீர்!
(வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?)

  

எல்லோரும் வந்திட்டால் இப்போதே நான் வருவேன்.
அன்றேல் அவர் வருகைக்கு அப்பாலே தான் வருவேன்.
என்றாள், அவள் இயல்பை அறிந்திட்ட ஏந்திழையார்,
நன்றேதான் நீகேட்டாய் நாம் எண்ணிச் சொல்லிடுவோம்.
(எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம்)
அதுவரையில் நீதுயின்று அவமாகப் பொழுததனை,
சிதையாதே? சிவன்நாமம் சீரோடு பரவிடுவாய்.
(கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே)

  

விண்ணுக்கொரு மருந்தை வேதவிழுப்பொருளை,
கண்ணுக்கினியானை கசிந்தேநீ பாடு என,
சொல்லத்தொடங்கிய அத்தோகையர்கள் சிவன் நாமம்,
(விண்ணுக்கொரு மருந்தை 
வேத விழுப்பொருளை கண்ணுக்கினியானை)
சொன்னதுமே தமை மறந்த சுக நிலையை அடைந்தார்கள்.
மனமுருகித் தமை மறந்து மாறாத சிவன் புகழை,
உள்ளத்தால் ஓதியதால் உள்ளுருகிப் போனார்கள்.
தோழியரை எண்ணித்தான் துணிந்தே நாம் சொல்லும் வரை,
ஆழியதாய் அருள்செய்யும் ஐயனது புகழ்தன்னை,
தோழியளே! பாடென்று சொல்லத் துணிந்தவர்கள்,
சீர்பெருகும் நாமத்துள் சிந்தை பதித்ததனால்,
எண்ணித்தான் சொல்லுகிறோம் என்பதனைத்தான் மாற்றி,
நாம் செய்யோம் வேண்டுமெனின் நங்காய் நீ முன்வந்து,
எண்ணிக்குறைந்தால் உன் இஷ்டம்போல் துயில் என்றார்.
(பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்)

  

எம்கருத்தை பெண்ணவளே ஏற்பாய்? நீ ஓர்ந்திடுவாய்?
என்றே உரைத்தவரும் ஏந்திழையை ஈர்த்தார்கள்.
அன்பான உள்ளத்தார் அப்போதும் அவள்தன்னை,
கண்ணின் பாவையென கனிவோடு விழித்தார்கள்;.
(ஏலோர் எம் பாவாய்)

  

ஐயன் பெயர்சொன்ன அப்பொழுதே மெய்யுருகி,
உள்நெகிழும் அவர்தம்மின் ஓங்குகிற உளம் தனை,
தையல் உணர்ந்தாள். தன்துயிலைத் தான்தொலைத்தாள்.
மெய்யதனுள் தான் சேரும் மேலான விருப்போடு,
பைய நடந்தே அப்பாவையரைத் தான்சேர்ந்தாள்.
உய்யும் விருப்போடு ஒன்றான நங்கையர்தாம்,
ஐயனது திருநாமம் அழகான குரல்எடுத்து,
வையமெலாம் கேட்டிடவே வாய்திறந்து பாடி அவர்,
பைய நடந்தடுத்த பாவையளின் இல்சேர்ந்தார்.

ஒள்நித் திலநகையால் இன்னும் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்

  

வான் கலந்த வாசகனார் வற்றாத செந்தமிழில்
தான் கலந்து பாடிய இத்தனிப்பாடல் தன்னுள்ளே
ஊன் உருக்கும் நுண்பொருள்கள் உவப்போடு கண்டிடவே
மீண்டும் ஒருமுறை நுழைந்து மீளத்தான்  வலம் வருவோம்.

  


முத்ததுவும் சிற்பியுளே மூடிக்கிடப்பதுபோல்
நித்திரையில் வெண்பற்கள் நிரை தெரியமாட்டாமல்,
தோழி உறங்கிட அத்தோகையர்கள் மனம் வாடி,
புலர்ந்தால், இவள் விழிப்பாள், புன்னகைப்பாள், அப்போது,
முத்தாக ஒளிர்பற்கள் முன்தெரிய முகம் மலரும்,
காட்சிதனைக் கண்டிடலாம். களித்திடலாம் என நினைந்தார்.
பொழுதும் புலரவிலை, பொன்னான தோழியது,
பழுதற்ற முத்தான பல்தெரியச் சிரிக்கின்ற,
முகமும் புலரவில்லை முறையோ? இது என்னும்,
குறிப்போடு அப்பெண்கள் கூறுகிற புலர்ந்தின்றோ?
எனும் வார்த்தை தன்னைநாம் ஏந்தி ரசித்திடலாம்.

  

சிவன்நாமம் ஒன்றினையே சீர்பெருக எந்நாளும்,
திரும்பத் திரும்ப மனம் தீராத ஆசையினால்,
பன்னிப் பன்னி நிதம்  பலதரமாய் உரைக்கின்ற,
வனிதையரை அப்பெண்ணும் வண்ணக்கிளி மொழியார்
என்றுரைக்கும் உவமைதனை எப்போதும் இரசித்திடலாம்.

  

உள்ளவா சொல்லுவோம் என்றே அவருரைக்கும்,
சொல்லில் பொய்யுரையா சோதிமிகு வாய்மையினை,
அள்ளித் தெளிக்கின்றார் ஐயர் மணிவாசகனார்.
சத்தியமாம் அறமதுவே சங்கரனார் திருவடியில்,
நித்தியமாய் நமைச் சேர்க்கும் நிலையை உரைப்பதற்காய்
வாசகனார் பொருத்துகிற வளமான இத்தொடரை,
நேசமுடன் நாம் நினைய நெஞ்சம் நெகிழ்ந்தோடும்.

  

கண்ணைத்துயின்றவமே காலத்தைப்போக்காதே,
என்கின்ற தொடருக்குள் இருள் மூழ்கிக்கிடக்கின்ற,
ஆன்ம இயல்பினையும் அதை மீட்கும் அன்போடு,
சீவன் முத்தரெலாம் சேர்ந்தேதான் முயல்வதையும்,
ஒன்றாக்கிச் சொன்ன உயர்நிலையை என்சொல்வேன்?

  

கண்ணைத் துயின்றவமே காலத்தை என்றதனால்,
பெண்ணவளும் தனை மறந்து பேதைமையால் புறத்தேதான்
மெல்லத் துயின்றதையும் மேன்மைமிகு அப்பெண்ணும்,
எண்ணத்தால் விழிப்புற்ற ஏந்திழையாள் என்பதையும்
சின்னக்குறிப்பதனால் சேர்த்தேதான் தருகின்றார்.

  

கண்ணுக்கினியானை என்றந்தக் காரிகையர்,
சொன்னதனால் சிவனவனின் சோதிமிகு பெருவடிவை,
தமதன்பால் கட்டித்தம் கண்ணுள்ளே வைக்கின்ற
நங்கையரின் பேரன்பை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.
மாலோடு நான்முகனும் மயங்கித்தான் தாம் தேட,
காணாமல் திகைப்பித்த கண்ணுதலான் அன்பர்க்கு,
கண்ணுள்ளே தான் வந்து காட்சி தரும் பெருமையினை,
எண்ணித்தான் வாசகனார் இயம்புகிற அழகென்னே?

  

பாடிக்கசிந்தென்ற பாங்கான தொடரதனை,
கசிந்துருகிப் பாடுவதாய் கருத்திருத்த வேண்டும் நாம்.

  

பிறந்த பிறப்பறுத்து பேரின்பநிலை அடைய,
துறந்தாரை எண்ணித்தான் துயில் எழும்பவேணும் எனும்,
சிறந்த கருத்ததனைச் சீரோடு வாசகனார்,
எண்ணித்துயிலென்ற ஏந்திழையார் வாசகத்தின்,
(எண்ணுதல் - நினைத்தல்)
உள்நிறுத்திச் சொல்லும் உயர்நிலையோ மிகப்பெரிது.
எண்ணித்துயிலென்ற ஏற்றமிகு தொடரதற்கு,
எண்ணிப் பின்னாலே இயலுமெனின் உறங்கென்று,
சொன்னாற் பொருள் சிறக்கும் சோதிமிகு வாசகனார்,
எண்ணித்தான் இத்தொடரை இங்கே அமைத்தாரோ?

  

பொன்னான வாசகரின் பொருள்நிறைந்த வாசகங்கள்,
எண்ணி உளம் பதித்து ஏற்றங்கள் கொண்டிடுவோம்,

  

ஒள்நித் திலநகையால் இன்னும் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்

  ✠    
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.