"மூன்றும் இரண்டும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

"மூன்றும் இரண்டும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
 
லகை அணி செய்து நிற்பது நம் தமிழ் மொழி.
அத்தமிழை அணி செய்பவற்றுள் உவமை முக்கியமானதொன்று.
தெரியாத ஒரு பொருளை அதனுடன் ஏதோ வகையில் தொடர்புடையதான,
தெரிந்த ஒரு பொருள் கொண்டு விளக்குவதே உவமையாம்.
அரிய தம் எண்ணங்களை விளக்கம் செய்ய,
உவமைகளைக் கைக்கோளாய்க் கொள்வர் கவிஞர்.
அங்ஙனம் அவர் உரைக்கும் உவமைகள்,
அவர்தம் கற்பனைத் திறத்தையும், கவித்துவ ஆற்றலையும்,
ஒருமித்து வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.
அதனால் இவ் உவமையணிகள் புலவர்க்கு என்றும் கரும்பாய் இனிப்பன.
 
❤ ❤ ❤
 

 

 
கவிச்சக்கரவர்த்தி கம்பனும்,
உவமைகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவன்.
அவன் கையாண்ட உவமைகள்,
மற்றைப் புலவர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவை.
உவமை உரைப்பதில் உவமையிலாக் கவிஞன் கம்பன்.
அவனது கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றில் அமைந்துள்ள,
உவமை நுட்பம் ஒன்றினை விளக்கம் செய்வதே,
இக்கட்டுரையின் நோக்கமாம்.
 
❤ ❤ ❤
 
அயோத்தியாகாண்ட கடவுள் வாழ்த்துப் பாடல்.
கைவில் ஏந்தி,
இலங்கையில் இராவணனுடன் போர் செய்த இராமன்,
மேலிருந்து கீழ் வந்த அவதாரபுருஷனே என்றுரைக்கிறது இப்பாடல்.
வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தே
வரம்பு கடந்து பரந்து விரிந்த ஐம்பெரும்பூதங்களின் காரியமாய்,
பரவி நின்றுள்ள உலகப்பொருள்கள் அனைத்திலும்,
 
❤ ❤ ❤
 
ஊனும் உயிரும் உணர்வும் போல,
உள்ளேயும், புறத்தேயும் நிறைந்து இருப்பதாய்,
ஞானிகள் கூறும் பரம்பொருளே,
வானத்தின் நின்றும் இறங்கி வந்து,
கூனியும், சிறிய தாயாகிய கைகேயியும் தீமையைச் செய்ய,
தனக்குரிய அரசாட்சியைத் துறந்து,
காட்டையும் கடலையும் கடந்து சென்று,
தேவர்களின் துயர் துடைத்த,
வீரக்கழலை அணிந்த ஸ்ரீஇராமபிரான் என்பது,
இப்பாடலின் பொருள்.
இப்பாடலில் அமைந்த உவமைச் சிறப்பைக் காண்பதன் முன்,
அதில் அமைந்த வேறொரு சிறப்பினைக் காண்பாம்.
 
❤ ❤ ❤
 
இராமாயணம் ஆறு காண்டங்களை உட்கொண்டது.
பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம்,
கிஷ்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்,
என்பவையே அக்காண்டங்களாம்.
இராமாவதாரம் தொடங்கி,
பரதன் பாட்டன் வீடு செல்வது வரையிலான காதையை,
பாலகாண்டத்திலும்,
மந்தரை சூழ்ச்சியில் தொடங்கி,
பரதன் திருவடி சூடுவது வரையிலான காதையை,
அயோத்தியாகாண்டத்திலும்,
விராதன் வதை தொடங்கி,
சபரி பிறப்பு நீங்குதல் வரையிலான காதையை,
ஆரணியகாண்டத்திலும்,
இராம அனும சந்திப்புத் தொடங்கி,
மகேந்திரப்படலம் வரையிலான காதையை,
கிஷ்கிந்தாகாண்டத்திலும்,
அனுமன் கடல் தாவுதல் தொடங்கி,
வீடணன், இராமனின் திருவடி தொழுதல் வரையிலான காதையை,
சுந்தரகாண்டத்திலும்,
இராமன் கடல் காண்பது தொடங்கி,
நண்பர்க்கு விடைகொடுப்பது வரையிலான காதையை,
யுத்தகாண்டத்திலுமாக அமைக்கிறான் கம்பன்.
 
❤ ❤ ❤
 
கம்பனின் இவ் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கி,
மேற்கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்திருப்பது,
இப்பாடல் பற்றிய வியக்கத்தக்க முதற் செய்தி.
வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப
இப்பாடலின் முதலில் அமைந்தவையான இவ்விரு அடிகள்,
இராம அவதாரம் நிகழும் பாலகாண்டத்தைக் குறிப்பன.
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து
எனும் இப்பாடலின் மூன்றாவது அடி,
அயோத்தியாகாண்டத்தைக் குறித்து நிற்கிறது.
நான்காம் அடியில் வரும் கானும் கடலும் கடந்து எனும் தொடர்,
ஆரணிய, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்களின் காதையை,
குறிப்பால் உணர்த்துகிறது.
அதே அடியில் வரும்,
இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தே எனும் தொடர்,
யுத்தகாண்டக்காதையை வெளிப்படுத்துகிறது.
இங்ஙனமாய் ஆறுகாண்டக் காதையையும் உள்ளடக்கி,
கம்பன் இயற்றிய இக்கடவுள் வாழ்த்து சிறப்பு மிக்கதாம்.
 
❤ ❤ ❤
 
உலகம்,
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும்,
பஞ்சபூதங்களினாலானது.
இவற்றுள் ஆகாயமே உயர்பூதமாம்.
அஃது சூக்கும வடிவானது.
உய்த்துணர மட்டுமே முடிவது.
ஓசையாகிய ஒரு குணத்தை மட்டும் கொண்டது.
அவ் ஆகாயபூதத்திலிருந்து விரிவது காற்று.
அது உணர்தல் தன்மையைச் சிறப்புக் குணமாய்க் கொண்டது.
ஓசை, உணர்வு ஆகிய இரு குணங்களைத் தன்னகத்தடக்கியது.
அக் காற்றிலிருந்து விரிவதாகிய,
மூன்றாவது பூதமாகிய தீ காட்சிக்குட்படுவது.
ஓசை, உணர்வு, ஒளி ஆகிய முக்குணங்களைக் கொண்டது.
அத் தீயினின்றும் வெளிப்படும் பூதமாகிய நீர் சலனத்தன்மை கொண்டது.
அது ஓசை, உணர்வு, ஒளி, சுவை ஆகிய நாற்குணங்களைப் பெற்றது.
அந்நீரிலிருந்து பிறப்பதான ஐந்தாவதாகிய நிலபூதம் திண்ம வடிவிலானது.
ஓசை, உணர்வு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐங்குணங்களையும் உட்கொண்டது.
 
❤ ❤ ❤
 
மேற்கருத்தைத் திருவாசகத்தில் வரும்,
போற்றித்திரு அகவலில்,
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! என,
மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார்.
பூதங்கள் அறிவற்ற சடங்களாம்.
பூரண அறிவினனான இறைவனே,
அப்பூதங்களின் உள்நின்று,
அவற்றின் குணங்களாய் விரிகிறான் என்பது,
மணிவாசகர் கருத்து.
அதே கருத்தினை இப்பாடலில் கம்பனும் வலியுறுத்துகிறான்.
வானின்று இழிந்து வந்த பூதங்கள் ஐந்தின் வரம்பிலா வெளிப்பாடான,
இப்பிரபஞ்சம் அனைத்திலும்,
இறைவன் உறைகிறான் என்கிறான் அவன்.
வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும் உளனென்ப
 
❤ ❤ ❤
 
இறைவன் அறிவைக் கடந்தவன்.
அவனை அறிதலோ உணர்தலோ சிற்றறிவுடைய எவர்க்கும் ஆகாத செயலாம்.
இங்கு பூதங்களின் குணமாய்,
இறைவன் அவற்றுள் உறைந்துளான் என்கிறான் கம்பன்.
பஞ்சபூதங்களின் குணங்களோ அறியப்படுபவை.
இறைவனோ அறிவைக் கடந்தவன்.
அறிவைக் கடந்த இறைவன் அறியப்படும் பூதங்களுள்,
அமைந்த விதத்தை உரைக்கத் தலைப்படும் கம்பன்.
அப் பஞ்சபூதங்களின் உள்ளும் புறமுமாய்,
இறைவன் இருப்பதாய் உரைக்கிறான்.
 
❤ ❤ ❤
 
பஞ்சபூத காரியமான இவ்வுலகுக்கும்,
இறைக்குமான தொடர்பு எத்தகையது என்பதை,
விளக்கம் செய்ய முயலும் கம்பன்.
சடமான இவ்வுலகோடு இறைவன்,
உள்ளும், புறமுமாய் கலந்து நிற்பதாய் உரைத்து,
மற்றவர் அக்கருத்தைத் தெளிவுற புரிவதற்காய்,
ஓர் உவமையைக் கையாண்டு,
உலகுடனான இறையின் தொடர்பைத் தெளிவுபடுத்துகிறான்.
 
❤ ❤ ❤
 
ஊனும் உயிரும் உணர்வும் போல்,
என்பதுவே கம்பன் கையாளும் அவ் உவமையாகும்.
ஒருவர் மற்றவருக்கு உணர்த்த நினைக்கும் விடயத்தை உவமேயம் என்றும்,
அவ் உவமேயத்தோடு ஒருவகையில் தொடர்புபட்டு,
அதனை உணர்த்தப் பயன்படும் அணியை,
உவமானம் என்றும் உரைப்பர்.
அமுதம் போல் உணவு எனுந் தொடரில்,
உணவு உவமேயம். அமுதம் உவமானம்.
இங்கு தான் சொல்லவந்த விடயத்தைத் தெளிவுறத்த,
கம்பன் மூன்று விடயங்களை உவமானமாக்குகிறான்.
ஊனும், உயிரும், உணர்வும் என்பவையே அவ் உவமானங்களாம்.
 
❤ ❤ ❤
 
இறைவன் உலகின் உள்ளும், புறமுமாய்த் திகழ்கிறான் எனும் உவமேயத்தை,
விளக்க வந்த கம்பன்
ஊனும், உயிரும், உணர்வும் எனும் உவமைகளால்,
அதனை உணர்த்த நினைக்கிறான்.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் ஒன்று உண்டு.
உவமானத்தில் மூன்று விடயங்களை உரைக்கும் கம்பன்.
உவமேயத்தில் உள்ளும், புறமும் என,
இரண்டு விடயங்களை மட்டுமே குறிக்கிறான்.
 
❤ ❤ ❤
 
ஒரு உவமேயத்தை விளக்கம் செய்ய,
பல உவமானங்களைச் சொல்லுதல் இயல்பே.
அதற்கான உதாரணமாய்,
கம்பனின் பாடல் ஒன்றையே எடுத்துக்காட்டலாம்.
வெய்யோன் ஒளி தன்மேனியின் விரி சோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மழை முகிலோ மறிகடலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்
சீதையோடும் இலக்குவனோடும் காடு செல்லும் இராமனின் அழகை,
இப்பாடலில் கம்பன் வியந்து விபரிக்கிறான்.
இப்பாடலில் வரும்,
மை, மரகதம், மழைமுகில், மறிகடல் என்பவை உவமானங்கள்.
இராமனின் அழகு உவமேயம்.
மேல் உவமானங்கள் அனைத்தும்,
ஏதோ வகையில் இராமனின் அழகை வெளிப்படுத்தவே செய்கின்றன.
இவ் அடிப்படை கொண்டு நோக்க,
ஓர் உவமேயத்தை விளக்க,
பல உவமானங்களை இடுதலின் பொருத்தப்பாடு தெளிவாகிறது.
 
❤ ❤ ❤
 
ஆனால் நாம் எடுத்துக்கொண்ட கம்பனின் கடவுள் வாழ்த்துப்பாடலிலோ,
உவமானம் மூன்றாயும், உவமேயம் இரண்டாயும் நின்று குழப்பம் தருகின்றன.
இப்பாடலைப் படிக்கையில் சொல்லப்பட்ட உவமானங்களில்,
உவமேயங்களோடு பொருத்தப்பாடுடையவை எவை?
எனும் ஐயம் பிறக்கிறது.
இங்ஙனமாய் உவமானத்தில் விடயங்கள் மூன்றையும்,
உவமேயத்தில் விடயங்கள் இரண்டையும்,
கம்பன் சமமின்றி அமைத்ததேன்?
எனும் கேள்வி பிறக்க குழப்பமுறுகிறோம் நாம்.
 
❤ ❤ ❤
 
ஆழ்ந்து சிந்திக்க,
உவமேயம் இரண்டினை விளக்கம் செய்ய,
உவமானம் மூன்றினைக் கையாண்ட,
கம்பனது மதிநுட்பம் தெரியவருகிறது.
 
❤ ❤ ❤
 
இறைவன்,
உலகின் தோற்றத்தில் உள்நின்றும்,
உலகின் இயக்கத்தில் வெளிப்பட்டும்,
இவ்வுலகோடு தொடர்புபட்டு நிற்கிறான்.
கம்பனது இக்கருத்தை விளக்கம் செய்யவே,
மேல் உவமையைப் பாடலில் இடுகிறான்.
இதனைச் சற்று விரிய ஆராய்தல் அவசியம்.

❤ ❤ ❤
 
காட்சிக்குப் புலப்பட்டு நிற்கும் இவ்வுலகின் வடிவில்,
இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை.
அதனால், தோற்றி நிற்கும் உலகின் வடிவில்,
இறைக்கலப்பு இல்லை என்று சொல்லுதல் கூடுமா?
கூடாதாம்!
தூலமான இவ்வுலகு பஞ்சபூதங்களாலானது.
பஞ்சபூதங்கள் சூக்குமமான தன்மாத்திரைகளாலானவை.
தன்மாத்திரைகள் அதிசூக்குமமான மாயையினாலானவை.
மாயையோ இறைவனில் தங்கிய அவனது உடைமைப் பொருள்.
இத் தொடர்பு பற்றிச் சிந்திக்க உலகின் தோற்றத்தில்,
இறைவன் வெளிப்பட்டுத் தோன்றாவிடினும்,
அதனின் உள் நிற்கிறான் என்பதன் உண்மை புலனாகும்.
 
❤ ❤ ❤
 
உலகின் தோற்றத்தில் இறைவன் உள்நிற்கிறான் எனக் கண்டோம்.
இனி, உலகின் இயக்கத்தில் இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுகிறான்.
எனும் கருத்தையும் ஆராய்தல் வேண்டும்.

❤ ❤ ❤
 
உயிர்ப் பொருள்களுக்கே,
விருப்பு, செயல், அறிவு எனும் இயல்புகள் உள.
உலகோ சடம்.
அஃது சடமான பஞ்சபூதங்களாலானது.
அதனால் உலகுக்குச் சுயமான செயல் இருக்க வாய்ப்பில்லை.
 
❤ ❤ ❤
 
ஆனால் இவ்வுலகோ தொடர்ந்து ஒரு கட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.
செயல் உயிர்ப்பொருளுக்கே உரியது என முன் கண்டோம்.
உலகம் சடமானது எனவும் கண்டோம்.
உலகம் தொடர்ந்து செயற்படுகிறது எனவும் அறிந்தோம்.
எனவே உலகின் அச்செயற்பாட்டிற்கான காரணம் யாது?
எனும் வினாப் பிறக்கும்.
 
❤ ❤ ❤ 
 
உலகில் உள் பொருள்கள் மூன்றே,
இறை, உயிர், தளை என்பவையே அவையாம்.
இது சைவசித்தாந்திகள் கொள்கை.
இம்மூன்றில்,
இறை முற்றறிவுடையது.
உயிர் சிற்றறிவுடையது.
தளை அறிவில் பொருள்.
 
❤ ❤ ❤
 
எனவே சடமான உலகின் இயக்கத்திற்கு,
அறிவுள் பொருள்களான,
இறை அல்லது உயிரே காரணமாதல் வேண்டும்.
உயிரோ, உடம்பாகிய சடத்துள் கட்டுண்டு கிடப்பது வெளிப்படை.
அது மட்டுமன்றி உலகின் இயக்கத்தில் அகப்பட்டு அதுவும் இயங்குகிறது.
ஆதலால் உயிர் உலகின் இயக்கத்திற்கு,
காரணமானதன்று என்பது தெளிவாகிறது.
 
❤ ❤ ❤
 
இவ் அடிப்படை கொண்டு சிந்திக்க,
உலகின் இயக்கத்திற்குக் காரணம்,
இறையே எனும் உண்மை தெற்றென வெளிப்பட்டுப புலனாகும்.
அதனாற்றான் உலகின் இயக்கத்தில்,
இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுகிறான் என்று உரைக்கிறான் கம்பன்.
 
❤ ❤ ❤
 
மாபூதத்தின் வைப்பெங்கும் உள்ளும் புறனும் உளன் எனும்
உவமேயத்தில் பொருந்திய,
உண்மையினைத் தெளிவுறத் தெரிந்தோம்.
இனிஅவ் உண்மையை விளக்கம் செய்ய பாடலில் உரைக்கப்பட்டதான,
ஊனும், உயிரும், உணர்வும் போல் எனும் உவமையின்,
பொருத்தப்பாட்டை ஆராய்தல் அவசியமாகிறது.
 
❤ ❤ ❤
 
உடம்புக்கும், உயிருக்குமான தொடர்பில்,
தோற்ற அமைப்பில் உயிர் உள்ளடங்கி நிற்க,
உடம்பே வெளிப்பட்டு தெரிகிறது.
உயிருக்கும், உணர்வுக்குமான தொடர்பில்,
சடமான உடலின் உணர்வு சார்ந்த இயக்கத்தைக் கொண்டு,
உயிர் வெளிப்பட்டுத் தோன்றுகிறது.
 
❤ ❤ ❤
 
உணர்வு வெளிப்பாட்டில்,
உயிரின் இருப்பு வெளிப்படுவது இயற்கை அன்றோ?
உடலில் உணர்வின்றேல் உயிர் இல்லை எனக் கருதுவது உலகியற்கை.
எனவேதான் உணர்வு, உயிர் எனும் தொடர்பில்,
உயிர் வெளிப்பட்டுத் தோன்றுவதாக உரைக்கிறான் கம்பன்.
 
❤ ❤ ❤
 
உடல் உயிர் தொடர்பில் உயிர் உள்ளடங்கியும்,
உயிர் உணர்வுத் தொடர்பில் உயிர் வெளிப்பட்டும் தோன்றும்,
இவ் உண்மையை வைத்து,
தான் சொல்ல வந்த உவமேயத்தை நிறுவ நினைக்கிறான் கம்பன்.
 
❤ ❤ ❤
 
தொடர்புபட்ட பொருள் மூன்று எனினும்,
அவற்றின் செயற்பாட்டுத் தொடர்பு இரண்டாதல் இயல்பே,
மூன்றாய் விரிந்த கிளைகளின் இடைத்தொடர்பு இரண்டன்றோ?
அதனாற்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்,
உலகுக்கும், உயிருக்குமான தொடர்பை விளக்கம் செய்ய,
மிகப் பொருத்தமாய்,
ஊனும், உயிரும், உடம்பும் போல் எனும்,
உவமானத்தை எடுத்துக்கொள்கிறான்.
 
❤ ❤ ❤
 
சுருங்கக் கூறின்,
இறைவன் இவ் உலகில்,
ஊனும் உயிரும் போல் உள்ளாயும்,
உயிரும், உணர்வும் போல் புறனாயும் நிற்கிறான் என்பதே,
கம்பன் சொல்ல வந்த செய்தியாம்.
இங்கு உள்;ளும், புறமும் எனும் இரண்டு உவமேயங்களை விளக்கம் செய்ய,
ஊனும், உயிரும், உணர்வும் எனும் மூன்று உவமானங்களை,
கம்பன் கொண்டான் என்று மயங்கத் தேவையில்லை.
இங்கே ஊனும். உயிரும், உணர்வும் தனித்தனி உவமைகளாகக் கூறப்படவில்லை.
அவற்றிற்கிடையான தொடர்பே கம்பனால் உவமையாக்கப்பட்டிருக்கிறது.
கம்பன் சொன்ன உவமைகளில் நடுநிற்கும் உயிரை,
ஒருகால் ஊனோடும்,
ஒருகால் உணர்வோடும் கூட்டி,
அவற்றிற்கிடையிலான தொடர்பையே,
கம்பன் உவமையாக்கினான் என்தை அறிய,
நம் ஐயம் அகன்று தெளிவு பிறக்கும்.
 
❤ ❤ ❤
 
மேல் உவமானத்தை கம்பன் கையாண்டு இருக்கும்,
நுட்பத்தினை அறிய,
நாம் மகிழ்ந்து போகிறோம்.
 
❤ ❤ ❤ ❤ ❤

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.