திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 8: "ஏழை பங்காளனையே பாடு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-
மங்கையர்கள் எல்லோரும் மனம் மகிழச் சிவனாரின்,
பொங்கும் பெருமையினைப் போற்றி இசைத்தபடி,
எட்டாம் வீட்டவளின் இனிதான முற்றமதில்,
நங்கையவள் வருகையினை நாடித்தான் நிற்கின்றார்.
➹➷➹➷➹➷➹➷➹➷
மங்கையவள் வீட்டு மணிக்கதவும் திறக்கவிலை.
தோழி இவளும் துயில் நீங்கா உறக்கத்தில்,
நீள மூழ்கித்தன் நினைவிழந்து கிடக்கின்றாள்.
உறங்கிக் கிடக்கும் தம் உயிர்த்தோழி தனையெழுப்ப,
மங்கையர்கள் எல்லாரும் மனங்கொண்டார். சிவனாரின்,
அடிசாரும் எண்ணம் அவள்தனக்கு வருதற்காய்,
ஒன்றாகச் சேர்ந்து அவர், ஓங்கிக் குரலெடுத்து,
நங்கையவள் துயில் தீர நாதன் பெருமையினை,
பங்கமிலாக் குரலதனால் பார் அதிரப்பாடுகிறார்.
➹➷➹➷➹➷➹➷➹➷
ஆதவனின் வருகையினால் அவனி புலர்கிறது.
காலை புலர்ந்ததனைக் கணக்கிட்டு உரைத்தாற்போற்,
கோழிகளும் வாய்திறந்து 'கொக்கரக்கோ' என்றேதான்,
ஓங்கி ஒலிக்க ஒவ்வொன்றாய் குருகினங்கள்,
தாமும் சுறுசுறுத்து தம் ஓசை கிளப்பி, மரக்,
கொப்பில் இருந்தேதான் குதுகலித்து கூவினவாம்.
ஆலயத்தின் உள்ளேயோ அந்தணர்கள் பூஜைக்காய்,
வாயில்தனைத் திறந்து வண்ணத்திரை அகற்ற,
ஏழிசையைப் பொழிகின்ற இன்னியங்கள் இயம்பினவாம்.
இயற்கையதாய் பிரணவத்தின் இசையதனை உட்கொண்ட,
வெண் சங்கும் முழங்கிடவே விடியலது ஓசைகளால்,
எங்கும் நிரம்பித்தான் இனிமையதைப் பொழிகிறது.
காலைப்பொழுததனில் காற்றினிலே கலந்திட்ட,
ஓசைகளால் உயிரெல்லாம் உணர்வுபெறத் துயில் நீங்கும்,
பனிநிறைந்த மார்கழியில் பற்றோடு இறையவனின்,
தனிநின்ற புகழதனைத் தாங்கித்தம் உயிர் உருகும்.
கோழி சிலம்பச் சிலம்பு(ம்) குரு(கு) எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்(கு) எங்கும்
➹➷➹➷➹➷➹➷➹➷
ஆனாலும் தோழீ! நீ அசையாது துயில்கின்றாய்.
காலைப்பொழுததனில் காதலுடன் நீராடி,
ஐயன்தன் திருவடியை அன்போடு தொழுதற்கு,
மங்கையர்கள் எல்லாரும் மனம் மகிழ ஒன்றிணைந்தோம்.
ஒப்பில்லாப் பரஞ்சோதி ஒப்பில்லாப் பரங்கருணை,
ஒப்பில்லா விழுப்பொருள்கள் ஒன்றாகக் குரலெடுத்து,
தப்பின்றி நாம் பாடித் தரணியெலாம் வலம் வந்தோம்.
அவ்வோசை தானும் உன் அருஞ்செவியிற் கேட்கலையோ?
ஈதென்ன உறக்கமென ஏங்கி அவர் மனம் நொந்து,
சித்தம் அழகிய அச்செம்மை மனத்தோர்கள்,
மங்கைதனை தூற்றாமல் மனம் நொந்தும், வாழியென,
நங்கை அவள்தன்னை நாவினிக்கப் போற்றுகிறார்.
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோ(ம்) கேட்டிலையோ
➹➷➹➷➹➷➹➷➹➷
வாய் திறவாய் என்றந்த வனிதையினை வேண்டிப் பின்,
அருளதனின் கடலான ஐயன்;மேல் நீ கொண்ட,
அன்பதனைக் காட்டுகிற ஆறதுவும் இதுதானோ?
உலகமெலாம் ஒடுங்குகிற ஊழியதாம் காலத்தே,
ஒருவனென தனி நிற்கும் ஒப்பற்ற முதலோனை,
பார்வதியை உடலதனின் பாகத்தே கொண்டவனை,
நீயும்தான் எம்மோடு நிமிடத்தில் தானிணைந்து,
பாடிடுவாய்! என்றந்தப் பாவையர்கள் அழைத்தார்கள்.
வாழியீ(து) என்ன உறக்கமோ வாய்திறவாய்!
ஆழியான் அன்புடைமையா(ம்) ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
➹➷➹➷➹➷➹➷➹➷
தூக்கத்தில் ஓர் பாதி துயில்கலைந்து ஓர் பாதி,
என்றே கிடந்திட்ட இனியவளாம் நங்கையளும்,
தோழியரின் வார்த்தைகளால் துடிதுடித்துத் தானெழுந்தாள்.
மயங்கிக் கிடந்திட்ட மதிநினைந்து மனம் நொந்தாள்.
ஓர் நொடியில் தானெழுந்தாள். உயிரதனைப் போலத்தன்,
உடல்தனையும் சுத்தித்து ஓங்கும் குரலெடுத்து,
கடலனைய இறையவனின் கருணையினை மகிழ்ந்தபடி,
பாடிப் பெண்ணவளும் பாவையரின் சங்கமத்துள்,
ஓடி இணைந்திட்டாள். ஒன்றாகித் தான் மகிழ்ந்தாள்.
பெண்ணவளின் வருகையினால் பெரிதே மனமகிழ்ந்து,
நங்கையர்கள் எல்லோரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
கோழி சிலம்பச் சிலம்பு(ம்) குரு(கு) எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்(கு) எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோ(ம்) கேட்டிலையோ
வாழியீ(து) என்ன உறக்கமோ வாய்திறவாய்!
ஆழியான் அன்புடைமையா(ம்) ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
➹➷➹➷➹➷➹➷➹➷
எட்டாம் பாட்டதுவும் எழுந்திட்ட விதம் பார்த்தோம்.
முட்டகற்றி உள்நுழைந்து முழுதாகப் பாடலதன்,
எட்டாத பொருள் தேடி இனிதாக மனம் மகிழ,
வாசகனார் பாடலினுள் வலம் வருவோம் வாருங்கள்.
➹➷➹➷➹➷➹➷➹➷
கோழி சிலம்பச் சிலம்பும் குருகென்று,
இட்ட முதலடியே எமக்கையம் தருகிறது.
பகரும் குருகென்ற வார்த்தைக்குப் பறவையென,
பொருள் கண்டு மகிழ்ந்தோம் நாம் பொழுது விடிகையிலே,
கூவுகிற கோழியதும் குருகினத்தைச் சார்ந்தது தான்.
அங்ஙனமாய் இருக்கத்தான் அவைதன்னை இரண்டாக,
சொன்னது ஏன்? என்கின்ற சுவையான கேள்வி அது,
எம்முள் பிறக்கிறது. எழுகின்றோம் விடை காண.
➹➷➹➷➹➷➹➷➹➷
ஆணவத்துள்தாம் மூழ்கி அவனியிலே பிறப்பெடுத்த,
மானுடருக்குள்ளேதான் மாயை அதன் தொடர்பறுத்து,
ஞானியராய் ஆகிட்ட நல்லவர்கள் பலபேரும்
மானிடரே ஆனாலும் மக்கள் நிலைகடந்தார்.
ஞானியரும் மானுடர்தான். ஞாலத்தில் அவர் தகைமை,
தோன்ற அவர் தம்மை துலங்குகிற முத்தர் என,
மானிடரில் நீக்கி மரியாதை செய்கின்றோம்.
அத்தகையோர்தாம் விழித்து ஆணவத்தை வலிகெடுத்து
ஊன மனிதரையும் உயிர் விழிக்க வைப்பார்கள்.
காலைப் பொழுதுணர்ந்து கடிதாக முதல் விழித்து,
மற்றை குருகினத்தை மலரத்தான் செய்கின்ற,
கோழியினை வாசகனார் கொண்டாட நினைக்கின்றார்.
முன்னே விழிப்புற்று முழுதாக மற்றவரின்,
கண்விழிக்கச் செய்யும் காரியத்தைச் செய்வதனால்,
கோழிதனை வாசகனார் குறிப்பதனால் ஞானியரை,
நினைவூட்டும் பறவையென நினைத்ததனால் தான் போலும்,
முன்னை அதனை தனி நிறுத்தி முடிவினிலே,
பறவையினம் அத்தனையும் பகர்கின்றார் எனக் கொள்வோம்.
➹➷➹➷➹➷➹➷➹➷
கோழி சிலம்பிடவே சிலம்பும் குருகென்று,
சொல்லித்தான் பின்னாலே சுகமாக ஆலயத்துள்,
ஓங்கி ஒலிக்கின்ற ஓசைகளைத் தான் குறிக்க,
ஏழில் இயம்பிடுமாம் இயம்பும் வெண் சங்கென்று,
வாசகனார் சொல்கின்ற வார்த்தையிலும் சந்தேகம்.
சிவனாரை நினைவூட்டும் சின்னங்களின் ஓசை,
முன்னால் உரைப்பதுதான் முறையாகும் பறவைகளின்,
ஓசைகளைப் பின்னால் உரைத்திருந்தால் சரியாகும்.
வாசகனார் அந்த வரிசைதனைக் கைவிட்டு,
நேசமொடு பறவைகளின் நினைவில்லா ஓசைகளை,
முன்வைத்த காரணத்தை மூழ்கித் தெரிந்திடுவோம்.
ஆயிரந்தான் சிவனாரின் அருமைதனை உணர்த்திடினும்,
வாத்தியங்கள் எல்லாமே வளமான இயற்கையதன்,
ஓசைகளின் முன்னே ஒலி குன்றித்தானிருக்கும்
இறைவன் படைப்பான இனிதான ஓசையின் முன்,
மனிதப் படைப்பான மாண்புடைய வாத்தியங்கள்,
இரண்டாம் பட்சம் எனும் எண்ணத்தைத் தருவதற்காய்,
வரிசைதனில் வாசகனார் வாத்தியத்தைப் பின்வைத்த,
உண்மையறிந்தேதான் உவக்கின்றோம் நாமெல்லாம்.
➹➷➹➷➹➷➹➷➹➷
கேழில் பரஞ்சோதி கேழிற் பரங்கருணை,
கேழில் விழுப்பொருள்கள் என்றே தான் கிளறுகிற
வாசகனார் செய்யும் வரிசையிலும் பொருள் உண்டு.
பரம்சோதி என்றதனால் பரமனவன் ஒளி வடிவும்,
பரங்கருணை என்றதனால் பரசிவத்தின் அருள் வடிவும்,
கேழில் விழுப்பொருள்கள் என்றதனால் சிவனவனின்,
ஒப்பற்ற பெருமை சொலும் உயர்வான ஒலி வடிவும்,
உரைத்தேதான் வாசகனார் உயர் பொருளைத் தருகின்றார்.
➹➷➹➷➹➷➹➷➹➷
கேட்டிலையோ! என்று கிளர்கின்ற பாவையரின்,
வார்த்தையிலே 'ஓ' என்னும் ஓர் எழுத்தை வருவித்து,
ஐயக்கருத்ததனை அன்போடு நமக்குணர்த்தி,
மங்கையவள் உறக்கத்தில் மயக்கத்தால் சிறிதேதான்,
மருண்டு கிடந்தாலும் மாண்புடனே சிவன் புகழை,
கிளரும் மனத்தோடு கேட்டேதான் கிடக்கின்றாள்.
என்றே எமக்குணர்த்தி ஏந்திழையாள் தன்னுடைய,
நன்றான பக்தியினை நமக்குணர்த்த முனைகின்ற,
மாணிக்கவாசகரின் மனம் உணர வேண்டும் நாம்.
உறக்கமோ? என்றே பின் உரைக்கின்ற வார்த்தையிலும்,
மேற்சொன்ன ஐயமது மிளிர்வதனைக் கண்டிடலாம்.
➹➷➹➷➹➷➹➷➹➷
வாழி! எனும் வார்த்தைக்கு வஞ்சப் புகழ்ச்சி என,
நேரடியாய்ப் பொருள் சொல்வார் நேசம் அறியாதார்.
அன்பான தோழிதனின் அறியாமைத் துயில் களைந்து,
தம்மோடு இணைத்தற்கு தவங்கிடக்கும் நங்கையர்கள்,
வாழி எனும் வாழ்த்துரைக்கும் வார்த்தையிலும் வஞ்சத்தை,
உள்நுழைத்துச் சொல்வாரேல் உயர்ந்தவர்கள் ஆவாரோ?
திட்டித்தான் எழுப்புதற்கும் தேனான வார்த்தைகளை,
கொட்டும் இந்நங்கையரின் குணம் அதனை நாமறிய,
கண்டிக்கும் வேளையிலும் கனிவான அன்பாலே,
வாழி! என உரைத்தார் வனிதையர்கள் என்றேதான்,
சொன்னால்தான் பாட்டதனின் துலங்கும் பொருள் சிறக்கும்.
➹➷➹➷➹➷➹➷➹➷
வாய் திறவாய் என்கின்ற வனிதையரின் வார்த்தைகளால்,
உறங்குகிற பெண்ணவளின் உளம் திறந்து கிடப்பதனை,
வாசகனார் உணர்த்துகிற வளம் நினைந்து மகிழ்கின்றோம்.
வாய் திறவாய் என்கின்ற வார்த்தைக்கு இல்லத்தின்,
வாசல்தனைத்திற என்று வரும்பொருளும் பொருந்துவதாம்.
➹➷➹➷➹➷➹➷➹➷
ஊழி முதல்வனென உரைத்ததனால் சிவனாரே,
ஒப்பரிய பரம்பொருளென்றுணர்த்த முயல்கின்றார்.
ஊழியிலே தேவரெலாம் ஒடுங்கிடுவார். அப்போது,
காக்கின்ற, படைக்கின்ற கடவுளராம் அரி அயனும்
ஒழிந்திடுவர். அவ்வேளை ஒருவனென நிற்கின்ற,
அழிவுத்தொழில் செய்யும் ஐயன் சிவனாரே,
மீண்டும் உலகதனை மேன்மையுற படைத்தற்கும்,
காத்தற்கும் கடவுளரைக் கனிந்து படைப்பதனால்,
அந்தச் சிவனாரே அனைவர்க்கும் மூலமென,
மொழிய நினைந்து அவனை முதல்வனென மொழிந்திட்டார்.
➹➷➹➷➹➷➹➷➹➷
பெண்பாகம் கொண்டிருக்கும் பெருமானார் அன்போடு,
தன்பாகம் சேர்த்து எமை தனிக்கருணை செய்திடுவார்.
என்றெந்த மங்கையர்கள் இயம்ப நினைத்தேதான்,
ஏழை, பங்காளன் என இறைவனையே பாடுகிறார்.
(ஏழை - உமாதேவியார்)
கோழி சிலம்பச் சிலம்பு(ம்) குரு(கு) எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்(கு) எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோ(ம்) கேட்டிலையோ
வாழியீ(து) என்ன உறக்கமோ வாய்திறவாய்!
ஆழியான் அன்புடைமையா(ம்) ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.
➹➷➹➷➹➷➹➷➹➷