திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: "ஓலமிடினும் உணராய்!" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: "ஓலமிடினும் உணராய்!" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
 
ந்தாம் வீட்டவளின் அழகான நன்முற்றம்,
மெய்யுருகிப் பெண்களெலாம் மேனி சிலுசிலுக்க,
ஐயன்தன் பெயர்சொல்லி அன்போடு பாடுகிறார்.
மார்கழியின் தெய்வீக மாண்பதனால் உளம் உருக,
சீர்பொலியச் சிவனார்தம் செம்மைமிகு நாமமதை,
ஊர்பொலியப் பாடுகிறார், உவந்தேத்திப் பாடுகிறார்.
உய்யும்வழி கண்டு உள்ளமெலாம் உருகுகிறார்.
பொய்யில்லாப் பாவையர்கள் புகழ்ந்திறையைப் பாடிடவும்,
அவ்வீட்டுக் கதவமது அசைந்து திறக்கவிலை.


 

உள்வீட்டுப் பெண்ணாளும் ஓடிவருவள் எனக்,
காத்திருந்த நங்கையர்க்குக் கடுங்கோபம். ஏனென்றால்,
மாத்திரையும் ஓயாமல் மளமளெனப் பேசும் அவள்,
ஐயன் அருள்பெற்று அவனியிலே உய்ந்தவளாய்,
தினமும் தனைமறந்து தெவிட்டாது உரைத்திடுவாள்.
ஏனமதாய் உருவெடுத்தும் இறையடியைக் காணாத,
மாலறியா ஐயன்தாள் மங்கையிவள் கண்டதுவாய்,
நீள உரைத்திடுவாள், நீள்வானம் தனில் அன்னப்,
பட்சி உருவெடுத்துப் பறந்திட்ட நான்முகனும்,
காணாத் திருமுடியைக் கண்டதுவாய்த் தானுரைப்பாள்.
அண்ணாமலையார் தம் அருள் தனக்கு உண்டெனவே,
திண்ணமுடன் பேசித் தினம் தினமும் மெய் மறப்பாள்.
இங்ஙனமாய் இறையடியில் எப்போதோ கலந்தவள்போல்,
பாலூறத் தேனூறப் பலகதைகள் பேசும் இவள்,
நீள அழைத்தும் தன் நித்திரையைத் தொலைக்காமல்,
ஆழ உறக்கத்துள் அகப்பட்டுக் கிடக்கின்றாள்.
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம்



வாய் நிறைய இறையன்பை வாரி இறைக்கும் இவள்,
மாயாது நித்திரையில் மயங்கித்தான் கிடப்பதனை,
மங்கையர்கள் கண்டார். மனக்கோபம் தான் கொண்டார்.
வார்த்தைதனில் முன் ஒன்றும் வாழ்வதனில் வேறொன்றும்,
கடைப்பிடிக்கும் இந்நங்கை கடையவளே! என உணர்த்த,
கடும்வார்த்தை தனைத்தேடி காய்ந்திடவே உரைக்கின்றார்.
வஞ்சகீ! என அவளை வார்த்தையதால் சுடச்சொல்லி,
சிவன்நாமம் பாடா அச்சின்னவளை நெறிப்படுத்த,
ஐயன் பெரும்புகழை அமுதமெனப் பொழிகின்றார்.
என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ



ஆரென்று நீ நினைத்தாய் அகம்புகுந்த சிவனாரை?,
மண்ணுள்ளார், வானவர்கள் மற்றுலகத்தவர் என்று,
எண்ணில் அடங்காத எத்தனையோ பேர்களெலாம்,
அறியமுடியாத அற்புதத்தான், அவன் எமக்காய்,
அருவும், அருவுரும் அப்பாலே நகர்த்தி எமை,
உருப்படுத்த வேண்டுமென உருவோடு வந்தவன் காண்.
கோலத்தால் ஈர்த்தெம்மைக் கொண்டருளிக் கோதாட்டும்,
சீலத்தால் ஈர்த்தும், அச்சிவன் நம்மை ஆண்டான்காண்.
அவனே எம் ஆருயிரின் ஆருயிராய் நின்றதனால்,
சிவனே சிவனே என்றோலமிட்டு உருகுகிறோம்.
அவ்வுருக்க ஓசையெலாம் அகம் புகுந்தும் அசையாமல்,
இவ் உறக்கம் கொள்கின்றாய். எங்கள் மனமுருக,
ஓலமிட்டு அலறிடவும் உணராய் உணராய் காண்.
ஏலக்குழல் முடித்த ஏந்திழை உன் இழிதன்மை,
ஏற்பாய், ஓர்ந்திடுவாய், எம்பாவாய் என்றுரைத்தார்.
கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.



உள்ளே இருந்த அவ் உத்தமியோ பெரும்பக்தை.
ஐயன் அருள் தன்னுள் ஆழ்ந்த நலமுடையாள்.
என்றும் ஐயன்தன் இன்அருளை நினைந்துருகும்,
பொய்யில்லாப் பேதை. புறம்போகா நெஞ்சத்தாள்.
வாசக்குழல் முடித்து வளங்குன்றா முகத்தோடு,
நேசன் சிவனடியை நெஞ்சிற் பதித்த மகள்.
அன்பான தோழியர்கள் அவன் பெருமை பாடிவர,
இன்னும் அதுகேட்க எண்ணினளாம், உறக்கத்தில்,
தான் கிடக்குமாப்போல தாள் திறவா திருந்திட்டாள்.
ஐயன்தன் திருப்புகழை அன்போடு தனக்குணர்த்த,
பொய்யில்லாத் தோழியர்கள் புகழ்ந்தே உரைப்பார்கள்.
தேன் ஒத்த சிவன்நாமம் சிந்தை நிறைந்திடவே,
மான் ஒத்த பேதையர்கள் மகிழ்வோடுரைப்பார்கள்.
என்றே இருந்த அவள், ஏந்திழையார் மனம் வருந்தி,
ஓலம் இடினும் உணராயோ? என்றுரைக்க,
நீளக்கண் தன்னில் நீர்சொரிய வெளிவந்தாள்.
பாவையர்கள் தன்னினையே படிறீ! எனவுரைத்த,
வார்த்தையதைக்கூட அவ்வஞ்சமிலா நெஞ்சத்தாள்,
அன்பின் வெளிப்பாடாய் அகங்கொண்டு நெகிழ்ந்தனளாம்.
வார்த்தைகளில் பாலோடு வளமாகத் தேன் சொரிவாள்.
ஆழ நினைந்தேதான் அன்போடு சிவன்புகழை,
நீளத்துதித்தே தன் நெஞ்சம் நிறைந்தவளாய்,
மீளத்தான் அவரோடு மெல்லக் கலந்தனளாம்.
தேன் சொரியும் அவள்நாவில் தெவிட்டாத சிவன்நாமம்,
தான் சொரிய நங்கையர்கள் தம்மை மறந்தார்கள்.
அன்புடனே தம் சிவனை அசைமீட்டி அடுத்தவளை,
நண்புடனே அழைத்திடவே நங்கையர்கள் சென்றார்கள்.

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
       போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்
       ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
       சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய் கான்
       ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.



ஓலமிட்டு நங்கையர்கள் உயர் சிவனைப் பாடியதாம்
சீலமிகும் இப்பாடல் சிந்தைதனை நிரப்புகிற,
ஆழமிகு செய்திகளை அகத்தினுளே வைத்திருக்கும்,
வாசகனார் தாம் பொதித்த வளமாம் அப்புதையல்களை,
நேசமுடன் நாம் காண்போம். நெஞ்சம் மகிழ்ந்திடுவோம்.



மாலறியா நான்முகனும் காணா மலை எனவே
சீலமொடு வாசகனார் சிறக்க உரைத்ததனில்,
நீளப் பொருளுண்டு, நீங்கள் அதை அறிந்திடுவீர்!
அண்ணாமலையதனை அன்போடு வாசகனார்,
சொன்ன திருப்பாட்டாய் சொல்வார்கள் பெரியோர்கள்.
ஆணவமாம் இருள் மறைக்க அன்றொருநாள் திருமாலும்,
நான்முகனும் தாம் பெரியர் எனவுரைத்து நன்றாற்றா,
சீலமுடன் செருக்குறவே சிவனாரும் ஒளி வடிவாய்,
நின்றே தான் அவர் தமக்கு நீண்ட அடிமுடியை,
கண்டு உரைப்பாரே காண்பரிய பெரியரென,
வானொலியாய் உரைத்திடவும் வடிவதனை ஏனமதாய்,
மாற்றித்தான் மாலவனும் மண்ணுள்ளே புகுந்தானாம்.
நீளும் உயரத்தை நெடிதளக்க நான்முகனும்,
அன்னமென மாறித் தான் ஆகாயம் புகுந்தானாம்.
சிவனாரின் திருமுடியும் சீர்மிகுந்த திருவடியும்,
காணமுடியாதே கடவுளர்கள் தோற்றதனை,
நீள உரைக்கின்ற நெடுங்கதையை நாம் நினைந்தால்
மூலப் பரம்பொருளாய் முன் நிற்கும் சிவனாரே!
எல்லார்க்கும் தெய்வம் எனும் ஏற்றம் அறிந்திடலாம்.
அச்செய்தி தனைநாங்கள் அறிந்திடவே தேர்ந்தெடுத்து
மாலறியா நான்முகனும் காணா மலை என்று,
வாசகனார் போடுகின்ற வளமான வர்ணனையில்,
சிவனாரைப் பரம்பொருளாய்ச் சீரோடு உணர்கின்றோம்.



மாலறியா என்றதனால் மயக்கமுள எவருக்கும், (மால் - மயக்கம்)
தாள்அறியும் தகுதியது தான் வாரா தென்பதையும்,
நான்முகனும் காணாத நல்லடியால் நம்தமக்கு,
ஒருமுகமாய் நெஞ்சத்து ஒன்றியற்கே சிவன் தாள்கள்.
திருவுறவே காட்சிதரும் செய்தியையும் செம்மையதாய்,
வாசகனார் உரைக்கின்ற வளம்நினைந்து மகிழ்ந்திடுவோம்.



கடவுளர்கள் காணாது களைத்ததனால் நம் அறிவில்,
விடமதனை உண்ட சிவன் வேற்றுமையால் அடைதற்கு,
அரியனென நாம் நினைந்து அலமந்தே போகாமல்,
நுண்ணியனோ எனும் ஐயம் நொடியளவும் வாராமல்,
பற்றுதற்கு எளியன் அப்பரமன் என உணர்த்துதற்காய்,
எங்கும் பரவி அவன் எல்லோருக்கும் காட்சிதரும்,
உண்மை உணர்த்துகிற உத்திதனை பின்பற்றி,
மலை எனவே மாணிக்க வாசகனார் உரைப்பதனை,
நினைந்து நினைந்தே நாம் நெஞ்சம் உருகிடலாம்.



படிறீ எனவுரைக்கும் பாவையர்கள் வார்த்தையிலே,
நெடிய பகையில்லை. நெஞ்சத்துள் விடமில்லை.
என்பதனை நாமறிய ஏற்றமுடன் இப்பாட்டில்,
படிறீ எனவுரைக்கும் பாவையர்கள் சொல் முன்னே,
பாலூறு தேன்வாய் என்றேதான் பகருவதாய்,
பாராட்டும் மொழி உரைத்தப் பாவையர்கள் மனம் அறிய
வாசகனார் போடுகிற வார்த்தைகளை என் சொல்ல?



காணாமலை என்று கற்றோரும் அறியாத,
சொரூபநிலை யதனைச் சொல்ல முயல்கின்றார்.
அறிவறியான் என்றதனால் அற்புதமாம் அருவநிலை,
சொல்லிமுடித்துப் பின் தோற்றும் அருவுருவம்,
தன்னையுணர்த்த அத்தகுதிமிகு சிவன் என்னும்,
நாமம் உரைத்தேதான் நலம் காட்ட முயல்கின்றார்.
உருவான அவ் இறைவன் ஓங்கும் நிலைதன்னை,
கோலம் எனவுரைத்துக் கொண்டு முடிக்கின்றார்.
நம் சிவனார் நமை ஈர்க்க நலம் மிகவே கொண்டருளும்,
சொரூபநிலை, தடத்தநிலை சொல்லி முடிக்கின்ற,
அழகதனைக் கண்டே நாம் ஆனந்தம் கொள்கின்றோம்.



பாலூறு தேன்வாய் பாவாய் எனப் பெண்கள்,
நீள உரைக்கின்ற நெடிதான வர்ணனையில்,
மங்கையவள் வாக்கின் மாண்பறிந்து கொள்கின்றோம்.
மனம், வாக்கு, காயம் எனும் மாயாது செயல் புரியும்,
கருவிகளின் தூய்மைதனை கற்றோர் உளம்மகிழ,
நடுநின்ற வாக்கதனின் நன் நிறைவால், மங்கையவள்,
மனத்தாலும், செயலாலும் மாண்புடையள் தான் என்னும்,
உண்மைதனை வாசகனார் உரையில் அறிகின்றோம்.
மனம், மொழி, மெய் ஒன்றுபட வணங்குகிற மங்கையவள்,
தினம் தினமும் இறைதன்னை தேற்றமுடன் தரிசிக்கும்,
உண்மையதை உணர்த்திடவும் ஒப்பற்ற அவள் பெருமை,
தன்னை உரைத்திடவும் தயைவோடு வாசகனார்,
போலறிவோம் என்றேதான் போடுகிற வார்த்தைதனை,
நீள நினைந்தால் நாம் நெஞ்சம் உருகிடலாம்.



கடைதிறவாய் என்கின்ற கருணைமிகு தொடரதனில்,
வீட்டின் கடையதுவும், விளங்கும் கண் கடையதுவும்,
பூட்டிக்கிடக்கின்ற பொய் மனதின் கடையதுவும்,
ஆணவமாம் இருள்நீங்கி ஆன்மா தனை அறியும்,
முத்தியெனச் சொல்கின்ற முடிவான இன்பத்து,
வீட்டின் கடையதுவும் விளங்கிடவே ஒன்றாக,
வாசகனார் உரைத்திட்ட வன்மைதனை என்சொல்ல?



ஆட்கொண்டு அருளும் அற்புதமாம் இறைவனவன்
கோலமும் என்றதனால் குறைவில்லா ஐம்புலன்சேர்,
மெய்யதனின் மாறாத மேன்மைமிகு வழிபாடும்,
சீலமும் பாடி என சிறப்புடனே அவர்தாமும்,
மீள உரைத்ததனால் மிகும் வாக்கின் வழிபாடும்,
உணராய் உணராய் என்று உரைக்கின்ற வார்த்தைகளால்,
மனத்தாலே இறையவனை மாண்போடு வணங்குகிற,
நெஞ்சத்து வழிபாடும் நேர்படவே வாசகனார்,
ஒன்றாக உரைக்கின்ற ஒப்பற்ற நிலையதனை,
நன்றாக உணர்ந்தேதான் நாம் மகிழ்ந்து நிற்கின்றோம்.



போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்,
என்றேதான் வாசகனார் இயம்புவது ஏற்றமிகு,
மங்கையவள் பெருமையினை மாய்ப்பதற்கு அல்லவென,
நன்றாகத் தெரிகிறது நமக்கவர்தான் உரைக்கின்ற,
உண்மைப்பொருள் என்ன? உணர்ந்திடவும் வேண்டாமோ?
காணாப் பரம்பொருளை கண்டவர்கள் விண்டிலராம்.
கண்டேன் எனப்பொய்யாய் விண்டவர்கள் கண்டிலராம்.
என்றேதான் உரைக்கின்ற இயல்பான பழமொழியின்,
உண்மைதனை உள்வாங்கி உரைக்கின்றார் வாசகனார்.
மங்கையர்கள் வார்த்தையிலே மாணிக்கவாசகனார்,
உலகியலைத் தான் மெல்ல உணர்த்த நினைத்தாரோ?
மெய்யன்பர் சங்கமத்தில் மேன்மைமிகு மெய்யடியார்,
உள்ளத்துள் சிவன்தன்னை உணர்ந்தே ரசிப்பதனால்,
தாம் கண்டோம் என்றுரைக்கும் தகைமைக்கு இவ்வுவமை,
பொருந்தாது எனக்கண்டு பொய்யில்லா நங்கையவள்
மேன்மை உணர்ந்திட்டால் மெய்சிலிர்க்க நின்றிடலாம்.

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
      போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்
      ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
      சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
      ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.


Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.