எறிகணை 42
#கேள்வி :
இந்தியாவில் எழுச்சி பெற்று வரும் “கொக்ரோச்” ஜனதா கட்சியினர் பற்றி கேள்விப்பட்டீர்களா?
#பதில் :
“கரப்பான்பூச்சி மக்கள் கட்சி” (Cockroach Janata Party) என்பது, முன்னர் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றிய, “அபிஜித் தீப்கே” என்பவரால் 16 மே 2026 அன்று நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசியல் நையாண்டி இயக்கமாகும். இவர் ஒரு இணையவழி இயக்கத்தின் நிறுவனர் ஆவார்.
இளைஞர்களையும் கரப்பான் பூச்சிகளையும் தொடர்புபடுத்தி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற சமூக இயக்கம் உருவாக்கப்பட்டு அது பெரும் விவாதப் பொருளாக மாறி வைரலாகியது.
இணையத்தளத்தில் இன்று 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த அமைப்பைப் பின் தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, இக்கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த இணையத்தளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனராம்.
மேற்படி இயக்கம், வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள் போன்ற இந்திய இளைஞர்களின் ஆழமான விரக்திகளை வெளிப்படுத்துகிறது. இது சமூக ஊடகத் தலைமுறையின் புதிய அரசியல் மொழியாக மாறியுள்ளது.
இந்த “கொக்ரோச் இயக்கம்”, வெறுமனே ஒரு கோரிக்கைக்காக மட்டும் உருவானது அல்ல. இது இந்திய இளைஞர்கள் இன்று எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளின் கூட்டு வெளிப்பாடாக மாறியுள்ளது.
மேற்படி இயக்கத்தின் அழுத்தத்தால், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
அண்மையில் “நீட்” தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், “நீட்” முறைகேடுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்திய, இந்த இயக்கத்தின் மாணவர் போராட்டம் பெருமளவில் பரவி மத்திய கல்வி அமைச்சரை இராஜினாமா செய்ய வைத்திருக்கிறது.
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல இவ்வியக்கத்தினர் முயன்றபோது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல்கள் நடைபெற்றன.
ஆரம்பத்தில் இவ் இயக்கத்தை விளையாட்டாகக் கருதி பொருட்படுத்தாத மத்திய அரசு, இப்பொழுது அதன் வீரியமான எழுச்சி கண்டு, சற்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கத்தின் போராட்டங்களுக்குப் பின்னால், எதிரி நாடுகளின் கைகள் இருப்பதாகவும் ஒரு கருத்து வெளியிடப்படுகிறது. இந்த இயக்கத்தை இந்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பதனை அறியப் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
#கேள்வி :
தாங்கள் வெளியிட்டுவரும் நேர்காணலில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான தொடர்புகள் பற்றி விரிவாக எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். அதை வைத்து சிலர், நீங்கள் வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு வர விரும்பியே, இந்த நேர்காணலை எழுதி வருவதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அது உண்மையா?
#பதில் :
புலி புல்லைத் தின்றாலும் தின்னலாம். சிலவேளை சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம். தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் சிலவேளை ஒற்றுமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். அர்ச்சுனா எம்.பி. மற்றவர்களை மதித்து நடக்கத் தொடங்கினாலும் தொடங்கலாம். அமெரிக்க, ஈரான் யுத்தம் நின்றாலும் நின்றுவிடலாம். பெரியவெள்ளி குண்டுவெடிப்புச் சூத்திரதாரிகள், கண்டுபிடிக்கப்பட்டாலும் கண்டுபிடிக்கப்படலாம். நான் அரசியலுக்குள் நுழைவது மட்டும் ஒருக்காலும் நடக்கப் போவதில்லை. அஞ்சாதீர்கள்.
#கேள்வி :
யோக முயற்சி பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.
#பதில் :
அதுபற்றி அனுபவரீதியாக எனக்கு அதிகம் ஒன்றும் தெரியாது. அறிவு ரீதியாக, கொஞ்ச விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். அதுபற்றி வேண்டுமானால் சொல்லுகிறேன்.
சைவசமயம் இறைவழிபாட்டை சரியை, கிரயை, யோகம், ஞானம் என நான்கு கூறுகளாகப் பிரித்துச் சொல்கிறது. அவற்றுள் சரியை என்பது புறவழிபாடு, கிரியை என்பது அகப்புற வழிபாடு, யோகம் என்பது அகவழிபாடு, ஞானம் என்பது இறையுடன் இரண்டறக் கலத்தல்.
இதில் யோக முயற்சியை எட்டுப் படிநிலைகளாக வகுத்துள்ளனர். அது “அட்டாங்க யோகம்” எனப்படுகிறது. இந்த அட்டாங்க யோகம் பற்றி, “பதஞ்சலி முனிவர்” என்பவர் விரிவாக எழுதியிருக்கிறார். அந்நூலுக்குப் “பதஞ்சலி யோக சூத்திரம்” என்று பெயர்.
இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிராத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவையே யோகப் பாதையின் எட்டு அங்கங்களாகும். இவற்றுள்,
• “இயமம்” என்பது தீயபழக்கங்களை ஒழித்தல்.
• “நியமம்” என்பது நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தல்.
• “ஆசனம்” என்பது யோகத்திற்கு வாய்ப்பான இருக்கைகளைப் பழகுதல்.
• “பிரணாயாமம்” என்பது மூச்சினைக் கட்டுப்படுத்தப் பழக்குதல்
இந்த நான்கும் யோகத்தின் ஆரம்பப் படிநிலைகளாகும். அடுத்து,
• “பிரத்தியாகாரம்” என்பது மனதில் எழும் தீய எண்ணத்தை நல்ல எண்ணத்தால் மாற்றுதல்
• “தாரணை” என்பது மனதில் தோன்றும் பல நல்ல எண்ணங்களில் ஒன்றில் மட்டும் மனம் பதித்துப் பழகுதல்.
• “தியானம்” என்பது அந்த ஒரு எண்ணத்தில் மனதை நீடித்திருக்கப் பழக்குதல்.
• “சமாதி” என்பது விருப்பு வெறுப்பற்ற ஆன்மாவின் ஆதிநிலையுடன் தம்மைச் சமப்படுத்திக் கொள்ளுதல்.
இவையே யோகத்தின் முக்கிய படிநிலைகளாகும். யோகம் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன். மேலும் இது பற்றிய விபரங்கள் வேண்டுமானால், யாரும் அனுபவசாலிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்!
#கேள்வி :
தீமைக்கா நன்மைக்கா வலிமை அதிகம்?
#பதில் :
உலக நடப்புக்களை வைத்துத் தீமைக்குத் தான் வலிமை அதிகம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு! தீமைக்கு வலிமை அதிகம் என்பதாய்த் தெரிவது வெறும் கற்பனையே.
நன்மை எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், இயற்கை எப்போதும் அதனைக் காத்து நிற்கும். அதுபோலவே தீமை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், இயற்கை ஏதோ வகையில் அதனை வீழச் செய்யும்.
நமது இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்துகின்றன. சூரபத்மன், இரணியன், இராவணன் போன்ற தீயவர்கள் எல்லாம், ஆரம்பத்தில் வலிமை பெற்றவர்களாகத் தோற்றமளித்தார்கள். ஆனால் இறுதியில் வீழ்ந்து போனார்கள். அதற்குக் காரணம் இயற்கையின் ஆற்றலே.
இந்தச் செய்திக்கு அண்மைக் கால உதாரணமாய்ப் பலரைச் சொல்லலாம். குறிப்பாய்ச் சொல்லவேண்டுமானால் “ஹிட்லரை” தனித்து எடுத்துக் காட்டலாம்.
நன்மை தோற்பதுபோலிருந்து வெல்லும். தீமை வெல்வதுபோல் இருந்து தோற்கும். இதனைத்தான் நம் பாரதி “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்” என்று கூறினார்.
ஆகவே என்ன சோதனை வந்தாலும், வெற்றி உறுதி எனும் நம்பிக்கையோடு அஞ்சாமல் நன்மையான வழியில் நடையில முயலுங்கள்.
#கேள்வி :
நீங்களும் அநாதை இல்லங்களை நடத்த முன்வரலாமே?
#பதில் :
என்னால் முடிந்தவற்றைத்தான் நான் செய்யமுடியும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக என்னால் முடியாத காரியத்தை ஒருநாளும் நான் செய்யத் துணியமாட்டேன். அங்ஙனம் செய்தால், புலியைப் பார்த்து பூனை தன்மேல் கோடு போட்டுக் கொண்டதாய்த்தான் அது முடியும்.
ஒரு வீட்டுப்பிள்ளைகளை, நல்லபடி ஒன்றாக வளர்ப்பதுவே கடினமான செயலாக இருக்கிறது. பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்தும் வரக்கூடிய பிள்ளைகளை ஒன்றாக்கி நல்லபடி வளர்த்தெடுப்பது என்பது இரும்புக்கடலையைத் தின்கின்ற வேலையாகத்தான் இருக்கும்.
இன்று பலர் சமூகத்தில் புகழ்தேடுவதற்காக, அநாதை இல்லங்களை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகையவர்கள் பணம் இருப்பதால் இல்லங்களை அமைத்துவிட்டு, அதை நிரப்ப அநாதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அநாதைகளை வைத்துப் புகழ்தேட நினைப்பது மாபெரும் தவறு என்பது என் முடிவு.
வசதி குறைந்த குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளை அவரவர் வீடுகளிலேயே வளரச்செய்வதுதான் நல்லது என நான் நினைக்கிறேன். கஷ்டமோ, நஷ்டமோ பிள்ளைகள் தமது குடும்பத்தாருடன் சேர்ந்து அவற்றை அனுபவித்துப் பழகவேண்டும்.
கூடுதலோ, குறைவோ உணவு, உடை, உறையுள் என்பவற்றைப் பிள்ளைகள் தம் குடும்பத்தாருடன் சேர்ந்தே அனுபவிக்கவேண்டும். அத்தகைய பிள்ளைகளுக்கு உதவ விரும்பினால் நம்மாலான உதவிகளை அக் குடும்பத்திற்குப் பொதுவாகச் செய்வதுதான் நல்லது.
உறவேதும் இல்லாத பிள்ளைகளாய் இருந்தால், அவர்களை ஒவ்வொரு குடும்பத்தார் தனித்தனிப் பொறுப்பேற்று வளர்க்க முன்வருவதுதான் நல்லது. வேறுபட்ட இயல்புடைய பிள்ளைகளை ஒன்றாக வைத்து வளர்க்க முற்பட்டால், அதனால் பல தீமைகள் விளைய வாய்ப்புள்ளது.
#கேள்வி :
இன்றைய பெண்களின் முன்னேற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
#பதில் :
பெண்கள் வெளியில் சென்றால் அவர்களின் ஒழுக்கம் கெட வாய்ப்புண்டு எனக் கருதி பழைய காலத்தில் அவர்களை வெளியில் விடாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துப் பாதுகாக்கச் சிலர் நினைத்தார்கள். அந்த நினைப்புத் தவறானது.
எல்லாச் சமுதாயங்களிலும் நன்மையும், தீமையும் கலந்துதான் இருக்கிறது. அதனை அறிந்த சிலர், பெண்கள் சமுதாயத்திற்குள் இயங்கத் தலைப்பட்டால் கெட்டுப்போவார்கள் எனக்கருதி, அவர்களை இயங்கவிடாமல் தடுக்க முற்பட்டனர்.
பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைத்து, ஒழுக்கம் பேணச்செய்ய நினைப்பதைப் போல முட்டாள் தனம் வேறு இருக்கமுடியாது. பிழைகளை ரசிக்காத, விரும்பாத, தெளிவான மனநிலையை உண்டாக்குவதும், நன்மையின்பால் விருப்பத்தை உண்டாக்குவதும்தான் ஒரு பெண்ணை ஒழுக்கமாக இருக்கச் செய்ய சுலபமான வழியாகும்.
அதனால்த்தான் திருவள்ளுவர் பெண்களின் ஒழுக்கத்தைக் காக்க அவர்களை சிறைப்படுத்திப் பிரயோசனமில்லை என்கிறார். பெண்களின் நிறைவே அவர்களுக்கான சிறந்த பாதுகாப்பு என்பதே அவரது கருத்தாகும். (சிறை காக்கும் காப்பு எவன் செய்யும். மகளிர் நிறை காக்கும் காப்பே தலை) இந்த உண்மையை உணர்ந்துதான் பாரதியும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தான்.
இன்றைய பெண்களில் சிலர் தமது தரக்குறைவான நடவடிக்கைகளால், பெண்களுக்கு விடுதலை கிடைத்தது தவறோ? என எண்ண வைக்கின்றனர். இத்தகையவர்கள் குடும்பப்பராமரிப்பு, பிள்ளைகள் வளர்ப்பு, உறவுபேணல், பண்பாடு, கலாசார உறுதிப்பாடு, ஒழுக்க வரையறை என்பவற்றை வேண்டாத விடயங்களாய்க் கருதி இயங்கத் தலைப்படுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் உடைந்து போகின்றன.
தமிழர்களாகிய நமக்கென்று சில அடிப்படை வாழ்வு முறைகள் இருக்கின்றன. அதற்குள் நின்றே நாம் விடுதலையை அனுபவிக்கவேண்டும். கட்டுப்பாடு எதுவும் இல்லாத சுதந்திரம் என்ற ஒன்று இருக்கமுடியாது. தீய கட்டுப்பாடுகளை உடைக்கத் தலைப்பட்டு, பின்னர் நல்ல கட்டுப்பாடுகளையும் உடைக்க முயன்றால் அது நம் சமுதாயத்தைச் சீரழித்துவிடும்.
பாரதியார் சொன்னதுபோல, பெண்கள், “காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாண்புறச் செய்து வாழவேண்டும்.” இதனை அறிந்து நடந்தால்த்தான் பெண்கள் உண்மையில் முன்னேற்றம் அடைந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.