வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 10 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? | பாகம் 10 | கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நூல்கள் 24 Mar 2017
 
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
லகம் முழுவதும் வர்ணாச்சிரமதர்மத்தின் படியே இயங்குவதாயும்,
நம் வர்ணதர்மத்தில், சில வர்ணத்தார்க்கு வழங்கப்பட்ட சலுகைகள்,
இன்றும் வழங்கப்பட்டே வருவதாயும் சென்றவாரம் குறிப்பாய்ச் சொல்லியிருந்தேன்.
இந்த வாரத்தில் அதுபற்றி சற்று விரிவாய்ச் சொல்கிறேன்.

♦  ♦

வர்ணாச்சிரமதர்மத்தில்,
மக்களின் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கை வரியாய்ப்பெறும் உரிமையும்,
அவ்வரிப் பணத்தில் ஒருபங்கை சேவகர், மாளிகை, வாகனம், ஆபரணம் முதலிய,
தன் ஆடம்பர வாழ்வுக்குமாய்ச் செலவு செய்யும் உரிமையும்,
சத்திரியர்களுக்குத் தரப்பட்டிருந்தது.
 

♦  ♦

பொதுமக்கள் பணத்தை சத்திரியர்கள் எப்படி இங்ஙனம் அனுபவிக்கலாம்?
அது எப்படித் தர்மமாகும்?
இதுதான் வர்ணாச்சிரமதர்மத்தின் இலட்சணமா?
உங்களில் சில கொதித்தெழுவது தெரிகிறது.
கொஞ்சம் பொறுங்கள்!
விடயத்தை முழுமையாய்த் தெரிந்து கொண்டு பின் பேசலாம்.

♦  ♦

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
இன்றும் சத்திரியர்களுக்கான அச்சலுகையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
அன்றைய சத்திரியர்களுக்கான அதே உரிமைகள்,
ஜனநாயகம் என்றும், சோஷலிசம் என்றும் பீற்றிக்கொள்ளும்,
இன்றைய அரசுகளிலும் தலைவர்களுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளன.
வரிவாங்கும் உரிமையும், அவ்வரியைத் தரமறுக்கும் பட்சத்தில்,
தண்டித்தேனும் அதனைப்பெறும் உரிமையும்,
எல்லா நாட்டு அரசுகளுக்கும் இன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது.
அப்படி மக்களிடம் வலிந்து வாங்கிய வரிப்பணத்தின் ஒரு பகுதியை,
தம் ஆடம்பரவாழ்க்கைக்காகச் செலவுசெய்யும் உரிமையையும்,
இன்றைய தலைவர்கள் பெற்றே இருக்கின்றனர்.

♦  ♦

இன்றும் இருக்கிறது என்பதற்காக அது நியாயமாகுமா?
நடுநிலையாளர்கள் சிலர் கேட்பீர்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஓர் அரசின் தலைவன் என்பவன்,
ஓர் இனத்தின் தலைவனாகவே உலகத்தால் பார்க்கப்படுகிறான்.
அத்தலைவன் தன் இனத்தின் பெருமையை மற்றவர்க்கு உணர்த்தும் வண்ணம்,
குறித்த சில ஆடம்பரங்களைத் தன் வாழ்வில் அங்கீகரித்தே ஆகவேண்டும்.
தலைவனே ஏழ்மையுற்று இருந்தால் அவனது வாழ்க்கையை வைத்து,
உலகம் அவ் இனத்தை மதிப்புக்குறைவாய் எடைபோட்டுவிடும்.
அதனால்த்தான் அரசனுக்கான ஆடம்பர வாழ்க்கையை,
நமது திருக்குறளின் பொருட்பால் அறம் அங்கீகரித்து நிற்கிறது.

♦  ♦

திருக்குறள் பொருட்பாலில்,
‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக் கூறும் மன்னன் நிலம்’ என்று ஒரு குறள் உண்டு.
நீதி கேட்டும் குறைகளைக் கூறியும் தன்னைக் காண வருவார்க்கு,
காணுதற்கு எளியனாயும் கடுஞ்சொல் அற்றவனாயும்,
ஓர் அரசன் இருந்தால் அவனது நாடு உயரும் என்பது,
இக்குறளுக்கான பொருள்.
இக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகர்,
காட்சிக்கு எளியன்  என்ற தொடருக்கு விளக்கம் தரும்போது,
பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டோரோடு காட்சி அளித்தல்,
என்று எழுதுகிறார். (பேர்- பெரிய, அத்தாணி- அரசிருக்கை)
காட்சிக்கு எளியனாய் இருந்தாலும் தன் தகுதி தெரியும்படியாகவே,
ஓர் அரசன் எப்போதும் இருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து.
அவரது இவ் உரையிலிருந்தே, மற்றவர்களை ஈர்க்க,
அரசர்க்கு ஆடம்பர வாழ்க்கையும் அவசியம் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

♦  ♦

உயர்ந்தோர் வகுத்த வர்ணாச்சிரமதர்மத்தில்,
தமக்கு வாய்ப்பான மாற்றங்களை அன்றைய சத்திரியர்கள் செய்து கொண்டனர்.
அதனால்த்தான் பின்னாளில் வர்ணாச்சிரமதர்மம் சிலரின் வெறுப்புக்கு ஆளானது.
இன்றைய தலைவர்கள் அனைவரும்,
தங்கள் அரசின் வலிமையை அதிகரிப்பதற்காய்,
தமது அதிகாரத்தைக் கொண்டு ஏலவே இருந்த சட்டங்களில்,
தமக்கு வாய்ப்பான மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர்.
இது உலகம் பூராகவும் நடந்து வருகின்ற விடயம்.
வெளிப்படையான இந்த விடயத்திற்கு விளக்கங்கள் தேவையில்லை.
தமக்கு வாய்ப்பாக சட்டங்களை மாற்றிக்கொள்ளும் இந்த வேலையைத்தான்,
அன்றைய சத்திரியர்களும் செய்தனர்.

♦  ♦
 
இன்று அரசியலில் எல்லாம் வளர்ந்துவிட்டது.
இப்போது இருக்கும் அரசியல் உத்தமமானது.
வர்ணாச்சிரமதர்மம் காலத்திற்கு ஒவ்வாதது என்று உரைப்போர்க்காய்,
சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இன்றைய நிலையிலும் அரசியலாளர்க்கு,
சட்டம் வழங்கியிருக்கும் தர்மத்திற்கு உட்படாத,
சில அதிகாரங்களைப் பற்றியும் இனிச் சொல்கிறேன்.

♦  ♦

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
இன்றைய உலகின் எல்லா நாட்டு அரசுகளும்,
தாம் செய்யும் செலவுகளுக்கான கணக்கினை,
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று சட்டம் இருக்கிறது.
ஆனால் அச் சட்டத்திற்கு முரணாக,
அவ் அரசுகள்  தமது புலனாய்வுத் துறைகளுக்குச் செய்யும் செலவுக்கணக்கினை மட்டும்,
பாராளுமன்றத்தில் பகிரங்கமாய்ச் சமர்ப்பித்து அனுமதி பெறத்தேவையில்லை என்னும்,
விதிவிலக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்போது சொல்லுங்கள்! மேற்குறிப்பிட்ட செயல் எந்தத் தர்மத்துள் அடங்கும்?
புலனாய்வுத்துறைகள் அனைத்துமே தலைவர்களதும் நாட்டினதும் வசதிக்காய்,
எதிரிகளையும் பிறநாடுகளையும் வீழ்த்தவும் விலை பேசவும் அமைக்கப்பட்டவை.
அங்ஙனம் அறம் மீறி செயற்படுவதால்த்தான்,
அவற்றிற்கான செலவுக்கணக்கைப் பகிரங்கமாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடிவதில்லை.
அன்றைய வர்ண தர்ம சத்திரிய அமைப்பில் தர்மம் இல்லை என்றும்,
இன்றைய அரசுகள் தர்மத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டன என்றும் கூக்குரலிடுவோர்,
இந்த விடயத்திற்கு தர்ம அடிப்படையில் விளக்கம் ஏதும் சொல்ல முன்வருவார்களா?

♦  ♦

அதுமட்டுமன்று,
ஜனநாயகம், ஜனநாயகம் என்று வாய்கிழியப்பேசும் இன்றைய அரசுகளிலும்,
அரசில் பங்கேற்போர் அனைவரும்,
ரகசியக்காப்புப்பிரமாணம் என்ற ஒன்றினைச் செய்யவேண்டும் என்பது கட்டாயம்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?
நாட்டின் நன்மைக்காய் வெளியில் சொல்லமுடியாத பல ரகசிய காரியங்களை,
இன்றைய அரசுகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்.
இத்தகைய பகிரங்கப்படுத்தப்பட முடியாத,
ரகசிய காரியங்களுக்கான அனுமதியைப்பெற்ற ஓர் அரசு,
சுயநலமாகவும் அறம் மீறி இயங்கத்தலைப்பட்டால் அதனை யாரால் தடுக்கமுடியும்?
அங்ஙனம் சில தலைவர்கள் சுயநலமாய் இயங்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா?
இருக்கிறது என்பது நிச்சயமான பதில்!
இருந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை!
பிழை நடக்கக்கூடிய ஒரு சட்டத்தினை ஏன் அனுமதிக்கவேண்டும்?
அப்படியாயின் இன்றைய ஜனநாயக அமைப்பு முறையும் தவறா?
கேள்விகள் பிறக்கும்.

♦  ♦
 
அத்தகைய சட்டங்கள் இல்லாவிட்டால்,
ஒரு தேசத்தில் எதிரிகள் இலகுவில் வீழ்த்திவிடுவர்.
சில ரகசிய காரியங்களைச் செய்யாமல்,
ஓர் அரசினை எவராலும் நடத்தமுடியாது.
இதுவே அக்கேள்விக்கான யதார்த்தபூர்வமான பதில்.
மேற்படி விதிவிலக்குச் சட்டங்களால் விளையக்கூடிய நன்மையின் அளவு,
எண்பது சதவீதம் என்றால்,
தீமையின் அளவை இருபது சதவீதமாகவே கொள்ளலாம்.
எனவேதான், எண்பது சதவீத நன்மைக்காக,
இருபது சதவீத தீமை விளைக்கக்கூடிய சட்டத்தை,
அங்கீகரிக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது.
இது போலத்தான்  அன்றைய எமது வர்ணாச்சிரமதர்மமும்,
ஒரு தேசத்தின் வெற்றி நோக்கி,
அறமீறலாய்த் தெரியும் சில விதிவிலக்கான உரிமைகளை,
சத்திரியர்களுக்கு வழங்கியிருந்தது.

♦  ♦

நம் அறம் வகுத்த திருவள்ளுவரும் தனது அறநூலை,
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாய்ப்பிரிக்கிறார்.
அதில் அறத்துப்பாலில் சொல்லப்பட்ட அறங்கள்தான் மூல அறங்கள்.
பொருட்பாலில் சொல்லப்பட்ட அறங்களுக்கு சார்பறம் என்று பெயர்.
சார்பறம் என்றால் என்ன என்று கேட்பீர்கள்.
அறம் என்று முழுமையாய்ச் சொல்லமுடியாவிட்டாலும்,
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு,
பலருக்கும் நன்மை பயக்கக்கூடிய விடயங்களே சார்பறங்களாம்.
அச்சார்பறங்களால் சிலர் பாதிப்புறுவது தவிர்க்கமுடியாதது.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.
ஒருவர்க்குத் தெரியாமல் அவரின் செயற்பாடுகளை நாம் கவனிப்பது,
அறமாகாது என்பது வெளிப்படை.
ஆனால் அச் செயலை தனது பொருட்பாலில்,
 ‘ஒற்று’ என்ற அதிகாரத்தின் மூலம்,
அரசர்க்கு மட்டுமான அறமாய் அங்கீகரிக்கிறார் வள்ளுவர்.

♦  ♦

ஒரு அரசன் தனது தனி அறத்தைத் தாண்டி,
தன்னை நம்பிய குழுவினரைக் காப்பதற்காய்,
இத்தகைய சில அறமீறல்களைச் செய்யவேண்டியே இருக்கிறது.
தன்னை நம்பிய பலரது நன்மையைக் கருதி,
ஓர் அரசனால் அங்ஙனம் செய்யப்படும் செயல்களை,
ஆன்றோர், அறம் எனவே அங்கீகரித்தனர்.

♦  ♦
 
இதனைத்தான் அன்றைய அரசுகளும் செய்தன.
இன்றைய அரசுகளும் செய்கின்றன.
இவ் உண்மையை உணராமல் காலம் மாறிவிட்டது,
கத்தரிக்காய் மாறிவிட்டது என்று பிதற்றி,
நம் மூதாதையர் வகுத்த ஆழ்ந்த அறத்தை,
இழிவு செய்வதில் எந்தப்பயனும் இல்லை.

♦  ♦

அனைவருக்கும் பொதுவானது எனப்பேசப்படும்,
இன்றைய ஜனநாயகச் சட்டங்களிலும் கூட,
அன்றைய வர்ணாச்சிரம தர்மத்தில் சொல்லப்பட்ட,
வர்ணம் நோக்கிய விதிவிலக்குகள் வழங்கப்பட்டே இருக்கின்றன.
எந்த ஜனநாயக நாட்டிலும் அதன் தலைவரை,
சாதாரண மனிதனைப்போல் நீதியின் முன் திடீரென நிறுத்திவிட முடியாது.
அவர்மேல் குற்றம் சுமத்த வேண்டுமெனில் அதற்கான சில வழிமுறைகள் உள்ளன.
சாதாரண மனிதனுக்கும் ஒரு தலைவனுக்குமான இன்றைய இந்த வித்தியாசமும்,
அன்றைய வர்ணதர்மம் சத்திரியர்களுக்கு வழங்கிய சலுகையையே ஒத்திருக்கிறது.

♦  ♦

என்ன? இவன் சொல்வது எல்லாம் உண்மையாயிருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
என்ன செய்ய? உண்மைகள் எப்பொழுதும் உண்மைகள்தான்.
மாற்றங்கள் தான் மாற்றம் இல்லாதவை என்பது உண்மையென்றாலும்,
சில அடிப்படைகளில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
மேற்சொன்ன விடயமும் அதில் ஒன்று.
நம் மூதாதையர் சொன்னவை காலத்திற்கு ஒவ்வாதவை என்ற கருத்தோடு,
அனைத்தையும் பார்க்கும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சிலருக்கு,
இப்போது சில புதிய வெளிச்சங்கள் தோன்றியிருக்கும்.
நீங்கள் என்னைவிட அறிவாளிகள்.
நீங்கள் தேடினால் நம் மூதாதையர் வகுத்த அற அமைப்புக்களுள்,
இன்னும் பல புதுப்புது வெளிச்சங்களைக் காணலாம்.
முயலுங்கள்!

♦  ♦

இனி கல்வியாளர்களின் அன்றைய இன்றைய நிலைகள் பற்றி ஆராய்வோம்.
கல்வியாளர்களைத்தான் அன்று பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் என்றார்கள்.
பிராமணன் என்றால் பிரம்மத்தை அவாவுபவன் என்று பொருள்.
பிரமம் என்றால் ஞானம் (அறிவு) என்று அர்த்தம்.
எவன் அறிவை அவாவுகிறானோ அவனே பிராமணன்.
அந்தணன் என்றாலும் அதுவே அர்த்தமாம்.
அந்தணன் என்ற சொல்லுக்கு அறிவின் முடிவை அவாவுபவன் என்று பொருள்.
இவையெல்லாம் குலப்பெயர்கள் அல்ல. காரணப்பெயர்கள்.
காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒருவர் இப்பெயர்களுக்கு உரியவராவார்.

♦  ♦

‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற குறளுக்கு,
‘அந்தணர் என்பது அழகிய தர்ப்பத்தினை உடையார் என ஏதுப்பெயராகலின்,
அஃது அவ் அருளுடையார் மேலன்றி செல்லாதென்பது கருத்து’ என்று,
உலகம் போற்றும் உரையாசிரியராகிய  பரிமேலழகர் எழுதுகிறார்.
இது இலக்கணம் சார்ந்த விடயம்.
பிராமணர் என்பதற்காக பரிமேலழகரையும் ஒதுக்கவேண்டும் என்றுரைப்போர்க்கு,
அவரது முற்போக்குச் சிந்தனையை எடுத்துக் காட்ட,
அவர் சொன்ன இந்த விடயத்தைச் சற்று விளங்கப்படுத்தவேண்டியிருக்கிறது.

♦  ♦

தமிழ்ச் சொற்களில் பெயர்ச்சொல் என்றும் வினைச்சொல் என்றும்,
முக்கிய இரு பிரிவுகள் இருக்கின்றன.
செயல்களைக் குறிக்கும் சொற்கள் எல்லாம் வினைச்சொற்களாம்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்,
என்பவற்றைக் குறிக்கும் சொற்கள் எல்லாம் பெயர்ச்சொற்களாம்.
இப்பெயர்ச்சொற்கள் காரணப்பெயர் (ஏதுப்பெயர்), இடுகுறிப்பெயர் என இரண்டு வகைப்படும்.
இவற்றுள் காரணப்பெயர் என்பது குறித்த ஒருபொருளுக்கு,
காரணம் கொண்டு வைக்கப்படும் பெயர்.
நான்கு கால்களை உடையதால் நாற்காலி என்பதும்,
கண்ணுக்காய் அணியப்படுவதால் கண்ணாடி என்பதும்,
காரணப்பெயர்களுக்கான உதாரணங்கள்.
அங்ஙனமல்லாமல் காரணம் ஏதுமின்றி,
குறித்த ஒருபொருளைச் சுட்டுவதற்காய் மட்டும் வைக்கப்படும் பெயர்கள்,
இடுகுறிப்பெயர்களாம்.
பூனை, நாய் முதலியவை அதற்கான உதாரணங்கள்.

♦  ♦

இதென்ன இலக்கண வகுப்பு என நீங்கள் சலிப்பது புரிகிறது.
பரிமேலழகரைத் திட்டுகிற உங்களுக்கு,
பரிமேலழகரின் பெருமையைப் புரியவைக்கவேண்டாமா?
அதனால்த்தான் இத்தனை சிரமப்படுகிறேன்.
பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்சநேரம் என்னோடு உடன் வாருங்கள்.

♦  ♦

மேற்சொன்ன காரணப்பெயர், இடுகுறிப்பெயர் இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
ஒரு பொருளுக்குக் காரணத்தால் வைக்கப்படும் பெயர்,
அக்காரணம் இருக்கும் வரையிலேயே பொருளின் பெயராய் இருக்கும்.
பெயருக்கான காரணம் நீங்கின் பெயரும் நீங்கும்.
நான்கு கால்களை உடையதால் ‘நாற்காலி’ எனும் பெயர் பெற்ற பொருளில்,
ஒரு காலை நீக்கின், காரணம் நீங்கியதால்,
அதன்பின் அப்பொருள் ‘முக்காலி’ என்றே அழைக்கப்படும்.
ஆனால்  இடுகுறிப்பெயரோ அங்ஙனமன்று.
அதில் இயல்பு மாற்றம் பெயர் மாற்றத்தை விளைவிக்காது.
நான்கு கால்களை உடைய பூனைக்கு ஒரு கால் இல்லாமல் போனாலும்,
அது பூனை என்றே அழைக்கப்படும்.

♦  ♦

அதுதான் காரணப்பெயருக்கும் இடுகுறிப்பெயருக்குமான வித்தியாசம்.
அந்தணரான பரிமேலழகர்,
செவ்விய தண்ணளியை விரதமாய்ப் பூண்டு ஒழுகும் காரணத்தாலேயே,
(செவ்விய-பரிசுத்தமான, தண்ணளி- கருணை)
அந்தணர் எனும் பெயர் உருவானதால்,
அதனைக் காரணப்பெயர் என்கிறார்.
அவர் கூற்றிலிருந்து நமக்கு மூன்று விடயங்கள் தெரிகின்றன.
மேற்காரணம் இருந்தால்த்தான் ஒருவர் அந்தணர் என்று சொல்லப்படுவார்.
அக்காரணம் இல்லாத பட்சத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியிருந்தாலும் அவர் அந்தணர் ஆகார்.
வேறு குலத்தில் ஒருவர் தோன்றியிருந்தாலும் அவரிடம் மேற் சொன்ன காரணம் இருப்பின் அவர் அந்தணரேயாம்.
இவையே அம்மூன்று விடயங்கள்.

♦  ♦

இப்போது சொல்லுங்கள்.
பரிமேலழகர் குணத்தை வைத்து குலத்தைத் தீர்மானித்தாரேயன்றி,
குலத்தை வைத்து குணத்தைத் தீர்மானிக்கவில்லை.
அறம் வகுத்த நம் பெரியோர்தம் பார்வை,
சரியாய்த்தான் இருந்திருக்கிறது என்பதற்கான சான்று இது.
பரிமேலழகரையும் அந்தணர் எனக்கூறி,
பெருமைமிக்க அவரது உரையையும் ஒதுக்க நினைக்கின்றனர் சிலர்.
அவர்தம் அறியாமையை என்னென்பது?

♦  ♦

வர்ணாச்சிரமதர்மத்தில் அந்தணர்களுக்கெனவும்,
சில விஷேட சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது உண்மையே.
அவை பின்வருமாறு.
மற்றை வர்ணத்தாரிடம் தமக்குத் தேவையான பொருட்களைத் தானமாய்ப்பெறும் உரிமை.
மற்றை எந்த வர்ணத்தாருக்கும் இல்லாத சமூகமதிப்பு.
எப்போதும் கல்வி கற்கும் தகைமை.
சபைகளில் முதலிட மரியாதை.
போன்றவையே அச்சலுகைகளில் சிலவாம்.

♦  ♦

வர்ணாச்சிரம தர்மத்தில்த்தான்  இச்சலுகைகள் என்று எண்ணிவிடாதீர்கள்.
இன்றும் எல்லா நாடுகளிலும் கல்வியாளர்களுக்கு,
இச்சலுகைகள் வழங்கப்படுவதைக் கண்கூடாகவே நாம் காண்கிறோம்.
பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என்று சொல்லப்படும் கல்வியாளர்களுக்கு,
உலகெங்கும் வழங்கப்படும் சலுகைகளைக் கவனித்துப்பாருங்கள்.
மற்ற எந்தத்தொழிலுக்குமில்லாத அதியுயர் சம்பளம்,
அரசநிலையிலுள்ளவர்களை விட அதியுயர் சமூகமதிப்பு என,
மொத்தத்தில் சமூகவாழ்வில் மற்றெவருக்குமில்லாத சலுகைகளும் மதிப்பும்,
கல்வியாளர்களுக்கு இன்றும் தனித்து வழங்கப்படுகின்றன.
இதைத்தான் வர்ணாச்சிரமதர்மமும்,
கல்வியாளர்கள் என்பதால் அந்தணர்களுக்கு அன்று வழங்கியிருந்தது.

♦  ♦

அன்றைய நமது வர்ணாச்சிரமதர்மத்தில்,
அந்தணர்களுக்கு கடமைகளை வகுத்தே உரிமைகளை வழங்கியிருந்தனர்.
கல்வியால் சமூக அந்தஸ்தைப் பெறும் ஒரு அந்தணன்,
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை,
கல்விக்காகவே செலவழிக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
தமிழ்ச்சங்கத் தலைவரான நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில்,
அந்தணர்கள் தமது நாற்பத்தெட்டு வயது வரை புலனடக்கி,
கல்விக்காகவும் அறத்திற்காகவுமே தம்வாழ்வைச் செலவழித்ததாய்,
செய்தி வருகிறது.

‘அறுநான்கு இரட்டி இளமை நல்யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகை குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர்’

இது அன்றைய நிலை.
இன்றோ! கல்விக்காய் வழங்கப்படும் சலுகைகளையும் அந்தஸ்தையும்,
கல்வியாளர்கள் தம் சுகவாழ்வுக்குப் பயன்படுத்தி,
உலகியலில் திளைத்து நிற்கின்றனர்.
இவர்தமைக் குற்றம் சொல்லத் தெம்பில்லாத நாம்,
அன்றைய அந்தணரைக் குற்றம் சொல்லிக் குதூகலித்து நிற்கின்றோம்.
காலத்தின் கோலம் அன்றி வேறென்ன?

♦  ♦

இன்றும் பல்கலைக்கழகங்களில்,
கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமையும் சலுகையும் புகழும் மிக உயரியன.
அவர்க்கு வழங்கப்படும் சம்பளத்தோடு,
சமூகத்தின் மற்றைய தொழிலாளர்களின் சம்பளத்தை ஒப்பிட்டே பார்க்கமுடியாது.
அதுதவிர நூல்கள், வாகனங்கள், வீடுகள் வாங்கச் சலுகைக்கட்டணம்,
வெளிநாடுகளுக்கு இலவசப்பயண வசதிகள் என,
இவர்க்கான சலுகைகளுக்கு ஓர் அளவில்லை.
மாணவர்களின் கல்வித்தகைமைகளைத் தீர்மானிப்பதிலும்,
பரீட்சைகளில் புள்ளிகள் வழங்குவதிலும்,
பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில்,
யாரும் அதிகம் தலையிட முடியாத நிலையே இன்றும் உள்ளது.
அவர்களுக்கான வானளாவிய அவ் அதிகாரங்களும் சலுகைகளும்,
இவர்கள் உலகை உய்விப்பார்கள் என,
அவர்கள்மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையாலேயே வழங்கப்படுகின்றன.
அந்நம்பிக்கைக்கு அன்றும் சிலர் துரோகம் செய்தனர். இன்றும் சிலர் துரோகம் செய்கின்றனர்.
ஒருசிலரின் அத்துரோகம் நோக்கி கல்வியுலகின்மேல் நாம் கொண்ட நம்பிக்கையை,
நிராகரித்தல் கூடுமா? முடியாது என்பதை இன்றைய உலகமும் ஒப்புகிறது.
அதையேதான் அன்றைய வருணாச்சிரமதர்மமும் செய்தது.
அந் நம்பிக்கையைப் பிழையாய்ப் பயன்படுத்தியவர்களால் விளைந்ததே,
பேதங்கள் நிறைந்த பின்னாளில் வந்த வருணாச்சிரமதர்மமாம்.

♦  ♦

எந்த நாட்டிலும் சமூகப் பிரிவுகளின் உயர்வு வரிசைப்படுத்தப்படும்போது,
கல்வியாளன், அரசியலாளன், வியாபாரி, உற்பத்தியாளன்,
என்ற நிலையே இன்றும் இருக்கிறது.
இவ் வரிசைப்படிதான் ஊதியபேதங்களும் இருக்கின்றன.
எந்த நாட்டிலும் கல்வியாளனுக்கும், அரசியலாளனுக்கும் பின்புதான்,
வர்த்தகனும், உற்பத்தியாளனும் மதிக்கப்படுகின்றனர்.
இல்லையே!, வர்த்தகனுக்கும் மதிப்பு உண்டே?
“பில்கேட்ஸ்சை” ப் பார்! என்று ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும்.
கவனித்துப் பாருங்கள்.
அவர் கல்வியை வர்த்தகமாக்கிப் புகழ்பெற்றவர்.
அப்புகழ் கல்வியால் விளைந்த அந்தணப்புகழேயன்றி,
தனித்த வர்த்தகப் புகழன்றாம்.
மொத்தத்தில் இவையெல்லாம்,
உலகெங்கும் வர்ணதர்மமே இன்றும் பேணப்படுகிறது என்பதற்காம் சான்றுகள்.

♦  ♦

அதிகம் விழியை விரிக்காதீர்கள்!
விழி விழுந்துவிடப்போகிறது.
நம் பாட்டனின் சிந்தனை என்று சொன்னபொழுது வராத மதிப்பு,
மேலைநாட்டானும் அதைத்தான் கடைப்பிடிக்கிறான் என்றதும் வந்திருக்குமே?
பாவம், உங்களைச்சொல்லிக் குற்றமில்லை.
நம் சொத்தையெல்லாம் “சொத்தை” என்று,
சில பொய்யர்கள் புகட்டியிருக்கும் பாடத்தால்,
அங்ஙனம் சிந்தித்துப் பழகிவிட்டீர்கள்.
உங்களை எப்படிக் குற்றம் சொல்வதாம்?
நீங்கள் மன அடிமைகள்.
அவ்வளவே!

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.