யாழின் - நிலவரம்! கலவரம்!

யாழின் - நிலவரம்! கலவரம்!
 





வக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.
கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில்,
கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.
பிடிப்பது என்ன பிடிப்பது?
கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?
கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.
பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,
அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.
 



ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என,
அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,
அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.
இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்று,
ஒரு பக்கம் கோரிக்கை வைத்துக்கொண்டு,
மறுபக்கம் அதிரடிப்படையை உதவிக்கு வருமாறு,
நாமாக அழைக்கும் அபாக்கிய நிலைமைக்கு வந்திருக்கிறோம்.
கல்வியில் கடைசி மாகாணமாய் வந்த சோர்வு தீர,
போதைப்பொருள் பாவனையில் முதலிடம் பிடிக்கும்,
முன்னேற்றத்தை எட்டிக்கொண்டிருக்கிறது வடபகுதி.
குழுச்சேர்ந்து, பகைவர்களை,
பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யும் துணிவுடன்,
நம் மாணவ இளைஞர்கள் உலா வருகிறார்கள்.
நினைக்க நெஞ்சு பதறுகிறது!



கல்வி, ஒழுக்கச் சிதைவுகளை விடுத்து,
பொருளாதாரம், திட்டமிடல் ஆகியவற்றிலேனும்,
முன்னேற்றம் காண்கிறோமா என்று பார்த்தால், அதுவும் இல்லை.
யாழ்ப்பாணத்திற்கு வர இருந்த குடிநீரை,
அதன் அவசியம் தெரிந்த பின்பும்,
ஏதேதோ சொல்லித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
வவுனியாவில் அமைய இருந்த,
இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான,
விவசாய மையத்தை அமைக்கும் திட்டமும்,
அரசு கேட்ட இடத்தை நம்மவர் அங்கீகரிக்க மறுத்து நிற்பதால்,
இன்று நம் கைநழுவிப் போய்விடும் நிலையில் இருக்கிறது.
வவுனியா மக்கள் தமக்கான வாய்ப்பை அமைச்சு மறுப்பதாய்ச் சொல்லி,
அதற்கு எதிராய்க் கொதித்துப் போராடுகின்றனர்.
இந்திய நிறுவனம் தரவிருந்த அறுபத்தையாயிரம் பொருத்து வீடுகளை
கிட்டத்தட்ட தடுத்துவிட்டார்கள்.
இவர்கள் வேண்டாம் என்ற பொருத்து வீடுகளைக்கோரி
தொண்ணூராயிரம் பேர் விண்ணப்பித்தனராம்.
தடுத்தவர்களின் நியாயம் சரியோ? பிழையோ? அது ஒருபக்கம் இருக்கட்டும்.
வீடின்றி இருப்போர்க்கு வீடுகளை இனி இவர்கள் எப்படிக் கொடுக்கப்போகிறார்கள்?
நம் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில்,
தனித்த, விரிவான திட்டங்கள் எவையும்,
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.
விவசாயத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை.
விவசாய அமைச்சு எதைத்தான் ‘புடுங்குகிறது’
என்ற கேள்விக்கு விடையாக,
ஏன் பிடுங்காமல் 'பார்த்தீனியம்' பிடுங்குகிறோம் என்கிறார்கள்,
அமைச்சைச் சேர்ந்தவர்கள்.
எப்படி நம் இனம் முன்னேறும்?



போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆகின்றன.
இரண்டாம் முறையாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள்,
இனப்பிரச்சினை மகுடியை ஊதி மக்களை மயக்கி,
பாராளுமன்ற இருக்கைகளில்,
ஆற அமர இருந்து அயர்ந்து தூங்குகின்றனர்.
இடையிடையே எழுந்து இந்த ஆண்டு பிரச்சினை தீருகிறது.
அடுத்த ஆண்டு பிரச்சினை தீருகிறது என்பதாய்,
அறிக்கை விடுப்பதோடும்,
வருடந்தோறும் முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடர் ஏற்றுவதோடும்,
அவர்களது கடமை முடிந்து போகிறது.
எங்களுக்கென்று மாகாணசபை அமைந்தால்,
ஆகாயத்தைத் தொடுவோம் என்று அரற்றியவர்கள்,
மாகாணசபை அமைந்து இரண்டு வருடங்களாகியும்,
ஏதும் இயற்ற முடியாமல் தம் இயலாமையை மறைக்க,
உணர்ச்சி அரசியல் பேசி மக்களை உசுப்பி நிற்கின்றனர்.



இவற்றை வைத்துத்தான்,
யாழ்ப்பாணத்தின் நிலவரம் உவக்கும் படியாக இல்லை என்று சொன்னேன்.
சிங்களவர்களுக்கெதிராகப் போராடப் போவதாய் சொல்லி வந்த நம்தலைவர்கள்,
தேசமட்டத்திலும், மாகாணமட்டத்திலும்,
இனப்பற்றில் தமக்கு நிகர் வேறெவரென? தர்க்கித்து,
தமக்குள்ளேயே போராடிப் பொழுது போக்குகின்றனர்.
தமிழ்மக்களும் நடந்ததையும் நடக்கப்போவதையும் மறந்து,
இவர்தம் சண்டைக்காட்சிகளுக்கு கைதட்டி கட்சி பிரிந்தபடி.
திரும்பத் திரும்ப எத்தனை தரம்தான் இதை எழுதுவது?
எழுதி எழுதி கை சலித்து விட்டது.
என்னாகப் போகிறது நம் இனம்?
தந்தை செல்வா சொன்னதுதான் பதிலா?



சாரதி தூங்கினால் வாகனம் தறிகெட்டு ஓடத்தானே செய்யும்.
நாம் உணர்ச்சிகளுக்கு ஆளாகி,
வாகனம் ஓட்டத் தெரியாதவர்களை சாரதிகளாக்கி விட்டோம்.
இன்று தமிழின வாகனம் கேட்பாரின்றி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
அது மோதிச் சிதைவதன் முன் அபயமளிக்க யாரும் வருவார்களா?



மேற்சொன்ன பிரச்சினைகளுள்,
இன்று உடனடியாய்த் தீர்க்க வேண்டிய பிரச்சினையாய்,
மாணவர்தம் ஒழுக்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
நீதிமன்றம் அதிரடிப்படையை அழைத்து,
கல்லூரிகளுக்குக் காவல் போடுங்கள் என்று சொல்லுமளவுக்கு,
பிரச்சினை முற்றியிருக்கிறது.
உடனடியாக இப்பிரச்சினைக்கு ஏதேனும் செய்யுங்கள் என்று,
பொலிஸ்மா அதிபருக்குக் கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதியதோடு,
ஓய்ந்துபோயிருந்த முதலமைச்சர்,
வழமை போலவே இன்று வெறும் வாய்ச்சவடாலாய்,
மாகாணத்திற்குப் பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள்.
உடனடியாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்டுகிறோம் என்று,
உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார்.
கொடுக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து,
அவர்கள் செயற்படும் லட்சணத்தைப் பார்த்த பின்பும்,
அவரது இப்பொய்யான வாய்ச்சவடாலைக் கேட்டு,
புளகாங்கிதம் அடைகின்றனர் ஒருசிலர்.
தமிழினம் உருப்பட்ட மாதிரித்தான்.



யாழ்ப்பாணத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு அடையாளங்களின்,
முதன்மை நிலையமாய் விளங்கிய யாழ் இந்துக் கல்லூரிக்கு,
தனித்த காவல் இடும்படி உயர் நீதிமன்ற நீதியரசர்,
இளஞ்செழியன் இட்ட உத்தரவு,
தலைநிமிர்ந்து நின்ற யாழ்இந்துக் கல்விச் சமூகத்தை தலைகவிழச் செய்திருக்கிறது.
அதைப்பற்றிக் கவலைப்படுவார் எவரையும் காணோம்.



இன்று யாழ் இந்து என்பது,
புலம்பெயர்ந்தோருக்குக் கொண்டாட்டக் குறியீடாய் மாறியிருக்கிறது.
புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பழைய மாணவர் சங்கங்கள் அமைத்து,
தத்தம் குதூகலக் கொண்டாட்டங்களுக்காய்,
இந்துத் தாயின் பெயரில் நிகழ்ச்சிகள் வைத்து,
தாம் கூடிக் கொண்டாடிய பின் வரும் எஞ்சிய பணத்தை,
இங்கு அனுப்பி தம் இனப்பற்றையும், கல்லூரிப்பற்றையும் காட்டிநிற்கிறார்கள் சிலர்.
பதவிகளுக்காய்ப் பறந்து திரியும் அவர்களுக்கு அது பொழுதுபோக்கு.
அண்மையில் யாழ் இந்து கனடா பழையமாணவர் சங்கம் நடத்திய நிகழ்வில்,
வெள்ளைக்காரப் பெண்கள் அரைகுறை உடையில் நடனவிருந்தளித்த காட்சி,
இணையத்தில் வந்து அனைவர்க்கும் அதிர்வு தந்தது.
பணம் அனுப்புதலோடு பழையமாணவர் சங்கங்களின் கடமைகள் முடிந்து போகின்றனவா?
கல்லூரியை வைத்து ஒருபக்கம் கொண்டாட்டம்.
கல்லூரிக்குள்ளோ பலபல திண்டாட்டம்.
இதுதான் இந்துவின் வளர்ச்சியா? பழைய மாணவனாய் மனம் பதறுகிறது.



இந்துக்கல்லூரியில் மட்டும்தான் என்றில்லை,
எந்தக் கல்லூரியிலும் இதுதான் நிலைமை.
மாணவர்கள் வருங்காலச் சமுதாயத்தின் குருத்துக்கள்.
குருத்துக்கள் கருகினால் இனப்பயிர் செழித்தல் எங்ஙனம்?
கேள்வி நம்மைப் பதற வைக்கிறது.
நேற்றுத்தான் யாழிலிருந்து ஒரு ஆசிரியர் என்னோடு பேசினார்.
போதைவஸ்துக்களை மாணவர்களுக்கு ‘ரொபி’ வடிவில் கொடுத்து,
அவர்களை அப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறதாம் ஒரு கூட்டம்.
எல்லாக்கல்லூரிகளிலும் இது நடப்பதாய்ச் சொல்லி,
உண்மை ஆசிரியரான அவர் கண்ணீர் வடித்தார்.



இப் போதை வஸ்துக்கள்,
எங்கிருந்து வருகின்றன?
யார் கொணர்கிறார்கள்?
விநியோகிப்பவர் எவர்?
வியாபாரம் மட்டும் தான் இவர்கள் நோக்கமா?
இல்லை, இனச்சரிவைத் திட்டமிடுகிறார்களா?
இக்குற்றத்தின் ஊற்று எவர் கையில்?
மேற் கேள்விகளுக்கு பதறியடித்துப் பதில் காணவேண்டியவர்கள்,
அரசியல் பேசி அலட்சியம் செய்கிறார்கள்.
தொலையப் போகிறது நம்இனம்!
தலைவர்கள் செய்யவேண்டிய கடமையை,
நீதியரசர்கள் தனிமனிதர்களாய் நின்று செய்யப் போராடுகிறார்கள்.



இதுவரை இப்பிரச்சினைகள் பற்றி தீர ஆராய்ந்து விடைகாண,
நம் தலைவர்களோ கல்வியாளர்களோ அவசரப்பட்டதாய்த் தெரியவில்லை.
தலைவர்கள் வழமை போலவே அரசையும், இராணுவத்தினையும் காராணம் காட்டி,
அறிக்கை விடுவதோடு தம் வேலையை முடித்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தலைமைகளை நெறிசெய்யப்போவதாய்ப் புறப்பட்ட,
தமிழ்மக்கள் பேரவையினரிடமிருந்தும் எவ்வித குரலையும் இதுவரையும் காணோம்.



யார்தான் இப்பிரச்சினைக்கு விடைகாண்பது?
இப் பிரச்சினைக்கான மூலவேர்களை அறுக்கும் வேலையை,
சட்டம் பார்த்துக் கொள்ளட்டும்.
ஆனால் அதற்குள் எத்தனை இளம் குருத்துக்கள் கருகப்போகின்றனவோ,
கருகாமல் தடுக்கவேண்டியது நம் கடமை.
எங்ஙனம் தடுப்பது?



முதலில் பிரச்சினையின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதுதான் முக்கியம்.
நோய் தொடங்கிய இடம் தெரியாமல் வைத்தியம் செய்வது எப்படி?
நோய்க்கான ‘மூலத்தை’ பின்வருமாறு வகுக்கலாம்போல் தெரிகிறது.
முப்பதாண்டு கால அடக்குமுறையின் பிரதிபலிப்பான இளையோரின் எதிர் எழுச்சி.
இலட்சியமற்ற, பொருளையே நோக்கமாகக் கொண்ட கல்வி முறை.
இளையோர்க்குப் புலம்பெயர் தமிழர்களின் போக வாழ்வு தரும் ஏக்கம்.
அறத்தைத் துச்சமென மதிக்க வழிகாட்டும் மூத்த தலைமுறை.
தொண்டு மனப்பான்மையும், மாணவர்மீதான கருணையும், ஆழ்ந்தஅறிவும் இல்லாத ஆசிரியத்துவம்.
வலிமைகுன்றிய, ஆளுமையற்ற கல்விச்சிந்தனை இல்லாத கல்லூரித்தலைவர்கள்.
இளையோர்க்கு கடவுள் வழிபாட்டை இளமை தொட்டு இயல்பாக்காத வாழ்க்கைமுறை.
ஊடகங்கள் ஊடாகவும், சினிமாக்கள் ஊடாகவும், இளையோர் மனதில் பதிக்கப்படும் வன்முறை உணர்வு.
சமூகத்தோடு இணைந்து வாழ நேரமில்லா கல்வியூட்டல் முறை.

இவைதாம் நம் யாழ் சமூகத்தின்
இளையோர்தம் ஒழுக்கயீனங்களின் வித்துக்கள்.
முதலில் இவ்விஷவித்துக்களை நீக்க வழிசெய்யவேண்டும்.
காரணங்களை நீக்காமல் காரியங்களைக் கண்டு பதறுவது அறிவுடைமையாகாது.



கடந்த முப்பதாண்டுகளாக,
கருவில் தொடங்கி, காலமெல்லாம் நம் இளையோர்தம் அனுபவங்கள்,
வன்முறைகளைச் சுற்றிச் சுற்றியே வந்தன.
வன்முறை வன்முறை, வன்முறை என,
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்த
கூக்குரல்களைக் கேட்டுத்தான்,
இன்றைய இளையதலைமுறை வளர்ந்தது.
யுத்தம் தொடங்கிய காலந்தொட்டு,
யாழ்ப்பாணம் திறந்த வெளிச் சிறைச்சாலையாய்த்தான் இருந்தது.
அதற்குள் நேர்மையும், நீதியும், இரக்கமும் அற்ற
அரசின் தாக்குதல்கள் ஒருபுறம்.
தமக்கு அடங்கி நடக்கும்படி அழுத்தம் தந்த
இயக்கங்களின் நடவடிக்கைகள் மறுபுறம்.
இவற்றால் அன்றாடம் நிலையாமையை உணர்ந்து வளர்ந்த நம் இளையவர்களுக்கு,
உலக இளையோரின் போக வாழ்வு வெறும் கனவுச் சுகமாகவே இருந்துவந்தது.
இவையெல்லாம் ஒன்று சேர்ந்து நம் இளையோர் மனதில்,
ஆழ்ந்த அழுத்தத்தை உண்டாக்கிவிட்டன.
அழுத்தப்பட்ட ஒருபொருள் விடப்படும்போது,
இயற்கையை மீறி எழும்பித்துள்ளுவது இயல்புதானே.
அதைத்தான் இன்றைய இளையோரின் ஒழுக்கக்கேட்டின்,
முதற் காரணமாய்க் கருதவேண்டியிருக்கிறது.



அழுத்தங்களால் சமநிலை குழம்பி நிற்கும் இளையோரை,
மீட்டெடுப்பது எப்படி?
ஒரேவழி, அவர்களைப் பழைய வாழ்வை மறக்கும்படி செய்வதுதான்.
அதனைச் சாதிப்பது எங்கனம்?
திரும்பத்திரும்ப பழைய அழிவுகளைச் சொல்லிக்கொண்டிராமல்,
இலட்சியங் கொண்ட புதிய வாழ்வை நோக்கி
அவர்கள் மனதைத் திருப்பவேண்டும்.
வெற்றிகளின் சுவையைத் தொட்டுக் காட்டினால்,
தோல்விகளின் சுமையை இளையோர் மறப்பார்கள்.
இந்தப் பொறுப்பு நம் தலைவர்களுக்கு உரியது.
நம் தலைவர்கள் இதைச் செய்வார்களா?
எவன் செத்தால் எமக்கென்ன எனும் நிலையில்தான் அவர்கள்.
பழைய வாழ்வை நினைப்பூட்டி நினைப்பூட்டியே,
தமது பதவித்தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அவர்களால், இவை ஏதும் நடக்குமென்று தெரியவில்லை.
சரி அவர்களை விடுவோம்.
வேறெவர்தான் இதனைச் சாதிப்பது?



அரசியல் தலைமைகள் கைவிட்டால்,
அடுத்து இளையோரைக் காக்கும் ஆற்றல்,
வீடு, கல்விக்கூடம் ஆகியவற்றில்த்தான் இருக்கமுடியும்.
பெற்றோரும், வீடும்,
ஆசிரியர்களும், கல்லூரியும்,
மனம் வைத்து நினைந்தால் ஓரளவு  நம் இளையோரை மீட்டெடுக்க முடியும்.
இவர்களும் மாணவர்களை நெறிசெய்யும் வலிமையற்றுப்போய் நிற்பதுதான்,
நம் துரதிஷ்டம்



சமூக உணர்வில் யாழ்ப்பாணத்தார்,
எப்போதும் பலயீனர்களாய்த்தான் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் தனிவாழ்வு நிர்ணயத்தில் அவர்கள் பலசாலிகள்.
அதனாற்றான் முப்பதாண்டுகள் தொடர்ந்து கொடும் போர் நிகழ்ந்தபோதும்,
பண்பாடு, ஒழுக்கம், கல்வி என்பவற்றில்
யாழ்ப்பாணம் வீழ்ச்சி காணாதிருந்தது.
ஊருக்குள் நுழைந்த எதிரிகளால் வீடுகளுக்குள் நுழையமுடியவில்லை.
இன்று அந்தத் தனிவாழ்வுக் கட்டுப்பாட்டையும்,
யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது.
காரணம் சொல்கிறேன்.



உயர் இலட்சியங்களை நோக்கி மாணவர்களை நகர்த்தும் விருப்பு,
இன்று பெற்றோர் எவர்க்கும் இல்லாது போய்விட்டது.
இலட்சியமற்ற, பொருளையே நோக்கமாகக் கொண்ட
வாழ்க்கை முறையையே,
இன்று பெற்றோரும் விரும்பத் தொடங்கிவிட்டார்கள்.
டொலர்களைத் தேடி ஓடுவதும்,
ஓடச்செய்வதுமே  இன்று அவர்களின் இலட்சியமாம்.
பொருளுக்கே முதலிடம் கொடுத்து
பிள்ளைகளை நெறி செய்யும் பெற்றோர்களால்,
மாணவர்கள் மத்தியில் இலட்சியப்பிடிப்பு என்பது
இன்று இல்லை எனும்படியாய் ஆகிவிட்டது.



ஒரு குறித்த இலக்கை அடைய நினைந்து நடப்பதே இலட்சியமாம்.
அவ் இலக்கு உயர்ந்ததாய் இருத்தல் அவசியம்.
இன்று பெற்றோர் அனைவரதும் குறித்த இலக்கு
பொருள் என்று ஆகிவிட்டபடியால்,
மாணவர்களிடம் உயர் இலட்சியப்பதிவுகள் இல்லாமல் போய்விட்டன.
இலட்சியம் இல்லாதவனை எவனும் அசைக்கலாம்.
பொருள் போகத்திற்கானது.
அதுநோக்கி நகர்த்தப்படும் ஓர் இளைஞன்,
போகம் போதைவஸ்து வடிவில் கைக்கு வந்தால்,
அனுபவிக்கத்தான் செய்வான்.
அவனை உயர் இலட்சிய மனிதனாக்கி விட்டால்,
பலயீனங்கள் அவனைத் தீண்டா.
அங்ஙனம் அவனை ஆக்குவது,
பெற்றோரது கட்டாயக் கடமையாம்.
இக்கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறுவார்களேயானால்,
பிள்ளைகளின் சிதைவுக்கு அவர்களே காரணமாகிவிடுவார்கள்.



அறம் என்ற ஒன்றைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை,
இன்றைய மூத்த தலைமுறையே மெல்ல மெல்ல மறந்து வருகிறது.
ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தார் குற்றமாய்க் கருதிப் பதறிய,
சத்தியமின்மை, ஒழுக்கமின்மை, விசுவாசமின்மை, அன்பின்மை என்பவை,
இன்று அங்கு அங்கீகரிக்கப்பட்ட விடயங்களாகிவிட்டன.
புலம்பெயர்வதற்காய் ,
‘ஏஜென்டை’ப் புருஷன் எனப் பதிவு செய்யும் பொய்மையும்,
‘ஒபிஸ் பார்டி’களில் குடிக்கிறேன் என
இயல்பாய் உரைக்கும் ஒழுக்கமின்மையும்,
வாழ்வுதரும் தொழிலுக்கே வஞ்சனை செய்யும் விசுவாசமின்மையும்,
சிறு சிறு குறைகளுக்காக குடும்பங்களை உடைக்கும் அன்பின்மையும்,
யாழ்ப்பாணக் குடும்பங்களில் இன்று சாதாரண விடயங்களாகிவிட்டன.



இவற்றால் அறவேலிகள் அறுக்கப்பட்ட சமுதாயமாய்
நம் சமுதாயம் மாறிவிட்டது.
இச்சமுதாயத்திற்குள் குற்றங்கள் நுழைவதும்,
குற்றம் செய்வோர் அங்கு தருக்குடன் வீற்றிருப்பதும்,
சுலபமான காரியங்களாகிவிட்டன.
இந்தப் பலயீனங்கள் முற்றியதால்த்தான்,
நம் இளையோரை வேட்டையாட,
வீடு, கல்லூரி எனும் புனித இடங்களுக்குள்ளேயே,
கொடூரர்கள் பயமின்றி நுழையத் தொடங்கியிருக்கின்றனர்.
எனவே நம் இளையோரை அவர்களிடமிருந்து காக்கவேண்டுமாயின்,
மீண்டும் நம் தனி வாழ்க்கையைப் பலப்படுத்தி,
சமுதாயத்தின் அறவேலியை வலிமையுறச் செய்யவேண்டும்.
இஃது பெற்றோர்தம் கடமையாம்.



அடுத்து மாணவர்களைக் காக்கும் பொறுப்பு,
 கல்வி நிலையங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரியது.
தொண்டு மனப்பான்மையும், கருணையும், ஆழ்ந்த அறிவும்,
ஆசிரியத்துவத்தின் அடிப்படைத்தகுதிகள்.
ஒருகாலத்தில் மாணவனின் ஒழுக்கயீனத்தை,
தம் வாழ்வின் தோல்வியாய்க் கருதி வாடிய ஆசிரியர்கள்,
பலபேர் யாழில் இருந்தார்கள்.
அத்தகையோர் மாணவர்களுக்கு,
பாடத்தை மட்டுமன்றி பண்பையும் போதித்தனர்.
இத் தகுதிகளோடு கூடிய ஆசிரியர்களை,
தேடிக்கண்டுபிடிப்பது இன்று அரிய விடயமாகிவிட்டது.



நம் பண்பாட்டில் மாதா, பிதா, தெய்வம் என்ற உறவு வரிசையில்,
வைக்கப்பட்டவன் ஆசிரியன்.
இன்றோ ஆசிரியர்களை மிரட்டும் அளவில் மாணவர்கள்.
காரணம் தொண்டாக இருந்த ஆசிரியப்பணி தொழிலாக மாறியமையே.
கல்லூரிகளில் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் செல்லும்,
‘கிளார்க்’காகத்தான் ஆசிரியனும் ஆகிவிட்டான்.
இன்று ஆசிரியர்களைப் பொறுத்தவரை,
உயிரற்ற கோப்புகளாகவே மாணவர்களும்.
சம்பளத்துக்காய் மாத முடிவை நோக்கும் கவலையே
இன்றைய ஆசிரியர்களின் பெருங் கவலையாம்.
நிலைமை இதுவானால்,
உணர்வு எப்படி வரும்?
உறவு எப்படி வரும்?
உரிமை எப்படி வரும்?



தம்மேல் பற்றற்ற ஆசிரியர்கள்மேல்,
மாணவர்கள் எங்ஙனம் பற்று வைப்பார்கள்?
அதனால் இன்று ஆசிரிய, மாணவ உறவு,
பாதாளத்தின் அடிவரை போய்விட்டது.
இந்த நிலை மாறினாலன்றி,
ஆசிரியர்கள்தம் கட்டுப்பாட்டில்,
மாணவர்கள் வரப்போவதில்லை.
அதனால் மாணவர்கள்,
குற்றங்களிலிருந்து எழப்போவதும் இல்லை.



ஆராய ஆராய பிரச்சினைகள் நீள்கின்றனவேயன்றி,
விடைகள் வெளிவருவதாய் இல்லை.
தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என,
அனைவரும் கையாலாகதவர்களாய்ப் போக,
மாணவப்பயிர்கள் மாளத்தொடங்கியிருக்கின்றன.
இம்மூவரும் சரிப்பட்டால்,
நான் முன் சொன்ன பிரச்சினைகளின் மூலவேர்களை அறுத்துவிடலாம்.
பலயீனப்பட்ட உடல்களை கிருமிகள் தாக்கத்தான் செய்யும்.
பலயீனப்பட்ட சமுதாயத்தில் குற்றங்கள் விளையத்தான் செய்யும்.
இறந்தகாலப் பாதிப்பிலும் வருங்கால வீறாப்பிலும்
நிகழ்காலத்தைத் தொலைக்கப்போகிறோம்.
ஒன்றுபட்டு நம் சமுதாயத்தை பலப்படுத்துவதே,
தமிழர்தம் இன்றைய தலையாய கடமையாம்.
உண்மை உணர்ந்து இந்நிலையை உடன் மாற்றத்தலைப்படாவிட்டால்,
யாழ்ப்பாண நிலவரம் தொடர்ந்தும் கலவரம்தான் !

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.