நேர்காணல் 7
#கேள்வி :
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். மலரவனுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது?
#பதில் :
அது ஒரு தனிக்கதை. கோயில்களுக்குச் சொற்பொழிவுகளுக்காக நான் சென்று வருவேன். யாழ்ப்பாணத்தில் உள்ள பல கோயில்களிலும் எனது சொற்பொழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. அப்படி ஒருமுறை, புன்னாலைக்கட்டுவன் என்ற ஊரிலுள்ள ஒரு கோயிலுக்கு நான் பேச அழைக்கப்பட்டேன். என்னை அழைத்தவருக்குப் பெயர் திருநாவுக்கரசு. அவர் சொந்தமாய்ச் சுருட்டுத் தொழில் நடத்தி வந்தார். பலபேர் அவருக்குக் கீழ் அத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.
அவர் சிறுவயதிலேயே “போலியோ” நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது ஒரு கால் அந்நோய்க்கு ஆளாகி நடக்கும் சக்தியை இழந்திருந்தது. மற்றவர்களைப் போல் கைத்தடியை ஊன்றி நடக்காமல், தன்னளவு உயரமான மண்வெட்டிப்பிடி போன்ற ஒரு “பொல்லை” ஊன்றியபடி மிக இயல்பாய் அவர் நடப்பார். நல்ல தமிழ் ரசிகர். நல்ல காரியங்களுக்குத் துணைசெய்வதில் முன்நிற்பவர். சிறந்த ஆளுமையாளர். தன் உடல் ஊனத்தை எப்பொழுதும் அவர் பொருட்படுத்துவதில்லை. மிக இயல்பாக நடந்துகொள்வார். அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் மலரவன்.
அப்போது மிகப்பெரும் ஆளுமையாளராய் இருந்த ஆனந்தராஜா அவர்கள் “சென்.ஜோன்ஸ்” கல்லூரியின் அதிபராய் இருந்தார். ஒரு கல்லூரியை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அவர். நான் அக்கல்லூரிக்கு ஓரிருமுறை பேசுவதற்காகச் சென்றபோது, அவரது ஆளுமையைக் கண்டு வியந்திருக்கிறேன்.
பின்னாளில் ஏதோ காரணத்தால் அவர் போராளிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார். நான் அந்தக் கல்லூரியின் பழைய மாணவனாக இல்லாதிருந்த பொழுதும், பதட்டத்துடன் நடைபெற்ற அவரது இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். போராட்டக் காலத்தில் நடைபெற்ற மிகத் தவறான சம்பவமாக அவரது துர்மரணம் அமைந்துபோனது மட்டும் உண்மை.
அக்காலத்தில் “சென்.ஜோன்ஸ்” கல்லூரியில் “அட்மிஷன்” கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது. பெரிய பெரிய படிப்பாளிகள், பணக்காரர்கள் போன்றோரே அந்த “அட்மிஷனு”க்காகத் தவம் கிடந்த அக்காலத்தில், வெறும் சுருட்டுத் தொழில் நடத்திய திருநாவுக்கரசு அவர்கள் தனது மூன்று பிள்ளைகளுக்கும் அங்கு “அட்மிஷன்” பெற்றுக்கொண்டது ஆச்சரியமான விடயம்.
எவரது சிபாரிசும் இன்றி, தானே சென்று பிள்ளைகளுக்கான “அட்மிஷனை” அவர் பெற்றிருந்தார். கால் நடக்கமுடியாமல் தடியூன்றிச்சென்று அவர் மனந்திறந்து பேசியபேச்சில் நெகிழ்ந்துபோன அதிபர் ஆனந்தராஜா அவர்கள், உடனடியாக அவரது பிள்ளைகளுக்கு “அட்மிஷன்” கொடுத்த கதையைக் கேட்டு நான் வியந்திருக்கிறேன்.
எனது பேச்சு திருநாவுக்கரசு அவர்களது கோயிலில் நடந்தபோது, அப்பேச்சினால் ஈர்க்கப்பட்ட அவர், அதன் பிறகு என்னை நேசிக்கத் தொடங்கினார். அதனால் எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு உண்டாயிற்று. அடிக்கடி என்னை வந்து பார்ப்பார். “சென்.ஜோன்ஸ்” கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே என்னுடைய பேச்சுக்களைக் கேட்டிருந்ததாலும், பின்னாளில் ஏற்பட்ட தந்தையாரின் தொடர்பாலும்தான் மலரவன் எனக்கு நெருக்கமானான்.
தந்தையார் என்மேல் காட்டிய மதிப்பை அவனும் தொடர்ந்து பேணினான். ஒரு போராளியாக அல்லாமல், எனது ஒரு மாணவன் போல என்மேல் அவன் அன்புகாட்டி மரியாதையுடன் நடந்து கொள்வான். அப்போதே அவன் இயக்கத்தில் சேர்ந்து புலிகளின் கலை-பண்பாட்டுத் துறைக்குப் பொறுப்பாளனாக இருந்தான்.
எமது தொடர்பால் ஒருமுறை கம்பன்விழாவுக்கு வந்த அவன், புதுவையின் கவிதைகேட்டு மயங்கி நான் முன் சொன்னதுபோல புதுவையைச் “சிக்கெனப்பிடித்து” இயக்கத்திற்கு அழைத்துச் சென்றான். இயக்கத்தில் சேர்ந்த காலத்தில் புதுவை இவனது உதவியாளராகத்தான் முதலில் செயற்பட்டு வந்தார்.
#கேள்வி :
கவிஞர் புதுவை பற்றிச் சொல்லிக்கொண்டுவந்த விடயத்தை விட்டுவிட்டீர்கள். அதை முழுமையாய்ச் சொல்லிவிட்டுப் பின்னர் மலரவன் பற்றிய செய்திகளைத் தொடருங்களேன்.
#பதில் :
போராட்டத்துள் நுழைந்த பின், “புதுவை” எம்மைவிட்டுத் தூரப்போய் விட்டாலும், மானசீகமான எங்கள் அன்புக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டிருக்கவில்லை. எமக்குப் புலிகளோடு முரண்பாடு ஏற்பட்ட காலத்தில் புதுவையே அதனால் அதிகம் சங்கடப்பட்டார்.
பிடித்தவர்களை அளவுக்கதிகமாய்ப் போற்றுவதும், பிடியாதவர்களைக் கடுமையாய்த் தாக்குவதும் “புதுவை”யின் இயல்பு. எந்தக் கொள்கையிலும் இவர் நிலைத்து நிற்காதவர். அவ்வப்போது தான் ஏற்றுக்கொண்டு இணையும் வெவ்வேறு அமைப்புகளுக்காக, அவ்வக்காலங்களில் உண்மையாய்ப் பாடுபடுவார். அவரது விருப்பு நிரந்தரமாய் நிலைநின்ற இடங்களில் எங்களின் கம்பன் கழகமும் ஒன்றாயிற்று.
புலிகள் இயக்கத்தில் சேர்ந்த பிறகு, புதுவை அங்கும் அனைவரையும் ஈர்த்துக் கொண்டார். இயல்பான ஒரு போராட்ட உணர்வு உள்ளவர் அவர். அக்காலத்தில் புதுவையும், மலரவனும் இணைந்து கலை-பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக வாரந்தோறும் “வின்ஸர்” தியேட்டரில் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். அவ்விருவரோடு எமக்கிருந்த நட்பின் காரணமாக அவர்கள் நடத்திய அந்த வாராந்த நிகழ்ச்சியில் நாங்களும் பட்டிமண்டபம் நடத்தியிருக்கிறோம்.
அப்போது ஒருநாள், பாசையூரைச் சேர்ந்த ஓர் இளைஞனுக்கும், மலரவனுக்கும் இடையில் ஏற்றபட்ட தகராறில் அந்த இளைஞன் மலரவனை அடித்துவிட்டான். இயக்க அதிகாரத்தில் இருந்த மலரவனுக்கும் அவனது சகாக்களுக்கும் அது பெரிய மானப்பிரச்சினையாய்ப் போக, அவர்கள் அந்த இளைஞனைப் பிடித்துவந்து தமது முகாமில் வைத்துத் தாக்கியிருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞன் இறந்து போனான். அது பெரிய பிரச்சினையாகி பாசையூர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த விடயம் தெரியாமல் அன்று “வின்ஸர்” தியேட்டரில் புதுவையும், மலரவனும் நடாத்திய கலை-பண்பாட்டுக் கழக நிகழ்ச்சியைப் பார்க்க மாலையில் நான் சென்றிருந்தேன். அங்கு சென்றதும்தான் மேற்சொன்ன விடயம் எனக்குச் சொல்லப்பட்டது. அதைக்கேட்டு நான் மிகவும் ஆத்திரப்பட்டேன்.
“கொலை செய்கிறவர்களுக்குக் கலை எதற்கு?” என அங்கிருந்த இவர்களின் உதவியாளர்களிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சியைப் பார்க்காமல் நான் வீடு திரும்பிவிட்டேன். நான் கோபித்துக் கொண்டு சென்றதை அறிந்த மலரவனும், புதுவையும் நிகழ்ச்சி முடிந்ததும் வைமன் றோட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்கள்.
மலரவனில் இருந்த உரிமை காரணமாக, நடந்த அச் சம்பவத்திற்காக அவனை நான் கடுமையாகக் கண்டித்தேன். அவனை அழைத்துவந்த புதுவை, நான் பேசுவதைக் கேட்டபடி தலைகுனிந்து அருகில் அமர்ந்திருந்தார். “ஏதோ ஒரு முரண்பாட்டில் அவன் உங்களை அடித்தால், அவனைக் கொலை செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? போராளிகளாக இருந்தால் நீங்கள் எதையும் செய்யலாமா?” என்றெல்லாம் நான் திட்ட, அதைக் கேட்டிருந்த மலரவன் கண்ணீர்விட்டு அழுதான்.
பிறகு தான் செய்த தவறுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டான். “ஆயுதம் இருக்கிறது என்பதற்காக யாரையும் எதையும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் செய்தது மாபெரும் தவறு! இனி இப்படி ஒரு தவறைச் செய்யத் துணியாதீர்கள்!” என்றெல்லாம் புத்திமதி சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.
இடைக்காலத்தில் நிகழ்ந்த ஒரு இராணுவத் தாக்குதலில் மலரவன் கைகளில் காயப்பட்டு, வைத்தியத்திற்காகத் தமிழ்நாடு அழைத்துச் செல்லப்பட்டான். அக்காலத்தில் புதுவை, “நிதர்சனம்” வானொலி, தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களுக்குப் பொறுப்பாக இருந்த பரதனுடன் சேர்ந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.
பரதனும் எங்களுக்குத் தெரிந்தவர்தான். அவர் மலரவனைப் போல மென்மையானவர் இல்லை. கொஞ்சம் ஆணவக்காரர். ஆற்றலாளர், ஆனால் முன்கோபி. தான் இயக்கத்தில் முக்கியமானவர்களில் ஒருவன் என்ற ஆணவம், அவரது செயலில் எப்பொழுதும் வெளிப்படும். மற்றவர்களை அவர் அதிகம் மதிக்கமாட்டார். ஒரு பெரிய மோட்டார் சைக்கிளில் புதுவையையும் ஏற்றிக்கொண்டு ஓடித்திரிவார்.
இவ்விடத்தில் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லவேண்டும். இச்சம்பவங்கள் நடந்து பலகாலம் ஆகிவிட்டபடியால், நான் சொல்லும் சில விடயம் சார்ந்த கால ஒழுங்கில் சில மாற்றங்கள் இருக்கலாம். அதனை முன்னரேயே உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.
அக்காலத்தில் ஒருநாள், யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்கள், தங்களுக்குள் கொண்டாடிய ஓர் நிகழ்வை, நிதர்சனத்திற்காகப் பதிவு செய்த பரதன், அந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்களுக்கே உரித்தான சில குழப்படிகள் செய்ததையும், அவர்களுடைய மதியவிருந்தில் மிச்சமாகக் கொட்டப்பட்ட உணவுகளை நாய்கள் தின்பதையும் “வீடியோ” எடுத்து, அகதிகள் உணவுக்குக் கஷ்டப்படும் காட்சியையும், இக் காட்சியையும் இணைத்துக்காட்டி, “இதில் யார் நாய்கள்” எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பி அந் நிகழ்ச்சியை முடித்திருந்தார்.
அக்காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அக்கருத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. இச்சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களின் முன்னர்தான், ஊர்விட்டு இடம்பெயர்ந்த அகதிகளுக்கு, பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து, கொட்டில்கள் போட்டுக் கொடுத்த செய்தியை, பத்திரிகைகளில் நான் படித்திருந்தேன்.
இளைஞர்களிடம் இவ்விரு இயல்பும் இருப்பது இயற்கைதான் என்பது என் எண்ணம். அவர்களது ஒருநாள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை வைத்து, அவர்களை “நாய்” என்று இழிவு செய்தது எனக்கு வருத்தம் அளித்தது.
இது நடந்து ஓரிரு மாதங்களின் பின்னர், “நிதர்சனத்தின்” ஓராண்டு நிறைவு விழாவை பரதன் நடத்தினார். நாவலர் வீதியிலிருந்த “நாவலர் மணிமண்டபத்தில்,” அந்நிகழ்ச்சி நடைபெற்றது. யாழில் அப்போது இருந்த கல்வியாளர்கள் அனைவரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அந் நிகழ்வில், அவ்வாண்டு முழுவதும் “நிதர்சனத்தில்” ஒளிபரப்பாகிய முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வந்தவர்களுக்குக் காட்டப்பட்டது. அதில் நான் முன்சொன்ன பல்கலைக்கழக மாணவர் பற்றிய நிகழ்ச்சியும் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் வந்தவர்களிடம் அந்நிகழ்வுகள் பற்றி அபிப்பிராயம் சொல்லும்படி பரதன் கேட்டுக்கொண்டார்.
வந்திருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எல்லோரும் மௌனமாயிருக்க, நான் மட்டும் எழுந்து, “ஒரு சம்பவத்தை வைத்து மாணவர்களை நாய்கள் என்று சொல்வது பொருத்தமில்லை. அவர்கள் நன்மையும் செய்திருக்கிறார்கள்” என்றேன்.
அத்தோடு நிறுத்தாமல் பரதன் சங்கடப்படும்படியான ஓர் விடயத்தையும் அங்கு எடுத்துச் சொன்னேன். “இன்று கூட நீங்கள் எங்களுக்கு மதிய உணவு தந்தீர்கள். இப்போது நாமெல்லாம் கைகழுவிய இடத்திற்கு நீங்கள் சென்று பாருங்கள். அங்கும் உணவுகள் கொட்டப்பட்டு நாய்கள் அதனைத் தின்றபடி இருப்பதைக் காணலாம். இதையும் தேசப்பற்றின்மை என்று நாம் சொல்ல முடியுமா? இது எங்கும் நடக்கும் ஒரு விடயம் தான். இதைப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல” என்றேன்.
எனக்கும், பரதனுக்குமான சிறு முரண்பாட்டுடன் அன்றைய கூட்டம் முடிந்தது. அன்றிரவு புதுவையை மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு வைமன் றோட்டில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு பரதன் வந்தார். வெளியில் வந்த என்னிடம், “இன்று உங்களது பேச்சு நன்றாக இருந்தது” என்றார். அவரது முகபாவத்தை வைத்து, அவர் கிண்டலாய்ப் பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இருவருக்கும் வாக்குவாதம் விளைந்தது. முடிவில் நான் கோபத்தோடு, “எம்மைக் கருத்துச்சொல்லும்படி கேட்டுவிட்டு, உங்களைச் சந்தோஷப்படுத்த நாங்கள் பேசவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்! அதை என்னால் செய்யமுடியாது.” என அவரிடம் கடுமையாய்ச் சொன்னேன். புதுவை ஒரு ஓரமாய்த் தள்ளி நின்றார்.
நான் தனக்குப் பணியாததைக் கண்ட பரதன், மோட்டார் சைக்கிளை வேண்டுமென்றே பலதரம் உறுமச்செய்து தனது கோபத்தைக் காட்டிவிட்டு வேகமாய் வெளியேறினார். அப்போது இயக்கம் எங்களோடு முரண்பட்டிருக்கவில்லை.
(தொடரும்…)