நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
செய்திப்பெட்டகம் 25 Oct 2017
பிறந்தநாள் ஒரு பெரிய விடயமல்ல என்பது என் மனப்பதிவு.
அதனால் அக்கொண்டாட்டத்தில் எனக்கு உவப்பில்லை.
பிறந்த பதிவைவிட வாழும் பதிவின் அவசியத்தைப் பெரிதென நினைகிறவன் நான்.
ஆனாலும் தம் அன்பை வெளிப்படுத்த அந்நாளை சிலர் ஒரு குறியீடாய்க் கருதுகையில்,
சம்பிரதாயம் கடந்து அவர்தம் அன்பை உணர்ந்து நெகிழ்கிறேன்.
✜✜✜
என் அறுபது அகவை நிறைவுக்கு எத்தனை, எத்தனை வாழ்த்துக்கள்.
மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊடகங்கள், அமைச்சர்கள்
பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் எனப் பலரும்,
தம் வாழ்த்தால் என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.
யாழ் மண்ணில் ‘வலம்புரிப்’ பத்திரிகை பெரிய அளவில் இடம் ஒதுக்கி,
ஓரு பிரமுகர்க்குத் தரும் மரியாதையை எனக்குத் தந்திருந்தது.
‘காலைக்கதிர்’ முன்பக்க செய்தி வெளியிட்டு முக்கியத்துவம் தந்திருந்தது.
தாய்மண்விட்டு இடம்பெயர்ந்த பின்னும் அம்மண்; தரும் மதிப்பினை நினைந்து நெகிழ்கிறேன்.
ஆயிரம்தான் இருந்தாலும்; தாய்மண் தாய்மண்தான் எனும் உண்மை புரிகிறது.
✜✜✜
கட்டுரைகள், கவிதைகள், கருத்துப்பதிவுகள் என,
உருக்கம் நிறைந்த பல ஆக்கங்கள் என் உயிர் கரைத்தன.
தமிழ் நாட்டில் என் திருக்குறள் மாணவர்கள் எனது பெயரால் பல அறக்காரியங்கள் செய்ததையும்,
ஆலயங்களில் வழிபாடுகள் இயற்றியதையும் அறிந்து உருகிப்போனேன்.
இத்தனை பேருக்கு என்னில் நம்பிக்கையா? இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்துவிட்டேன்?
நெஞ்சு வினவுகிறது.
✜✜✜
நான் மகிழ்ந்த தமிழை அவர் தமக்கு உரைத்தேன்.-அவ்வளவுதான்!
அவ் உரைப்பிலும் எனக்குத்தான் மகிழ்ச்சி.
‘ஈத்துவக்கும் இன்பம்’ அது!
எனக்கு மகிழ்வு தந்தவர்கள் நான் மகிழ்வு தந்;ததாய் வாழ்த்துகிறார்கள்.
என் ஆசிரியர்கள் எனக்குப் பிச்சையாய் இட்ட அறிவுச்செல்வத்தை ஈந்து,
மற்றவர்களுக்கு நான் கொடையாளியாய்க் காட்சி தருகிறேன்.
குருவருளே திருவருளாம்!
✜✜✜
அன்பைக் கொட்டி வாழ்த்துரைத்த அனைவர்க்கும் என் நன்றிகள்.
இவர்க்கெல்லாம் என்ன கைம்மாறு இயற்றப் போகிறேன்?- வினாவெழுப்பி புத்தி குடைய,
‘இவர்தம் நம்பிக்கைக்கேற்ப நாளுக்கு நாள் உன் வாழ்வைத் தூய்மை செய்வதே,
அவர் தமக்கு நீ செய்யக் கூடிய கடனாம்’ என இதயம் பதிலளிக்கிறது.
இறையருளும் இத்தனை பேரது அன்பும் அங்கனம் வாழும் ஆற்றலை எனக்கு நல்கட்டும்.
வாழ்த்துரைத்தார் அனைவரையும் கண்ணீரோடு வணங்குகிறேன்.
‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
அன்பன்,
இ. ஜெயராஜ்