'நல்லதே நடக்கட்டும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'நல்லதே நடக்கட்டும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
லகம் எதிர்பார்த்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.
திரு. கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தேர்தலில் பெருவெற்றி அடைந்திருக்கிறார்.
சஜித்தின் தோல்வியும் மதிப்பிழந்த தோல்வியாக இல்லை.
எதிர்பார்ப்பின் அடிப்படையில் சிலருக்கு மகிழ்ச்சி - வேறு சிலருக்குத் துக்கம்.
இவற்றை மீறி, ஒரு ஜனநாயக நாட்டில்,
முக்கிய தேர்தல் ஒன்று  பிரச்சினைகளின்றி நடந்து முடிந்திருப்பதை,
ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும்.




வெற்றி பெற்றிருக்கும் கோத்தாபய அவர்கள்,
அரசியலில் பெற்றிருக்கும் முதல் பதவி இது.
அப்பதவியை எங்ஙனம் அவர் கையாளப்போகிறார்? என்பதிலேயே,
அவரது உண்மை வெற்றி தங்கியிருக்கப் போகிறது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிகழ்ந்த,
தமிழருக்கு எதிரான போர்க்காலத் தவறுகளை,
தமிழ்மக்களும் உலகமும் இன்னும் முற்றாக மறக்கவில்லை.
அந்தத் தவறுகளின் நிழல் புதிய ஜனாதிபதியின் மீதும் படிந்திருப்பது,
மறுக்கமுடியாத உண்மையாம்.
இம்முறை சஜித்திற்குக் கிடைத்த தமிழ்மக்களின் பேராதரவு என்பது,
சஜித்தின்மீதான நம்பிக்கையால் மட்டும் விளைந்ததன்று.
அது, பெரும்பாலும் மஹிந்த குழுவினரின்மீதான எதிர்ப்பினது பிரதிபலிப்பேயாம்.
தமிழ்மக்களின் மனதில் பெரும்வடுவாகப் பதிந்திருக்கும்,
அந்த வரலாற்று வேதனையைப் புதிய ஜனாதிபதி எப்படி ஆற்றப்போகிறார் என்பதை வைத்தே,
அவரது உண்மை வெற்றி அமையப்போகிறது என்பது சர்வ நிச்சயம்.



காலமும் அனுபவமும் மக்களை மாற்றிக்கொண்டேயிருக்கின்றன.
போர்விரும்பிய அசோகச் சக்கரவர்த்தி துறவு மேற்கொண்டதும்,
கொலைத்தொழில் வேடன் ஒருவன் வான்மீகி முனிவரானதும்,
மேற்சொன்ன  உண்மையின் உதாரணங்கள்.
எனவே இறந்தகாலத்தை மட்டும் வைத்து,
புதிய ஜனாதிபதியின் எதிர்கால நிர்வாகம்,
இப்படித்தான் இருக்கப்போகிறதெனத் தீர்மானிப்பது தவறாம்.
பழைய வரலாற்றுச் சாயலோடு புதிய ஆட்சியை அமைப்பதாய்,
கோத்தாபய அவர்கள் முடிவு செய்தால்,
அது அவரது அரசியல் பாதையின் தோல்வியாய் முடியப்போவது சர்வ நிச்சயம்
அங்ஙனமன்றி பழைய அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு,
ஜனாதிபதிப் பதவி என்பது இலங்கை வாழ் மக்கள் அனைவரையும்,
இன, மதபேதமின்றி பாதுகாக்கும் ஒன்று என்பதை உணர்ந்தும்,
ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து,
நாட்டு மக்களை நீதி என்னும் ஒருகுடைக்கீழ் கொணர்ந்து,
ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதே தன் கடமை என்பதை உணர்ந்தும்,
அவர் செயற்பட்டால்த்தான் இப்போது கிடைத்திருக்கும் அவரது வெற்றி,
உண்மை வெற்றியாய் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.



ஒரு தலைவனின் முழுமை வெற்றி என்பது,
அவனது ஆளுமைத் திறத்திலேயே தங்கியிருக்கிறது.
வேறெந்தத் தகுதிகளைக் கொண்டிருந்தாலும் ஆளுமை அற்ற ஒருவர்,
தன்னை ஓர் சிறந்த தலைவனாய் ஸ்தாபிப்பது கடினமாம்.
இலங்கைச் சட்டங்களின்படி மஹிந்த அவர்கள்,
இத்தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில்,
அவருக்கான ஒரு 'போடுதடியாகவே' கோத்தாபய பயன்படுத்தப்பட்டார் என்றும்,
இனி அவரை வைத்து மஹிந்தவின் ஆட்சியே நிகழும் என்றும்,
பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது.
அத்தகைய ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே,
சிங்கள மக்களின் பேராதரவு கோத்தாபயவுக்குக் கிடைத்ததாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.



மேற் கருத்து உண்மையாயின் கோத்தாபயவின் இன்றைய வெற்றி,
வரலாற்றால் மதிக்கப்படப்போகும் வெற்றியாய் நிச்சயம் அமையாது என்பது திண்ணம்.
அவரது வெற்றிக்கான காரணம் எதுவானாலும்,
இனி தனது தனித்த ஆளுமையோடு அவர் வகுக்கப்போகும்,
புதிய அரசியல் பாதையே அவரது உண்மை வெற்றியை உறுதி செய்யுமாம்.



இத்தேர்தல் முடிவினால்,
தமிழ்த்தலைவர்கள் மத்தியிலும் ஒரு குழப்பம் நிகழும் என்பது உண்மை.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை தாம் எதிர்பார்த்த சஜித்தின் வெற்றி கனவாய்ப் போக,
அவர்கள் சற்று தளர்ந்திருப்பார்கள் என்பது உண்மையே.
ஆனாலும் அத்தோல்வியிலும் தமக்கான ஒரு வெற்றி பதிந்திருப்பதாய்,
சிலவேளை அவர்கள் பெருமைப்படவும்கூடும்.
முன்னாள் முதலமைச்சர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா போன்றோர்,
வெவ்வேறு திசைகளைக் காட்ட,
பெரும்பான்மைத் தமிழ்மக்கள் தாம் காட்டிய பாதையிலேயே,
பயணித்திருப்பதை எடுத்துக் காட்டி, தமிழ்மக்களின் ஏகத்தலைமையாய்,
இன்றும் தாமே விளங்குவதாய் உரைத்து அவர்கள் மகிழக்கூடும்.
ஆனால் அக்கூற்றை நூறுவீத உண்மைக் கூற்றாய்க் கருதமுடியாதென்பது திண்ணம்.



காரணம், பழைய போர் வடுக்களை மறக்க முடியாது தவிக்கும் தமிழ்மக்கள்,
இம்முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,
வாக்களிப்பில் இருந்த வாய்ப்புள்ள இரண்டே தேர்வில்,
அப்போர்த் துன்பங்களுக்குக் காரணமானவர்களில் ஒருவர் என்ற நிழல் படிந்திருந்த,
கோத்தாபய அவர்களுக்குத் தமது எதிர்ப்பைக் காட்டுமுகமாகவே,
தமது வாக்குப்பலத்தை சஜித்மீது பதித்து திருப்தியுற்றனர்.
அதுதவிர, இம்முறை நிகழ்ந்த சஜித்திற்கு ஆதரவான வாக்களிப்பு,
முழுக்க முழுக்க கூட்டமைப்பின் வேண்டுகோளால் நிகழ்ந்தது என்பதனை,
ஒருக்காலும் முழுமையாய் ஏற்க முடியாது.
தமிழ்மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை,
வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் தான் உறுதிப்படுத்தப் போகிறது.



களச்சூழ்நிலை அறியாமல் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து,
இனி அமையப்போகும் புதிய அரசின் பகையை,
கூட்டமைப்பினர் தமிழ்மக்கள் மேல் திருப்பிவிட்டார்கள் என்று,
வேறு சிலர், அவர்களைக் குற்றஞ்சாட்டி நிற்கின்றனர்.
ஆனால் அவர்தம் அக்குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்பது திண்ணம்.
நடந்து முடிந்த போர் அழிவின் வடுக்களை மஹிந்த குழுவினர்மேல் ஏற்றி,
உலகநாடுகள் பலவற்றோடு நம் உறவுரிமையுள்ள தமிழ்நாடும், பாரதமும்,
கடந்த காலங்களில் எமக்கான ஆதரவைத் தெரிவித்து நின்றதும்,
பழைய ஆட்சியாளர்களைக் கண்டித்து நின்றதும் நிகழ்ந்த உண்மைகள்.
இன்று கூட நடந்து முடிந்த போர்க்குற்றச்சாட்டோடு தொடர்புடைய பலருக்கு,
சில நாடுகள் 'விசா' வழங்க மறுத்து நிற்பது நிதர்சன உண்மை.



இந்நிலையில்,
எமக்கு ஆதரவான நிலைப்பாடெடுத்து,
மஹிந்த காலத்து ஆட்சியாளர்களைக் கண்டித்து,
எம்மைக் காக்க முயன்று நிற்கும் பலரதும் ஆதரவை நிராகரித்து,
அரசியல் வெற்றிச் சூழலை மட்டும் கணித்து,
கோத்தாபய அணியினரைத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆதரித்திருந்தால்,
அச்செயல், நம்மேல் அனுதாபம் காட்டி நின்ற,
அத்தனைபேர் முகத்திலும் கரி பூசியதாய் நிச்சயம் அமைந்திருக்கும் என்பது உறுதி.
எதிர்கால அரசியலின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்று தெரியாத நிலையில்,
இலாபம் கருதிய வெறும் அரசியல் கணிப்புக்களை மட்டும் வைத்து,
'கோத்தாபய அணியினரை ஆதரியுங்கள்!' என்று தமிழ்மக்கள் முன் கோரிக்கை வைப்பதை,
கூட்டமைப்பு எப்படியும் செய்திருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.



ஆனால் இதேபோக்குத் தொடர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
புதிய ஜனாதிபதி அவர்கள் தேர்தல் வெற்றியின் பின்,
'வாக்களித்தவர்கள், வாக்களியாதவர்கள் அனைவரையும்,
அணைத்துச் சென்று நாட்டை முன்னேற்றுவேன்' என்று,
விடுத்திருக்கும் அறிக்கையை நிஜப்படுத்தி,
தமிழ்மக்களுக்கு நடந்து முடிந்த போர்ப்பாதிப்புக்களுக்கு,
கருணையோடு கைகொடுக்க முன்வருவாரானால்,
அதன்பின் கூட்டமைப்பினர் அவர் சார்பாகச் செயற்பட்டாலும்,
அது பிழையாய்க் கருதப்படமாட்டாது என்பது திண்ணம்.
காலம் தான் எப்பாதை நம் பாதை என்பதை உறுதி செய்ய வேண்டும்.



கஜேந்திரகுமார் சொன்ன தேர்தலைப் பகிஷ்கரியுங்கள் என்ற முடிவும்,
முன்னாள் முதலமைச்சர் சொன்ன வெற்றி பெறப்போபவரை அறிந்து வாக்களியுங்கள் என்ற முடிவும்,
நிச்சயம் தமிழ்மக்களுக்கு நன்மையும் பெருமையும் தரக்கூடிய முடிவுகள் அன்றாம்.
தேர்தல் பகிஷ்கரிப்பினால் நாம் எதையும் சாதித்திருக்க முடியாது,
வெற்றி பெறப் போபவரை அறிந்து அவருக்கு வாக்களித்;திருந்தால்,
அச்செயல் தமிழ்மக்களை சந்தர்ப்பவாதிகளாய் இனங்காட்டியிருக்கும்.
தமது அறிக்கைகளில் போர்க்குற்றங்களுக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் எதிராக,
வானளாவிக் குதித்துக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர்,
தான் யாருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தாரோ,
வெற்றி வருமானால் அவர்களையும் ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தது விந்தையே.
புதிய ஜனாதிபதிக்கான முதல் வாழ்த்தும்,
தமிழ்த்தலைவர்களில், அவரிடமிருந்தே வெளி வந்திருக்கிறது.
முன்பும், தம் பதவிக்கான சத்தியப் பிரமாணத்தை,
மஹிந்தவின் முன்னால் சென்று எடுக்கமாட்டேன் என்று வாய்ச்சவடால் விட்டுவிட்டு,
அவரை நம்பி மற்றவர்கள் எங்கெங்கோ சத்தியப்பிரமாணம் செய்ய,
இறுதியில் தான் அதே மஹிந்தவின் முன்பாக,
தம் உறவுகள் சூழ சத்தியப்பிரமாணம் செய்தமையும்,
இவ்விடத்தில் நினைவு கூறப்படவேண்டிய ஒன்றாம்.
யார் தூண்டுதலில் இங்ஙனம் அவர் மாறி மாறி இயங்குகிறார்? என்பது பற்றி,
பலரும் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்.



ஆரம்பம் முதல் இத்தேர்தலில்,
கோத்தாபயவிற்கு தனது ஆதரவை வெளிப்படத் தெரிவித்துவந்த,
டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இனி அரசியலில் பலம் பெறப்போவது திண்ணம்.
அவர்கூட இரண்டு காரியங்களை,
அவ் அரசியல் பலத்தை வைத்து அழுத்திச் செய்ய வேண்டும்.
முதலாவதாக,
இனி அமையப்போகும் ஆட்சியில்,
காலாகாலமாகத் தமிழ்மக்களைப் 'பேய்க்காட்டுவதற்காக' வழங்கப்பட்டு வந்த,
இந்து கலாசார அமைச்சு போன்ற 'வைக்கல் பொம்மைப்' பதவிகளை நிராகரித்துவிட்டு,
இனத்திற்கு உருப்படியாக நன்மை செய்யக்கூடிய வலிமை மிக்க ஓர் அமைச்சினை,
புதிய அரசிடம் அவர் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக,
பலராலும் தன்மேல் படியச்செய்யப்பட்டிருக்கும் இனத்துரோகி எனும் இருளை,
தனது துணிவான நன்மை மிகுந்த செயற்பாடுகளால் துடைத்தெறிய முயல வேண்டும்.
இது கோத்தாபயவிற்கு கிடைத்திருப்பதைப் போலவே,
டக்ளஸூக்கும் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பமாம்.
அவரும் தனது ஆளுமைச் செயற்பாடுகளால்,
பலரதும் மனங்களை வெல்லவேண்டிய கடமையில் இருக்கிறார்.



புதிதாகப் பதவியேற்கும் கோத்தாபய அவர்களின் உண்மை வெற்றி,
பல விடயங்களில் தங்கியிருக்கப்போகிறது.

 சஜித்திற்குப் பெரும்பான்மை வாக்களித்த தமிழ்மக்களின் கட்டாய நிலையை உணர்ந்து, அவர்கள்மீது பகைகொள்ளாமல் அவர்தம் பிரச்சினைகளை அவர் கையாளப்போகும் விதம்.
 
✠ போர்ப்பாதிப்புற்ற தமிழர்கள்மீது அவர் காட்டப்போகும் கருணைச் செயல்கள்.

✠ காலாகாலமாகப் பதிவாகிவரும் இனப்பகையை நீக்க அவர் முன்னெடுக்கப்போகும் முயற்சி.

✠ சீன, இந்திய, அமெரிக்க உறவுச் சமன்பாட்டை அவர் எதிர்கொள்ளப்போகும் முறை.

✠ அண்ணனின் கைப்பொம்மையாய் இல்லாமல் சுய தலைவனாய் தன்னை நிரூபிக்கும் ஆற்றல்.

✠ கட்சியே குடும்பம் குடும்பமே கட்சி என்றில்லாமல் ஜனநாயக ரீதியில் கட்சியை வழிநடத்தப் போகும் தன்மை.

✠ இன, மத தீவிரவாதிகளை அடக்கிக் கையாளப்போகும் விதம்.

✠ தனது நிர்வாகத்தில் தன் குடும்பம் சார்ந்த இளையோரினதும் மற்றையோரினதும் தலையீட்டைக்  கட்டுப்படுத்தும் ஆற்றல்.

✠ அரசியல் பழிவாங்கல் முயற்சியில் தனது காலத்தை அதிகம் செலவிடாமல் நாட்டை உயர்த்த தன்னை உண்மை ஜனநாயகவாதியாய் உணர்த்தும் திறன்.

இங்ஙனமாய்,
கோத்தாபய அவர்கள் தாண்டவேண்டிய அக்கினி ஆறுகள் பல இருக்கப்போகின்றன.
அவற்றைக் கடந்து தானும் நிமிர்ந்து தேசத்தையும் நிமிர்த்துகையிலேயே,
கோத்தாபயவின் இன்றைய வெற்றி வரலாற்று வெற்றியாய்ப் பதிவாகும்.
தவறுவாரானால்,
'பழைய குருடி கதவைத் திறவடி' என்ற கதையாகத்தான் முடியும்.
மஹிந்த குடும்பத்தார் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆளுமை மிக்கவர்கள் என்ற,
வலிமையான நம்பிக்கை ஒன்று மக்கள் மத்தியில் நிலவுகிறது.
மக்களின் அந்த நம்பிக்கையைக் கோத்தாபய காப்பாற்றுவாரா?
'நல்லதே நடக்கும்' என்ற எதிர்பார்ப்போடு,
முடிவறியக் காத்திருப்போம்.

 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.