நேர்காணல் பகுதி 6
நாம் காத்திருந்த சிறிது நேரத்தின் பின்னர், திடீரென பாதுகாவலர்கள் சூழ புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். கலை, இலக்கியவாதிகளை அவர் சந்திக்க விரும்பியதாகவும், அதனால்த்தான் நாம் அழைத்து வரப்பட்டதாகவும் பின்னர் தெரிந்து கொண்டேன்.
சிறிது நேரம் அவர் எங்களுடன் பொதுவாக உரையாடினார். மிக மென்மையாக, சிரித்துச் சிரித்து வெகு இயல்பாய் அவர் எம்மோடு பேசியது ஆச்சரியத்தைத் தந்தது. தான் பேசிய பின்னர் அவர் எமது கருத்துக்களைக் கேட்க விரும்பினார். வந்தவர்களில் யாரும் எழுந்து பேசாமல் சிறிது நேரம் மௌனம் காத்தனர்.
ஒருவரும் எழுந்து கருத்துச் சொல்ல முன் வராததைப் பார்த்து விட்டு கவிஞர் வில்வரத்தினம் எழுந்து போராட்டம் பற்றியும், இயக்கங்கள் பற்றியும் நடுநிலையாய்ச் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். அதன் பின்னர் சங்கீதவித்வான் பொன். சுந்தரலிங்கம் எழுந்திருந்து தான் புதிதாகக் கட்டத் தொடங்கியிருந்த இளங்கலைஞர் மன்றக் கட்டிட வேலைகளுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
சிறுகதை, கவிதை, நாவல் எனப் பிரபாகரனும் தனது கருத்துக்களை அவ் உரையாடலில் பகிர்ந்து கொண்டார். பேச்சு, மரபிலக்கியங்கள் பற்றி வர நான் எழுந்திருந்து, “எங்களது கம்பன்கழகம் மரபிலக்கியத்தைப் போற்றி வருகிறது. முக்கியமாக கம்பராமாயணத்தை அடிப்படையாக வைத்து எமது இலக்கியப் பணிகளை நாம் செய்து வருகிறோம். போர்க்காலத்தில் இத்தகைய மரபிலக்கியங்களை வளர்ப்பது பற்றியும், உங்களுக்கு மரபிலக்கியத்திலுள்ள ஈடுபாடு பற்றியும், சொல்ல வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டேன்.
இலக்கிய முயற்சிகள் எதுவானாலும் அதனை வரவேற்பதாகச் சொன்ன அவர், சிறுவயதில் தான் மணி ஐயரின் இராமாயண, மகாபாரதப் பிரசங்கங்களை விரும்பிக் கேட்டதாய்ச் சொல்லி, பிறகு “தனக்கு இராமாயணத்தை விட மகாபாரதம் தான் அதிகம் பிடிக்கும் என்றும், பீஷ்மர் தான் தனக்குப் பிடித்த வீரர்” என்றும் சொன்னார்.
அவரது பதில் எனக்குச் சங்கடமாய் இருந்தது. நான் எழுந்து “ஒரே குடும்பத்தாருக்கு இடையில் நடந்த சண்டையில், அவர்களின் பிதாமகரான பீஷ்மர், இது சரி!, இது பிழை! என்று சொல்லி நடுநிலையாய் நின்று இளையவர்களை வழிப்படுத்தாமல், தானும் ஒரு அணியைச் சார்ந்து போராடி மடிந்தார். அவரை உயர்ந்தவர் என்று எப்படிப் போற்றலாம்?” எனத் துணிந்து கேட்டேன்.
அங்கிருந்தவர்கள் கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். நான் விவாதத்தை வளர்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் பேச்சு திசை திருப்பப்பட்டது. நான் கவனிக்கப்பட்டேன்.
கவிஞன் ஜெயசீலனுக்கு பிரபாகரனைக் கண்டதில் தலைகால் தெரியாத மகிழ்ச்சி. அங்கு நின்ற போராளிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி அவரோடு தானும் நின்று, என்னையும் நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அப்போதெல்லாம் தொலைபேசிக் கமெரா வரவில்லை. புகைப்படங்களை அங்கு நின்ற இயக்க இளைஞர்கள்தான் எடுத்தார்கள். நாம் எடுத்த அந்தப் படம், பாவம் கடைசி வரை ஜெயசீலனின் கைக்கு வந்து சேரவேயில்லை.
#கேள்வி :
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வேறெவருடனும் தொடர்புகள் ஏற்பட்டதா?
#பதில் :
புலிகள் இயக்க முக்கியஸ்தர்களின் சந்திப்பில் அடுத்ததாக, கிட்டுவுடனான தொடர்பு பற்றியும் சொல்லவேண்டும். அப்போது யாழில் புலிகளின் தளபதியாய் மிக வீரியமாய் கிட்டு இயங்கி வந்தார். மிகக் கடுமையாக யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் கிட்டுதான் இயக்கத்தைப் பிரதிநிதிப்படுத்தி ஆளுமையோடு இயங்கிக்கொண்டிருந்தார்.
துப்பாக்கியுடன் அவர் ஒரு “ஹீரோ” போல வலம் வருவார். இயக்கம் அவர் காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் முழுவீச்சுப் பெற்றது. அக் காலத்தில் பிரபாகரன் இந்தியாவில் இருந்தார். மாத்தையா வன்னிப் பிரதேசத்திற்குப் பொறுப்பாய் இருந்ததாய் ஞாபகம்.
ஏதோ ஒரு சண்டையில் புலிகளிடம் அகப்பட்ட இரண்டு சிங்கள இராணுவவீரர்களை மீட்பதற்காக அப்போது சந்திரிக்கா அம்மையாரும், அவரது கணவரான நடிகர் விஜயகுமாரதுங்க அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வந்து கிட்டுவின் இடத்தில் தங்கி, மிக நட்பாக அவரோடு பழகி அவ்வீரர்களை மீட்டுச் சென்றதை புலிகளின் “நிதர்சனம்” தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது.
அந்த நாட்களில்த்தான் நாங்கள் யாழ்ப்பாணக் கம்பன் கோட்டத்தைக் கட்ட ஆரம்பித்திருந்தோம். எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருந்தது. அப்போது எனது பிரசங்க வருமானமும் அதிகம் இருக்கவில்லை. மன ஊக்கத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து, நல்லை ஆதீனத்தில் சம்பிரதாயபூர்வமான ஒரு நிகழ்வினை நடத்திய பின், கம்பன் கோட்டத்திற்கான அத்திவாரத்தை நாம் இட்டோம்.
அந்நிகழ்விற்கு அப்போதைய யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விபரங்களும் எனது “உன்னைச் சரணடைந்தேன்” நூலில் விரிவாய்ப் பதிவாகியுள்ளன.
இங்கு நான் சொல்ல வந்தது வேறு விடயம் பற்றியது. நாம் கம்பன்கோட்டத்தைக் கட்ட நாம் சிரமப்படுவதை அறிந்து, எங்கள்மேல் மதிப்பும், அன்பும் வைத்திருந்த அப்போதைய யாழ். மாநகரசபை ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானம் அவர்கள், எங்கள் கம்பன்கோட்டத்தைக் கட்டுவதற்காக, மாநகரசபை ஊழியர் ஒவ்வொருவரின் சம்பளத்திலும் ஐம்பது ரூபா பணத்தினைப் பெற்று, ஒரு நிதி சேகரிப்பை நடத்தி இருந்தார்.
அதுபற்றிய செய்தியைப் பின்னர்தான் நாம் அறிந்து கொண்டோம். அப்போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய் அளவில் அப்பணம் சேர்ந்ததாய் ஞாபகம். அந்த நாட்களில் அது பெரிய தொகை. எங்களது மொத்தக் கட்டிடத்திற்கான “எஸ்ரிமேற்றே” அப்போது மூன்று இலட்சமாகத்தான் இருந்தது.
கம்பன்கழகத்திற்காகத் தங்களது சம்பளத்தில் பணம் எடுக்கப்பட்டதில் அங்கு வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனால் அங்கு ஒரு பிரச்சினை உருவாகியிருந்தது.
இது பற்றி ஏதோவிதத்தில் கேள்விப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம், சீ.வி.கே. சிவஞானம் அவர்களிடம் சென்று அப்பணத்தை அபகரித்துச் சென்றது.
நடந்த செய்தியை அறிந்த கிட்டு, ஆணையாளர் அவர்களிடம், “கழகத்தை எங்களது இலக்கிய அணியாய் அறிவிக்கச் சொல்லுங்கள்! அவர்களுக்கான பாதுகாப்பை நாங்கள் கொடுக்கிறோம்” எனச் சொல்லி அனுப்பினார். ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த ஒரு சந்தர்ப்பத்தில்த்தான் கிட்டுவுடனான தொடர்பு சீ.வி.கே. சிவஞானம் ஊடாக ஏற்பட்டது. ஆனால் அவரை நான் தனித்து ஒருபோதும் சந்திக்கவில்லை.
#கேள்வி :
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் உங்களுடனும், கழகத்துடனும் நெருக்கமாக இருந்தது பற்றி எல்லோருக்கும் தெரியும். பின்னாளில் உங்களுக்கும் அவருக்கும் ஏன் முரண்பாடு ஏற்பட்டது?
#பதில்
புலிகள் இயக்கத்துடனான தொடர்பு என்று பார்க்கையில் எங்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்தான். வழக்கமாக இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு அங்கு பெயர் மாற்றம் செய்வார்கள். “புதுவை” அவர்கள் இயக்கத்தில் சேர்ந்த பிறகும் கவிஞர் புதுவையாகவே அடையாளம் காணப்பட்டார். அது கவிஞராக அவர் பெற்றிருந்த தகுதியின் வெளிப்பாடென்றே கருதுகின்றேன்.
நாங்கள் நல்லூர்க் கம்பன்கோட்டத்தைக் கட்டத்தொடங்கிய போதுதான் “புதுவை” எங்களுடன் நெருக்கமானார். அதற்கு முன்பு ஓரிரு கவியரங்கங்களில் அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். அவ்வளவுதான்.
வெளிநாடு சென்று சிலகாலம் வேலை செய்துவிட்டு, நாடு திரும்பியிருந்த “புதுவை”, நாங்கள் கம்பன்கோட்டம் கட்டிக்கொண்டிருக்கும்போது வந்து எங்களோடு உரையாடி நட்பானார். எங்கள் முயற்சிகளில் அவருக்கு மதிப்புண்டானதால் “கம்பன் தமிழ்க் கோட்டத்திற்குக் கைகொடுப்போம்” என்று “மல்லிகை” சஞ்சிகையில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார்.
புதுவை இரத்தினதுரை அவர்கள் இயக்கத்தில் சேர்வதற்கு முன்பாக எங்களில் ஒருவராகத்தான் இருந்து வந்தார். சுவையான உரையாடல்கள் செய்வதில் அவருக்கு நிகர் அவரே! அவரது உரையாடல்களில் ஈடுபட்டு நானும் கழக இளைஞர்கள் சிலரும், அன்றாடம் சட்டநாதர் கோயிலடியில் இருந்த புதுவையின் வீட்டு முற்றத்தில் காலையிலேயே போய் அமர்ந்து விடுவோம்.
புதுவை தேர்ச்சிற்பங்கள் செய்வார். அவர் கீழே அமர்ந்திருந்து அதனைச் செய்து செய்து எங்களோடு பேசுவார். அரசியல், சமூகம், இலக்கியம், கவிதை எனப் பல விடயங்களையும் நாம் பேசுவோம். சிலநேரங்களில் நமக்குப் பிடிக்காத சில இலக்கியவாதிகள் பற்றி புதுவை, கோபப்பாணியில் நக்கலும், நையாண்டியுமாகப் பேச, அதனைக் கேட்டு நாமெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போம்.
அப்போது எங்களது கம்பன் கோட்டத்திற்காக, ஒரு பெரிய சித்திரவேலைப்பாடுடன் கூடிய வாசல் நிலையை கம்பன் கோட்டத்தில் வைத்து, புதுவை செய்துகொண்டிருந்தார்.
எங்களது கம்பன்விழாக் கவியரங்கில் முதல் முதலாய் புதுவை கவிதை பாடியதை அப்போது புலிகளின் கலைபண்பாட்டுத் துறைக்குப் பொறுப்பாளராய் இருந்த “மலரவன்” வந்து கேட்டான். புதுவையின் கவிதையில் மயங்கிப்போனான்.
அதன்பின் எங்களது கம்பன்கோட்டத்திற்கென நிலைவேலை செய்துகொண்டிருந்த புதுவையைத் தேடி அவன் தினமும் வரத்தொடங்கினான். புதுவையின் பேச்சு, அவனையும் மயக்கியது. பின்னர் அவன் இயக்கம் பற்றிப் பேசப்பேச, புதுவையும் அதில் ஈடுபட்டு, மெல்ல மெல்ல அவரும் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். இயக்கத்தில் சேர்ந்தகொண்ட பிறகும் புதுவைக்கும் எங்களுக்குமான நட்பு அப்படியே இருந்தது.
#கேள்வி :
மலவரனுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது?
(மிகுதி அடுத்த வாரத்தில்)