பேட்டி பகுதி 3

பேட்டி பகுதி 3
மற்றவை 10 Jul 2026

கேள்வி            :-          யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் மட்டும், நீங்கள் அதிகம் அரசியல் பேசவில்லையே. அதற்குப் பயம் தான் காரணமா? அக் காலத்தில் அரசியலாளர்களுடனான உங்களது தொடர்புகள் பற்றிச் சொல்லுங்களேன்.

பதில்   :-          பேசவில்லை என்று யார் சொன்னது? எந்த நேரத்திலும், எவராலும் உயிராபத்து நேரலாம் என்ற போர்க்காலச் சூழ்நிலையிற்கூட, எங்களது கருத்துகளை நாங்கள் சொல்லத் தவறியதில்லை. அக்காலத்திலும் எங்களது நிலைப்பாட்டினை நாம் விட்டுக் கொடுக்காமல் உறுதியாகத்தான் நின்றோம். அப்போதும் எங்கள் தனித்துவத்தை இழந்துவிடாமல் சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லவேண்டியவற்றைச் சொல்லிக்கொண்டேதான் இருந்தோம்.

                                அதுபற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லவேண்டும். முதலில் எங்களது இளமைக்காலத்தில் வலிமையோடு இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்ட விபரங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

                                70களில் நடந்த விடயம் இது. அப்போது கம்பன்கழகத்தை நாம் ஆரம்பித்திருக்கவில்லை. யாழ்.இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். அக்காலத்தில்த்தான் தனி ஈழம் பற்றிய கருத்துக்கள் முளைவிடத் தொடங்கியிருந்தன.

                                தமிழரசுக்கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியுமாய் பிரிந்து நின்று இயங்கிய கட்சிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து தனிஈழக் கொள்கையை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டன. அந்தத் தேர்தலின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, பின்னாளில் புலிகள் இயக்கத்திற்கு இருந்த அளவான மிகப்பெரிய மக்கள் ஆதரவு இருந்தது.

                                அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ் முற்றவெளியில் ஓர் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். அக் கூட்டத்தில் பேசுவதற்காக, பெரிய கல்லூரிகளில் இருந்து மாணவர்களை அழைத்திருந்தார்கள்.

                                மாணவர்கள் மேடையில் எதனை வலியுறுத்தவேண்டும் என்பதைச் சொல்வதற்காக, அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேல் யோகேஸ்வரன் வீட்டில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு இந்துக் கல்லூரியின் சார்பாக நானும் சென்றிருந்தேன்.

                                அங்கு, “தமிழீழத்தைப்பெற ஆயுதப்போராட்டமே வழி” என்று பேசும்படி, எம்மை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

                                எனக்கென்னவோ, தாங்கள் மேடையில் சாத்வீகம் பேசிக்கொண்டு எம்மை ஆயுதப் போராட்டத்தை ஆதரித்துப் பேசச் சொன்ன அவர்களில் நம்பிக்கை வரவில்லை. அதனால் அக் கூட்டத்தைவிட்டு நான் கிளம்பி வந்துவிட்டேன். 

                                மற்றொருமுறை, என்னுடைய குருநாதர் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்கள் எமது கம்பன்விழாவிற்கு வந்தபோது, அவரது பேச்சைக் கேட்கவென, பெரும் மக்கள் கூட்டம் திரண்டது. அதுபற்றிக் கேள்விப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.க்களும் அங்கு வருகை தந்தனர்.

                                அப்போது எதிர்க்கட்சித் தலைவராகியிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும், தனது துணைவியார் மங்கையற்கரசி அவர்களுடன் எமது விழாவுக்கு வருகை தந்தார்.

                                அவர்களது ஆதரவாளர்கள், அமிர்தலிங்கம் தம்பதியினரை மேடையில் ஏற்ற வேண்டும் எனக்கேட்டு எம்மைக் கட்டாயப்படுத்தினர். ஆனால் நிகழ்ச்சியில் இல்லாத அவர்களை, மேடையேற்ற முடியாது என நாங்கள் மறுத்துவிட்டோம்.

                                நாம் அங்ஙனம் செய்தும், அதைப் பொருட்படுத்தாது அமிர்தலிங்கம் தம்பதியினர் மறுநாளும் அவ்விழாவிற்கு வந்து, சபையினரோடு அமர்ந்திருந்து தமது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.

                                அதுபோலவே, என் குருநாதர் அடுத்தமுறை வந்திருந்தபோதும் ஓர் சம்பவம் நடந்தது. ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த தமிழ்நாட்டுத் தலைவரான பழ.நெடுமாறன் அவர்கள் அப்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

                                அவரை எங்களது குருநாதருடைய பேச்சின் இடையில் விழாவில் பேசவிடவேண்டும் எனக் கேட்டு, சிலர் எமக்கு அழுத்தம் தந்தார்கள். “இது இலக்கிய மேடை இங்கு அவர்களை அரசியல் பேச விடமுடியாது” எனக்கூறி, அவர்களது கோரிக்கையை நாம் நிராகரித்தோம்.

                                எங்களது குருநாதரின் மூன்றாவது பயணத்திலும் நாம் இத்தகைய ஒரு பிரச்சினையைச் சந்திக்க வேண்டி வந்தது. அம்முறை, நாம் கொழும்பிலும் ஒரு கம்பன்விழாவை நடத்தினோம். இந்த விழாவிற்கு அப்போதைய இந்து கலாசார அமைச்சர் செல்லையா இராஜதுரை அவர்களை அழைத்திருந்தோம்.

                                அப்போது அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியினரோடு ஏற்பட்ட முரண்பாட்டால், அக்கட்சியிலிருந்து விலகி, அரசோடு இணைந்து, அமைச்சராகி இருந்தார். கூட்டணிக்கு அக்காலத்தில் இருந்த பெரிய ஆதரவு, அவரைத் துரோகியாய்ப் பதிவாக்கியிருந்த காலமது.

                                அதனால் இராஜதுரை அவர்களை விழாவுக்கு அழைப்பது பற்றிப் பல விமர்சனங்கள் எழுந்தன. அதுபற்றிக் கவலைப்படாத நாங்கள், குறித்த நேரத்தில் விழாவுக்கு வரவேண்டும் என்றும், மேடையில் அரசியல் பேசக்கூடாதென்றும் நிபந்தனை விதித்து  அவரை விழாவுக்கு அழைத்தோம். அவரும் எமது நிபந்தனைகளுக்கு உடன்பட்டு விழாவுக்கு வரச்சம்மதித்தார்.

                                ஆனால் நிகழ்ச்சி நடந்த அன்று, அவர் விழாவிற்கு வரத் தாமதமானது. “அமைச்சர் வரும்வரை காத்திருங்கள்!” எனப்பலர் தடுத்தும், அதனை ஏற்காது அவர் வராமலேயே நாம் விழாவைத் தொடங்கினோம்.

                                தாமதமாக வந்த அமைச்சர் எம்மிடம் மன்னிப்புக்கோரி, விழாவில் கலந்து கொண்டதோடு, அன்று மிகநாகரிகமான ஒரு இலக்கிய உரையை ஆற்றிச் சென்றார். 

                                அவ்விழாவின் போது, எங்கள் குருநாதரின் பேச்சினைக் கேட்டு மயங்கிப் போன அமைச்சர் இராஜதுரை அவர்கள், அந்த விழாவின் நிறைவுநாளன்று, எங்கள் குருநாதருக்கும், கழகத்தாருக்குமாக, ‘சாந்திவிஹார் ஹோட்டலில்’ ஓர் இரவு விருந்தளித்தார்.

                                அவர் அவ் விருந்தில் பேசும் போது, அடுத்த ஒரிரு நாட்களில் தான் மட்டக்களப்பில் திறக்க இருந்த “விபுலானந்தர் இசைக்கல்லூரி” திறப்புவிழாவிற்கு பேராசிரியர் இராதாகிருஷ்ணன் ஐயாவை அழைத்து வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

                                அன்று நான் பதிலுரையை வழங்குகையில், அவர் சொன்ன அந்த நாளில் யாழ்ப்பாணத்தில் நாம் விழா வைத்திருந்தபடியால், ஐயாவை அங்கு அழைத்துவர முடியாதெனச் சொல்லி, அவர் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டேன்.

                                அந்நிகழ்வு முடிந்ததும், எங்களது ஆசிரியரான வித்வான் ஆறுமுகம் அவர்கள், “எடேய்! அமைச்சர் கேட்டும் நீங்கள் மறுத்துப் போட்டீங்கள். அவர் கோபிக்கப்போறார்.” என்று சொல்லிப் பயந்தது இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

                                மற்றுமொரு நிகழ்வு பற்றியும் சொல்கிறேன். அக் காலத்தில் தீவுப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள், ஆண்டுக்கொரு ஊரைத் தேர்ந்தெடுத்து திருவள்ளுவர் விழாக்களை நடத்தி வந்தார்.

                                ஓராண்டு அந்த விழா நல்லூர்த் தொகுதியில் நடத்தப்படவிருந்தது. அப்போது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆலாலசுந்தரம் அவர்கள் அந்த விழாவை நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தார்.

                                அவர் அந்த விழாவை நடத்தித்தரும் பொறுப்பினைத் தமிழறிஞரான “சொக்கன்” அவர்களிடம் வழங்கியிருந்தார். “சொக்கன்” அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எங்களை அதிகம் பிடிக்காது. ஆனாலும் அதை அவர் வெளிக்காட்டாமல் நடந்து வருவார். அப்போது நாம் கம்பன்விழாக்களை நடத்தத் தொடங்கிவிட்டோம். 

                                நாம் விழா நடத்தும் விதத்தைக் கண்டிருந்த “சொக்கன்” அவர்கள், என்னையும், என் நண்பர் குமாரதாசனையும் அப்பணியில் இணைத்துக் கொள்ள விரும்பினார். 

                                ஒருநாள் அந்த விழாவை நடத்துவது பற்றி ஆராய, ஆலாலசுந்தரம் எம்.பி. வீட்டில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. எங்களையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். நாம் அங்கு சென்றபோது, எம்.பி. வீட்டில் இருந்த ஒரு வரவேற்பறையில் ஒரே ஒரு கதிரை மட்டும் போடப்பட்டிருந்தது. அதில் ஆலாலசுந்தரம் அவர்கள் அமர்ந்திருந்தார்.

                                அறிஞர் “சொக்கன்” உட்பட மற்ற அனைவரையும் நிலத்தில் உட்கார வைத்திருந்தார்கள். “சொக்கன்” அவர்கள், ஆலாலசுந்தரத்தின் பதவி கருதி, தான் கீழே இருத்தி வைக்கப்பட்டிருந்தது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், சந்தோஷமாக அங்கு உட்கார்ந்திருந்தார்.

                                “சொக்கன்” அவர்கள் அக் கூட்டத்தின்போது, எம்.பி. யிடம், “இவங்கள் பெடியங்கள், நல்லா ஓடியாடி வேலை செய்வாங்கள். இவங்களையும் கொமிட்டியிலே சேர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.

                                எனக்கு அவர் ஆலாலசுந்தரத்தை மேலே இருத்தித் தான் கீழே இருந்ததும் பிடிக்கவில்லை. எங்களைப் பெடியள் என்றதும் பிடிக்கவில்லை. வேலை செய்வதற்காக மட்டும், எங்களைக் கொமிட்டியில் சேர்த்துக் கொள்வதாய்ச் சொன்னதும் பிடிக்கவில்லை.

                                அதனால், அந்த விழா முயற்சியில், எந்தவித உதவியும் செய்யாமல் நாம் ஒதுங்கிக் கொண்டோம். நாம் ஏன் ஒதுங்கிக் கொண்டோம் என்பதுகூட “சொக்கன்” அவர்களுக்குப் புரியவில்லை. எத்தனையோ பேரிடம் அவர் சொல்லி அனுப்பியும், நாம் அங்கு போக மறுத்துவிட்டோம்.

                                பிறகு, “சொக்கன்” அவர்கள், எங்களை வளர்த்த ஆசிரியரான சிவராமலிங்கம் மாஸ்டரிடம் போய், எங்களைக் குறைசொல்லிவிட்டு, “விழாவில் ஜெயராஜைப் பேசவாவது வரச் சொல்லுங்கள்” எனக் கேட்க, சிவராமலிங்கம் மாஸ்டரின் உத்தரவிற்குப் பணிந்து அவ் விழாவிற்குச் சென்று பேசினேன்.

                                இன்னொரு சம்பவம் பற்றியும் சொல்கிறேன். அப்போது யாழ்ப்பாணத்தின் மேயராக, இராஜா விஸ்வநாதன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். அவர் எனக்கு மாமா முறையானவர். எனது தந்தையின் கூடப்பிறந்த தங்கையைத்தான் அவர் திருமணம் செய்திருந்தார்.

                                அக்காலத்தில் யாழுக்கு விஜயம் செய்த அப்போதைய இலங்கையின் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள், தன் கட்சியில் இருந்து சுடப்பட்டு இறந்து போன, முன்னாள் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விரும்பினார்.

                                கூட்டணியின் சார்பில் மேயராகியிருந்த விஸ்வநாதன் அவர்கள், மாநகரசபையின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த நினைவிடத்திற்குச் செல்ல பிரதமருக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

                                எனக்கு அச் செயல் பிடிக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இறந்து போன ஒருவருக்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்த அந்தச் செயல் எனக்குப் பிழையாய்ப்பட, உறவினர் என்றும் பாராமல் மேயர் விஸ்வநாதனது அச் செயலைக் கண்டித்து அவருக்கு நீண்ட ஓர் கடிதத்தை நான் வரைந்து அனுப்பினேன்.

(அரசியல் அனுபவங்கள் தொடரும்)

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.