தேர் அழகா? கந்தனவன் திரு அழகா? -கம்பவாரிதி இ. ஜெயராஜ்-
கவிதை முற்றம் 28 Aug 2019
மாம்பழத்துப் போட்டியிலே மயிலிலேறி
மாண்பாக முருகனவன் வீதி சுற்ற
தாம் வளர்த்த அறிவதனால் வழியைக் கண்டு
தாய் தந்தை தனைச்சுற்றி கணேசன் தானும்
வீம்புடனே பழம் பெற்று விளங்கி நிற்க
வீறான முருகனவன் கோபம் கொண்டு
வேம்பெனவே கசக்கு மனம் விரக்தி கொள்ள
வேல் விடுத்து தண்டெடுத்து விளங்கி நிற்பான்.
ஆங்கதனைக் காணுகிற அடியரெல்லாம்
ஐயனது ஆண்டியதாம் கோலம் கண்டு
பாங்குடனே எம்முடைய நல்லூர் தன்னில்
பழனியிலே வீற்றிருக்கும் முருகன் வந்தான்
நாங்களெலாம் முன்செய்த பயனால் அன்றோ
நல்லூரான்தனின் இந்தக் கோலம் கண்டோம்
வீங்குகிற மனம் செழிக்க விம்மி விம்மி
விளம்பித்தான் உருகிடுவார் வினைகள் தீர்ப்பார்.
அப்புறமும் இப்புறமும் அசையமாட்டா
அடியரெலாம் அகப்பட்டு திணறி நிற்பார்
முப்புரமும் எரித்த சிவன் போல அங்கி
மூண்டெழவே ஒளிபெருக்கி கந்தன் ஊரும்
சப்பறத்தின் அழகதனை என்ன சொல்ல?
சார்ந்தவர்கள் அதிசயிக்க விண்ணைத் தொட்டு
எப்படித்தான் இதை அமைத்து ஏற்றம் செய்தார்?
என வியக்கக் கந்தனுமே எழுந்து நிற்பான்.
வேலழகா? முருகனது விளங்கும் நல்ல
விழி அழகா? அருகிருக்கும் தேவிமாரின்
தாள் அழகா? இவர் தமையே தாங்கி நிற்கும்
தனித்த பெரும் மயில் அழகா? தாவிப்பாயும்
மா அழகா? என்னாளும் மனதை ஈர்க்கும்
மாண்புடைய கோபுரத்தின் நிமிர்வழகா?
தேர் அழகா? திகழுகிற கந்தன் தன்னின்
திரு அழகா? தேறாது சிந்தை மாயும்.
ஆர்த்தெழுந்து வருகின்ற இளைஞர் கூட்டம்
அன்புடனே கந்தனவன் நாமம் சொல்லி
பேர்த்தெழுந்து புவி பிளந்து வந்தாற்போல
பெரும்படையாய் கேணியதுள் பாயும் காட்சி
பார்த்தவர்கள் நெஞ்சுருக்கும் பக்திதானும்
பாரதனில் குறைந்ததென கூறிநிற்போர்
தீர்த்தமதை நல்லூரில் கண்டால் தங்கள்
தீர்மானம் மாற்றிடுவர் திருத்தம் கொள்வர்.